பார்க்கிங் (2023) | ஈகோ யுத்தம்

4
பார்க்கிங்

வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளைக் கூறும் படமாக பார்க்கிங் வந்துள்ளது. Image Credit

பார்க்கிங்

கீழ் வீட்டில் 10 வருடங்களாக வசிப்பவர் MS பாஸ்கர். மேல் வீட்டுக்குப் புதிதாக குடி வருகிறார்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா தம்பதியினர்.

வந்த பிறகு கார் வாங்குகிறார் ஹரிஷ், இதனால் ஏற்கனவே இரு சக்கர வாகனம் வைத்துள்ள MS பாஸ்கருக்கு வாகன நிறுத்த நெருக்கடி ஏற்படுகிறது.

துவக்கத்தில் சிறு உரசலில் ஆரம்பிக்கும் பிரச்சனை, இவர்கள் இருவரின் ஈகோ, கோபம் காரணமாக மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்து ரணகளமாகிறது.

இறுதியில் பிரச்சனை தீர்ந்ததா? என்ன ஆனது என்பதே பார்க்கிங்.

MS பாஸ்கர்

அருமையான கதை, அதற்கு ஏற்ற அட்டகாசமான சலிப்பாக்காத திரைக்கதை, பொருத்தமான கதாபாத்திரங்கள் என்று அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

MS பாஸ்கர் ஒரு அற்புதமான நடிகர். எந்தக்கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.

ராதிகா தொடர் ஒன்றில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தது பலருக்கு நினைவு இருக்கலாம், அதில் அவருடைய வில்லத்தனமான சிரிப்பு பிரபலமானது.

அனைத்து வகை நடிப்பிலும் அசத்துபவரை முழுவதுமாக பயன்படுத்தி, அவரது திரை வாழ்க்கையிலேயே மறக்க முடியாத படமாக இயக்குநர் கொடுத்து விட்டார்.

நேர்மையான அரசு அதிகாரியான MS பாஸ்கர், மகளுக்காகச் சேமிப்பவர், அதிகம் செலவழிக்காதவர் என்று சராசரி நடுத்தர வர்க்க கதாபாத்திரம்.

இப்படியொரு வாய்ப்பு கிடைத்தாலே பொளந்து காட்டுவார், இதுல ஈகோ, கோபம் என்று அவரது நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

அடுத்தது என்ன செய்யப்போகிறாரோ என்ற பயமுறுத்திக்கொண்டே உள்ளார்.

அரசு அலுவலகத்தைச் சித்தரித்த விதமும், ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதமும் உண்மையான அரசு அலுவலகத்தைப் பார்ப்பது போலவே உள்ளது.

ஹரிஷ் கல்யாண்

MS பாஸ்கருக்கு கடும் போட்டியைக் கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இளம் வேகத்தில் கோபப்படுவது, MS பாஸ்கருக்குப் போட்டியாக ஈகோவாக செயல்படுவது, டக்கென்று உணர்ச்சிவசப்படுவது, யார் வெற்றி பெறுவதென்று பார்த்திடலாம் என களத்தில் இறங்குவது என்று ரணகளம்.

MS பாஸ்கர் ஒரு பக்கம் பீதியைக் கிளம்பினால், ஹரிஷ் கல்யாண் அவர் ஒரு பக்கம் அலற வைக்கிறார்.

இருவருமே அவர்களின் எல்லையையும் தாண்டிப் போகும் போது யப்பா! நிறுத்துங்கயா.. முடியல என்று நம்மைக் கலவரப்படுத்துகிறார்கள்.

நாம் நினைக்கும் எல்லையையும் தாண்டிச் செயல்படுவார்கள். அடிப்படையில் இருவருமே நல்லவர்களே! ஆனால், ஈகோ, கோபம் அவர்களை மிருகமாக்கும்.

இவர்களுடன் MS பாஸ்கர் குடும்பம், இந்துஜா, வீட்டு முதலாளி இளவரசு என்று ஒவ்வொருவரும் மிக இயல்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்கள்.

யாரைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை!

அந்த வீட்டை எங்கே பிடித்தார்களோ! ரொம்ப பொருத்தமான இடம். இக்கதைக்கென்றே அளவு எடுத்துச் செய்தது போல உள்ளது 🙂 .

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒளிப்பதிவு அட்டகாசம். காரணம், ஒரு இடம் கூடச் செயற்கையாகவே இல்லை. எதோ நம்ம வீட்டுல, பக்கத்து வீட்டுல நடக்கும் சம்பவம் போலவே உள்ளது.

கலை இயக்குனர் செமையா ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

எப்படி போக்குவரத்து உள்ள இடத்தில் இதை எடுத்தார்கள் என்றே புரியவில்லை. யாருமே கேமரா பார்த்தது போல இல்லை.

காட்சிகள் எந்த வகையிலும் உறுத்தாமல், நிஜ சம்பவத்தைப் பார்ப்பது போலவே உள்ளது. உண்மையிலேயே ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம்.

பின்னணி இசையும் இவர்கள் கோபம், ஈகோக்கு ஈடு கொடுத்து, நம்மைப் பதற்றமடைய வைத்துக்கொண்டே இருந்தது.

சிறு பாடல் தவிர்த்துப் பாடல்கள் இல்லை என்பது கதையின் மதிப்பை உயர்த்தியது.

படத்தொகுப்பும் கச்சிதமாக உள்ளது. தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே தோன்றவில்லை. பாடல்கள் இல்லாதது பெரிய ஆறுதல்.

எந்த மொழி நடுத்தர வர்க்க நபரும் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆக மொத்தத்தில் குறையென்று எதைக் கூறுவது என்றே தெரியவில்லை.

பரிந்துரை

தயவு செய்து ஈகோ, கோபத்தை விட்டு விடுங்கள். கோபம், அவசரத்தால் பலவற்றை இழந்துள்ளேன்.

இதை மாற்றிக்கொண்ட பிறகே என் வாழ்க்கை மாறியது. எதோ கூற வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை, அனுபவப்பூர்வமாகக் கூறுகிறேன்.

ஈகோவும், கோபமும் ஒருவரின் வாழ்க்கையையே அழித்து விடும், நண்பர்களை எதிரிகளாக்கி விடும். அதோடு வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது.

சொந்தக்கதை

இதே பார்க்கிங் பிரச்சனையால் கார் வாங்காமல் இருக்கிறேன் 🙂 .

வெளியே தான் நிறுத்தவேண்டும் ஆனால், கோவிட் க்குப் பிறகு பலரும் கார் வாங்கியதால், வெளியே நிறுத்தவே இடமில்லை. அதோடு நிறுத்தினால், பெரிய மழை வந்தால், கார் மூழ்கி விடும்.

சென்னையில் வாடகைக்கு இருக்கும் வீட்டு முதலாளி பிரச்சனையில்லை, 2016 முதல் வாடகை உயர்த்தவில்லை. முக்கியமாக 24 மணி நேரமும் மெட்ரோ தண்ணீர் வரும்.

எனவே, வீடு மாற்றவும் விருப்பமில்லை. காரை விட வீடும், தண்ணீரும் எனக்கு ரொம்ப முக்கியம் என்பதால் கார் வாங்குவது தள்ளிச்சென்று கொண்டுள்ளது.

யார் பார்க்கலாம்?

கர்ப்பிணியாக உள்ளவர் தவிர்த்து இப்படத்தை அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

இந்துஜா கர்ப்பிணியாக வருகிறார் அதோடு சில எதிர்பார்த்த சம்பவங்களும் நடப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பார்க்க உகந்ததல்ல.

நூடுல்ஸ் போலவே இதுவும் ஒரு பதட்டமான படம். குறுகிய காலத்தில் இரு சிறந்த தமிழ்ப் படங்கள் பார்த்தது பெரு மகிழ்ச்சி 🙂 .

ஒரு சோகம், படம் வெளியான அடுத்த வாரம் பெருமழை. எனவே, வசூல் பாதித்து இருக்கும். முடிந்தவரை திரையரங்கில் பார்த்து இப்படத்துக்கு ஆதரவு கொடுங்கள்.

பரிந்துரைத்தது ஹரிஷ் மற்றும் பலர்.

கொசுறு

சத்யம் திரையரங்கில் இன்னமும் இரு சக்கர வாகன நிறுத்தத்துக்கு ₹10 தான் வசூலிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே குறைந்த கட்டணம் என்று நினைக்கிறன்.

வாகன நிறுத்தக் கட்டணம் குறைவு மற்றும் சிறப்பான சேவை என்பதாலே மற்ற இடங்களை விட இங்கே பார்க்க விரும்புகிறேன்.

OTT யில் தான் பார்ப்பேன். இது போன்று சில படங்கள் விதிவிலக்கு.

Directed by Ramkumar Balakrishnan
Written by Ramkumar Balakrishnan
Produced by Sudhan Sundaram, K. S. Sinish
Starring Harish Kalyan, M. S. Bhaskar, Indhuja Ravichandran
Cinematography Jiju Sunny
Edited by Philomin Raj
Music by Sam C. S.
Release date 1 December 2023
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி, இந்த பதிவை படித்த பின்பு பார்க்கிங் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன்.. முன்னோட்டமே நச்சுன்னு இருக்கு.. குறிப்பாக CS SAM ன் பின்னணி இசை.. படத்தை பார்க்க தூண்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு மொழி படத்தை youtube இல் பார்த்தேன். எப்பா!!! என்ன நேர்த்தியான படம்.. 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படமாக இருந்தாலும் தற்போது பார்க்கும் போதும் FRESH காக இருக்கிறது. படத்தில் MS பாஸ்கரின் நடிப்பு.. மிகவும் எதார்த்தம்..

  என் எப்போதும் பார்வையில் MS பாஸ்கரும் / டெல்லி கணேஷும் சம அளவில் திறமை கொண்டவர்கள் என மதிப்பிடுவேன். அவ்வை சண்முகியில் அவரது உடல்மொழி வேற மாதிரி!!! பல ஆங்கில படங்களுக்கு MS பாஸ்கர் பின்னணி குரல் கொடுத்து இருந்தாலும், நான் மிகவும் ரசித்து பார்த்த The Shawshank Redemption படத்தில் MORGAN FREEMAN க்கு இவர் கொடுத்த பின்னனி குரல், அந்த பாத்திரத்தை மேலும் வலுப்பட வைக்கும் ஒரு குரல்.

  MS பாஸ்கரும் / டெல்லி கணேஷு இருவரும் பல படங்கள் நடித்து இருந்தாலும் இன்னும் அவர்களுக்கான சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று தான் கருதுகிறேன்.. எட்டு தோட்டாக்கள் படத்தில் MS பாஸ்கரின் நடிப்பு சிறப்பாக இருக்கும். இந்த படம் பார்த்ததிலிருந்து இவரின் தீவிர ரசிகனாகி விட்டேன்.. ஜெய் பீம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் தான்.. அந்த படத்திலே இவரது உடல்மொழி நம்மை ரசிக்க வைக்கும்..

  பல ஆண்டுகள் பெரிய ஹீரோவாக நடித்தவர்களே தன் நடிப்பை மேலும் வளர்த்து கொள்ள முயல்வது வெகு சிலரே.. ஆனால் MS பாஸ்கர் போல இருக்கும் வெகு சில துணை நடிகர்கள் தனக்கு கிடைக்கின்ற எந்த பாத்திரமாக இருந்தாலும் அதிலும் தன் முத்திரையை பாதிப்பது தான் இவர்கள் மற்றவர்களிடம் இருந்தது தனித்து அடையாளப்படுத்த படுகிறார்கள்..

 2. @யாசின்

  “MS பாஸ்கரும் / டெல்லி கணேஷும் சம அளவில் திறமை கொண்டவர்கள் என மதிப்பிடுவேன்.”

  பொருத்தமான ஒப்பீடு யாசின் 🙂 .

  MS பாஸ்கர் கூடுதலாக வில்லன் உட்பட செய்துள்ளார்.

  டெல்லி கணேஷ் அபூர்வ சகோதரிகளில் செய்து இருந்தாலும், ஓகே தான்.

  நகைச்சுவையில் MS பாஸ்கரை விட டெல்லி கணேஷ் கூடுதலாக கலக்குவார். அவ்வை சண்முகி சரியான படம்.

  இவருடைய பேட்டி கூட நகைச்சுவையாக சுவாரசியமாக இருக்கும்.

  MS பாஸ்கர் பல வித முகபாவனைகளைக் காட்டுவதில் வித்தகர்.

  “MS பாஸ்கர் போல இருக்கும் வெகு சில துணை நடிகர்கள் தனக்கு கிடைக்கின்ற எந்த பாத்திரமாக இருந்தாலும் அதிலும் தன் முத்திரையை பாதிப்பது தான் இவர்கள் மற்றவர்களிடம் இருந்தது தனித்து அடையாளப்படுத்த படுகிறார்கள்..”

  கடந்த வாரம் த்ரிஷா நடித்த ரோடு படம் பார்த்தேன். சிறு கதாப்பாத்திரம் என்றாலும் MS பாஸ்கர் இயல்பாக செய்து இருப்பார்.

  அவரது நடிப்பை செயற்கை என்று கூறவே முடியாது.

  இவர்கள் இருவருமே கமல் மீது பெருமதிப்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @யாசின். 8 தோட்டாக்கள் படத்தில் ms baskar நடிப்பு உச்சம். நீங்க ரெண்டு பேருமே இன்னும் அந்த படம் பார்க்கல போல. செம படம்.

 3. @ஹரிஷ் நான் 8 தோட்டாக்கள் பார்த்து விட்டேன் ஆனால், அதை விட பார்க்கிங் படத்திலையே எனக்கு MS பாஸ்கர் நடிப்பு பிடித்தது.

  இதில் பல்வேறு பரிணாமங்களை காட்ட வாய்ப்பு இருந்தது.

  அதே போல யாசின் 8 தோட்டாக்கள் படத்தைப் பார்த்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் தான் அவர் கருத்தை முழுவதுமாக படிக்கவில்லை 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here