சென்னையில் வருடாவருடம் மழையின் போது வீடுகளில் வெள்ளம் என்ற பேச்சு சகஜமாகி வருகிறது. Image Credit
இதற்குக் காரணம் ஏரி குளங்களை ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதித்து வரும் அரசியல்வாதிகளே!
ஆக்கிரமிப்பால் அழியும் சென்னை!
வாக்கு மற்றும் முறையற்ற சம்பாத்தியத்துக்காக இது போல மோசமான செயல்களில் கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் குறிப்பிட்ட கட்சியைக் குறிப்பிட்டு கூற வேண்டிய அவசியமில்லை காரணம், எந்தக்கட்சியும் பாகுபாடு இல்லாமல் ஆக்கிரமிப்பைச் செய்கிறார்கள்.
நில ஆக்கிரமிப்பு என்பது மற்ற இடங்களில் சமாளிக்கக் கூடிய பிரச்சனை ஆனால், நீர் நிலைகளில் என்பது மிக மிக ஆபத்தான செயல்.
விரிவடையும் சென்னை சுருங்கும் நீர்ப்பரப்பு
சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால், முன்னரே கூறியபடி ஆக்கிரமிப்பால் நீர்ப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.
தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது ஆனால், நீர் நிலைகளின் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது.
சென்னையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புச் செய்யப்படாமல், தூர்வாரி சரியாகப் பராமரிக்கப்பட்டு இருந்தால், இன்னும் 20 வருடங்களுக்காவது தண்ணீர் பிரச்னையைப் பெரியளவில் சென்னை சந்தித்து இருக்காது.
ஆனால், நிலைமை என்னவென்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.
பொறுப்பில் உள்ள பொறுப்பற்றவர்கள்
நீதிமன்றம் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை நீக்க உத்தரவு போட்டும், மாவட்ட ஆட்சியர்களை நீதிமன்றத்துக்கே வரவழைத்து எச்சரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதை எல்லாவற்றையும் விடப் படு கேவலம், “எவ்வளவு முயற்சித்தும் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை” என்று தமிழக அரசு வெட்கமின்றிக் கூறுகிறது.
அரசு நினைத்தால் ஆக்கிரமிப்பை தடுக்க முடியாதா? ஏன் இவர்கள் அதிகாரம் இருந்தும் செய்வதில்லை.
காரணம், வாக்கு போய் விடும், அதோடு இதை வைத்துச் சம்பாதிக்க முடியாது.
ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளுக்கு அதிகாரிகள் எப்படி மின்சாரம், குடிநீர், சாலை வசதி கொடுக்கிறார்கள்? புரியாத புதிர். இதெல்லாம் என்ன கணக்கு?!
வாழத்தகுதியற்ற நகரமாக மாறி வரும் சென்னை
அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். எதிர்காலப் பிரச்சனைகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
எந்த ஒரு அரசும் ஆக்கிரமிப்பை தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இதனால், ஏரிகள் ஆயிரம் ஏக்கரில் இருந்து 100, 150 என்று சுருங்கி வருகிறது.
இதனால் ஏற்படும் எதிர்காலப் பிரச்சனைகளை நினைத்தாலே பகீர் என்று இருக்கிறது.
இப்படியே தொடர்ந்தால், சென்னை வாழத் தகுதியில்லாத நகராக மாறி விடும்.
ஊழல் திருட்டு சாதாரணமாகி வருகிறது
என் மனக்குமுறல் எல்லாம்…
எதுவுமே இல்லை என்றால் பரவாயில்லை மனதை தேற்றிக்கொள்ளலாம் ஆனால், எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் அனைத்தையும் தொலைத்துக்கட்டி இந்த நிலைக்கு வருகிறோமே என்று நினைக்கும் போது போது தான் தாங்க முடியவில்லை.
என் நகரை, என்னை வாழ வைத்த நகரை இப்படி என் கண் முன்னே கூறுபோட்டு அழிக்கிறார்களே! என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை 🙁 .
ரஜினி கூறிய சிஸ்டம் மாறாதவரை இந்த நிலை மாறாது ஏனென்றால், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மக்கள் அனைவரின் மன நிலையும் இதற்குப் பழகி இருக்கிறது.
இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல, இதுவே என் கவலையை அதிகரிக்கிறது.
தூங்கும் தமிழக அரசு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து முறைக்கு மேல் தூர்வார நிதி அறிவித்தார் ஆனால், கடைசிவரை புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளைத் தூர்வாரவில்லை.
வறண்டு கிடந்த ஏரிகளைத் தூர்வார என்னவொரு அருமையான வாய்ப்பு! ஆனால், எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை பெய்கிறது, ஏரி நிரம்பினால் வீணாகும் தண்ணீரை தூர்வாரி இருந்தால் சேமிக்கலாம்.
இதைப் பார்க்கும் போது கோபம் வருமா வராதா? எனக்குக் கோபம் என்பதை விட வயித்தெரிச்சலாக உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களைத் திருப்தி செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள்
பலர் ஏரிக்குள்ளே வீட்டைக் கட்டியதால் தான் தற்போது வீட்டுக்குள்ளே தண்ணீர் வருகிறது. இது போல அனுமதிப்பதால், வீடு கட்டியவர்களுக்கும் பிரச்சனை ஏரியை அழிப்பதால் மற்றவர்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை.
இப்படியே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அனுமதித்துக்கொண்டே இருந்தால், இதற்கு முடிவு தான் என்ன?!
ஆக்கிரமிப்பை அனுமதித்து நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துபவர்களையும் சிரமத்தில் தள்ளுகிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்கிறது
சதுப்பு நிலப்பகுதிகள் அனைத்தும் கட்டிடங்களாக மாறி வருகின்றன. அரசாங்கமே குடிசை மாற்று வீடுகளைச் சதுப்பு நிலப்பகுதியில் கட்டி வருகிறது.
நீமன்றத்தின் உத்தரவுக்கும் மதிப்பில்லை, அரசாங்கமும் செய்ய மறுக்கிறது, அதிகாரிகளும் உடந்தை, மக்களும் இதைப் பயன்படுத்தினால், யாரிடம் சென்று முறையிடுவது?!
நியாமில்லாத செயல்களைச் செய்யும் சிலரை திருப்தி செய்ய நினைத்துச் சென்னையின் பெரும்பான்மை மக்களை அரசாங்கம் பேரழிவுக்குக் கொண்டு செல்கிறது.
ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட கட்டிடங்களை இடித்துத் தள்ளி ஆக்கிரமிப்பை மீட்கவில்லை என்றால், சென்னையின் அழிவை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
என்னுடைய நகரை, என்னை வாழ வைத்த நகரை இப்படி என் கண் முன்னே கூறுபோட்டு அழிக்கிறார்களே! என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.
நூற்றுக்நூறு உண்மை .
கண்களில் நீர் வரவழைத்துவிட்டிர்கள் கில்லாடி …….
கிரி நீங்க {நெட்டிசன்ஸ்} அரசியல்ல இறங்குங்க தமாசு பண்ணல சீரியஸ்யாதான் சொல்றேன் ,என்கிட்ட ஐடியா இருக்கு. ஆனா அது ஏற்கனவே பேஸ்புக்ல இருக்குமோன்னு சந்தேகம்.[நா பேச்சுதமில அப்பிடியே எழுதணும்னு நினைக்கிறேன் அதில அட்வைஸு வேணாம் ]
அடடா தமிழ்ல்லயே தப்பு ரப்பர் வைக்கப்பிடாதா கிரி
கிரி, எத்தனை முறை நாம் புலம்பினாலும் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை??? வெளிப்படையாக கூறினால் உயிருக்கு இங்கு மதிப்பில்லை.. ஒரு பிரச்சனை நடக்கும் முன்பு, யோசிப்பதை விட அது நடந்து பல உயிர்களை காவு வாங்கிய பின்பு கூட தீர்வு இல்லை.. முந்தைய வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் முன்பே, அடுத்த நிகழ்வு!!!
இதை யார் மீது குறை கூற??? அரசாங்கம் மீதா??? ஆறு / ஏரிகளின் மீது வீடு கட்டிய பொதுமக்களின் மீதா??? நமது காரியம் முடிந்தால் சரி என்று, பொதுமக்களுக்கு வீடு கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீதா??? அல்லது இயற்கை மீதா????…
மவுலிவாக்கம் நிகழ்வுக்கு பின் அரசாங்கம் அறிவித்த, அறிவிப்புகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்பட்டதா???? இந்த அறிக்கையை நாம் படித்தாலே போதும்… யாரோ செய்யும் தவறுக்கு, யாரையோ தண்டிப்பது போல்… எந்த வசதியும் இல்லாத சாதாரண சாமானிய மக்களின் நிலைகளை பார்க்கும் போது… ஏற்படும் ஏக்கமும் / கோபமும்… சொல்ல முடியாது…
ஏதோ ஒரு காரணத்தால் ஒரு இரவு நம்மால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்றால் மறு நாள் நமது மனநிலை எவ்வாறு இருக்கும்… என்றுமே நிலையான இருப்பிடம் இல்லாமல் கை குழந்தைகளை வைத்து கொண்டு அலையும் இந்த நாடோடிகள் செய்த பாவம் என்ன?????
ஒரு வேளை பசிக்கும் போது இருவேளைக்கான உணவை உண்ண முடியாது… ஆனால் சுயநலம் கொண்ட இத்தகைய மனிதர்களை??? என்ன சொல்வது என்று தெரியவில்லை… எல்லாவற்றிலும் ஊழல் செய்து கோடி கோடியை கொள்ளை அடித்து வைத்து இருக்கும் இறுதில் கொண்டு செல்வது என்ன????
அனைவரின் வருகைக்கும் நன்றி
@VIC நன்றி 🙂
@யாசின் இதெல்லாம் எழுதி நம்மை மன திருப்தி செய்து கொள்ள மட்டுமே உதவும். சரியான நபர் நடவடிக்கை இல்லாமல் இதற்கு தீர்வு என்பதே கிடையாது.