இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி | வெற்றிக்கதை

2
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

ந்திய மென்பொருள் துறையில் தனக்கென்று அடையாளத்தை உருவாக்கியவர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. இவர் வாழ்க்கையை விளக்கும் புத்தகம் இது.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கொண்ட இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சாப்பாட்டுக்கே சிரமப்படுகிற பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.

குடும்பச் சூழ்நிலை கடினமாக இருந்தாலும், படிப்பு தான் உயர்வு தரும் என்ற தந்தையின் அறிவுரைப்படி படிப்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்.

பள்ளி, கல்லூரியில் படிப்பில் சிறந்த மாணவராக இருந்துள்ளார்.

IIT யில் படிக்க வேண்டும் என்ற கனவோடு படித்து வாய்ப்புக் கிடைத்தும் குடும்ப வறுமை காரணமாக இணைய முடியவில்லை.

ஆனால், முதுகலை பட்டம் IIT யில் M.Tech முடித்தார்.

இடது சாரி சிந்தனை

நாராயணமூர்த்தி இடது சாரி சிந்தனை கொண்டவர். அனைத்தையும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோட்பாடுடையவர்.

ஆனால், இச்சிந்தனையால் துவக்கத்தில் குழப்பத்துக்குள்ளாகி, சில வாய்ப்புகளையும், சம்பாதித்ததையும் இழந்துள்ளார்.

பின்னர் நன்கு சம்பாதித்து அதை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் நபராக உயர வேண்டும் என்று அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார்.

புரிந்து கொண்ட வரை, நாராயணமூர்த்தி இடது சாரி சிந்தனையாளர், வலது சாரி செயற்பாட்டாளர் 🙂 .

தனித்த பங்களா இல்லாமல், அடுக்ககத்தில் தான் வசிக்கிறார் என்பது வியப்பை அளித்தது, தற்போதும் அதே போல வசிக்கிறாரா?

இவர் பாதுகாப்புக்கு அரசு முயன்ற போதும், அடுக்ககத்தில் இருப்பதைக் காரணம் காட்டி, மற்றவர்களுக்குத் தொல்லையாக இருக்கும் என்று மறுத்துள்ளார்.

இன்னமும் சாதாரண வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்குக் கஷ்டப்பட்டு வளர்ந்தவர்கள் சிலர், பின்னர் அதிகப் பணம் சம்பாதித்தாலும் அனாவசிய செலவு செய்ய மனம் ஒப்புக்கொள்ளாது.

சுய தொழில்

பிரச்சனையில்லாத, மாதம் பிறந்தால் சம்பளம் என்று பழகியவர்கள் சுய தொழில் துவங்க யோசிப்பார்கள் காரணம், அதில் உள்ள இலாப நட்ட நெருக்கடி.

'ஒருவேளை' தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது? என்ற எதிர்மறை / எச்சரிக்கை எண்ணமே இந்தியாவில் பலர் தொழில் துவங்க மறுக்கக் காரணங்களாகி விடுகிறது.

தங்களுடைய comfort zone விட்டு வெளியே செல்லப் பெரும்பான்மையோர் விரும்பமாட்டார்கள்.

ஆனால், தான் பணி புரிந்த நிறுவனத்தின் நண்பர்கள் 6 பேருடன் இணைந்து நிறுவனம் துவங்க விருப்பப்படுகிறார் நாராயணமூர்த்தி.

இதற்குத் தடையாக இருப்பது முதலீடு.

மனைவி சுதா

இவரது காதல் மனைவி சுதா சேமிப்பிலிருந்து பணம் கொடுத்து உதவுவதோடு, இவர் சம்பளத்தில் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது, நாராயணமூர்த்திச் சம்பளம் கிடையாது என்று முடிவாகிறது.

மூன்று வருடங்கள் முயற்சிப்பது, நிறுவனம் சரிவரவில்லை என்றால், வேலைக்கே திரும்பிவிடுவது என்று முடிவு செய்கிறார்கள்.

சுதா துவக்கத்தில் ‘டாடா டெல்கோ‘ நிறுவன விளம்பரத்தில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று இருந்ததைக் கண்டு, கடுப்பாகிறார்.

ஜே ஆர் டி டாடா க்குக் கடிதம் எழுதி, பின்னர் அவர் மூலமாக நேர்முகத்தில் அனுமதிக்கப்பட்டுப் பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு தேர்வான முதல் பெண் சுதா என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயணமூர்த்தி, சுதா இருவருமே கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

அரசாங்க கட்டுப்பாடுகள்

தற்போது போல அல்லாமல், அப்போது ஒவ்வொன்றுக்கும் அரசாங்க அனுமதி பெறுவது மிகக்கடினமாக இருந்துள்ளது.

விமானப் பயணம் என்றால் ஒரு வாரம், இறக்குமதிக்கு ஒரு வருடம் என்பது போலப் பல்வேறு நடைமுறை சிக்கல்கள், தாமதங்கள்.

இப்பிரச்சினைகள் 1991 ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்த பிறகு சரிசெய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் எளிதாக்கப்பட்ட பிறகு இன்ஃபோசிஸ் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது.

7 நபர்களுடன் துவங்கிய இன்ஃபோசிஸ் தற்போதைய வளர்ச்சி அபரிமிதமானது.

வளர்ச்சி

1995 ல் இருந்து (விண்டோஸ் 3.1) கணினியைப் பார்த்துள்ளேன் என்பதால், 1980 ல் எப்படி இவர்கள் இருந்து இருப்பார்கள் என்று வியப்பாக உள்ளது.

காரணம், நம்புறீங்களோ இல்லையோ 1998 ல் 8 MB RAM, 486 Motherboard, 56 Kbps Modem வைத்து இருந்தால், அவர் பெரிய ஆள்!

நன்கு கவனிக்கவும் 8 GB RAM அல்ல, 8 MB RAM.

எனவே, 1980 ல் எப்படி இருந்து இருக்கும்?! எப்படி யோசித்து இருப்பார்கள்? ஒன்றுமே புரியவில்லை. மிகப்பெரிய முயற்சி, சாதனை.

நாராயணமூர்த்தி நண்பர்களாக அமைந்த மற்ற ஆறு நபர்களும் ஒத்த சிந்தனையாளர்களாக இருந்ததும், ஒற்றுமையாக முயன்றதும் பெரிய விஷயம்.

ஒருவர் மட்டும் இடையில் வெளியேறி விட்டார். நாராயணமூர்த்தி மற்றும் இன்னொருவர் மட்டுமே 30+ மற்றவர்கள் 25+ வயதுடையவர்கள்.

இந்த வயதில், வறுமையான சூழ்நிலையில் நல்ல சம்பளத்தை விட்டுத் தைரியமாகச் சுய தொழில் தொடங்கினார்கள் என்றால்.. செம 🙂 .

இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.

அறக்கட்டளை

இதுவரை வலது சாரி செயற்பாட்டின் மூலம் வளர்ந்தவர், தற்போது இடது சாரி சிந்தனை மூலம் மற்றவர்களுக்கு உதவ அறக்கட்டளை ஆரம்பிக்கிறார்.

நிறுவனத்தில் தன் மனைவி பங்கெடுக்க மறுத்த நாராயணமூர்த்தி, அறக்கட்டளைக்குச் சுதாவை பொறுப்பாளராக்குகிறார்.

எதனால், நிறுவனத்தில் இணைய அனுமதிக்கவில்லை என்பதற்கு இவர் கூறுவது நியாயமான காரணங்களாக உள்ளது.

இந்த அறக்கட்டளை மூலம் தான் பெற்றதை மக்களுக்கே திருப்பிக் கொடுக்க, பல முயற்சிகளை இருவரும் எடுத்துள்ளனர்.

அறக்கட்டளையைச் சிறப்பாக நடத்தியதற்காகச் சுதா பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

புத்தகத்தில் 60% நாராயணமூர்த்தி வாழ்க்கை போராட்டங்கள். மீதியை அறக்கட்டளை & அது சார்ந்த தகவல்களே அதிகம் எடுத்துக்கொள்கின்றன.

ஆசிரியர் சொக்கனின், டாடா பற்றிய புத்தகத்துடன் ஒப்பிடும் போது இதில் தகவல்கள் அதிகம் இல்லை. தொழில்துறை சவால்கள் காரணமாக இருக்கலாம்.

நாராயணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் எப்படிச் சவாலைக் கடந்து இந்நிலையை அடைந்தார்கள் என்பது சுய தொழில் துவங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

அமேசானில் வாங்க –> இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

தொடர்புடைய கட்டுரைகள்

கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள்

ரத்தன் டாடா | அசரடிக்கும் மேலாண்மை

அம்பானி : ஒரு வெற்றிக்கதை | என். சொக்கன்

தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?!

தொழில் துவங்க நினைக்கிறீர்களா? | Derby Vijay Kapoor

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. இவரை பற்றி ஓரளவிற்கு தெரியும் என்றாலும் முழுமையாக தெரியாது.. ஆனால் எந்த துறையில் தனி நபர்கள் சாதித்து இருந்தாலும் அவர்களின் சாதனையை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே எனக்கு உண்டு.. அவர்கள் வாழ்வில் சந்தித்த சோதனைகளையும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்த நிகழ்வையும் தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் உண்டு.. இது போன்ற மனிதர்கள் மீது இயல்பாகவே ஒரு வித காதல் ஏற்படுவதுண்டு..

    மிக சமீபத்தில் திரு.நம்பி நாராயணனின் நிறைய காணொளிகளை கண்டு மிரண்டு விட்டேன்.. அவர் பேச பேச பொக்கிஷங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது.. அவரின் வாழ்க்கை வரலாற்றை நடிகர் மாதவன் படமாக (Rocketry: Nambi Vilaivu) இயக்கி உள்ளார், விரைவில் வெளிவரும்.. இதுவரை நான் படிக்காத புத்தகம் இது.. படித்து விட்டு நான் என் கருத்தை பின்பு கூறுகிறேன்.. ஆசிரியர் சொக்கனின் எழுத்தில் திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை படித்து இருக்கிறேன்..தகவல்கள் மற்றும் உரைநடை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. திரு.நம்பி நாராயணனின் படமாக மாதவன் எடுக்கும் Rocketry பார்க்க விருப்பமாக உள்ளது.

    சொக்கன் எளிமையான நடைக்கு சொந்தக்காரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here