நேசமணி ட்விட்டர் ட்ரெண்டிங்கால் திரும்பக் கவனம் பெற்ற வடிவேல் பேட்டியைக் காண நேர்ந்ததில், வடிவேலுக்கு வாய் வரமா சாபமா என்று கேள்வி தோன்றியது.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளான “நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” வடிவேலுக்கு பொருத்தமாக இருக்கும்.
வடிவேலுவின் பேட்டி ஆணவத்தின் உச்சம். Image Credit
சிம்பு தேவன்
23 ம் புலிகேசி படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை அனைவரும் அறிந்தது. இன்றளவும் பலரும் நினைவு கூறும் நகைச்சுவையாக உள்ளது.
இதில் “இயக்குநர் சிம்பு தேவன் பங்கு எதுவுமில்லை, அவனுக்கு எதுவுமே தெரியாது, என்னய்யா பண்ணனும் என்று கேட்டால், நீங்களே பண்ணுங்க சார் என்று சிரிப்பான்” என்று படு மோசமாகத் தன் பட இயக்குநரை விமர்சித்து இருந்தார்.
படத்தையே தான் தான் இயக்கியது போலக் கூறி இருந்தார்.
வடிவேலு தன்னுடைய கதாப்பாத்திரத்தை மேம்படுத்த (improvise) தான் எடுக்கும் முயற்சிகளைக் கூறினார்.
இயக்குநர் சொல்வதை அப்படியே செய்யாமல் கூடத் தன் பாணியைக் கொடுத்து மேம்படுத்திக் காட்சியில் நடிக்கும் போது அக்காட்சி இன்னும் மெருகடைகிறது.
இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், இயக்குநரை இது போல ஒரு பொதுவெளி ஊடகத்தில் மரியாதைக் குறைவாக அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதும், சிம்புதேவன் உடல்மொழியைக் கிண்டல் செய்வதும் மிக மோசமான செயல்.
உண்மையில் இக்காணொளியை சிம்புதேவன் பார்த்தால், என்ன நினைப்பார்!? அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்.
ஷங்கர்
அடுத்துத் தற்போது வடிவேலு நடிக்கும் 24 ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் இயக்குநர் ஷங்கரையும் “இவர் ஒரு கிராஃபிக்ஸ் டைரக்டர்” என்று நக்கல் அடித்து, “நகைச்சுவையைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்?” என்று கேட்கிறார்.
“காதலன்” படத்தில் என்னவளே, முக்காபுலா பாடல்களில் வரும் கிராபிக்ஸ் தான் படம் வெற்றி பெற காரணம் என்பது போலப் பேசுகிறார்.
அப்படம் வடிவேலுக்கு எவ்வளவு பெரிய உயரத்தை கொண்டு வந்தது என்பது 90’s ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும். இப்படம் வந்த பிறகே வடிவேலுவின் வளர்ச்சி வேகத்தில் சென்றது.
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களின் நகைச்சுவை இன்றளவும் பேசப்படுகிறது.
இதன் பிறகு வந்த எந்திரன், ஐ, 2.0 படங்கள் நகைச்சுவைக்கான கதைக்களம் இல்லையென்றாலும், அதிலும் ரசிக்கும்படி நகைச்சுவை இருக்கும்.
இம்சை அரசன் 23 ம் புலிகேசி 2006 ம் ஆண்டே 5 கோடி முதலீட்டில் நகைச்சுவை நடிகரை நம்பி எடுக்கப்பட்ட படம். படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர்.
அப்போது படத்தில் இருந்த குதிரை காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், படம் வெளியிடுவதே சிக்கலில் இருந்தது.
பின் வடிவேலு அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் பேசிப் படம் வெளிவர உதவக் கேட்டுக்கொண்டு பின் படம் வெளியாகிப் பெரிய வெற்றிப் பெற்றது.
வடிவேலுவை நம்பி 2006 ம் ஆண்டே 5 கோடி முதலீடு செய்த ஷங்கர் முட்டாள் தான், கிராஃபிக்ஸ் டைரக்டர் தான். 2006 ம் ஆண்டில் 5 கோடி என்பது இரண்டாம் நிலை நாயகர்களுக்குக் கூட யோசிப்பார்கள்.
அப்படம் தோல்வியடைந்து இருந்தால், ஷங்கர் அதில் இருந்து மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. மிகப்பெரிய ஆபத்து.
23 ம் புலிகேசி மட்டும் ஏன் வெற்றி பெற்றது?
தன்னால் மட்டுமே படம் மாபெரும் வெற்றிப் பெற்றது என்றால், இவர் நடிப்பில் இவரை முன்னிறுத்தி வந்த, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் மற்றும் எலி படங்கள் ஏன் படு தோல்வி அடைந்தது?
2008 ல் வெளிவந்த “இந்திரலோகத்தில் நா அழகப்பன்” படத்தில் வடிவேல் செய்த குழப்படிகளை, கொடுத்த நெருக்கடிகளை இயக்குநர் தம்பி ராமய்யாவிடம் கேளுங்கள், கதறி விடுவார்.
இதெல்லாம் தற்போதைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தனிப்பட்ட வெறுப்புக்காகக்கேப்டனை 2011 ம் ஆண்டுத் தேர்தல் பொது மேடைகளில் மிக அநாகரீகமாக விமர்சித்தது இன்றளவும் மறக்கவில்லை.
வடிவேலுக்கு வாய் வரமா சாபமா
கூட்டம் கூடுகிறது என்பதற்காக, புகழ் போதையில் மனசாட்சியே இல்லாமல் கிண்டலடித்தார். மக்கள் கொடுத்த தீர்ப்பு வடிவேலு கனவிலும் நினைக்காதது.
அப்ப விழுந்த அடியில் இருந்து வடிவேல் இன்னும் மீளவில்லை ஆனால், இன்னும் திருந்தவில்லை.
வடிவேலுவின் திறமையில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், அவரது ஆணவம், திமிர் ஒரு நல்ல கலைஞனை அழித்துக்கொண்டு இருக்கிறது, கிட்டத்தட்ட அழித்து விட்டது.
வடிவேலுக்கு வாய் வரமாக இருந்து சாபமாக மாறி விட்டது.
தொடர்புடைய கட்டுரை
வண்டு முருகனை டேமேஜ் செய்த சமூகத்தளங்கள்
2011 ம் ஆண்டு எழுதிய இக்கட்டுரையில் உள்ள மீம்ஸ்களுக்கும் தற்போது வரும் மீம்ஸ் களுக்கும் செம்ம முன்னேற்றம். இந்த ஆண்டு தான் மீம்ஸ் அறிமுகமாகி ஓரளவு பிரபலமாக இருந்தது.
அப்போது வடிவேலுவை சமூகத்தளங்களில் ஒரு வழியாக்கி விட்டார்கள்.
கொசுறு
இப்பேட்டி குறித்துத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகப் பேசிய T சிவா, தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் மற்றவர்களிடையே வடிவேல் நடந்து கொண்ட முறையையும் அவர் கொடுத்த குடைச்சல்களையும் விவரித்து இருந்தார்.
சமீபத்தில் வெளிவந்த சிவலிங்கா உட்படச் சில படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை எடுபடவில்லை.
தயாரிப்பாளர்களும் இவரின் கட்டுப்பாடு, சம்பளம் போன்றவற்றுக்குப் பயந்து இவரை நடிக்க அழைப்பதில்லை என்று சிவா கூறுகிறார்.
நேசமணி ட்ரெண்ட் வடிவேலுவின் மனதில் தன்னை இன்னும் பல படி உயர்த்தித் தலைக்கனத்தை அதிகரித்து அவரின் திரை வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.
வடிவேல் தான் NETFLIX போவதாகவும், தன்னை ஹாலிவுட்டில் அழைப்பதாகவும் கூறியுள்ளார். அங்கேயாவது பிரச்னை செய்யாமல் நடிக்க வாழ்த்துகள்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற கதாபாத்திரத்தை வைத்து மன்னர் ஜோக்குகளை ஆனந்த விகடனில் வரைந்து எழுதியவர் சிம்புதேவன் என்று நினைக்கிறேன்.
வீர தீர மன்னர்கள் கதையாக இல்லாமல் வெத்துவேட்டு மன்னர் கதை என்றதும் வடிவேலு நடிப்பை மனதில் கொண்டு சிம்புதேவன் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம்.
ஆனால் அந்த படத்தின் இயக்குனருக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.
நடிகர் வடிவேலுவின் நேர்காணலை பார்க்கவில்லை.. ஆனால் அவரின் நிலையை பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.. பணம், புகழ், பேர் இவைகளை என்று வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் இவைகள் என்றும் நிரந்தரமானது கிடையாது..
மற்ற துறைகளை காட்டிலும் சினிமா, கிரிக்கெட் மூலம் பணம், புகழ், பேர் கொஞ்சம் சீக்கிரம் வரும்.. ஆனால் தக்க வைப்பது மிக கடினம்.. திரைத்துறையில் நிறைய பேர் இருந்தாலும் நடிகர் ஜெய்சங்கரை பற்றியும், சிவாஜியை பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை படித்துள்ளேன்.. ஆணவத்தாலே வீழ்ந்து போன சந்திரபாபுவை பற்றியும் படித்துள்ளேன்..
சினிமா உலகை பற்றி நடிகர் வடிவேலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை.. இருப்பினும் அவர் இன்னும் மாறாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது..எந்த படமாக இருப்பினும் படத்தின் முதல் ஹீரோ இயக்குனர் தான்.. அந்த வகையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனரை இத்தனை ஆண்டுகளுக்கு பின் விமர்சித்து இருப்பது தவறு.. இயக்குனருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி பின் இரண்டாம் பாகம் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்???? பகிர்வுக்கு நன்றி கிரி.
@சரவணன் “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற கதாபாத்திரத்தை வைத்து மன்னர் ஜோக்குகளை ஆனந்த விகடனில் வரைந்து எழுதியவர் சிம்புதேவன் என்று நினைக்கிறேன்.”
ஆமாம்.
வடிவேல் வேறு உலகத்தில் உள்ளார்.
@வடிவேல் ரொம்ப காலமாக இப்படி தான் இருக்கிறார். இவர் மாறுவார் என்று தோன்றவில்லை.