இந்திய அரசாங்கத்தால் ஓய்வூதியம் பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே அடல் ஓய்வூதிய திட்டம். Image Credit
அடல் ஓய்வூதிய திட்டம்
இத்திட்டத்தின் மூலம் ₹1000, ₹2000, ₹3000, ₹4000, ₹5000 என நம் தேவைக்கு ஏற்ப 60 வயது முடிந்த பிறகு ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.
2015 ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுகிறது.
பலருக்கு இத்திட்டம் குறித்த அறிமுகம் இல்லாததால் இதில் இணைய முடியவில்லை காரணம், இதில் 40 வயது வரை மட்டுமே இணைய முடியும்.
ஓய்வூதிய திட்டம் என்பதால், வயதனாவர்களுக்கான திட்டம் என்றாலும், இள வயதிலேயே இணைவது பங்களிப்புக் கட்டணத்தைக் குறைக்கும்.
யார் இணையலாம்?
இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த, அதிகபட்சம் 40 வயதான இந்தியக் குடிமகன் வரை எவரும் இணையலாம்.
நியமனதாரர் (Nominee) அல்லது வாழ்க்கை துணையை இணைப்பது கட்டாயம்.
எப்படி இணைவது?
உங்கள் வங்கிக்கிளையை அணுகி விவரங்களைக் கொடுத்து இணையலாம்.
வங்கிக்கணக்கு, ஆதார் எண், மொபைல் எண் தேவை.
பங்களிப்புக்கட்டணம் தானியங்கியாக வங்கிக்கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே, சரியான இருப்பு வைத்துக்கொள்வது அவசியம்.
ஓய்வூதிய தொகையை மாற்றம் செய்ய முடியுமா?
வருடத்துக்கு ஒருமுறை மாற்ற முடியும்.
தொகைக்கு ஏற்ப பங்களிப்புத் தொகையும் கூட / குறையும்.
இத்திட்டத்திலிருந்து வெளியேறலாமா?
வெளியேற முடியாது.
உடல்நிலை பாதிப்பு காரணமாக தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இறப்பின் காரணமாக கணக்கை நிறுத்தலாம்.
துவங்கிய வங்கிக்கணக்கில் தான் பணம் செலுத்தப்படும் என்பதால், கணக்கு துவங்கப்பட்ட வங்கிக்கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்து இருப்பது அவசியம்.
வரி விலக்குக்கு இதைக் காட்டலாமா?
80CCD ல் காட்டலாம்.
பரிந்துரை
பலருக்கு இத்திட்டம் குறித்த அறிமுகம் இல்லையென்பது வருந்தத்தக்கது. மத்திய அரசின் திட்டமென்பதால், உறுதியான ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
₹5000 க்கான ஓய்வூதிய பங்களிப்புத்திட்டத்தில் இணைவது சரியானது.
எப்போதுமே இது போல நீண்ட காலத்திட்டத்தில் மாதம் ₹5000 மிகப்பெரிய தொகையாக தற்போது கருதப்பட்டாலும், 20 / 30 வருடங்களுக்குப் பிறகு பணத்தின் மதிப்பு குறையும் போது (Inflation) ₹500 அளவுக்கு இத்தொகை தெரியலாம்.
இது இத்திட்டம் மட்டுமல்ல, இது போல நீண்டகாலத்திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதைக்கணக்கில் கொண்டே திட்டத்தில் இணைய வேண்டும்.
18 வயதில் இணைபவர் ₹1.06 லட்சம் என்றால், 40 வயதில் இணைபவர் ₹3.49 லட்சம் 60 வயதில் பங்களிப்பு செய்திருப்பார்கள்.
எனவே, இள வயதினருக்கு பங்களிப்பு மிகக்குறைவு என்பதால், பிள்ளைகளுக்கு வங்கிக்கணக்கை துவங்கி இணைக்கப் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றவர்கள் சரியான நபரின் ஆலோசனையைப் பெற்று இணையலாம்.
தொடர்புடைய கட்டுரை
ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு பெறுவது எப்படி?
பிற்சேர்க்கை (ஆகஸ்ட் 2022)
அக்டோபர் 1, 2022 முதல் வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து தகவல் தெரிவித்தமைக்கு நன்றி கிரி..