பெண்களுக்கு வயதின் காரணமாகத் தவிர்க்க முடியாத நிலைகளில் வரும் ஒரு மாற்றமே மெனோபாஸ். Image Credit
மெனோபாஸ்
பெண்களுக்கு 45 வயதிலிருந்து 55 வயதிற்குள் ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக, மாத விலக்கு முழுக்க நிற்கும் காலமே மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.
சுருக்கமாக, 40 வயதுக்கு மேல் மாதவிலக்கு சரியான காலத்தில் நடைபெறாமல் தேதி தள்ளிச்சென்று கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் நிற்கும் நிலையே மெனோபாஸ்.
ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து கால அளவுகளில் மாற்றம் இருக்கலாம்.
என்ன பிரச்சனை?
Estrogen ஹார்மோன் குறைவு காரணமாக எலும்பு தேய்மானம், இதனால் மூட்டு வலி, நினைவாற்றல் இழப்பு, படபடப்பு, மன உளைச்சல், இரவில் வியர்வை, பிறப்பு உறுப்பு வறட்சி, தூக்கமின்மை, பதட்டம், கோபம் ஆகியவை ஏற்படும்.
இதனால் இக்காலங்களில் பெண்களின் நடவடிக்கையே மாறி விடும்.
வழக்கமாக மாத விலக்கின் போது அதிக ரத்த போக்குக் காரணமாக, பெண்களுக்குக் களைப்பு, கோபம் போன்றவை கூடுதலாக இருக்கும்.
இது போன்ற நிலை வருடங்களுக்குத் தொடர்ந்தால் என்ன நடக்கும்?!
இக்கட்டுரை மருத்துவக் காரணங்களைப் கூறப் போவதில்லை மாறாக உளவியல் காரணங்களைக் கூறப்போகிறது.
திருமணமான பெண்களும், ஆண்களும் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டியது.
விவாகரத்து
சிலர் தங்களுடைய 50 வயதில் கூட விவாகரத்துக்கு முயல்வார்கள்.
வழக்கமாக எல்லோரும், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டார்கள் என்று நினைப்பார்கள்.
இது சரி என்றாலும், மெனோபாஸ் முக்கியக்காரணங்களில் ஒன்று.
மெனோபாஸ் காலத்தில், மேற்கூறிய மருத்துவக் காரணங்களால் பெண்கள் பலர் உடல் நிலை மாற்றத்தால் மிகக் கோபமாக நடந்து கொள்வார்கள்.
ஒன்றுமில்லாத பிரச்சனைக்குக் கூடக் கோபித்துக்கொள்வார்கள்.
இதில் என்ன சோகம் என்றால், பெரும்பாலும் இதற்கு இவர்கள் காரணமாக இல்லாமல் இவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களே காரணமாக இருக்கும்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.
இதன் காரணமாகவே 50 வயது தாண்டியும் விவாகரத்துகள் நடைபெறுகின்றன. இதுவே காரணம் கிடையாது ஆனால், மெனோபாஸும் முக்கியமானது.
கணவன் மனைவி இருவருக்குமே சம பங்கு
பெண்கள் இப்பிரச்சனையை உணர்ந்து மிக மிக மிக மிகப் பொறுமையாகவும், நிதானமாகவும் சூழ்நிலைகளைக் கையாள வேண்டும் அல்லது மிகப்பெரிய குடும்பப் பிரச்சனை ஏற்படும்.
மிகக்கடினமான சூழ்நிலையென்றாலும், பொறுமையாகக் கையாளுவதைத் தவிர வேறு எந்த வாய்ப்புமில்லை.
பெண்களுக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு உள்ளதோ அதே அளவு கணவர்களுக்கும் உள்ளது. மனைவியின் நிலையை உணர்ந்து அனுசரித்துச் செல்ல வேண்டும்.
ஆண்களும் புரிந்து கொள்ளாமல் பதிலுக்குப் பதில் சண்டையிட்டால் மோசமான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.
மாதத்துக்கு ஒருமுறை ஏற்படும் மாதவிலக்கு நாட்களிலேயே பெண்கள் சிரமங்களை உணர முடியும். வருடங்களுக்குத் தொடரும் போது எவ்வளவு முக்கியமானது?!
எனவே, இருவரின் புரிதல் இல்லாமல், அனுசரிப்பு இல்லாமல் இப்பிரச்சனையைக் கடந்து வருவது எளிதல்ல.
தற்காலத்தில் பெண்கள் அதிகளவில் கோப்படுகிறார்கள், ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் சண்டையிடுகிறார்கள். இவர்களுடைய மெனோபாஸ் காலத்தில் கணவனின் நிலை பரிதாபம் தான்.
மாமியார் Vs மருமகள் சண்டை
மாமியார் மருமகள் சண்டை பண்டை காலத்திலிருந்து தொடர்ந்து வருவது.
மாமனார் மருமகன் சண்டை 10 ல் 1 என்றால், மாமியார் மருமகள் சண்டை 10 ல் 9 இருக்கும்.
இதற்கான காரணங்களில் மெனோபாஸ் முக்கியப்பங்கு வகிக்கிறது.
பெண் திருமணமாகி வரும் வேளையில் மாமியார் மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டு இருப்பார் அல்லது மெனோபாஸில் இருப்பார்.
இந்த நேரத்தில் இருவரும் சந்திக்கும் போது தான் பிரச்சனை அதிகரிக்கிறது.
மாமியார் மெனோபாஸ் காரணமாகக் கோபப்பட, மருமகளோ இளம் வயது காரணமாகப் பக்குவமாகக் கையாள முடியாமல் கோபப்பட்டுச் சிக்கலாகிறது.
இவையல்லாமல் பெண்களுக்கே உரிய பொறாமை, ஈகோ குணங்களும் முக்கியக் காரணங்கள் என்றாலும், மெனோபாஸ் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.
இதைத்தவிர்க்க என்ன செய்வது?
சோகம் என்னவென்றால் இதைத் தவிர்க்க முடியாது, குறைக்க மட்டுமே முடியும்.
- யோகா / தியானம்.
- உடற்பயிற்சி.
- மெனோபாஸால் பாதிக்கப்பட்ட அல்லது மூத்தவரிடம் ஆலோசனை கேட்பது.
- பொறுமையாக இருக்கப் பயிற்சி எடுப்பது.
- நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முயல்வது.
- எதிர்மறையான செய்திகளைத் தவிர்ப்பது.
- புரிந்து கொண்டவர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டுச் சிரித்துப் பழகுவது.
- கணவரிடம் சரியான முறையில் பிரச்சனைகளை எடுத்துக்கூறுவது.
- பிரச்சனை அதிகமாகிறது என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அல்லது சிகிச்சை எடுப்பது.
மேற்கூறிய வழிமுறைகள் பிரச்சனைகளைக் கடக்க உதவும்.
ஆண்களும் மேற்கூறிய பிரச்சனைகளை உணர்ந்து, மனைவியைப் புரிந்து, அவரின் உடல் நல பிரச்சனைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவி இருவருக்குமே பொறுமை அவசியம். எனவே, இப்பிரச்சனையை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
தம்பதியினர் இருவருமே உணர்ந்து அனுசரித்து செல்லவில்லையென்றால், மோசமான நிலையை அடைய வேண்டியதாக இருக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!
எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
மன அழுத்தம் எப்படி இருக்கும்?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமையான பதிவு.
கிரி, உலகில் பெண்களை விட மென்மையான மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம். பெண்மையை விட மிக புனிதமான ஒரு அற்புதம் நிச்சயம் உலகில் இல்லை. என்னை பொறுத்தவரை பெரும்பாலும் பெண் என்ற ஒரு மாபெரும் விசையினாலே உலகம் இயங்குவதாகவே உணர்கிறேன்.
என் தனிப்பட்ட அனுபவத்தில் குடும்பத்தை திறம்பட நடத்துவதில் ஆணின் பங்கை விட பெண்ணின் பங்கு அதிகம். ஆண் என்பவன் சம்பாரிக்கும் கருவி மட்டுமே.. ஆனால் பிள்ளைகளை வளர்ப்பதும், உறவை பேணுவதும், சுற்றத்திடம் நட்பு பாராட்டுவதும், குடும்பத்திற்காக எண்ணற்ற தியாகங்கள் புரிவது பெண் மட்டுமே. இறைவி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் SJ சூர்யா பேசும் வரிகள் மிகவும் பிடிக்கும்.
ஒரு ஆணாக வெளிப்படையாக ஒத்து கொள்வதற்கு தயக்கமாக, கூச்சமாக இருந்தாலும் உண்மை இது தான். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மாபெரும் சக்தி.. பாரதியின் கவிதைகளில் பெண்கள் குறித்து இருக்கும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பெண் என்று நான் நினைத்தாலே என் மனதிற்கு தோன்றும் வரிகள்..
============================================
ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டவள் பெண்.
ஆனால் அவர்களால் தான் எல்லோருக்குமான
சந்தோஷங்களை சமைக்க முடியும்.
இருப்பதை வைத்து சிறப்பாக இருப்பது
பெண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
கிட்டிக்கு மரம் ஒடிக்கிற ஆண்கள்
மத்தியில், உலகத்தில் மரபாச்சி
பொம்மைகளுக்கும் சோறுட்டுவது
பெண் மனம்…
============================================
தன் மனைவியை குறித்து காரல் மார்ஸ் கூறியது:
தெய்வங்களும் என்னை விட்டு விலகின
பொழுதில் என்னை ஒரு தேவைதையாய்
வந்து தாங்கியவள் – ஜென்னி (காரல் மார்க்ஸ்ன் மனைவி)
============================================
11 ஆண்டுகளுக்கு முன் திருமணமான புதிதில் என் மனைவியிடம் நீயும், ஜென்னியை போல் என் வாழ்வில் இருந்தால் நான் இன்னும் வாழ்வில் பல சாதனை புரிய முடியும் , என்று கூறிய போது என் மனைவி ஓகே நான் ஜென்னியை போல் அழகாக இருக்கிறேனா??? என்று ஒரு கேள்வி கேட்டு என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்.
============================================
இந்த பதிவு படிப்பதற்கு மிகவும் ஒரு சாதாரணமான பதிவாக இருந்தாலும் இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள், உண்மையில் எல்லோரும் அவர்களுடைய வாழ்வில் நிச்சயம் கடந்து வர வேண்டிய ஒன்று. சிலவற்றை வெளிப்படையாக பேசலாம், சிலவற்றை பேச முடியாது.. 40 ஐ கடந்து என்னை போல் இருக்கும் ,அனைவர்க்கும் இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவாக உணர்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@ஸ்ரீநிவாசன் எப்படி இருக்கீங்க? ரொம்ப மாதங்களாக ஆளையே காணோம்! 🙂
@யாசின்
“உலகில் பெண்களை விட மென்மையான மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.”
தற்காலத்துக்கு அது பொருந்துமா என்பது என் சந்தேகம் 🙂 .
“என் தனிப்பட்ட அனுபவத்தில் குடும்பத்தை திறம்பட நடத்துவதில் ஆணின் பங்கை விட பெண்ணின் பங்கு அதிகம். ஆண் என்பவன் சம்பாரிக்கும் கருவி மட்டுமே.”
இது ஒவ்வொருவர் சூழ்நிலையைப் பொறுத்து என்று கருதுகிறேன்.
முந்தைய காலம் என்றால் உறுதியாக பெண்கள் என்று கூறி விடலாம், தற்போது முழுக்க அப்படி கூற முடியாது.
“பிள்ளைகளை வளர்ப்பதும், உறவை பேணுவதும், சுற்றத்திடம் நட்பு பாராட்டுவதும், குடும்பத்திற்காக எண்ணற்ற தியாகங்கள் புரிவது பெண் மட்டுமே. ”
இருக்கலாம். பெண் மட்டுமே என்று என்னால் கூற முடியவில்லை. ஆண்களும் பலர் தியாகிகள் தான் 🙂 .
“அனைவர்க்கும் இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவாக உணர்கிறேன்”
நன்றி யாசின்.