கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள்

20
கம்ப்யூட்டர் எஞ்சினியர்

சென்னையில் மூன்று வருடம் ஃபீல்டு எஞ்சினியராக இருந்து இருக்கிறேன். அதில் கிடைத்தது தான் கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள். Image Credit

பராமரிப்பு

ஃபீல்டு எஞ்சினியர் என்றால், எங்கள் நிறுவனம், வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள கணினிகளை ஆண்டு பராமரிப்பு [Annual Maintenance Contract] எடுத்து இருப்பார்கள்.

இந்தக் காலங்களில் இவர்களுக்கு கணினியில் ஏதாவது பிரச்சனை என்றால் கம்ப்யூட்டர் எஞ்சினியர் சென்று சரி செய்து தர வேண்டும்.

இது அல்லாமல் புதிய கணினி வாங்கினால் அதற்கு ஒரு வருட வாரண்டி இருக்கும் எனவே அந்த சமயங்களிலும் செல்ல வேண்டும்.

கஸ்டமர் வீடு, அலுவலகம் எங்கே வேண்டும் என்றாலும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக எண்ணூர், மாதவரம், ஐயப்பன் தாங்கல், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளே, கூடுவாஞ்சேரி என்று தொலைவான இடங்களும் இருக்கும்.

இங்கே எல்லாம் சென்று வருவதற்குள் ஒரு வழியாகி விடுவோம். அப்போது பைக் இல்லை, எப்போதும் மாநகரப் பேருந்து தான்.

Windows 3.1 ல் இருந்து வேலை செய்து இருக்கிறேன். 8 MB RAM வைத்து இருந்தால் மிகப்பெரிய விஷயம். தற்போது 8 GB RAM ஆகி விட்டது. எவ்வளவு முன்னேற்றம்!!

ஒரு சிஸ்டம் அசெம்பிள் செய்வதற்குள் கை எல்லாம் ரத்தக் களரி ஆகி விடும். தற்போதெல்லாம் மிக எளிதாகி விட்டது.

மதர் போர்ட் பயங்கரமா ஹேங் ஆகும், RAM பிரச்சனை வரும், “Windows protection error” என்ற பிரபலமான எர்ரர் வந்து உயிரை எடுக்கும்.

தற்போதெல்லாம் இவை பெருமளவு குறைந்து விட்டது.

கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள்

கஸ்டமர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள்.

சிலர் ரொம்ப ஜாலி, சிலர் கடுங்கோபம், சிலர் உம்மணா மூஞ்சி, சிலர் கலகலப்பு, சிலர் ப்ரொஃபசனல், சிலர் எதோ ஐந்துவை பார்ப்பது போல பார்ப்பார்கள்.

கலவையான அனுபவம் கிடைக்கும்.

பலவகையான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு. இதில் சிலரை மட்டும் கூறுகிறேன். சிலரின் அடையாளங்களை மட்டும் மறைத்துக் கூறுகிறேன் 🙂 .

எப்போதுமே தொழில் சுத்தம் அதோடு வேலையில் கவனமாக இருப்பதால், பெரும்பாலனவர்கள் நன்கு பழகி விடுவார்கள்.

சிலர் துவக்கத்தில் நொரண்டு பிடித்தாலும் பின் நட்பாகி விடுவார்கள்.

எந்த ஒரு கஸ்டமர், குறிப்பிட்ட சர்வீஸ் என்ஜினியரை விரும்பி அழைக்கிறாரோ அப்போது தெரிந்து கொள்ளலாம் அவர்களின் வேலையின் தரத்தை.

துவக்கத்தில் சீனியரை அழைக்கும் போது, நம்மை யாராவது இப்படி அழைக்க மாட்டார்களா! என்று ஏக்கம் வரும். இது ஒரு ஆறு மாதத்திற்குப் பிறகு நிறைவேறியது.

மதனி டெக்ஸ்டைல்ஸ் முகைதீன்

நூற்றுக்கணக்கான கஸ்டமர்களை பார்த்து இருந்தாலும் ரொம்பப் பிடித்தவர் என்றால் திருவொற்றியூர் “மதனி டெக்ஸ்டைல்ஸ்” முதலாளிகளுள் ஒருவரான முகைதீன் அவர்கள்.

இவங்க ஏரியா போறது என்றாலே விடிந்து விடும்.

பேருந்து பிடித்து பின் இன்னொரு பேருந்தில் மாறி என்று கண்ணைக் கட்டி விடும். என்னோட பலமே தொழில் சிரத்தையும், நகைச்சுவையும் தான்.

வேலை செய்வதோடு ஏதாவது நகைச்சுவையாகப் பேசி நட்பாக்கி விடுவேன்.

இரண்டு முறை சென்ற உடனேயே முகைதீன் நட்பாகி விட்டார். என் ஊர், எங்கள் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்து மிக நெருங்கி விட்டார்.

இவருடைய அண்ணன் கொஞ்சம் சீரியஸ் ஆன நபர் ஆனால், அவரையும் கலாயித்து கிண்டல் செய்து பின் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டார்.

இப்ப நினைத்தால் கொஞ்சம் ஓவராகத் தான் போயிட்டோமோ! என தோன்றுகிறது 🙂 .

முகைதீன், “யோவ் கிரி! கோயமுத்தூர் குசும்புயா உனக்கு.. அண்ணன்கிட்டேயே வேலைய காட்டுறியா!” என்பார்.

சரவண பவன் ஸ்பெஷல் மீல்ஸ்

மதியம் சர்வீஸ் சென்றால், அங்கே வேலை செய்கிற பசங்க கிட்ட சொல்லி சரவண பவன் ஸ்பெஷல் மீல்ஸ் ஆர்டர் பண்ணி விடுவார்.

சார்! பிரச்சனையைப் பார்க்க வந்தா சாப்பிட கூப்பிட்டிட்டு இருக்கீங்க..” என்றால்.. “அதெல்லாம் பார்த்துக்கலாம் வாய்யா! வந்து சாப்பிடு” என்று விடவே மாட்டார்.

அவர் செம குண்டு அவருக்கு நான் அப்படியே நேர் எதிர்.

சார்! உங்களுக்கு இந்த மீல்ஸ், சாப்பிடுறதுக்கு முன்னாடியா அப்புறமா!‘ என்றால் “யோவ்! என்ன நக்கலா” என்று விட்டு, “உங்க பாஸ் கிட்ட சொன்னா தான் சரிப்பட்டு வருவே! போல” என்பார் 🙂 .

வருடாவருடம் பக்ரீத் ரம்ஜானுக்கு பிரியாணி சாப்பிட அழைத்து விடுவார், என்னை மட்டுமல்ல அலுவலகத்தில் உள்ள அனைவரையும்.

சார்! மறந்து என் மேல சாய்ந்துடாதீங்க.. அப்புறம் உங்க மீல்ஸ்க்கு சட்னி நான் தான்” என்று ஓட்டிட்டு இருப்பேன். கொஞ்சம் கூட கோபப்பட மாட்டார்.

ஈரோடில் ஒரு கிளை துவங்கிய போது எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறார். தற்போது ஊருக்குச் சென்றாலும் தொலைபேசியில் அழைப்பேன் அதே கிண்டல் கேலி தான்.

யோவ் கிரி! இன்னும் மாறாம அதே குசும்போடவே இருக்கியா!” என்பார்.

நான் அந்த வேலையில் இருந்து விலகி வருடங்கள் ஆனாலும், இன்னும் தொடர்பில் இருக்கிறார் என்பது இன்னும்வியப்பே! இவர் மட்டுமே தொடர்பில் உள்ளார்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ்

இன்னொருவர், இசையமைப்பாளர் சந்திரபோஸ். ரொம்ப நன்றாகப் பழகுவார்.

தலைவர் ரசிகன் என்பதால் அவரிடம் “சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா” பாடல் இசையமைத்தது பற்றியும் அவரிடம் ரஜினி எப்படி நடந்து கொண்டார் என்பதும் பற்றியும் ஆர்வமாகக் கேட்டேன்.

தான் ஒரு இசையமைப்பாளர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் மிக எளிமையாக இருப்பார் ஆனால், வெளியே கிளம்பும் போது டிபிகல் சினிமாக்காரர் போல கூலிங் கிளாஸ் மேக்கப் என்று பக்காவாக போவார் 🙂 .

அவர் மனைவியும் ரொம்ப நன்றாகப் பழகுவார். நான் இருந்தது மைலாப்பூர் ஏரியா என்பதால் அடிக்கடி செல்வேன், தற்போது காலமாகி விட்டார்.

ஏம்பா மெக்கானிக்!

ஒரு வீட்டிற்கு சர்வீஸ் சென்றேன். அங்கே ஒரு அம்மா தான் இருந்தார்கள் அவரோட மகன் அடுத்த அறையில் இருந்தார் போல.

இவர், அவரின் மகனின் பெயரைக் கூறி “ஏம்பா! உன்னோட கம்ப்யூட்டர் எதோ ரிப்பேர்னு சொல்லிட்டு இருந்தியே… அதை பார்க்க ஒரு மெக்கானிக் வந்து இருக்காரு!” என்றவுடன் குபீர் என்று ஆகி விட்டது.

என்னது மெக்கானிக்கா!! அவ்வ்வ்வ் “அம்மா! கம்ப்யூட்டர் எஞ்சினியர் ன்னு சொல்லுங்கம்மா மெக்கானிக் இல்லை” என்றவுடன்.. “ஆமா! அது என்ன எழவோ சரி போய் உள்ளார பாரு..” என்றார். சத்யசோதனை என்றபடியே உள்ளே சென்றேன்.

நம்பிக்கையில்லை

ஒரு சில வீட்டில் நம்பமாட்டார்கள். ஏதாவது எடுத்துட்டு [திருடிட்டு] போய்டுவேன் என்று எங்குமே செல்லாமல் அருகிலேயே உட்கார்ந்து இருப்பார்கள் 🙂 .

தண்ணீர் குடிக்கக் கேட்டால் வேகமாக கொண்டு வந்து அருகில் அமர்ந்து விடுவார்கள்.

ஒரு சில வீட்டில் தண்ணீர் கூட தர மாட்டார்கள். இந்த கம்ப்யூட்டர் Troubleshoot பண்ணுவதில் ஒரு பிரச்சனை இருக்கு.

நம்மை யாராவது பின்னாடி இருந்து கவனித்துக்கொண்டே இருந்தால், நம்மால் இயல்பாக வேலை செய்ய முடியாது.

சுதந்திரமாக இருக்காது, மூளையும் வேலை செய்யாது.

இதைச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அப்புறம் எப்படியோ முடித்து கிளம்பி விடுவேன். நன்றி கூட கூற மாட்டார்கள்.

இப்படி வருபவர்களை கவனிப்பது ஒருவகையில் நல்லது தான் இந்தக்காலத்தில்.

புறநகர் வாடிக்கையாளர்கள்

இவர்கள் இப்படி என்றால், சிட்டி லிமிட் தாண்டிச் சென்றால் நம்மை நன்றாக கவனிப்பார்கள். சென்றவுடன் குடிக்க ஜூஸ் கொடுத்து விடுவார்கள்.

சின்ன பிரச்சனையாகத்தான் இருக்கும்.. அதனால் விரைவில் முடித்து விடுவேன்.

அவர்களுக்கு அது பெரிய சாதனையாக இருக்கும். வெளியே செல்லும் வரை நன்றி கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இந்த மாதிரி நன்றாக பழகுபவர்களுக்கு / மரியாதையாக பேசுபவர்களுக்கு நிறைய தொழில்நுட்ப டிப்ஸ் கொடுப்பேன்.

சர்வீஸ்க்கு பணம் கட்டுகிறார்கள் அதனால், தைரியமாக அழைத்து சரி செய்யச் சொல்லலாம் ஆனால், “ஏங்க! வந்து சரி செய்து தாங்க” என்று பாவமாக கேட்பார்கள்.

அம்மா! ஒன்றும் கவலைப்படாதீங்க… உங்க சிஸ்டம் பக்காவா தயார் பண்ணிடுறேன்” என்றால்.. அவங்க மகிழ்ச்சியைப் பார்க்கணுமே!

இதற்கே வேலை செய்யலாம் 🙂 .

சாப்பாடு தயார்!

இது வட பழனியில் உள்ள மிகப்பெரிய *********. இங்கே சர்வீஸ் செல்வதென்றால் எங்களுக்குள் அடிதடியே நடக்கும் 🙂 .

காரணம் என்னவென்றால், மதியம் சாப்பாடு கொடுப்பார்கள். சூப்பராக இருக்கும்.

அதனால் காலையிலேயே சென்றாலும் வேலை முடித்து விட்டால், வேண்டுமே என்றே தாமதம் செய்து மதியம் ஆக்கி சாப்பாட்டிற்கு தயார் ஆகி விடுவோம் 🙂 .

அதிகாரி வந்து பார்த்துட்டு “ஏம்பா கிரி! சாப்பிட்டு வந்து வேலை செய்ய வேண்டியது தானே!” என்றவுடன்.. “இல்ல சார்.. இதை முடிச்சுட்டு!! போய்டுறேன்” என்று பிட்டை போட்டுடுவோம்.

வேலை முடிந்து அரை மணி நேரம் ஆகி இருக்கும் 🙂 .

Link File

ஒருமுறை எதோ பிரச்சனை என்று அழைத்தார்கள் என்று ஆஹா! சாப்பிட்டு வரலாம் என்று ஜாலியாக சென்று, பார்த்துட்டு இருக்கும் போது Exe ஃபைல் எல்லாம் Lnk (LINK) ஃபைல் ஆகி விட்டது, தூக்கி வாரிப்போட்டு விட்டது.

லாட்டரி சீட்டை எங்கே வைத்தேன்னு தெரியல என்று கவுண்டரிடம் ஷர்மிலி கூறியதும் குபீர்னு  ஒரு எஃபக்டை கவுண்டர் கொடுப்பாரே! அது மாதிரி ஆகி விட்டது.

பழைய நிலைக்கே கம்ப்யூட்டர் வந்தா போதும் என்கிற நிலைக்கு ஆளாகிட்டேன்.

அந்த அதிகாரி வேற வந்து “என்னப்பா கிரி! சரி ஆகிடுச்சா” என்று கேட்டுட்டு போயிட்டு இருக்காரு.

சார்! ஓகே ஆகிடும்” என்று சொல்லிட்டு பேதி ஆகிட்டு இருக்கேன். அப்புறம் திடீர்னு அதே சரி ஆனது.

யப்பா! போதுண்டா சாமி என்று அவரிடம் “சார்! சிஸ்டம் ல மேஜர் பிரச்சனை இருக்கு, நீங்க சிஸ்டம் கொடுத்தால் அலுவலகம் சென்று பார்த்து விடுகிறோம்” என்று எஸ்கேப் ஆகிட்டேன்.

இப்ப நினைத்தாலும் அடி வயிறு எல்லாம் கலங்குது.

Preventive Maintenance

PM என்று கூறப்படும் Preventive Maintenance அனைத்து என்ஜினியருக்கும் கொடுக்கப்படும். சீனியர் ஆனால் இது குறைந்து விடும்.

இது என்னவென்றால் மாதா மாதம் இவ்வளவு கஸ்டமர் என்று பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.

நாம் அவர்கள் இடத்திற்கு சென்று அவர்கள் கம்ப்யூட்டரை கழட்டி துடைத்து குப்பை எல்லாம் சுத்தம் செய்து வைத்து வர வேண்டும்.

PM என்றாலே பல கஸ்டமர்களுக்கு கிலி தான் 🙂 காரணம், அதுவரை நன்றாக இருந்த கம்ப்யூட்டர் சுத்தம் செய்த பிறகு பூட் ஆகாது.

நமக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.

என்னடாது சின்ன வேலைன்னு வந்தா இப்படி படுத்துதேன்னு கடுப்பாகிடும். அப்புறம் எப்படியோ தட்டி கிட்டி போட்டு சரி ஆகிடும்.

விட்டா போதுண்டா சாமி என்று எஸ்கேப் ஆகிடுவோம். இல்லைனா அலுவலகம் எடுத்துப் போய் தான் பார்க்கணும் என்று CPU வோட எஸ்கேப் ஆகிடுவோம் 🙂 .

சென்னை முக்கியஸ்தர் வீடு

இது ஒரு மிகப்பிரலமான ****** நிறுவன அதிகாரியின் வீடு. இவர்கள் வீடு இருக்கும் இடமும் சென்னையில் மிக மிக முக்கியமான இடம்.

வீட்டைப் பார்த்தால் கப்பல் போல உள்ளது.

என்ன பிரச்சனை சொல்லவில்லையே! யாரிடம் கேட்பது?! என்று உள்ளே சென்றால், பணிப்பெண் வந்து “இங்கே காத்திருங்க அம்மாவை கூப்பிடுறேன்” என்றார்.

அம்மாவா..! சரி யாரோ வயசான அம்மா வந்து நம்மை மெக்கானிக் என்று கூப்பிடப்போகுது என்று கடுப்பில் இருந்தால்… ஒரு செம்ம ஃபிகர்!!

செம குஷியானாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் “சிஸ்டம் பிரச்சனை என்று சொன்னார்கள்!…” என்றவுடன், “வாங்க” என்று அழைத்துச் சென்றார்.

நான் மும்தாஜை பார்த்த குஷி பட விவேக் மாதிரி ஆகிட்டேன் 🙂 . சிஸ்டம் எர்ரர் பார்த்தவுடனே என்ன பிரச்சனை என்று புரிந்து விட்டது.

தெரியும்னா உடனே அந்த ஃபிகர் போய்டுமே.. சும்மா! அது இதுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு அப்புறம் தான் விட்டேன்.

அப்பொண்ணும் கொஞ்ச நேரம் அருகில் அமர்ந்து இருந்தார், பின் கிளம்பி விட்டார்.

அதற்கு அப்புறம் நமக்கு என்ன வேலை.. பிரச்னையை ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு நானும் கிளம்பிட்டேன் :-).

இந்தப் பெண்ணைப் பற்றி ஒன்று கூற வேண்டும். மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பெண் ஆனால், அந்த பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் மிக எளிமையாகப் பழகுவார்.

இது போல நபர்கள் வெகு குறைவு. இவருடைய தம்பி ஒருவன் இருக்கிறான், இவன் பண்ணுற அலப்பறை தாங்காது.

மதிய சாப்பாடு

ஃபீல்டு வேலையில் ஒரு பிரச்சனை சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. என்கிட்டே ஒரு பிரச்சனை.. சென்ற வேலை முடியும் வரை சாப்பிட போக மாட்டேன்.

இதனால் நிறைய நாள் மதியம் சாப்பிடவே மாட்டேன்.

வேலையை முடித்த பிறகு சாப்பிட்டால் தான் சாப்பாடே இறங்கும். இதை மாற்றிக்கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

தினமும் வீட்டிற்கு வர 10 அல்லது 11 மணி ஆகி விடும். சில நாள் வீட்டில் இருந்து நேராகவே கஸ்டமர் இடத்திற்கு போக வேண்டி இருக்கும்.

இதுவரை கூறியது என் அனுபவங்களில் 10 % இருக்கும், இன்னும் ஏகப்பட்டது இருக்கு. இந்தப் பணியில் இருந்தால் அனுபவங்களுக்கு குறைவே இல்லை.

டாக்டர், வக்கீல் எப்படி அனைவருக்கும் தேவையோ அதே போலத்தான் இந்த கம்ப்யூட்டர் என்ஜினியர்களும்.

தெரிந்தவர்கள் யார் வீட்டுல கம்ப்யூட்டர் பிரச்சனை என்றாலும் ‘கிரி! இதைக் கொஞ்சம் பார்த்துத் தர முடியுமா!‘ என்று கேட்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நமக்கு தெரிந்தவர் மருத்துவர் என்றால் (ஓசி ல) அவரை அழைத்துக் கேட்போமே அது போல.

தவிர்க்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலை.

இதில் என்ன கொடுமை என்றால் அதுவரை நம் நினைவே அவர்களுக்கு இருக்காது ஆனால், இதில் நெருங்கிய நண்பர்கள் அடங்கமாட்டார்கள்.

கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள் சில நேரங்களில் சுவாரசியமானது, பல நேரங்களில் கொடுமையானது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

20 COMMENTS

  1. வணக்கம் கிரி சார் …

    சுவாரஸ்யமான அனுபவங்கள் 🙂 என் நண்பன் ஒருவனும் இந்த மாதிரி தான் கம்ப்யுட்டர் மெக்கானிக் … தப்பு தப்பு … எஞ்சினியரா 🙂 இருக்கான். அடிக்கடி நம்ம கிட்ட ஃபோன் பண்ணி அது எப்படி, இது எப்படின்னு கேட்டு உசிர வாங்குவான்.

    இங்கிலீஷ் விங்க்ளிஷ் பற்றி நான் போட்ட மரண மொக்கையவே கொஞ்ச பேரு படிச்சிருக்காங்க. நீங்களும் எழுதுங்க. பார்த்த படம் என்பதால் உங்க பார்வையும் எப்படியிருக்கிறதுன்னு பார்ப்போம். 🙂

    இந்த சின்மயி மேட்டர் பற்றி ஆளாளுக்கு எழுதுறாங்க. இன்னும் ஒரு பதிவையும் படிக்கும் ஆர்வம் வரவில்லை… ஊர் பிரச்சினை நமக்கெதுக்கு??

  2. அருமையான அனுபவங்களை மிக சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    வினய் பக்கம் ச்சோ ஸ்வீட் 🙂

    உங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பற்றித் தெரிந்திருக்கும். எங்கேயோ கேட்ட குரல், ஜக்குபாய் உட்பட பல படங்களில் நடித்துள்ள எங்கள் ஊர் பிரபலம் இவர்.

    சின்மயி என் மீது கொடுத்த புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்: எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

    பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் இன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்,

    பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.

    கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன்.

    கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே. தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டெலிவிஷனின் ‘நீயா நானா’ ஷோக்களிலும் நான் அவ்வப்போது தலை காட்டுபவன். லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிபவன். இவற்றையெல்லாம்விட, பல வருடங்களாக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் ஐடி கம்பெனிகள், ரியல் எஸ்டேட் தொழில், இந்திய சினிமாக்காரர்களுக்கு ஹாலிவுட்டில் பல விதங்களிலும் உதவி என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்..

    நகைச்சுவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு என் புத்தகங்கள், கதைகள், அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. விகடன், குமுதம், கல்கண்டு, கலைமகள், கல்கி, அமுதசுரபி போன்ற பல பத்திரிகைகளில் நான் தொடர்து எழுதி வருகிறேன். கலைமகளின் கி.வா.ஜகந்நாதன் நினைவு பரிசுப் போட்டியில் முதல் பரிசு வென்றவன்.

    ட்விட்டருக்கு நான் வருவது ஒருவித ரிலாக்சேஷனுக்காக மட்டுமே. வர்ச்சுவல் உலகத்தில் பெண்களுக்கும் பல சிறுபான்மையினருக்கும் எதிராக அவ்வப்போது நடக்கும் நிழல் யுத்தங்களைக் கண்டு நான் வெறுப்பவன். பல நேரங்களில் சண்டை போடுபவர்களை நானே கிண்டல் செய்து விலக்கிவிடுவதும் உண்டு. என் ஆயுதம் எப்போதுமே நகைச்சுவைதான்.

    என்னுடைய தளங்களுக்கு (http://losangelesram.blogspot.com http://writerlaram.com) ஒருமுறை வந்து பார்த்தாலே நான் காலை, நடுப்பகல், மாலை, இரவு என்று எந்நேரமும் நகைச்சுவையை மட்டுமே பிரதானப்படுத்தும் சாகபட்சிணி என்பதை அறிவீர்கள்!

    ட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். ’என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்?’ என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை ‘அன்ஃபாலோ’ அல்லது ‘ப்ளாக்’ செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன. நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை ‘சின்னாத்தா’ என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் ஒருவரை ‘ஜின்னாத்தா’ என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் ‘கலக்கல் கபாலி’ படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(!), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.

    “நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த ’கலக்கல் கபாலி’ கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.

    நானும் ஒரு நல்ல பெண்ணைப் பெற்று வளர்ப்பவனே. சின்மயி மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுமே எங்கேயுமே அசிங்கப்படக்கூடாது என்பதில் நான் தீவிரமாகவே இருக்கிறேன். பல நேரங்களில் மன இறுக்கத்தைக் குறைக்க நகைச்சுவையை பயன்படுத்த வேண்டி இருக்கிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். என்னால் முடிந்த அளவுக்கு நான் அதை நன்றாகவே செய்து வருகிறேன். என் மீதே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மனவேதனை அளிக்கிறது.

    சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    – இவ்வாறு எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  3. பழைய நினைவுகளை அசை போடுவது என்றுமே ஒரு தனி சுகம் தான்… “English Vinglish படம் பார்க்க வில்லை கிரி.. இருப்பினும் நீங்கள் விமர்சனம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்… பகிர்வுக்கு நன்றி..

  4. சார்! மறந்து எங்காவது என் மேல சாய்ந்துடாதீங்க.. அப்புறம் உங்க மீல்ஸ்க்கு சட்னி நான் தான்” என்று சகட்டு மேனிக்கு ஓட்டிட்டு இருப்பேன்

    ஹா ஹா

    கிரி நீங்க எப்பவுமே இப்படி தானா இல்லே இப்படி தான் எப்பவுமே வா

    பல நேரங்களில் மன இறுக்கத்தைக் குறைக்க நகைச்சுவையை பயன்படுத்த வேண்டி இருக்கிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    சரி தான்

  5. இங்க்லீஷ் விங்க்ளிஷ் விமர்சனம் எழுதுங்கள் கிரி
    உங்க பார்வையில் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாமே

    இங்க்லீஷ் விங்க்ளிஷ் பார்த்த பின் எனக்கும் எழுத வேண்டும் என்று தோன்ற நானும் எழுதியிருக்கிறேன்

  6. பார்த்து எழுதுங்கள் சார். ஃபிகர் கேஸ் போட்டு விடப் போகிறது!

  7. நல்ல பகிர்வு கிரி.
    கொசுறு 2 : Same Blood , நம்ம வீட்டிலும் அதே பொக்லைன், tractor , truck , concrete mix பொம்மைகள் தான் 🙂 அதிகம்.

  8. நல்ல சுவையான பதிவு.நானும் கோவை நண்பிதான்.இப்போது சென்னை என்றாலும் படித்தது கோவை.நல்ல மக்கள்.
    ஆனாலும் இப்போது அவாள் என்பது அதிகமாக ஆவது போல்தான் தோன்றுகிறது
    கலாகர்த்திக்

  9. கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவம்… எனக்கும் பழக்கமான விஷயம் என்பதால் பிடித்திருந்தது. நான் எஞ்சினியர் அல்ல, அனுபவத்தால் கற்றுக்கொண்டவன். நீங்கள் சொன்னது போல 4 எம்பி ராம் கொண்ட விண்டோஸ்-3.0 கம்ப்யூட்டரில் வாழ்க்கையைத் தொடங்கியவன். இப்போது லேப்டாப்கள்தான் அதிகம் பயன்படுகின்றன. நேற்று என்னுடைய பழைய பி-4 கழற்றி புளோயர் அடித்து சுத்தம்செய்து விட்டு ஓடுகிறதா என்று சரிபார்த்து உரிய இடத்தில் பொருத்தி இயக்கியதும்… வழக்கம்போல அதிர்ச்சி – பூட் ஆகவே இல்லை. மறுபடி கழற்றி, மாட்டி, கழற்றி மாட்டி… இரண்டு மணிநேரம் போராடி… அப்பப்பா… ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பூட் ஆகி ஓடத்துவங்கியதும் ஏற்படுகிறதே ஒரு திருப்தி – அது கம்ப்யூட்டர் கண்டுபிடித்தவனுக்குக்கூட வந்திருக்காது.

  10. சார் நானும் உங்களை மாதிரித்தான் ..என்ன நீங்க சென்னை .நா திருச்சி .
    மேட்டர் எல்லாம் ஒன்றே ……இப்போ துபாய் இல் குப்ப கொட்ட்ருறேன் .
    நல்ல பதிவு .

  11. இங்க்லீஷ் விங்க்ளிஷ் விமர்சனம் எழுதுங்கள் கிரி சார்!!!

    உங்கள் விமர்சனத்தை எதர்பார்த்து காத்திருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்!!!

  12. பழைய நினைவுகளை ஞாபகபடுத்தி விட்டீர்கள். 90 களின் ஆரம்பத்தில் டூல்கிட் எனபடும் மினி சூட்கேசை தூக்கி கொண்டு (அப்போதெல்லாம் பேக்பேக் இல்லை) சர்வீஸுக்கு தமிழகம் பூராவும் அலைந்து திரிந்தது நினைவு வந்தது. இப்போது போல்
    பவர் சப்லைகளையும் , மானிடர்களையும் ஆபீசுக்கு தூக்கி வந்து சரி செய்து தருவது போல் இல்லாமல் கஸ்டமர் இடத்திலேயே சரிசெய்து கொடுக்க வேண்டும். பல சமயங்களில் சரி செய்ய முடியாமல் திணறியது நினைவுக்கு வருகிறது.

    ஒருமுறை பாடகர் ஜேசுதாஸ் வீட்டிற்கு சென்றபோது நான் கையில் வைத்திருந்த துருபிடித்து பழையதாய் இருந்த standby smps சை பார்த்து அவர் ஏந்தான் எங்கள் கம்பெனியில் வாங்கினோம் என்று வருத்தபட்டது நினைவுக்க்கு வருகிறது. நான் என்ன செய்வது, என் சர்வீஸ் மேனேசராக இருந்தவரிடம் நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல் என்னிடம் “எல்லாம் இது போதும்பா போப்பா” என்று கூறிவிட்டார். அதற்கு மேல் அவரிடம் வாதாடினால் எனக்கு கன்வேயன்ஸ் கட் ஆகிவிடும்.

    இன்னும் பல முறைகள் கஸ்டமர்கள் சிரமத்திற்கு ஆளாகிவிடகூடாது என்பதற்காக இரவு இரண்டு மூன்று மணி வரைக்கும் கூட அமர்ந்து சர்வர்களை சரி செய்து கொடுத்தது ஞாபகம் வருகிறது. அதற்காக என் கம்பெனியில் எனக்கு ஒன்றும் அப்பிரிசியேசன் கிடைக்க வில்லை என்று நான் அப்போது வருத்தபட்டது உண்டு. ஆனால் அதனால் நான் வளர்த்து கொண்ட தொழில் நுட்ப திறனை இப்போது பயன்படுத்தி கொண்டு இருப்பதை மறக்க முடியாது. இப்போது என்னிடம் பணிபுரியும் பெரும்பாலான சர்வீஸ் எஞ்ஜினியர்களிடம் இந்த ஆர்வம் இருப்பதில்லை. எவ்வளவோ முயன்றும் வெகு சிலரிடமே மாற்றங்களை ஏற்படுத்த முடிக்கிறது.

    கஸ்டமர்களுக்கு செல்லும் பொருட்களின் நிலை, பேக்கிங், கஸ்டமரிடம் பழகும் முறை உட்பட கண்காணித்து செய்ய முடிகிறது. இவை அனைத்தும் அன்று எனக்கு கிடைத்த அனுபவங்களின் பிரதிபலிப்பே.

  13. யோவ் கிரி அப்படியே நான் சர்வீஸ்ல வேலை செய்த ஞாபகம் வருது சான்ஸே இல்லை பீல்டு என்ஜினியர் வேலை சரியா செய்திருக்க ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம். நான் ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு போயிருக்கேன் அப்ப எல்லம் அவரு பெரிய ஆளு இல்ல ஆனா இப்ப அவருக்கு என்னைய தெரியுமனு தெரியல எப்படி இருப்போம் தெரியுமா தண்ணி அடிச்சிட்டு ஜாலி மனுசன் ம்ம்

  14. kosuru 3 yeluthunga thala please
    kosuru 3 yeluthunga thala please
    kosuru 3 yeluthunga thala please
    kosuru 3 yeluthunga thala please
    kosuru 3 yeluthunga thala please

    naane 5 count potten:)

    – arun

  15. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஹாலிவுட் ரசிகன் 🙂

    @ஸ்ரீநிவாசன் இதுல இவர் இந்தப் பிரச்னையை விட தன்னை மார்க்கெட்டிங் செய்துகிட்டது தான் அதிகம் போல தெரியுது இந்தப் புகார்ல 🙂

    @பிரபு 🙂

    @சரவணன் நன்றி எழுதுகிறேன்

    @ராமலிங்கம் 🙂 நான் தான் பெயரை சொல்லவில்லையே 😉

    @லோகன் same same 🙂

    @கலாகார்த்திக் அப்படி ஆக வாய்ப்பில்லை

    @ஷா நீங்க கடைசியா கூறியதை ரொம்ப ரசிச்சேன் 🙂

    @கணபதி 🙂

    @சுரேஷ் எழுதுகிறேன் நன்றி

    @ராமமூர்த்தி நீங்கள் கூறுவது சரி தான்.

    @வடிவேலன் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் அனைவரும்

    @அருண் உங்க பக்கம் சாண்டி பிரச்சனை இல்லையா? கண்டிப்பாக எழுதுகிறேன்.

  16. //இவர் ஆதரித்தால் என்ன ஆதரிக்காவிட்டால் என்ன? இது ரொம்ப முக்கியமா! //

    இதுதான் எனக்கும் ஆச்சரியம். ஒருவர் கருத்தை ஏன் அடுத்தவர் மீது திணிக்க முயல வேண்டும்? இது மட்டும் கருத்துரிமையைப் பாதிப்பதாக ஆகாதா?

    எப்படியோ இனியாவது கருத்துப் பரிமாறல்களில் அனைவரும், பொறுப்போடு நடந்துகொண்டால் சரி.

    //JCB collection //
    என் மகன்களுக்கும் இதில் ஆர்வம் உண்டு. பெரியவனுக்கு மூன்று-நான்கு வயதிருக்கும்போது, வீட்டுக்கு வந்த உறவினரிடம், தன் சமவயது கஸின் டாக்டர் ஆகப்போவதாகச் சொன்னதைக் கேட்டதும், இவன், ”நீ டாக்டர்தான் ஆகப்போறியா, நான்லாம் என்னவாகப் போறேன் தெரியுமா?” என்று இழுத்துச் சொல்லி… பின் சொன்னான் “Giant -ட்ரக் டிரைவர்”!!!

    இரண்டாவது மகன் பிறந்து 5 மாதத்தில் முதல் முறை தவழ ஆரம்பித்ததும், அண்ணன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ட்ரக்கைப் போய் இழுக்க, அன்று ஆரம்பித்தது போர்…. :-))

  17. ஊரில் வீடு கட்டுகிறார்கள், அங்கே சுத்தம் செய்ய பொக்லைன் மற்றும் புல்டோசர் வந்தது. என் அப்பாவிடம் கூறி அவனை இதில் அமர வைத்து ஓட்டக் கூறி இருக்கிறேன். ரொம்ப சந்தோசப்படுவான். “வினய்! பெரிய பையன் ஆகி என்ன வாங்குவே” என்றால்.. “நான் பொக்லைன் தான் வாங்குவேன்” என்பான் icon smile ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியரின் அனுபவங்கள் . “டேய்! அதை வாங்கி எப்படிடா அதுல போவது” என்றால்… “நான் ஓட்டுறேன் நீங்க சைடுல உட்கார்ந்துக்கோங்க! அம்மா பின்னாடி!! உட்கார்ந்துப்பாங்க” ம்பான் icon smile ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியரின் அனுபவங்கள் . குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச் சொல் கேளாதோர்.

    ———————————————-

    😀 😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here