என்றென்றும் ராஜா

14
Endrendrum raja என்றென்றும் ராஜா

ளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி “என்றென்றும் ராஜா” வைக்கடந்த வாரம் தான் பார்க்க முடிந்தது.

என்றென்றும் ராஜா

என்றென்றும் ராஜா நிகழ்ச்சி என்று கூறுவதை விட, அனுபவம் என்று தான் கூற வேண்டும். அவ்வளவு அருமையாக இருந்தது. Image Credit

தாமதமான விமர்சனம் தான் ஆனால், எப்போது கூறினாலும் இதன் சுவை குறையப்போவதில்லை.

இவ்வளவு நீண்ட (4 மணி நேரம்) தொலைக்காட்சி நிகழ்ச்சியை முழுவதும் ரசித்துப் பார்த்தது இல்லை, இடையில் வேறு ஏதாவது ஒரு விசயத்தில் கவனம் சென்று விடும்.

துவக்கத்தில் இருந்து இறுதி வரை (“காட்டுக்குயிலே” பாடல் தவிர்த்து, காரணம் பின்னர் கூறுகிறேன்) ஒரு பாடல், பேச்சு விடாமல் ரசித்துப் பார்த்தேன்.

நிகழ்ச்சி நடந்த இடத்தில் நான் இல்லாமல் போய் விட்டேனே என்று வருத்தப்பட்டேன்.

ஜனனி ஜனனி

தாய் மூகாம்பிகை பாடலான “ஜனனி ஜனனி” யுடன் ஆரம்பித்துக் கடைசிப் பாடலான சகலகலா வல்லவன் “இளமை இதோ இதோ” வரை இசை மழையாகப் பொழிந்து விட்டார்கள்.

அனைத்துப் பாடல்களுக்குமே, இசை ஒரிஜினல் போல இருந்தது.

ஒவ்வொரு பாடலின் இசையையும் அவ்வளவு தத்ரூபமாக வாசித்து அசத்தி விட்டார்கள்.

எப்படி அதே போல இசையைக் கொண்டு வருகிறார்கள் என்று, ஒவ்வொரு பாடலுக்கும் வியப்பாக இருந்தது.

வெகு சில இடங்களில் மட்டுமே கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது ஆனால், இவற்றை எல்லாம் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது.

குறை கூற வேண்டும் என்பதற்காகத் தேடினால் தான் உண்டு 🙂 .

குறிப்புகள்

பெரும்பாலான பாடல்களுக்கு இளையராஜா அந்தப் பாடல் பற்றிய சிறு குறிப்பைக் கூறியது கேட்க மிகச் சுவாரசியமாக இருந்தது.

கண்ணதாசன் அவர்கள் பற்றி கூறிய போது,

அவர் வெத்திலை போட்டு விட்டுத் துப்பும் போது, அவர் சிச்சுவேஷனுக்கு துப்புறாரா! இல்ல நிஜமாவே துப்புகிறாரா என்பது தெரியவில்லை” என்று கூறிய போது மொத்த அரங்கமும் சிரிப்பில் அதிர்ந்தது.

ஹங்கேரி இசைக்கலைஞர்கள்

ஹங்கேரியில் இருந்து வந்த இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களும் அவர்கள் பங்கிற்கு இசைத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள்.

வெளிநாட்டில் இருந்து இளையராஜா அவர்களின் இசையின் மீது உள்ள காதலால் இங்கு வந்து சிறப்பித்து இருந்தது பார்க்கையில் பெருமையாகவே இருந்தது.

இவர்களுக்கு இங்கு இசைக்கப்பட்ட பாடல்களின் இசை தெரியுமா? உண்மையாகவே ரசித்து இருப்பார்களா! என்ற ஆர்வமான சந்தேகம் இருந்தது.

அவர்களின் பார்வையில், இளையராஜா அவர்களின் இசை எப்படி கவர்ந்து இருக்கும்?

அதை நம்மைப் போல ரசித்து இருப்பார்களா? என்ற பல யோசனைகள்.

எடுத்துக்காட்டாக “புத்தம் புது காலை” பாடலை இசை நம்மை உருக்கி விடும், இந்த இசையை நம்மைப் போல அவர்கள் ரசிப்பார்களா! என்று யோசனை.

அசத்திய கலைஞர்கள்

இசை அமைத்ததில் அங்கு இருந்தவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அவ்வளவு அருமையாக ஒவ்வொரு பாடலுக்கும் இசை அமைத்தார்கள்.

பெரும்பாலும் வயதானவர்களாகவே இருந்தார்கள்.

குறிப்பிடத் தக்க ஒரு சிலரை இளையராஜா கடைசியில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியது, மனதுக்கு நிறைவாக இருந்தது.

அதில் ஒரு சிலர் ரொம்ப நெகிழ்ந்து விட்டார்கள்.

ஒரு பாடல் பிரபலமாகிறது என்றால் அதில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமே பெருமையடைகிறார்கள்.

அந்தப்பாட்டை இசையால் மெருகூட்டும் இந்த முகம் தெரியாதவர்கள், கடலில் கரைத்த பெருங்காயமாகி விடுகிறார்கள்.

அவர்களுக்கு இது போல அங்கீகாரம் கிடைக்கும் போது, அவர்கள் அடையும் மனத் திருப்தியை அவர்களின் கண்களே கூறி விடும்.

ஒவ்வொருவரைப் பற்றிக் கூறும் போதும், அவர்கள் அடையும் மன மகிழ்ச்சியைப் பார்த்தாலே நமக்கு மனம் நிறைந்து விடுகிறது.

மேடைகளில் கிடைக்கும் பாராட்டிற்கு எதுவும் ஈடாக முடியுமா!

ஜேசுதாஸ் செய்த தவறு

பாடியவர்களில் அனைவருமே மிகச்சிறப்பாகப் பாடினார்கள். அதிலும் SPB அவர்கள் குரல் இன்னும் அதே போல இருப்பது எனக்கு வியப்பு தான்.

இவர் பாடினால், அப்போது எப்படி குரல் இருந்ததோ, அதே போலத் தற்போதும் இருக்கிறது.

ஒவ்வொரு பாடலும் இன்னொரு முறை பாட மாட்டார்களா! என்று ஏங்க வைத்தது.

ஜேசுதாஸ் குரல் மாறி விட்டது அதோடு பாடலுடைய இசையின் தொடர்ச்சியையும் மறந்து விட்டார்.

கண்டிப்பான இளையராஜா

“பூவே செம்பூவே” பாடல் பாடிய போது ஒரு இடத்தில் இசை முடியும் முன்பே பாடத் துவங்கி விட்டார்.

அவர் தவறு செய்தாலும் இசையமைத்தவர்கள் சுதாரித்து அடுத்த வரிக்குச் சரியான இசையைக் கொண்டு வந்த போது அசந்து விட்டேன்.

இளையராஜா மிகவும் கண்டிப்பான நபர் என்பது ஊர் அறிந்தது ஆனால், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியிலும் தான் எப்போதும் ஒரே மாதிரி தான் என்பதை நிரூபித்தார்.

ஆம்! பாடலை உடனே பாதியில் நிறுத்தி எந்த இடத்தில் தவறு ஏற்பட்டதோ அங்கே இருந்து மறுபடியும் ஆரம்பிக்கக் கூறினார்.

இதைக் கண்ட ரசிகர்கள் கை தட்டி ஆராவாரமாக ரசித்த போது உடல் சிலிர்த்து விட்டது.

திரும்ப அதே இடத்தில் ஜேசுதாஸ் தவறு செய்தார், இருந்தாலும் இந்த முறை இளையராஜா எதுவும் கூறவில்லை.

பாடல் முடியும் முன்பே ரசிகர்கள் முடிந்ததாக நினைத்துக் கைதட்டத் துவங்க, “பாடல் இன்னும் முடியவில்லை! அதற்குள் எதுக்கு கை தட்டுறீங்க” என்று கூறி பாடல் முடிந்த பிறகு வரும் கொஞ்ச இசையை வாசிக்க வைத்துப் பின் முழுவதும் முடிந்ததாகக் கூறிய போது, அடைந்த பிரம்மிப்பை வார்த்தைகளால் கூற முடியாது.

இதன் பிறகு தான் விஷயம்… 🙂 .

ஜேசுதாஸ் பெருந்தன்மை

ஜேசுதாஸ் அவர்கள் தான் திரும்பப் பாடுவதாகவும், மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம் என்றார்.

இளையராஜா ஒப்புக்கொண்டு, திரும்ப அதே இடத்தில் இருந்து இசையமைக்கக் கூற, ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்கள்.

இந்த முறை அதே இடத்தில் துவங்கி ஜேசுதாஸ் அவர்கள் சரியாகப் பாடி முடிக்க உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.

இதில் இரண்டு விஷயம்.

ஒன்று இளையராஜாவின் Perfection மற்றொன்று ஜேசுதாஸ், தான் தவறு செய்து விட்டேன் என்று அறிந்து மனம் வருந்தி மூட் அப்செட் ஆகி வருத்தத்துடன் வெளியேறிச் செல்லாமல், இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று ப்ரெஸ்டிஜ் பார்க்காமல் கூறி, அதைச் சரியாகச் செய்து சாதித்தும் விட்டார்.

இதன் மூலம் அவருக்கும் மன நிம்மதி திருப்தி கிடைத்து இருக்கும், ரசிகர்களும் மகிழ்ச்சி  அடைந்து இருப்பார்கள்.

ஜேசுதாஸ் அவர்கள் இளையராஜா அவர்களை விட வயதில் மூத்தவர். இளையராஜாவே இவரை அண்ணன் என்று தான் அழைத்தார்.

இது போலச் சம்பவங்களை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தவிர்த்து வேறு எதிலும் காண முடியாது என்பதை அடித்துக் கூறலாம்.

மிரட்டிய கலைஞர்கள்

இவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ராவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு பாடலைப் பாதியில் நிறுத்தி, திரும்பப் பாட வைப்பது சாதாரண விசயமா!

ஹங்கேரி கலைஞர்கள், அங்கே உலக அளவில் எவ்வளவோ கலைஞர்களைப் பார்த்து இருப்பார்கள். இவை நிச்சயம் அவர்களுக்குப் புது அனுபவமாக இருந்து இருக்கும்.

இளையராஜா விட்ட இடத்தில் இருந்து  இசையை ஆரம்பிக்கக் கூறியதும் சிறு பிசிறு, தடங்கல் கூட இல்லாமல் அனைவரும் வயலினை வாசித்த போது வாயடைத்து விட்டேன்.

இளையராஜா இரு முறை தான் திரும்ப வாசிக்க வைத்தார் ஆனால், அதை பல முறை திரும்பத் திரும்ப (rewind) பார்த்து மகிழ்ந்தோம்.

சின்னக்குயில் சித்ரா வழக்கம் போல எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாகப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். நம் அனைவரையும் பாடி மகிழ்விக்கும் இவரின் சோகம், நினைவிற்கு வந்து மனதை கஷ்டப்படுத்தியது.

ஆண்டவன் இவருக்கு மன அமைதியைக் கொடுக்க வேண்டுகிறேன்.

பிரகாஷ்ராஜ்

தொகுத்து வழங்கிய “பிரகாஷ்ராஜ்” எந்த வித பில்டப்பும் இல்லாமல் மிக மிக அருமையாகத் தொகுத்து வழங்கினார்.

இளையராஜா பற்றி ரொம்ப மிகையாகப் புகழ்ந்து பார்ப்பவர்களை எரிச்சலாக்கி விடுவாரோ! என்று பயந்தேன்.

அது போல எதுவும் இல்லாமல் மிக எளிமையாகப் பேசி, ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற துணை புரிந்தார்.

பாடிய இள வயது (ஆண் பெண்) பாடகர்கள் மிகவும் ரசித்து ஒவ்வொருவரும், விருப்பமாக அனுபவித்துப் பாடினார்கள்.

இளையராஜா ஒரு பாடலைப் புதிதாக இசையமைத்துக் காட்டினார், பார்க்கவே பரவசமாக இருந்தது.

இங்கே நடந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த ஹங்கேரி கலைஞர்கள் என்ன நினைத்து இருப்பார்கள்? என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

அவர்களுக்கு இதெல்லாம் புதுமையாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

சாயல் இல்லாத பாடல்கள்

இளையராஜாவிடம் நான் வியக்கும் ஒரு விஷயம்… இவர் எத்தனை படங்களுக்கு எத்தனை ஆயிரம் பாடல்களை இசைத்து இருப்பார்!

ஆனால், ஒரு இசை சாயல் போல மற்றொன்று இருக்காது. இது எவ்வளவு பெரிய விஷயம்.

நம்மை அறியாமலே எப்படியும் நடக்கும் ஒரு விஷயம் இது ஆனால், இது போன்று நடக்காமல் இத்தனை பாடல்களை இசைக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல.

வித்யாசமான குரல் / ஓசை

இதோடு நான் ரொம்ப நாட்களாகக் கூற நினைத்தது… ஒரு சில பாடல்களில் குரல் வித்யாசமாக இருக்கும் [வித்தியாசமாகக் கத்துவார்கள்].

சொர்க்கம் மதுவிலே” பாடல். இதில் வரும் குரல்களை அல்லது பாடும் முறையை எப்படி இளையாராஜா பாடுபவருக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்.

பார்த்தால் அமைதியான நபர் போல இருக்கிறார் ஆனால் இதில் வரும் பாடல் உணர்ச்சிகள் / குரல்கள் வித்யாசமாக இருக்கிறது.

இதை அப்படியே பாடிக்காட்டுவாரா? அல்லது இவர் எடுத்துக்கொடுத்தால் பாடுபவர்கள் பிக்கப் செய்து கொள்வார்களா?

இது எனக்கு நீண்ட நாள் சந்தேகம். நான் கூற வருவது உங்களுக்குப் புரிகிறதா!

எடுத்துக்காட்டாக “நிலா காயுது” பாடலில் செக்சியாகப் பாடுவது போல வருவதை எப்படி சொல்லிக் கொடுத்து இருப்பார்? என் மனதை அரிக்கும் விஷயம் இது.

என்றென்றும் ராஜாவில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசமாக இசையமைத்து, திருஷ்டிப் பாட்டாக “காட்டுக்குயிலே” பாடல் அமைந்து விட்டது.

இசை சுத்தமாகச் சரி இல்லை, குறிப்பாக ட்ரம்ஸ். ஏன் இந்தப் பாடல் மட்டும் இப்படி ஆனது என்று எனக்குப் புரியவில்லை.

சகலகலா வல்லவன்

பாடிய SPB ஜேசுதாஸ் மீண்டும் பழைய நினைவுகளுக்குச் சென்று இருப்பார்கள். கடைசியில் SPB பாடிய “இளமை இதோ இதோ” பாடல் மாஸ் மசாலா பாடல்.

ரஜினி எத்தனையோ மசாலா படங்களில் நடித்து இருந்தாலும், டாப் மசாலா படம் என்ற பெயரைக் கமல் “சகலகலா வல்லவன்” தட்டிச் சென்று விட்டது.

மேடையில் யுவன், கமல் போலவே மிமிக்ரி செய்து செமையாக இளையராஜாவை / கமலை கலாயித்தார். கமல் பேசியது போலவே இருந்தது.

யுவனிடம் இப்படியொரு மிமிக்ரி திறமையா! என்று வியப்பாக இருந்தது.

என்றென்றும் ராஜா நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இது போல நிகழ்ச்சியை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா! என்று மனம் ஏங்கியது உண்மை.

வாய்ப்புக் கிடைத்தவர்கள் நிச்சயம் தவற விட்டு விடாதீர்கள். ஒரு அருமையான உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சியை இழந்து விடாதீர்கள்.

உயிருள்ள இசை என்பது இளையராஜாவின் இசை தான் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தி விட்டது.

என்றென்றும் ராஜா நிகழ்ச்சி மிகச்சிறந்த அனுபவம்.

தொடர்புடைய கட்டுரைகள்

இளையராஜாவை கலாய்த்த பாக்யராஜ்

இளையராஜா மாபெரும் இசைக்கொண்டாட்டம்

இளையராஜாவும் ராயல்ட்டியும்

இளையராஜா விழாவும் சர்ச்சைகளும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

 1. என்றென்றும் ராஜாவில் சவுண்ட் சிஸ்டம் ஜெயா டிவியால் சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்றே தோன்றுகின்றது; 5.2வில் கேட்பதற்கு கனடா நிகழ்ச்சி சரியாக அமையும் என்று நம்புகின்றேன்!!

  அப்புறம் அடிக்கடி இளையராஜா status போட்டு வெறுப்பேற்றி இருந்தால் சாரி 🙂

 2. வணக்கம் தல – இந்தியாவுக்கு போய் வந்ததால் 1 மாசமா நெட் பக்கமே வரவில்லை –

  இளையராஜா பற்றி நீங்கள் கூறியது சுவராசியமாக இருந்தது. ஒரு சில நேரத்தில் யுடியுபில் பாடல்களை கேட்பது / பார்ப்பது வழக்கம் – குறிப்பாக சமீப காலங்களில் அடிக்கடி கேட்பது நெஞ்சத்தை கிள்ளாதே படத்திலிருந்து. என் போனின் ரிங்டோன் கூட அந்த படத்தின் தீம் மியுசிக் தான்.

  கொசுறு 1 : நீங்க கூறியது சரி நான் நேரடியாக பல பெற்றோர்களை பார்த்திருக்கிறேன். ஒரு சிறுமி/பெண்ணுக்கு நான் பலவருடங்களுக்கு முன்னர் டியுஷன் எடுத்திருக்கிறேன் காலப்போக்கில் (நாங்கள் வாயை மூடி சும்மா இருந்தாலும் எப்படியோ) அந்த பெண்ணை எனக்கு மனம் முடிக்க பெண் கேட்டனர் என்ற புரளி கிளம்பியது எனக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை (ஏனெனில் என்னுடைய அப்போதைய அந்தஸ்த்து ரொம்ப கம்மி). அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் என் பெண்ணுக்கு கலெக்டர் மாப்பிள்ளை பார்ப்பேன் நூறு பவுன் போடுவேன் என்று ஊர் பூரா தம்பட்டம் அடித்துகொண்டிருன்தனர். ஆனால் பெண்ணோ கோவிலில் உள்ள பிச்சைகாரன் ரேஞ்சுக்கு உள்ள நபர்களை சைட் அடித்துகொண்டிருந்தார் – வயசு கோளாறு. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த பெண் வீட்டிலிருந்து நகைகளை தூக்கிக்கொண்டு ஓடிப்போய் (ஆட்டோவில் தான்) திருமணம் செய்துகொண்டார் – அப்போ அவர் வயது 18. பிற்பாடு.. ஒருநாள் திரும்ப வந்து நீங்க 100 பவுன் போடுறதா சொன்னீங்கள்ள இப்ப மாப்பிள்ளை வீட்டுல கேட்குறாங்க போடுங்க என்று வாங்கி சென்று விட்டார். ஒரு மாதமாக அவர்கள் குடும்பத்தில் யாரும் வெளியில் தலை காட்டுவதில்லை. நீங்க சொன்னது போல் ஒரு விழா என்றால் இன்னமும் பெண்ணின் அம்மா வீட்டை விட்டு வெளியில் வருவது கிடையாது. (இதற்க்கு இன்னோர் காரணம் என்னவென்றால் நாங்கள் எங்கள் ஜாதிக்குள்ளேவே தான் எடுத்தல் கொடுத்தல் செய்ய வேண்டும் – இல்லை என்றால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் – என் திருமணமும் அப்படித்தான் பெற்றோர் விருப்பத்தில் நடந்தது – இருப்பினும் இப்போதைய ஜெனரேஷன் இதை கண்டு கொள்வதில்லை – அதுமட்டுமல்ல இப்பேற்பட்ட காதலர்களுக்கு கவர்மென்ட் சர்டிபிகேட் ரேஷன் மாற்றம் அப்படின்னு பல பிராபளம் இருக்கு). நானும் காதலுக்கு எதிரி இல்லை – அதற்காகத்தான் வடிவேலு ஸ்டைலில் ” ஊருல அங்கங்க ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கிறாங்க கூடிய சீக்கிரம் யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்தப்போறீங்க மொதல்ல சங்கத்த கலைங்கடா” என்று ஒவ்வொரு சங்க மீட்டிங்கிலும் கூறி வருகின்றேன்.

  கொசுறு 3: நானும் உங்க கேசுதான்.. இருக்கு ஆனா இல்லை – பில்லி சூனியத்தை விடுங்க.. சாமி வந்து குறி சொல்வதை பத்தி என்ன நினைக்கிறீங்க. ஏன்னா எங்க ஊட்டுல ரெண்டு பேருக்கு அடிக்கடி வரும். பதிவை போடுங்க சொல்றேன்…

 3. எமது தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்.எழுத்துப்பிழைகள் இனிவரும் காலங்களில் திருத்தப்படும் மிக்க நன்றிகள்

 4. என்றென்றும் ராஜா… நிகழ்ச்சியை பற்றி தங்கள் விமர்சனம் சூப்பர் தல…நேரடியாக பார்க்கும் பாக்கியம் கிடைக்க பெற்றவர்களில் நானும் ஒருவன். பதிவில் படிக்கும் போது சில பகிர்வுகள் சொல்லமுன்னு தோணுது அதான்…இந்த நிகழ்ச்சி பற்றி என்னோட பகிர்வு http://www.gopinath-walker.blogspot.com/2012/01/blog-post.html

  நிகழ்ச்சியல் கலைஞானியும் பேசியிருப்பாரு..அதை சொல்லவேல்லியே..;)))

  \\ன்ற பல யோசனைகள். எடுத்துக்காட்டாக “புத்தம் புது காலை” பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்.\\

  இதே புத்தம் புது காலை பாடலை கேட்டு ஒரு இத்தாலி ரசிகர் சென்னை வந்து இசை தெய்வத்தை பார்த்து இத்தாலியில் நிகழ்ச்சி நடத்தியதை பற்றி யூகி சேது சொன்னது.

  \\இளையராஜா விட்ட இடத்தில் இருந்து அதே இசையை ஆரம்பிக்கக் கூறியதும் சிறு பிசிறு, தடங்கல் கூட இல்லாமல் அவர்கள் அனைவரும் வயலினை வாசித்த போது வாயடைத்துப் போய் விட்டேன். இளையராஜா இரு முறை தான் திரும்ப வாசிக்க வைத்தார் ஆனால், அதை பல முறை திரும்பத் திரும்ப (rewind) பார்த்து மகிழ்ந்தோம்.\\

  அந்த இடத்தில் நீங்கள் இருந்திருதால் இசை தெய்வத்தின் ரசிகரை நினைச்சு இன்னும் உடல் சிலிர்த்திருக்கும். இசையை விட்டு திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாட ஆரம்பிக்க உடனே ரசிகர்கள் குரல் வந்துவிட்டது. மொத்தம் 3 முறை கடந்த பின்பு தான் சரியாக வந்திருக்கும். இதே போல் துள்ளியாக இசை விடுபடும் இடங்களில் ரசிகர்கள் மிக சரியாக கவனித்து குரல் கொடுத்தார்கள்.

  இதே போல் 2002 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியிலும் செந்தூரபூவே பாடலில் இதே போல் நடந்தது,

  2007 ஷார்ஜாவில் நடந்த நிகழ்ச்சியில் கூட தவறு இருந்தால் உடனே அங்கையே சரி செய்யப்பட்டுவிடும்…அதான் இசை தெய்வம் ;)) ஷார்ஜா நிகழ்ச்சி பற்றி என்னோட பதிவு http://www.gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_17.html

  இந்த மாதம் பெங்களூர்ல 23 ம் தேதியும் நவம்பர் மாதம் 3 கனடாவிலும் நடைபெறுகிறது.

  நீங்கள் சொன்னது போல காட்டு குயில், அதே போல ஷார்ஜாவில் நடைபெற்ற போது ராக்கம்மா இந்த பாடல்கள் எல்லாம் மேடையில் நேரடியாக இசைக்கும் போது சரியாக வருதுயில்லை. எனக்கும் ஏன்டா இந்த பாட்டை வாசிக்கிறாங்கன்னு இருக்கும்.

 5. அந்த நிகழ்ச்சியை நானும் கொஞ்ச்ம் பார்த்தேன். இளையராஜாவின் மாறாத மேதாவித்தனமான மேடை சேஷ்டைகள் முழுவதும் பார்க்க விடாமல் செய்துவிட்டன.நீங்கள் சொல்வது சரியே. தற்போது இளையராஜாவின் விசில்கள் அதிகமாக அவரை புகழ்ந்து தள்ளிகொண்டிருக்கிரார்கள். இப்படி செய்ததாவது தங்களின் மனதை கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணம் போல. நல்ல இசையை ரசிப்பதில் தவறில்லை. இதோ இங்கு கூட திரு கோபிநாத் என்பவர் இளையராஜா என்று சொல்வதையே குற்றம் என்று கருதி இசைதெய்வம் இசை கடவுள் என்று விநோதமாக அரசியல் தலைவர்களை அழைப்பது போல எழுதி இருப்பதே இளையராஜாவின் ரசிகர்கள் மாறவே மாட்டார்கள் என்பதற்கான சான்று.

 6. எவெரி வீக் Thursday evening நா இந்த்த வீடியோ பார்பேன் இதுவரைக்கும் 23 டைம்மு மேலே பார்த்து இருப்பேன் . எப்போ பொர் அடிக்குதோ அப்போ எல்லாம் இந்த வீடியோ தான் .

 7. கலக்கல் பதிப்பு கிரி. நான் கூட உங்க கருத்த ஆமோதிக்கிறேன். இளையராஜா ரசிகர்கள் கொஞ்ச காலமா கொஞ்சம் அதிகமாவே டெர்ரர் ரசிகர்களா மாறிட்டாங்க 🙂

  எனக்கு இளையராஜாவோட 80களில் வந்த பாட்டுகள் ரொம்ப புடிக்கும். ஒரு பெரிய லிஸ்ட் வச்சுருக்கேன். ஆனா இப்போ வர்ற பாடல்கள் ஏனோ அவ்வளாவா புடிக்கலை. இது என்னோட தனிப்பட்ட கருத்து.

  எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சது. ரெண்டு மூணு தடவை பார்த்து இருக்கேன். “பூவே செம்பூவே” ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சியிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு “சுந்தரி கண்ணால் ஒரு சேதி “. அந்த பாட்டுல வரும் வயலின் இசை என்னமோ பண்ணும். சூப்பரோ சூப்பர்!

 8. கிரி.. இளையராஜா இசைகளுக்கு ராஜா எனில் தவறில்லை.. “மன்றம் வந்த தென்றலுக்கு” எனக்கு பிடித்த பாடல்.. இதே மெட்டை இளையராஜா ஹிந்திக்கும் பயன்படுதுத்திள்ளார்.. மிகவும் அருமையான பாடல் அது… இளையராஜா, வைரமுத்து, வாலி, SPB இவர்கள் இல்லையெனில் என் போன்ற இளைனர்களுக்கு காதல் என்ற வார்த்தை வெறும் ஏட்டில் மட்டும் படித்த ஒரு வார்த்தையாகி இருக்கும்..தவிர அதன் அர்த்தம், அனுபவமும் இவர்களால் தான் பலருக்கு புரிந்தது… பகிர்வுக்கு நன்றி கிரி..

 9. // எடுத்துக்காட்டாக “நிலா காயுது” பாடலில் செக்சியாக பாடுவது போல வருவதை எப்படி சொல்லிக் கொடுத்து இருப்பார்? என் மனதை அரிக்கும் விஷயம் இது.//

  கிரி நமக்குத்தான் அது செக்ஸி; கலைஞர்களுக்கு அதை எல்லாம் கடந்த வேறு ஒரு நிலை…………..

  இந்த பாடல் “மத்யமாவதி” என்ற ராகத்தில் அமைக்கப்பட்டது, ஜானகியின் அந்த செக்ஸி ஹம்மிங் கூட ராகத்திற்கு உட்பட்டே இருக்கும், சிப்பிக்குள் முத்து “துள்ளி துள்ளி” பாடலும் மத்யமாவதிதான், அதில் எஸ்.பி.பி கீழ்ஸாதியில் இருந்து அப்படியே மேலே போவர், அதை ஒத்துதான் இருக்கும் இந்த பாடலின் செக்ஸி ஹம்மிங். கேட்டு ஒப்பிட்டு பாருங்களேன்.

  ராகம் தெரிந்து கேட்டால் “கமல்-அம்பிகா-மலேசியா-ஜானகி-ராஜா” யாரும் தெரியமாட்டார்கள், அது நம்மை வேறுதளத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

  ++++++++++++++++++++++++++

  சமீபத்தில் “நீதானே என் பொன்வசந்தம்” பாடல் வெளியீட்டு விழாவை நேரில் கண்டு மகிழ்ந்தேன், அது ஒரு அற்புத அனுபவம். மேடையில் ஒருவர் கூட நம்ம ஊர் கலைஞர்கள் இல்லை. அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதை வார்த்தையில் விவாதிக்க முடியாது……………..

 10. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜீவதர்ஷன் நான் DVD வாங்க உத்தேசித்துள்ளேன் 🙂

  @ராஜ்குமார் ஒரு மாதம் விடுமுறையா! நடத்துங்க.. 🙂

  100 பவுனா! இப்பவே கண்ணை கட்டுதே..

  சாமி வருவது சிங்கப்பூரில் எங்கள் வீட்டின் அருகே உள்ளே தமிழ் குடும்பத்திலே நடக்கும். இதற்குக் கூட அறிவியலில் விளக்கம் சொல்றாங்க.. அதனால சாமி வருவது என்பது எதோ அறிவியல் பூர்வமாக சம்பந்தம் உள்ளது என்பதே என் கருத்து.

  @கிருத்திகன் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்.

  @கோபிநாத் உங்க பதிவை படிக்க வருகிறேன்..

  நான் பார்த்த (மேலே உள்ள லிங்க்) வீடியோ வில் கமல் வரவே இல்லை அதனால், நான் எழுதவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை. கமல் மீது என்ன கோபமோ காணொளியை எடிட் செய்தவருக்கு 🙂

  இத்தாலி ரசிகர் விஷயம் சூப்பர்.

  நீங்க ஒரு டெர்ரர் ரசிகர் தான் 🙂

  @காரிகன் 🙂

  @விஜய் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” செம. அது எப்படி தான் அந்த இசையை கொண்டு வந்தாங்களோ.

  @யாசின் 🙂 காதலில் இவர்கள் பெரும் துணை புரிந்து இருக்கிறார்கள் போல…

  @காத்தவராயன் நீங்க கூறிய ராகம் எனக்கு சுத்தமாக தெரியாது 🙂 இருப்பினும் தகவலுக்கு நன்றி.

  உங்க நண்பர் எடிட் செய்த பாடல் சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்கு.. அதோடு வித்தியாசமாகவும் இருக்கு.

 11. இளையராஜா அவ்வளவுதானா ? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன்.

  கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக் கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது.

  ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் “சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?” என. அதற்கு மதன் “இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்” என பதில் அளித்திருந்தார்.

  ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சோபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன்.

  ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது.

  80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது. இளையராஜாவுக்காகவே ராமராஜன், ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்த காலமது

  90களின் தொடக்கத்தில் ரஹ்மானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார்.

  பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என ருத்ர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார்.

  இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின.

  ராஜாவின் இன்றைய பின்னடைவிற்கு என்னால் கூறக்கூடிய காரணங்கள் :

  1. புதிய தலைமுறைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் ஷங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

  2. FM ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை target பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரஹ்மான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா FM -ல் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி FM -ல் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.

  3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா user friendly இல்லையென செய்தி அடிபடுகின்றது.

  சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு. அதனை இந்தக்காலத்திற்கு ஏற்பக் கொடுக்கத் தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனமோகினி பாடலின் முன்னால் வரும் “கண்ணே கட்டிக்க வா ஒட்டிக்க வா” தமிழில் முதல் வந்த ராப் என இசை வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

  வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிஷத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூட பலர் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டும் தான் சிண்டு முடியத்தெரியுமா ?)

  இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள் ?

  ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.

  –http://enularalkal.blogspot.com/

 12. @அருண் ஓகே 🙂

  @ஸ்ரீநிவாசன் இளையராஜாவின் திறமையைப் பற்றி தவறாக எங்கும் நான் கூறவில்லை. அவருடைய Attitude சரி இல்லை என்பதே என் கருத்து. இதை நான் தெளிவாகக் கூறி இருக்கிறேன். மற்றபடி இளையராஜா ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. இவர் மட்டுமல்ல யாருமே.

 13. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட எந்தக்கலைஞனும் இல்லை. ஏனெனில் எந்தவொரு கலையையும் அதை ரசிப்பவர்களின் ஒப்புதலுக்காகவும், பாராட்டுதலுக்காகவும், மதிப்பீட்டுக்காகவுமே உருவாக்கப்படுகிறது. எண்பதுகளில் வெற்றியின் சிகரத்தைத் தொட்டபிறகு இளையராஜாவும் விமர்சனத்தை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

  கடந்த பல வருடங்களாக வந்துகொண்டிருக்கும் அவரது பல பாடல்கள் இளையராஜா தன்னுடைய படைப்பாற்றலின் உச்சத்தை இழந்து பலகாலம் ஆகிவிட்டது என்பதை உறுதி செய்கிறது. ஆனால் அவரது ரசிகர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

  அவர் 1992 ஆம் வருடத்தில் அதிகபட்சமாக 56 படங்களுக்கு இசையமைத்தார். அதிகளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டியிருந்தால் அது பீத்தோவனாகவே இருந்தாலும் தரமானதாக இருக்க இயலாது என்பதைக் கூறத்தேவையில்லை.

  இசையென்பது உள்ளத்தால் உணர்ந்துகொள்ளப்படும் ஒரு உணர்வு. அந்த மகத்தான கலையை ஒருவன் பணிவோடும், நேசத்தோடும், திறந்த மனதோடுமே அணுகவேண்டும். ‘எப்பவும் நான் ராஜா’ என்பது போன்ற மதிமயக்கங்களால் சிறந்த இசையை உருவாக்கிவிட இயலாது. இளையரஜா இசையமைத்து லோகித தாஸ் தமிழில் இயக்கிய ‘கஸ்தூரிமான்’ படத்தில் கூட ஒரு பாடலில் சம்பந்தமில்லாமல் “ராஜா உந்தன் ராஜாங்கத்தில் நாளும் நாளும் இசைதான்” என்ற ஒரு வரி வருகிறது!

  இளையராஜா தொடர்ந்து வாய்ப்பளித்த பாடகர்கள் பலரும் மிகச்சிறந்த பாடகர்களாக தங்களை வெளிப்படுத்தியவர்கள் அல்ல. கொடுக்கும் மெட்டை அப்படியே திருப்பிச்சொல்லுவதையே இளையராஜா தனது பாடகர்களிடம் எதிர்பார்த்தார். பாடகன் அளிக்கும் நுணுக்கங்கள் அங்கே ஒரு பொருட்டே அல்ல. கொடுக்கப்பட்ட குறிப்பிலிருந்து இம்மியளவும் விலகிச்செல்வதற்கு பாடகர்களோ இசைக்கலைஞர்களோ அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் பணிபுரிவதைப்போலவே இளையராஜா இந்திய திரைப்படங்களில் பணிபுரிந்தார் என்று தான் சொல்லவேண்டும். திரைப்படம் ஒரு கூட்டுக்கலை என்பதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. ஆனால் சினிமாவைப்போலவே அதன் இசையும் கூட்டுமுயற்சியில் உருவாகும் ஒரு கலை என்பதில் சந்தேகமேயில்லை.

  ஒரு தொலைக்காட்சி ஒலிபரப்பில் மேடைநிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமாகிய யுவன் சங்கர் ராஜா பாடுவதை பிண்ணனியில் ஆர்மோனியத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா.

  பாடினாரா அல்லது பேசினாரா என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்க்கு இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் பாடும்முறை! ஆனால் அப்போது இளையராஜாவின் முகத்தில் இருந்த பார்வை இருக்கிறதே, அதுவே நான் சமீபத்தில் பார்த்து மிகவும் சங்கடமடைந்த காட்சி.

  எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதைப்போல இளையராஜா அவருடைய உண்மையான தகுதியைக் காட்டிலும் குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறார். முரண் என்னவென்றால் இளையராஜா தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டார் என்பது தான். அவர் தன்னை ஒருபோதும் கண்டடைந்ததில்லை.

  கொஞ்ச காலத்திற்கு முன்பு நேர்காணல் ஒன்றில், தனது திறமையெல்லாம் சினிமா இசையிலே வீணடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். உண்மை தான்! உலகத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வருவதற்குண்டான மேதமை கொண்டிருந்தவர் அவர். இந்தியாவில் வேறு யாரைக்காட்டிலும் அவருக்கே அதற்குண்டான அனைத்துத் தகுதியும் இருந்தது.

  இசைக்கு மொழியோ நாடோ தடையில்லாத நிலையில் பெரும் உலகப் புகழை இளையராஜா அடைந்திருக்கலாம். ஆனால் யாருடனும் சேர்ந்தியங்காமல் தன்னை மூடிவைத்தவராக, ஓர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதைப்போல செயல்பட்டார் இளையராஜா. மேதமையும் வாய்ப்புகளும் ஒருசேர வாய்க்கப்பெற்ற இளையராஜா தனது இசை உலகளாவிய அளவில் பயணப்படுவதற்கான பரந்து விரிந்திருந்த சாத்தியங்களை கண்டுணராமல் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

  –http://musicshaji.blogspot.com/2010/01/blog-post.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here