முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் படமே ராக்கெட்ரி. Image Credit
ராக்கெட்ரி
கலாம் போலத் திறமையானவரும் ராக்கெட் தயாரிப்பில் பல சாதனைகள் செய்தவருமான நம்பி நாராயணன் மீது காவல்துறை பொய் வழக்கைப் போடுகிறது.
தான் நிரபராதி என்று நிரூபிக்க 24 வருடங்கள் ஆகிறது. இந்தச் சோதனைகளையும், அவரின் சாதனைகளையும் கூறும் படமே ராக்கெட்ரி.
நம்பி நாராயணன்
ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நம்பி நாராயணனுக்கு அமெரிக்காவின் Princeton University ல் படிக்க வாய்ப்புக்கிடைக்கிறது.
Princeton University யில் படிப்பதும், முடித்துச் சான்றிதழ் வாங்குவதும் எளிதானதல்ல. அங்கே படித்து முடித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
நம்பி நாராயணன் திறமையை உணர்ந்த நாசா அவருக்கு அதிகளவு சம்பளம், வருட சுற்றுலா சலுகைகளைக் கொடுக்கத் தயாராக உள்ளது.
சம்பளத்தின் அளவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவில் ஐந்து வருடங்கள் சம்பாதிப்பதை ஒரே மாதத்தில் கொடுக்கிறார்கள்.
தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதில் மட்டுமே ஆர்வம் இருந்த நம்பிக்கு அமெரிக்காவில் வசிக்க ஆர்வமில்லை.
இந்தியா வரும் நம்பி மற்ற நாடுகளுடன் இணைந்து எப்படியான சாதனைகளைச் செய்கிறார் என்பது வியப்பளிக்கிறது.
இஸ்ரோ என்பது அப்போது ஆரம்ப நிலை எனவே, எதற்கும் நிதி கிடைக்காமல் எதையுமே உருவாக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
திறமை இருந்தும் அதைச் செயல்படுத்த போதுமான நிதியில்லை என்பதே இந்தியாவின் சோகம்.
இதனால், திறமையான பேச்சு வார்த்தைகளின் மூலம், குறைந்த விலையில் பல்வேறு நாடுகளிடமிருந்து தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் நம்பி பெற்றுள்ளார்.
மாதவன்
இயக்கி நடித்துள்ள மாதவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனென்றால், கமர்சியல் படங்களை எடுத்தே திணறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இது போன்ற படத்தை எடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும்.
எந்தத் தைரியத்தில் எடுத்தார் என்றே புரியவில்லை!
நம்பியைப் போலவே மிகப்பொருத்தமாக உள்ளார். அதோடு அவர் இயக்கம் என்பதால், கூடுதல் உரிமையை எடுத்துக்கொள்ளாமல் பொறுப்பாக நடித்துள்ளார்.
முதல் பாதிப் பலரும் கூறியது போல அறிவியல் வகுப்பில் இருப்பது போலவே உள்ளது ஆனால், அதை ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்து விடாமல் கொண்டு சென்றது மாதவன் திறமை.
இடையிடையே சில ரசிக்கும்படியான காட்சிகளை இணைத்துச் சலிப்பை தடுத்துள்ளார்.
அமெரிக்க, ஐரோப்பா நாடுகளை அந்தக்காலச் சூழ்நிலையைப் போலக் காண்பித்தது சிறப்பு. எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை!
இந்தியாவை விட வெளிநாடுகள் பழைய காலத்தைச் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளது.
அதே போல ராக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்த முதலீட்டில் இருப்பினும் அதன் சிறப்புக் குறைந்து விடாமல் பிரம்மாண்டத்துடன் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.
மொழிப்பயன்பாடு
வெளிநாட்டு நபர்கள் ஆங்கிலம் பேசுவதாகக் காட்டி பார்ப்பவர்களைக் குழப்பாமல் அனைவரும் தமிழ் பேசுவது போல அமைத்தது சிறப்பு.
அவர்களின் தமிழ் பின்னணி குரல்களும் பொருத்தமாக இருந்தது. நம்பி என்ற பெயர் அனைவராலும் எளிதாக உச்சரிக்க முடியும் என்பதும் இயல்புக்கு ஒரு காரணம்.
தமிழில் சூர்யாவும், இந்தியில் ஷாருக்கும் நம்பியைப் பேட்டி எடுப்பவர்களாக வந்துள்ளனர். மாதவனின் முயற்சிக்கு ஆதரவை கொடுத்தது பெரிய விஷயம், பாராட்டுதலுக்குரியது. இருவருமே இதற்காக பணம் வாங்கவில்லை.
பேட்டி முடிந்ததும் ஜெய்ஹிந்த் கூறாமல் சூர்யா தவிர்த்தது ஏன் என்று புரியவில்லை.
குடும்பம்
பல வாய்ப்புகளை, பணம் வரும் வழியை நாட்டின் மீதான பற்றுக்காக இழந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டவர்களுக்குத் தேச துரோக பட்டம் கிடைத்தால் எப்படிப்பட்ட மனநிலை இருக்கும்?!
எப்படித்தான் அவர்கள் குடும்பத்தினர் 24 வருடங்களைச் சமாளித்தார்களோ! எத்தனை ஏச்சுகள், கிண்டல்கள், விமர்சனங்கள்!
இதைப் படிப்பது எளிதாக இருக்கலாம் ஆனால், 24 வருடங்கள் அனுபவித்தவர்கள் மனநிலையைக் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை 🙁 .
மாதவன் மனைவியாக வரும் சிம்ரன் மன உளைச்சல்களால் பாதிக்கப்படுகிறார்.
மாதவனிடம் அவரது மகன், ‘அப்பா! நாம அவ்வளோ தானா!‘ என்று கேட்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன.
மாதவனுக்கு (நம்பிக்கு) அவரது குடும்பத்தினர், பக்கத்துக்கு வீட்டினர், அவரது நண்பர்கள் பலர் ஆதரவாக உள்ளனர்.
ஆனால், இவற்றைத் தாண்டிப் பொதுவெளியில் நடைபெறும் அவமானங்கள், புறக்கணிப்புகள் எவராலும் தாங்க முடியாது.
24 வருடங்கள் என்பது நரகமே!
நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்? என்று நம்பி கேட்கிறார். இதற்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம்.
நம்பிக்கு ஏற்பட்ட நிலையைப் பார்க்கும் சிலருக்கு எதுக்குடா நம்ம வாழ்க்கையை இந்தியாவில் வீணடிக்க வேண்டும்! என்ற எண்ணம் வரலாம்.
இந்தியா இழந்த வருடங்கள்
நம்பிக்கு ஏற்பட்ட நிலைமை காரணமாக வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலையில், இந்தியா 12+ வருடங்களுக்குப் பின்தங்கி விட்டது.
2014 ல் சாதித்ததை 2002 லியே செய்து இருக்க முடியும் என்பது இந்தியாக்கான இழப்பே.
இந்தியா வணிக முறையில் வெற்றி பெற்றால் வளர்ந்த நாடுகளுக்கு இழப்பு, கடும் போட்டி. இதற்காகவே இவை நடந்து இருக்கலாம் என்று நம்பி சந்தேக்கிறார்.
அமெரிக்காவும் பல உள்ளடி வேலைகளைச் செய்துள்ளது. இந்தியா தற்போது வணிக ரீதியில் குறைந்த செலவில் மற்ற நாடுகளின் சேட்டிலைட்டுகளை விண்ணில் அனுப்பி மேற்கத்திய நாடுகளுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
முன்பு செய்திகளில் இந்தியா செலுத்திய ராக்கெட் கடலில் விழுந்தது, பாதியில் வெடித்தது என்ற செய்தியே வரும் ஆனால், தற்போது நிலை மாறி விட்டது.
ராக்கெட் அனுப்புவதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை எனும் அளவுக்கு இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டது.
25 பேர் இருந்த இஸ்ரோவில் தற்போது 25,000 பேர் பணி புரிகின்றனர்.
இரண்டாம் பாதி முழுக்க உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.
பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம். ஒளிப்பதிவு மிகச்சிறப்பு.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் ராக்கெட்ரி பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
குழந்தைகளுக்கு இப்படம் பிடிக்காது காரணம், புரியாது. மற்றவர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வலியுறுத்துகிறேன்.
வழக்கமாக இது போன்ற நல்ல படங்களில் வசனங்களுக்குக் கிண்டலடித்துக் கமெண்ட் பண்ணுவாங்க ஆனால், இப்படத்துக்கு அவ்வாறு நடக்கவில்லை.
படம் முடிந்ததும் பலரும் எழுந்து கை தட்டி பாராட்டைத் தெரிவித்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த சிறப்பான திரையரங்கு அனுபவம்.
Directed by R. Madhavan
Written by R. Madhavan
Produced by Sarita MadhavanR MadhavanVarghese MoolanVijay Moolan
Starring R. Madhavan, Simran, Rajit KapurRavi, Raghavendra
Cinematography Sirsha Ray
Edited by Bijith Bala
Music by Sam C. S.
Release dates 19 May 2022 (Cannes), 1 July 2022 (India)
Running time 157 minutes
Country India
Languages English, Hindi, Tamil
தொடர்புடைய கட்டுரைகள்
அக்னிச் சிறகுகள் | அப்துல் கலாம் வரலாறு
மங்கள்யான் | விண்வெளி வியப்புகள்
15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”
சூரியனை விட நட்சத்திரம் மிகப்பெரியது
I am Kalam (2011 இந்தி) | A feel good movie
கொசுறு
தந்தி தொலைக்காட்சியில் வந்த நம்பி நாராயணன் பேட்டி இவர் குறித்து மேலும் தெரிந்து கொள்ள உதவும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்கள் விமர்சனம் என்னை உண்மையில் மகிழ்ச்சி கடலில் விழ வைத்திருக்கிறது.. காரணம் நான் கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகளாக நம்பி நாராயணன் அவர்களின் பல நேர்காணல்களை கேட்டு வருகிறேன்.. அது மட்டுமில்லமல் நடிகர் மாதவனின் நேர்காணல்களையும் கேட்டு வருகிறேன்..
முதன்முதலில் நான் கேட்ட நம்பி நாராயணனின் நேர்காணல் என்னை பிரமிக்க வைத்தது.. அதுவும் தமிழில் அவர் பேசியது என்னை இன்னும் வியப்படைய வைத்தது.. அன்றிலிருந்து நான் அவரின் தீவிர ரசிகனாகி விட்டேன்.. நிறைய தகவல்களை அவர் மூலம் தெரிந்து கொண்டேன்..
ஏற்கனவே இயற்பியல் மீது எனக்கு காதல் அதிகம்.. அதுவும் குறிப்பாக விண்வெளி, செயற்கைகோள்கள், ராக்கெட், அண்டம் இவற்றை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும்.. இவர் வாயிலாக பல விஷியங்கள் தெரிந்து கொண்டு வருகிறேன்..
இவருக்கு ஏற்பட்ட கொடுமைகளை என் அலுவலக நண்பன் (மலையாளி) மூலமாக மேலும் அறிந்து கொண்டேன்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் உண்மையில் யாரென்று கூட தெரியாது.. இவர் ஒரு புத்தகம் எழுதி வருவதாக ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.. அது வெளிவந்த பின் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன்..
நடிகர் மாதவன் : உண்மையில் இவரை பற்றி படமாக்க வேண்டும் என்ற எண்ணம் யார்க்கும் வராது. காரணம் சினிமாவை பொறுத்தவரை எப்படி சம்பாரிக்கலாம் என்ற எண்ணம் இருக்குமே தவிர, நம்பி நாராயணனின் வலிகளை சொல்ல யாரும் இங்கு யாரும் இல்லை என்பதே உண்மை.. மாதவன் உண்மையில் இந்த படத்தை எடுத்தது மிக பெரிய விஷியம்..
சில கோடிகள் இலாப/ நட்டமடைந்து இருந்தாலும் யாருமே செய்ய முடியாத, செய்ய துணியாத விஷியத்தை செய்ததால் என்னுடைய வாழ்த்துக்கள் & மற்றும் பாராட்டுக்கள்.. (நேரில் சினிமாக்காரர்களை பார்த்தால் கை குலுக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை வந்தது இல்லை, ஆனால் மாதவனை மட்டும் பாராட்டி கை குலுக்க என் மனம் நாடுகிறது.. நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக இது நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்).
படத்தின் ட்ரைலரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் நேர்த்தியாக இருந்தது.. நீங்க சொன்னது போல் (ராக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்த முதலீட்டில் இருப்பினும் அதன் சிறப்புக் குறைந்து விடாமல் பிரம்மாண்டத்துடன் காட்சிப் படுத்தியுள்ளார்கள்) நானும் இதே போல் தான் எண்ணினேன்.. நிறைய நேர்காணல்களில் இவர்கள் இருவரை பார்க்கும் போது ஒரு குரு / சிஷ்யன் போல இவர்களின் உறவு இருக்கிறது.. மாதவனின் பணிவு, நம்பி சாரின் எளிமை என கூறி கொண்டே போகலாம்..
படம் போன வாரம் வெளியானது.. ஆனால் படத்தை நான் பார்க்கவில்லை.. காரணம் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை இல்லை.. இந்த வாரம் பெருநாள் விடுமுறை மூன்று நாட்கள் இருக்கிறது.. கண்டிப்பாக படத்தை பார்ப்பேன்.. படம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்..
நம்பி நாராயணின் 24 வருட நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் தான் அவரின் வெற்றி .. நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்? இந்த கேள்விக்கு என்று பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கிரி, உங்கள் விமர்சனம் என்னை உண்மையில் மகிழ்ச்சி கடலில் விழ வைத்திருக்கிறது..”
யாசின் நீங்கள் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி 🙂
“இவர் ஒரு புத்தகம் எழுதி வருவதாக ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.. அது வெளிவந்த பின் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன்..”
அவர் புத்தகம் வெளியிட்டு அதை வைத்துத்தான் மாதவன் படம் தயாரித்ததாக நான் படித்தேன். புத்தகம் வெளிவந்து விட்டது.
இவர் பேட்டியில், நான் சிறையில் அடி வாங்கியதை குடும்பத்தினரும் படிப்பார்கள் என்று விலாவாரியாக எழுதவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், அதை அவர்கள் குடும்பத்தினர் யாருமே படிக்க விரும்பவில்லையாம்.
இவர் போன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது.
கிடைத்த அருமையான வாய்ப்புகளையும் ஒதுக்கி இந்தியாக்காக உழைக்க வந்தவருக்கு இப்படிப்பட்ட நிலையா என்று நினைக்கும் போது அதை என்ன சமாதானம் கூறியும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது அவருக்கு நீதி கிடைத்து விட்டது என்றாலும், அவரும் அவர் குடும்பத்தினரும் இழந்த 24 வருடங்கள் திரும்பக் கிடைக்குமா?! 🙁