பாலபாரதி எனக்கு ஒரு பதிவராக, ஊடகவியாளராக 2008 ஆண்டிலிருந்து அறிமுகம், “விடுபட்டவைகள்” என்ற தலைப்பில் எழுதுவார்.
எனக்கு நேரடி பழக்கமில்லை ஆனால், அவரது தளத்தைத் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தேன்.
ஒரு சமயத்தில் தனது மகன் கனிக்கு ஆட்டிசம் இருப்பதாகக் கூறி அது தொடர்பான கட்டுரைகளை எழுதியும் பகிர்ந்து வந்தார். நானும் அவற்றை என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருவேன்.
Read : உனக்கேன் இவ்வளவு அக்கறை..
ஆட்டிசம் என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடு.
ஆட்டிசம் பற்றி அவரது கட்டுரைகள் படிக்கும் போது சமீபத்தில் அவரது மனைவி லஷ்மி அவர்கள் ஆட்டிசம் பற்றிய தனது அனுபவங்களை, மகனுக்காகச் சந்தித்த போராட்டங்களை ‘எழுதாப் பயணம்’ புத்தகமாக எழுதி இருப்பதாகக் கூறி இருந்தார்.
அப்புத்தகத்தின் விமர்சனமே இது!
எழுதாப் பயணம்
ஆட்டிசம் குறைப்பாடால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அவரது அனுபவங்களை எளிமையாக, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெற்றோருக்கும் பயனளிக்கும் வகையில் விளக்கியுள்ளார்.
ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்புக் குழந்தைகளாகக் கருதப்படுகின்றன.
இக்குழந்தைகளின் நடவடிக்கைகள் வழக்கமான குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டு இருக்கும்.
இதனால் இக்குழந்தைகளைப் பராமரிப்பது எளிதல்ல.
பொது இடங்களில், பயணங்களில் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கும்.
இக்குழந்தைகள் தங்களின் வழக்கமான சூழலில் இருந்து மாறும் போதோ, அதிகச் சத்தத்தைக் கேட்டாலோ இவர்களைக் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று.
புத்திசாலிக் குழந்தைகள்
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், அவர்கள் மிகைத்திறமையானவர்கள்.
சாதாரணக் குழந்தைகளை விடப் பல விஷயங்களில் புத்திகூர்மை மிக்கவர்கள் ஆனால், அதை அவர்களுக்கு உடனே வெளிப்படுத்தத் தெரியாது அவ்வளவே!
இசையில், பயணத்தில் அதிகம் நாட்டமுள்ளவர்கள்.
முதன் முதலாகத் தன்னுடைய குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்புள்ளது என்று அறியும் போது ஏற்படும் அதிர்ச்சி, அதன் பிறகு நடைமுறை பிரச்சனைகளால் அடையும் மன அழுத்தங்களையும், தொடரும் பிரச்சனைகளால் கணவன் மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களையும் விளக்கியுள்ளார்.
அனைத்துமே உறுத்தாமல், இயல்பான சம்பவங்களை விளக்குவதாக உள்ளது.
ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளி
இக்குழந்தைகளுக்கான பள்ளியைத் தேர்வு செய்வது, பள்ளிகளில் ஆசிரியர்களின் புறக்கணிப்பு போன்ற நடைமுறை சிக்கல்களைக் கூறியுள்ளார்.
இதில் படிப்பவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தையைக் கொண்டுள்ள பெற்றோருக்கு எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வராமல், அவற்றை மேலும் விளக்குவதைத் தவிர்த்துள்ளார். இது மிகச்சரியான வழிமுறை.
பிரச்னை என்ன என்பதைக் கூறுவது சரி, அதை விளக்குகிறேன் பேர்வழி என்று படிப்பவர்களுக்குப் பயத்தைக் கொண்டு வருவதல்ல இப்புத்தகத்தின் நோக்கம்.
மற்றவர்களுக்கு, இந்த வாய்ப்புகள் எல்லாம் உள்ளது, இதையெல்லாம் முயற்சியுங்கள் என்று இது பற்றித் தெரியாத புதியவர்களுக்கு வழிகாட்டும்படியுள்ளது.
ஏன் பாசம்?
எனக்கு ஆட்டிச குழந்தைகள் மேல் ஏன் பாசம் வந்தது என்று தற்போது வரை புரியவில்லை. ஆட்டிசம் குழந்தைகள் என்றில்லை சிறப்புக் குழந்தைகள் என்றாலே இனம் புரியாத பாசம்.
சாதாரணக் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் குழந்தைகளின் மதிப்புத் தெரியாமல், சிறு குறும்புகளுக்குக் கூட அடிக்கிறார்கள், கண்டபடி பேசுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஒரு மணி நேரம் கூட ஆட்டிச குழந்தையைச் சமாளிக்க முடியாது என்பதே உண்மை ஆனால், தங்கள் குழந்தைகளை ஆயிரம் குறை கூறுகிறார்கள்.
எப்போதுமே இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது என்பார்கள். உண்மையே!
இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் உள்ள பெற்றோர் தங்களுடைய சிறப்புக் குழந்தையைப் பொது இடத்தில் அழைத்து வரும் போது அக்குழந்தை செய்வதைப் பார்த்துச் சிலர் கிண்டலடிப்பது, கோபப்படுவதை எல்லாம் காணும் போது இவர்கள் எல்லாம் மனிதர்களா?! என்று தான் தோன்றுகிறது.
இதை எழுதும் போது கூட எனக்குக் கண் கலங்குகிறது.
அன்பாக நடந்து கொள்ளுங்கள்
இதைப்படிக்கும் அனைவரையும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். ஆட்டிச, சிறப்புக் குழந்தைகளை நீங்கள் பொது இடங்களில் கண்டால், இது போல மோசமாக நடந்து கொள்ளாதீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
அதே போல இப்பெற்றோர்கள் விரும்புவது, இக்குழந்தைகளை இரக்க, பரிதாப பார்வை பார்க்காதீர்கள், அது நீங்கள் திட்டுவதை விட மோசமாக இருப்பதாக உணர்கிறார்கள்.
அவர்களுக்கு இலவச ஆலோசனையை வழங்கி மேலும் புண்படுத்தாதீர்கள்.
இக்குழந்தைகளின் பெற்றோர்கள் நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஏற்கனவே முயற்சித்து இருப்பார்கள். இதற்கு லஷ்மி அவர்கள் தரும் உதாரணம் அசத்தல்.
குழந்தைகளிடம் இயல்பாக இருக்கிறேன் என்று வேறு எதையும் வலிந்து முயற்சிக்காதீர்கள். ஏனென்றால், புதியவர்களை இக்குழந்தைகள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே, புன் சிரிப்பு மட்டும் போதும்.
ஒருவேளை இக்குழந்தை உங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால்..
அவர்களிடம் “பரவாயில்லைங்க! எங்க குழந்தையாக இருந்தால், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோமா” என்று அந்தப் பெற்றோருக்கு ஒரு நிம்மதியைக் கொடுங்கள். இது போன்ற அனுசரிப்பு தான் அவர்களுக்குத் தேவை.
எனக்கு ஒரு விருப்பமுள்ளது,
இது போல ஒரு சிறப்புக் குழந்தை என்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால், மேலே கூறியதை அக்குழந்தையின் பெற்றோரிடம் கூறி அவர்கள் மன நிம்மதியைக் காண வேண்டும் என்பதே! இது போல ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் என்னைப்பொறுத்தவரை நம் அனைவரை விட மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். அவர்களின் பொறுமைக்கும், சகிப்பு தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஈடு இணையில்லை.
இவர்களின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம்! இவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
‘எழுதாப் பயணம்’ விலை ₹100. நான் நான்கு புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அக்காக்களுக்கும் படிக்கக் கொடுத்து, அவர்கள் மூலமாக இன்னும் பலருக்கு ஆட்டிசம் குறித்த புரிதலைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
உங்கள் அனைவரையும் இப்புத்தகத்தை வாங்க பரிந்துரைக்கிறேன். அதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகம் வாங்க – https://www.commonfolks.in/books/d/ezhuthaa-payanam Link
கொசுறு
தமிழில் ஆட்டிசம் பற்றிக் குறிப்பிடத் தக்க அளவில் வந்த படம் கிஷோர், ஸ்னேகா நடித்த “ஹரிதாஸ்”.
Read : ஹரிதாஸ் – குறிஞ்சிப் பூ
இதுவரை நீங்கள் இப்படம் பார்க்கவில்லையென்றால், பார்க்கப் பரிந்துரைக்கிறேன். ஓரளவு ஆட்டிசம் பற்றிப் புரிந்து கொள்ள உதவும்.
தொடர்புடைய கட்டுரை