தற்போது ஏரி குளம் தூர்வாருவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையேயும் தன்னார்வ அமைப்புகளிடையேயும் அதிகரித்துள்ளது.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், முதலுக்கே மோசமாகி விடும் என்று மக்களே இதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஒளிரும் ஈரோடு
எங்கள் கிராமத்தில் உள்ள குளத்தைத் தூர்வாரி சரி செய்ய “ஒளிரும் ஈரோடு” அமைப்பு முடிவு செய்தது.
இதற்கான அரசின் அனுமதியை முறையாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெற்று கடந்த ஞாயிறு பூசை போட்டனர்.
இயல்பாகவே இது போன்ற விசயங்களில் ஆர்வம் என்பதால், இது குறித்துச் சம்பந்தப்பட்டவர் அழைத்து இருந்ததால், என் அப்பாவுடன் சென்று இருந்தேன்.
ஒளிரும் ஈரோடு அமைப்பை அக்னி ஸ்டீல் நிறுவனம் (மூன்று பங்குதாரர்கள்), இவர்களுடன் மில்க் பிக்கிஸ், ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் உரிமையாளர் மற்றும் சிலர் இணைந்து செயல்படுத்துகிறார்கள்.
சின்னச்சாமி அவர்கள்
“அக்னி ஸ்டீல்” சின்னச் சாமி அவர்கள் தண்ணீரின் முக்கியத்துவம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் அது தொடர்பான விளக்கங்களை எளிமையாக மக்களுக்கு அளித்தார்.
மாவட்ட ஆட்சியர் எங்களுக்குச் சிறப்பான முறையில் உதவுகிறார் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே,
ஒருவர் “இப்பகுதியில், குளத்தில் பன்றியை விட்டுச் சுகாதாரக்கேடு செய்கிறார்கள். நாங்கள் அனைவரிடமும் புகார் அளித்து விட்டோம் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று பேச ஆரம்பித்து விட்டார்.
சின்னச்சாமி அவர்கள் மிகப் பொறுமையாக, “நாங்கள் அரசாங்கம் கிடையாது, உங்கள் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் சொல்கிறோம்” என்று கூறியும் சமாதானம் ஆகாமல், தங்கள் பிரச்சனைகளை ஆவேசமாகக் கூற ஆரம்பித்து விட்டார்.
பின் ஒரு கட்டத்தில் “சரிங்க! நான் எதுவும் பேசவில்லை” என்று நகர முற்படும் போது அவரை அரவணைத்துக் கோபித்துக்கொள்ளாதீர்கள், உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்று விளக்கி அவரை அமைதிப் படுத்தினார்.
எழுத்தில் கூறுவதால், அதன் தாக்கத்தை என்னால் முழுமையாகக் கூற முடியவில்லை. உண்மையிலேயே, அவர் அந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதம் பாராட்ட வைத்தது.
தன் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் கையாண்ட அனுபவமோ என்னவோ மிகத் திறமையாக இவரைக் கையாண்டார்.
மற்றவர்களும் இது குறித்துப் பேசக் கூட்டம் சேர்ந்து விட்டார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கிளம்பினார்கள்.
இவர்களுடன் “ஒளிரும் ஈரோடு” அமைப்பு CEO சந்திரசேகரன் அவர்களையும் இப்பிரச்சனை குறித்துச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவரும் யாரிடமும் கோபப்படாமல் மிகப் பொறுமையாகத் தங்கள் சூழ்நிலைகளை விளக்கி நடவடிக்கை எடுக்க உதவுவதாகக் கூறினார்.
உடன் நானும் இருந்தேன், நானும் அவர்களிடம் விளக்கம் கூறினேன்.
இருப்பினும் இப்படி ஒட்டு மொத்தமாக வரும் போது எனக்கு அனுபவம் இல்லாததால் கொஞ்சம் பதட்டம் ஆனது.
முன்பு இருந்தே நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பின்பற்றி வருவது இந்தச் சமயத்தில் உதவியாக இருந்தது.
சீமைக் கருவேல மரம்
சீமை கருவேல மரத்தை அகற்ற தான் செய்து வரும் பணிகளையும் அதை நீக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் மில்க் பிக்கிஸ் உரிமையாளர் எடுத்துக் கூறினார்.
சீமைக்கருவேல மரத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு அனைவரிடமும் பரவி இருப்பது மகிழ்ச்சி அளித்தது. ஊருக்குச் சென்ற போது பலரும் இது குறித்துப் பேசினார்கள்.
“அக்னி ஸ்டீல்” தங்கவேல்
“அக்னி ஸ்டீல்” தங்கவேல் அவர்கள் எங்கள் ஊர்க்காரர், அதோடு எங்கள் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். என் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்து இருப்பவர். இவர் ஊருக்கு, பொது நலத்துக்குச் செய்யும் உதவி அளவில்லாதது.
இவரைச் சென்று சந்திக்க வேண்டியது, விடுமுறை மற்றும் பல்வேறு காரணங்களால் முடியவில்லை ஆனால், இங்கே சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.
இவருடைய ஸ்டீல் உற்பத்தி இடத்துக்கு அழைத்து இருக்கிறார். தொழிற்சாலைப் பணிகள் குறித்த கட்டுரை எழுத வேண்டும் என்பது பல வருட விருப்பம்.
ஆக்கிரமிப்பு
குளத்தின் ஆக்கிரமிப்பு அடுத்தப் பிரச்சனை. மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உதவுவார்கள் என்றாலும், ஆக்கிரமிப்பை அகற்றும் போது பிரச்சனை செய்வார்கள் என்பது உறுதி.
இப்படத்தில் வெள்ளையாகத் தெரியும் கோவில் கூட ஆக்கிரமிப்பு தான்.
மாவட்ட ஆட்சியர் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுப்பதாக “ஒளிரும் ஈரோடு” அமைப்பினர் அனைவருமே கூறினார்கள்.
களிமண்
அப்பா பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்து, குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அரசியல் நெருக்கடி கொடுத்து அதைச் செயல்படுத்த முடியாமல் செய்து விட்டார்கள். இதைத் நினைவு கூர்ந்தார்.
“ஏரி குளம் தூர்வாரும் போது களிமண்ணை அப்புறப்படுத்திவிடக் கூடாது. தண்ணீரை இருப்பில் வைத்து அருகாமைப் பகுதிகளுக்கு நீர் ஊற்றைக் களிமண் கொடுக்கிறது.
களிமண் இல்லையென்றால், தண்ணீர் முழுவதும் நிலத்தில் விரைவில் இறங்கி விடும்.
எனவே, களிமண் இல்லையென்றால், களிமண்ணைக் கொட்டி பரவலாக்கித் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், களிமண் மெதுவாகத் தண்ணீரை நிலத்தினுள் இறக்கும்“
என்றார். எங்கள் குளத்தில் களிமண் இருப்பது போலத் தெரியவில்லை.
அனுபவங்கள்
தன்னார்வ அமைப்பினர் ஏற்கனவே தூர் வாரும் போது பல இடங்களில் பல பிரச்சனைகளைச் சந்தித்து இருப்பார்கள் என்பதால், அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தில் மிகச் சிறப்பாகப் பிரச்சனைகளைக் கையாளுகிறார்கள்.
சும்மா போய்ப் பார்த்துட்டு வரலாம் என்று தான் போனேன் ஆனால், இதில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்பது தெரியாது. நல்ல ஒரு அனுபவம்.
குறிப்பிடத் தக்க அம்சம் என்றால், மக்கள் இவர்களை அரசு அதிகாரிகள் போலவும் இவர்கள் தான் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பது போலவும் நினைக்கிறார்கள்.
இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல மட்டுமே உதவ முடியும், இவர்களும் நம்மைப் போன்றவர்களே என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோபப்படுகிறார்கள்.
பொதுமக்கள் சிலர் இது குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை என்றாலும், ஓரளவு கூட்டமுள்ள (காலை 7.30) இந்த இடத்திலேயே இவ்வளவு நெருக்கடிகள் என்றால், கூட்டமாக உள்ள இடத்தில் எப்படி இருக்கும்!!
நல்லதே செய்ய நினைத்தாலும் அது எளிதல்ல
ஏரி குளம் தூர்வாருவது சேவை என்றாலும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அனுமதி பெற்று அவர்களில் ஒருவரையும் உடன் வைத்துக்கொண்டு செயல்படுத்துவது நல்லது.
இது போலத்தான் தன்னார்வ அமைப்பினர் அனைவரும் செய்து வருகிறார்கள். நல்ல செயல்களாகவே இருந்தாலும், உடனே செய்து விட முடியாது என்பது தான் நிதர்சனம்.
நல்லதே செய்தாலும் அதற்கும் கடும் எதிர்ப்புகள் வரும், புதுப் பிரச்சனைகள் வரும் சமாளிக்க வேண்டும் என்பது தான் இதில் நான் கற்றுக்கொண்டது.
தொடர்புடைய கட்டுரை
மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சூப்பர் இன்போர்மஷன் கிரி ,
சில விஷியங்களை செய்திகளில் படிப்பதற்கும், நேரில் அனுபவ பூர்வமாக சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நிச்சயம் இந்த தருணங்களை நீங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
சீமைக்கருவேல மரத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு அனைவரிடமும் பரவி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எவ்வாறு இந்த அளவிற்க்கு பரவியது என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இது போல என்னென்ன தீமைகள் உள்ளன என்று முழுமையாக கண்டறியப்பட வேண்டும்.
ஸ்டீல் உருக்கு ஆலையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்ற அடிப்படையில் உங்களின் கட்டுரைக்காக காத்திருக்கிறேன். கோவையையும், என்னையும், சக்தியையும் இணைத்தது இந்த ஸ்டீல் உருக்கு ஆலை தான். பகிர்வுக்கு நன்றி கிரி.
// ஏரி குளம் தூர்வாரும் போது ஆர்வக்கோளாரில் களிமண்ணை அப்புறப்படுத்திவிடக்கூடாது. //
உன்மை.
தூர்வாருகிறோம் என்று களிமண்னை தனியார் செங்கல் சூளைக்கு விற்று செம இலாபம் பார்ப்பார்கள்.
வண்டல் மண் இருந்தால் விவசாயிகளுக்கு வழங்கலாம்.
@அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின்
“இது எவ்வாறு இந்த அளவிற்க்கு பரவியது என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது”
இதை அரசாங்கமே விறகுக்காக பரப்பி இருக்கிறார்கள் இதன் ஆபத்து தெரியாமல்.
“கோவையையும், என்னையும், சக்தியையும் இணைத்தது இந்த ஸ்டீல் உருக்கு ஆலை தான்”
🙂