ஓடந்துறை பஞ்சாயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இராதவர்கள் மிகக்குறைவு காரணம், அந்தப் பஞ்சாயத்தின் தலைவர் ஓடந்துறை சண்முகம் தன் கிராமத்துக்காகச் செய்து இருந்த வசதிகள் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
ஓடந்துறை சண்முகம்
இன்று இப்பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் சண்முகம் (அதிமுக) அவரது ஒன்று விட்ட சகோதரரிடமே (திமுக) 57 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இதுபற்றிச் சண்முகம் விகடனில், ‘நாங்கள் செய்த பல நல்ல விஷயங்களை மறந்து, மக்கள் தற்போது கிடைத்த 1000 ரூபாய்க்காக வாக்களித்தது ஏமாற்றமாக உள்ளது‘ என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்து இருந்தார்.
உண்மையில் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. மக்களுக்கு இவ்வளவு செய்த இவரையே தோற்கடிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை!
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சி முக்கியத்துவம் இருந்தாலும், உள்ளூர் மக்களின் பலம், அவர்களின் திறமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எனவே தான் பலவகைப்பட்ட மக்களும் தேர்வாகி இருக்கிறார்கள். ஏராளமான சுயேட்சைகளும் இதனால் தான் வெற்றி பெறுகிறார்கள்.
இதையும் தாண்டிக் கட்சி உள்ளது என்றாலும், சட்ட மன்றத்தேர்தலை போலத் தாக்கத்தை ஏற்படுத்தாது.
இவையல்லாமல், மற்ற இடங்களைப் போல நடவாமல், ஓடந்துறையில் மக்கள் பணம் சரியாகப் பயன்படுத்தப்பட்டது.
நமக்கு உண்மை தெரியவில்லை என்று மாற்றுக் கருத்து இருந்தாலும் கூட, மற்ற அனைத்து இடங்களையும் விட இவர் சிறப்பாகச் செய்தார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அப்படியிருக்கையில் இவரையே மக்கள் தோல்வி அடைய செய்து இருக்கிறார்கள் என்றால், அதிர்ச்சியாக இருக்கிறது.
விமர்சனங்கள்
அங்கே என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.
செய்திகளில் வருவதை வைத்து நாம் பேசுகிறோம், விவாதிக்கிறோம். கருத்து தெரிவிக்க தகுதியானவர்கள் உள்ளூர் மக்களே.
கடந்த 20 ஆண்டுகளாகச் சண்முகமும் அவரின் மனைவியும் பஞ்சாயத்து தலைவராக இருந்து இருக்கிறார்கள். இவர்கள் கடந்த ஆண்டுகளில் செய்த பணிகளைத் தான் நாம் செய்திகளில் கண்டு வியந்தோம்.
தமிழக அரசு ஒரு மாநிலத்துக்குச் செய்வதை விட, அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்துக்குச் செய்தது மிக அதிகம், அளவிட முடியாதது.
நம் ஒவ்வொருவருக்கும் நம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும், அப்படி இருக்கும் போது இவர் செய்தது மிகச்சிறந்த பணி.
அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
சண்முகம் அவர்களுக்கு நிச்சயம் கடும் மன வருத்தம் இருக்கும். தேர்தல் தோல்வி என்று மட்டுமே விட்டு விடாமல், பணத்தால் மட்டுமே தோல்வியா அல்லது வேறு காரணங்களும் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
இது கடினமான செயல் என்றாலும், உணர்ச்சிவசப்படாமல் யோசித்துப் பார்த்து அவர் பக்கம் எதுவும் தவறு இருந்தால், திருத்திக்கொள்ளலாம் அல்லது முழுக்கப் பணம் தான் என்றால், மக்களின் தலையெழுத்து என்று கைக்கழுவி விடலாம்.

சண்முகம் அவர்கள் சாதித்தது அனைவரும் அறிந்தது. அந்தப் பெருமையை எவரும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.
காலத்தால், பணத்தால் அழிக்க முடியாத சாதனை.
எனவே, மக்களுக்குச் செய்தோம் திருப்தி அடைந்தோம் என்று ஒதுங்கலாம் அல்லது அடுத்தத் தேர்தலில் நின்று போட்டியிடலாம்.
இது அவரின் மனநிலையையும், ஏமாற்றத்தையும் சார்ந்தது.
இவரின் அனுபவத்துக்கும், வயதுக்கும் இதை நான் சொல்வது தகுதியல்ல இருப்பினும், இவருடைய வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதால், சொல்லத் தோன்றியது.
செய்தி படங்கள் நன்றி விகடன் – `உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓடந்துறை சண்முகம்!’ – மக்கள் கொடுத்த உள்ளாட்சி அதிர்ச்சி