இதுவும் கடந்து போகும்

19
This too shall pass இதுவும் கடந்து போகும்

துவும் கடந்து போகும்’ ரொம்ப பிரபலமான வார்த்தை இதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புக்குறைவு. இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு சிறு கதை.

முழுக்கதை மறந்து விட்டது நினைவில் உள்ள மையக்கருத்தை வைத்துக் கூறுகிறேன்.

இதுவும் கடந்து போகும்

ஒரு ராஜா மிகத்திறமையானவர் ஆனால், பகைவர்களின் எதிர்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். இதனால், எப்போதும் பதட்டமாகவே இருப்பார். Image Credit

வரப்போகும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை, உள்நாட்டுப் பிரச்சனைகள் என்று எப்போதும் அதை நினைத்து மன நிம்மதி இல்லாமல் இருப்பார்.

ஆனால், அவரது உதவியாளர் எப்போதும் பதட்டம் இல்லாமல் இருப்பார்.

எப்படி இவர் மட்டும் எப்போதும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்! என்று ராஜாவுக்கு வியப்பு!   ஒரு நாள் அவரிடம் கேட்டே விட்டார்.

ராஜா! நான் எதையும்  பிரச்சனையாக நினைப்பதில்லை. ஒரு முறை முனிவவரை சந்தித்தபோது ஒரு மந்திரத்தைக் கொடுத்தார். இதை மிகக் கடினமான சூழ்நிலை வரும் போது படிக்கக் கூறினார் ஆனால், எனக்கு அதைப்போல் நிலை வரவில்லை.

எனவே, இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால், கண்டிப்பாக உங்களால் எதுவுமே முடியவில்லை என்ற கடைசி நிலை வரும் போது மட்டுமே பார்க்க வேண்டும்

என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். ராஜாவும் வாங்கிக்கொண்டு அது பற்றி மறந்து விட்டார்.

எதிரி நாட்டு ராஜாவின் முற்றுகை

ஒரு நாள் எதிரி நாட்டு ராஜா இந்த ராஜாவின் உள்நாட்டு குழப்பத்தைப் பயன்படுத்தி பெரும்படையுடன் இவரது நாட்டை முற்றுகையிட்டு தாக்கினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜா கடுமையாகப் போரிட்டாலும், போருக்குத் தயாராக இல்லாததால், முடிந்த வரை முயற்சி செய்து விட்டுத் தனது சிறு படையுடன் தப்பித்துச் சென்றார்.

எதிரிப்படையும் அவரைத் துரத்திச் சென்றது.

அவர் ஓடிச்சென்றது ஒரு மலைப்பகுதி எனவே, உச்சிப் பகுதிக்கு வந்த பிறகு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.

இனி தப்பிக்க வழியே இல்லை என்ன செய்வது என்று யோசித்த போது, அவரது உதவியாளர் கொடுத்த மந்திரம் நினைவுக்கு வந்தது.

சரி! மந்திரத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயற்சி செய்யலாம் என்று எடுத்துப்பார்த்தால், அதில் எழுதி இருந்தது “இதுவும் கடந்து போகும்” என்று, வேறு ஒன்றுமில்லை.

மந்திரம் எங்கே?

ராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை ‘என்னடா இது! மந்திரம் இருக்கும், தப்பிக்கலாம் என்று பார்த்தால் இப்படி இருக்கிறதே!‘ என்று யோசித்து பின்னால் நகர்ந்த போது கால் இடறி பின் இருந்த பாறையின் கீழே விழுந்து விட்டார்.

பின்னால் துரத்தி வந்த எதிரிப்படையினர் ராஜா மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று நினைத்துத் திரும்பிச் சென்று விட்டார்கள்.

அவர்கள் சென்ற பிறகு வெளியே வந்த ராஜா, ‘அட! நாம் எவ்வளோ பயந்தோம் ஆனால், நாம் பயந்த அளவிற்கு இல்லாமல் சுமூகமாக முடிந்து விட்டதே!‘ என்று நினைத்தார்.

தற்போது அதில் கூறி இருந்த “இதுவும் கடந்து போகும்” என்ற வாசகத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டார்.

பின் காட்டில் மறைந்து, தன்னுடைய படை வீரர்களைத் திரட்டி மீண்டும் நாட்டைக் கைப்பற்றினார் என்று கதை முடிகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியது

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது அல்லது நாம் நினைப்பதை விட மோசமாக நடக்காமல் எளிதாகப் பிரச்சனை முடிய வாய்ப்புள்ளது.

நாம் அதிகம் பயக்கும் ஒரு சில விஷயங்கள், நாம் பயக்கும் அளவிற்கு மோசமாகாமல் நன்றாகவே நடக்கும்.

எனவே, தேவை இல்லாமல் மனதை குழப்பிக்கொண்டு இருக்காமல் “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று இருந்தால் எதையும் தைரியமாக எதிர்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு அப்போது பிரச்சனை சரி ஆகவில்லை என்றாலும் அந்தப் பிரச்சனையால் பின்னர் ஏதாவது நன்மை நடக்க வாய்ப்புள்ளது.

இதைப் பொறுமையாக யோசித்துப் பாருங்கள் புரியும்.

என் அனுபவம்

எனக்குச் சமீப ப்ராஜக்ட் இப்படியொரு அனுபவத்தைத் தந்தது. பல வித தொழில்நுட்ப பிரச்சனைகள் எதிர்பார்த்தேன், என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை.

தினம் தினம் செத்து செத்து பிழைத்துக்கொண்டு இருந்தேன்.

கடந்த ஒரு மாதம் நான் அடைந்த மன உளைச்சல்கள் சொல்லி மாளாது. நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை நண்பர்களுடன் பேச முடியவில்லை.

தினமும் அலுவலகம் செல்லும் போதும் வரும் போதும் எப்போதும் கேட்கும் iPod பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை. சிந்தனை முழுவதும் இதிலேயே இருந்தது.

என்ன பண்ணலாம்! என்ன பண்ணலாம்!! என்று யோசித்து மண்டை காய்ந்து விட்டது.

நான் நினைத்தற்கு மாறாக ஒவ்வொரு பிரச்சனையும் சுமூகமாகவே முடிந்தது. சரி! அடுத்த பிரச்சனை எப்படி சரியாகிறது என்று பார்ப்பேன்.

வழக்கம்போல அதுவும் ஒன்றும் இல்லாமல் சென்று விடும். எனக்கே ரொம்ப வியப்பாக இருக்கும்.

நாம் தான் தேவை இல்லாமல் பயந்து கொண்டு இருக்கிறோம் என்று அறிவுக்கு தெரிந்தாலும் மனதிற்கு புரிவதில்லை.

வழக்கம்போல அடுத்ததை நினைத்துக் கலங்குவேன் ஆனால், அத்தனையும் கடந்து எல்லாமே நன்றாகவே முடிந்தது.

அப்போது தான் “இதுவும் கடந்து போகும்” என்பதின் முழு அர்த்தமும் புரிந்தது.

நீங்கள் பயந்த! எப்படி நடக்கும்? என்று நினைத்துக் கலங்கிய பல விசயங்களைக் கடந்து வந்து இருப்பீர்கள் ஆனால், அது முடிந்ததால் அதுபற்றி யோசித்து இருக்க மாட்டீர்கள்.

திரும்ப ஒரு முறை பயந்த பிரச்சனைகளை யோசித்துப்பாருங்கள், எவ்வளவு பிரச்சனைகளைத் தாண்டி வந்துள்ளீர்கள் என்பது புரியும்.

உங்களுக்கே வியப்பாக இருக்கும்!

இதுவும் கடந்து போகும்‘ என்பது அனைவர் வாழ்க்கையிலும் நடந்து கொண்டு இருப்பது 🙂 .

அலுவலகத்தில் பணி புரிகிறவர் என்றால் படிக்க வேண்டிய கட்டுரை “விளம்பரம் ரொம்ப முக்கியம் அமைச்சரே!”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

 1. வணக்கம் அண்ணே,

  மீண்டும் ஒரு சிறப்பான பதிவுடன் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

 2. //வாய்ப்பு என்பது சில நேரங்களில் நாமாக உருவாக்க வேண்டும் வெகு சில நேரங்களில் அதுவாக தானாக வரும் எனக்கு தற்போது தானாக வந்தது. எப்போதுமே எனக்கு கிடைக்கும் வாய்ப்பை என்றும் தவறவிடுவதில்லை அதை எப்படி மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்றே என்னுடைய முழுக்கவனமும் இருக்கும். எனவே இந்த முறையும் அதை சரியாகவே பயன்படுத்திக்கொண்டுள்ளேன்.//

  உங்கள் பணியை சிறப்பாக முடித்து வெற்றிகரமாக திரும்பியதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்…

 3. //இதுவும் கடந்து போகும்//

  சிறுகதையுடன் சேர்ந்து உங்கள் நிகழ்வின் அனுபவங்களையும் சூப்பரா சொல்லியிருக்கீங்க… பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணே

 4. //ஒரு சிலர் நான் ஹிட்ஸ்க்காக எழுதுவதாக கூறி இருந்தார்கள். நான் மாதம் அதிகபட்சம் எட்டு பதிவு எழுதினாலே பெரிய விஷயம் அதுவும் சென்ற மாதம் வேலைப்பளு காரணமாக ஒரே பதிவு அதுவும் சிறிய பதிவு அதுவும் facebook நண்பர்களுக்காக. இப்படி இருக்கிற நான் ஹிட்ஸ்க்காக எழுதுகிறேன் என்றால் இது உங்களுக்கே ஓவராக இல்லையா! ஐ ம் பாவம் //

  அண்ணே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு எழுதுங்கள். நாங்கள் எப்போதும் தொடர்ந்து இணைந்திருப்போம்….

 5. நண்பரே நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கே பதிவுகள். யாருக்கும் பயப்பட தேவை இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நன்றி

 6. கிரியார்
  வலை உலகமும் ஒரு போதை தான் ,ஹிட்ஸ் ,பின்னூட்டம் ,ஒட்டு என்று பல போதைகள் இருக்கின்றன -அதை நாம் கடந்தால் ஒழிய மேலே வர முடியாது ,ஆரம்பத்தில் நீங்கள் உங்கள் அனுபவத்தை எனக்கு பகிர்ந்ததாலும் ,நானும் கவனமாக உள்ளேன் என்றே நம்புகிறேன் .
  ரஜினி-கமல் விஷயத்தை -அப்படியே விட்டு விடலாம் ,யாருடைய அபிமானமும் ,கருத்தும் மாறாது 🙂
  ஆடுகளம் -அட்டகாசமாக இருந்தது ,எனக்கும் பிடித்தது ,அவன்-இவன் -எதிர் பாத்து காத்து கொண்டிருக்கிறோம் .
  தங்களது வேளையில் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்

 7. “இதுவும் கடந்து போகும்” – ஒரு மந்திரச் சொல்.
  உண்மை!

 8. அஞ்சரை பெட்டி மாதிரி, காரம் – மணம் – குணம் நிறைந்து இருக்கும் பதிவுங்க.

 9. வாய்ப்பு என்பது சில நேரங்களில் நாமாக உருவாக்க வேண்டும் வெகு சில நேரங்களில் அதுவாக தானாக வரும் எனக்கு தற்போது தானாக வந்தது. எப்போதுமே எனக்கு கிடைக்கும் வாய்ப்பை என்றும் தவறவிடுவதில்லை அதை எப்படி மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்றே என்னுடைய முழுக்கவனமும் இருக்கும். எனவே இந்த முறையும் அதை சரியாகவே பயன்படுத்திக்கொண்டுள்ளேன்

  வாழ்த்துக்கள் கிரி

  நல்ல பகிர்வு நன்றி கிரி

 10. //“இதுவும் கடந்து போகும்” //

  சூப்பர். கதை வேறு எனா வாசித்திருந்தாலும் உங்கள் நடையில் வாசிப்பது நன்றாக உள்ளது.

  // கூகிள் facebook வளர்ச்சியால் ஆடிப்போய் இருப்பது உண்மைதான். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.//

  ஓரளவு உண்மைதான்.. unofficial google blog கடைசியாக கண்டுபிடித்து வெளியிட்ட Easter egg ஐப் பாருங்கள். இருந்தாலும் கூகிளையும் பேஸ்புக்கையும் ஒப்பிடுவது அவ்வளவு சரியெனத் தோன்றவில்லை. பேஸ்புக் இப்போது அடிமைப்படுத்தும் விளையாட்டுக்கள் மூலமே அதிக பயனர்களைப் பெற்றுள்ளது என்பது பலர் அறிந்த உண்மை. பேஸ்புக் இன்றைய நாட்களில் நல்ல விடயங்களுக்கு பயன்படுவதை விட பயனர்களை அடிமைப்படுத்துவதே அதிகம். (உ+ம் Barn Buddy, Farmvillie) எனவேதான் பயனர்களின் நன்மைகளைக் கருத்தில்கொண்டு பல சேவைகளை சிறப்பாகவும் இலவசமாகவும் வழங்கும் ஒரு நிறுவனத்துடன் பேஸ்புக் போன்ற ஒரு நிறுவனத்தை ஒப்பிடுவது அவ்வளவு சரியல்ல..

 11. Welcome Back Giri!
  //இது எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பொருந்தும் ஒரு விசயமாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் பயந்த! எப்படி நடக்கும்? என்று நினைத்து கலங்கிய பல விசயங்களை கடந்து தான் வந்து இருப்பீர்கள் ஆனால் அது முடிந்ததால் அது பற்றி யோசித்து இருக்க மாட்டீர்கள். திரும்ப ஒரு முறை யோசித்துப்பாருங்கள் எவ்வளவு பிரச்சனைகளை நீங்கள் தாண்டி வந்து இருக்கிறீர்கள் என்பது புரியும். யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.//
  சரியாக சொன்னீங்க கிரி.

 12. //அது மாதிரி நாங்க வேலை னு வந்துட்டா தீயாய் மாறிடுவோம் //

  அப்பா (f)பயர் சேவிஸ் கூடவே இருக்கனுமின்னு சொல்றீங்க 🙂

  தலைவர் பாணியில கதை நல்லாயிருக்கு 🙂

  அப்புறம் ஆடுகளம் அருகில் இருக்கும் திரை அரங்கில் ஓடிக்கொண்டிருந்தாலும் கூட செல்வதற்கு எந்த நண்பர்களும் இல்லாததும் திரையரங்க குவாலிட்டியும் இதுவரை படத்தை பார்க்காததர்கான காரணங்கள்.

  அவன் இவன் எல்லோரையும்போல காத்திருக்கிறேன்

 13. கிரி சார் ….
  இப்போ தான் புல் மீல்ஸ் சாப்ட்ட
  மாதிரி இருக்கு…

 14. கிரி தல,
  வர வர ரொம்ப நல்லா இருக்கு நீங்க விஷயம் சொல்லுற விதம். உங்க பையன் ரொம்ப கொடுத்து வெச்சவன் தான்

  – அருண்

 15. இந்தக்காலத்தில் நல்லது சொன்னாலே எதிர்ப்புத்தனே வருகிறது? அதைக்கண்டு அஞ்சாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

 16. மாணவன் பாலா சுனில் நாகசுப்ரமணியன் சித்ரா சரவணன் Abarajithan தமிழ் ஜீவதர்ஷன் ஆனந்த் அருண் Breeze மற்றும் சுரேஷ் வருகைக்கு நன்றி

  @மாணவன் உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் உற்சாகமான வார்த்தைகளுக்கும் நன்றி

  @பாலா ஓகே 🙂

  @சுனில் இன்னும் உஷாரா இருங்க.

  @Abarajithan நான் இரண்டையும் ஒப்பிடவில்லை ஒப்பிடவும் முடியாது. ஒன்று சமூக தளம் இன்னொன்று பல்முக வசதிகள் கொண்டது. இருப்பினும் பார்வையாளர்கள் மற்றும் பக்கங்கள் பார்வையில் கடந்த வருடம் இறுதியில் கூகிள் ஐ facebook மிஞ்சி விட்டது. இதனால் கூகிள் கொஞ்சம் கலங்கி இருப்பது உண்மை தான். இதனால் தான் facebook க்கு போட்டியாக ஒரு சமூகத்தளத்தை கூகிள் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

  @ஜீவதர்ஷன் மறக்காம ஆடுகளம் பாருங்க! படம் சூப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here