ரஜினிக்கு விருது கொடுத்தது பலரின் மனதில் இருந்த வன்மத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது. இதில் சில எதிர்பார்த்தவர்களும் எதிர்பார்க்காதவர்களும் அடங்குவர்.
பெரும்பாலானவர்கள் விமர்சித்து இருப்பது ‘கமலுக்கு விருது கொடுக்காமல் ரஜினிக்குக் கொடுப்பது ஏன்?‘ என்று.
கமலுக்கும் விருது கொடுங்கள் என்று கூறலாம் ஆனால், ரஜினிக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்பது நியாயமற்ற வாதம்.
ரஜினிக்கு என்ன தகுதி உள்ளது?
முதலில் நடிப்பு என்பதை என்ன வரையறைக்குள் அனைவரும் கொண்டு வருகிறீர்கள்? எதனுடன் ஒப்பிட்டு முடிவு எடுக்கிறீர்கள்?
முந்தைய காலத்தில் நடிகர் திலகத்தின் நடிப்போடு ஒப்பீடு செய்யப்பட்டது, பின் கமலோடு ஒப்பீடு செய்யப்பட்டது, தற்போது தனுஷ் நடிப்புச் சிலாகிக்கப்படுகிறது.
நடிப்பின் இலக்கணம் அந்தந்த காலகட்ட மக்களின் ரசனைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
எனக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களை இக்காலத் தலைமுறைக்குப் பிடிப்பதில்லை.
அவர்களின் ரசனை மாறி விட்டது அதனால், ‘சிவாஜி நடிப்பெல்லாம் ஒரு நடிப்பா?!‘ என்று இக்காலத்துத் தலைமுறை பேசினால் சரியா?
விமர்சிப்பவர்கள் வாதத்துக்கே வந்து முதலில் கமலுக்குக் கொடுத்தாலும், அமிதாப்புக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பவர்கள் இருக்கலாம்.
எனவே, இந்தியாவில் கமல் மட்டுமே சிறந்த நடிகர் என்று அர்த்தமல்ல, கமலும் சிறந்த நடிகர், அனுபவத்தில் மூத்தவர் அவ்வளவே! நடிப்புக்கு கமல் அளவுகோல் கிடையாது.
கமலும் தகுதியானவரே!
கமல் மிகச்சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
‘ICON of Golden Jubilee‘ விருதுக்குக் கமலும் தகுதியானவரே! ஆனால், அவருக்குத் தான் முதலில் கொடுக்க வேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை.
என்ன சொல்ல வருகிறீர்கள்? எந்த விருதாக இருந்தாலும் முதலில் கமலுக்குக் கொடுத்த பிறகு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களா?!
ரஜினிக்கு பாஜக பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவே விருது கொடுத்து இருக்கலாம் ஆனால், அதற்காக அந்த விருதுக்குத் தகுதியானவர் ரஜினி அல்ல என்றாகி விடாது.
உலகில் கருப்பு வெள்ளை, ஈஸ்ட் மென் வண்ணம், முழுமையான வண்ணம், 70 MM, Motion Picture, 3D என்று அனைத்து வகை தொழில்நுட்பங்களிலும் உச்சத்தில் இருந்து நடித்த ஒரு நடிகரைக் கூறுங்கள்!
இதைச் சவாலாகவே கூறுகிறேன்.
கடந்த 40+ வருடங்களில் ரஜினியுடன் சமகாலத்தில் போட்டியிட்ட, போட்டியாகக் கூறப்பட்ட நடிகர்களின் தற்போதைய நிலை என்ன? கமலையும் சேர்த்து.
ஒரு நடிகர் மூன்று தலைமுறைகளைத் தாண்டித் தற்கால இளைய தலைமுறையின் கடுமையான போட்டிகளையும், ஊடக ஆதரவின்மையையும் மீறி முதல் இடத்தில் தொடர்வது எளிதா?
70 வயதிலும் தனது சந்தையை இழக்காமல் வெற்றிகரமாகத் தொடர்கிறார். உலகில் ரஜினி போல 40+ வருடங்களாக உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரைக் காட்ட முடியுமா உங்களால்?!
ஒருவரின் நடிப்பு சரியில்லை என்றால், மக்களின் ஆதரவைப் பெற முடியுமா?
தமிழே அறிமுகம் இல்லாத நாடுகளுக்குத் தமிழ் திரைப்படங்களின் வியாபாரத்தைக் கொண்டு சென்றுள்ளார். ஜப்பான் மக்கள் ரசித்தது ரஜினியின் நடிப்பைத்தான்.
இந்தியா என்றாலே ‘பாலிவுட்’ என்று நினைத்து இருந்த வெளியுலகினருக்கு தனது ‘எந்திரன்’ படத்தின் மூலம் ‘தமிழ்’ என்ற பிராந்திய மொழியும் உள்ளது என்று அறிமுகப்படுத்தியவர்.
ரஜினி படங்களால் தமிழ் பேசிக் கற்றுக்கொண்ட வெளிநாட்டவர்களும் உண்டு.
மக்களுக்குப் பிடிக்காத நடிப்புடன் ஒருவர் இவ்வளவு காலம் நடிப்பைத் தொடர முடியுமா அதுவும் முதல் இடத்தில்! இதற்கு மேல் ஒரு நடிகரிடம் என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்?
இங்கே மக்கள் தான் நீதிபதி.
நடிப்பின் இலக்கணம் என்ன?
அழுவதா? உடலை வருத்துவதா? விதவிதமாக ஒப்பனை செய்வதா? எதைக் கூறுகிறீர்கள்?!
நடிப்பின் அளவுகோலை தீர்மானிப்பது யார்? நீங்களா? நானா? முடிவு செய்வது மக்கள். குறிப்பிட்ட நபர்கள் தீர்மானிப்பது தான் நடிப்பின் இலக்கணம் என்றாகி விடாது.
ஆம்! ரஜினி மசாலாப்படங்களில் தான் அதிகம் நடிக்கிறார் அதனால் அவர் நடிப்புக்கு தகுதியானவர் இல்லையென்றாகி விடுமா?
மசாலாப்படங்களில் நடிப்பது அவ்வளவு எளிதா? அவ்வளவு குறைத்து எடைப்போடுகிறீர்களா?
உலகின் எத்தனையோ சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களால் ‘பாட்ஷா, படையப்பா’வில் ரஜினி நடித்தது போல நடித்துக் கவர்ந்து விட முடியுமா?
நடிக்க முடியவில்லை என்றால், அவர்கள் திறமையற்றவர்களாகி விடுவார்களா? ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவம் இருக்கிறது. எனவே, சக நடிகரோடு ஒப்பீடு செய்வது முட்டாள்தனம்.
மசாலாப்படங்களில் நடிக்கும் ரஜினி தான், ‘கபாலி’ என்ற திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வழங்கினார். மிகை நடிப்பு இல்லா அற்புதக் கலைஞன்.
தனது மனைவியைப் பல வருடங்களுக்குப் பிறகு காணும் சூழ்நிலையிலும், தன்னுடைய மகள் தன்னை முதல் முறையாக ‘அப்பா’ என்று கூறும் போதும் தன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இதன் பெயர் நடிப்பில்லையா? இங்கே உட்கார்ந்து கதறிக் கதறி அழ வேண்டும் அப்போது தான் சிறந்த நடிப்பு என்று கூறுவீர்களா? அல்லது சுவற்றில் முட்டி மண்டையை உடைத்து ஆவேசமாக உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்கிறீர்களா?
ஒரு காலத்தில் பன்ச் வசனங்கள் பிரபலமாக இருந்தது மக்களும் அதை ரசித்தார்கள் ஆனால், தற்போது இல்லை, மக்கள் விரும்புவதில்லை, அனைத்து நடிகர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இதை உணர்ந்து ரஜினி குறைத்து விட்டார்.
முன்பு நம்ப முடியாத சண்டைக்காட்சிகள், 50 பேரை அடிக்கும் காட்சிகள் என்று இருந்தது.
தற்போது அவை சிரிக்கும்படியுள்ளது எனவே, காலத்துக்கு ஏற்பத் தன் நடிப்பை மாற்றித் தற்போதும் வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
உணராதவர்கள், தோல்வியடைகிறார்கள்.
Smart Worker
இன்றும் தர்பாரில் கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார். ரஜினியின் வெற்றிக்கு அவர் தன் நடிப்பை காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது தான் காரணம்.
உலகில் Hard Work செய்பவரைவிட Smart Work செய்பவரே வெற்றிபெறுகிறார்.
ரஜினி Smart Worker.
முடிவாக, ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு இதுவரை ரஜினிக்கு ‘தேசிய விருது’ கிடைக்கவில்லை என்ற வருத்தத்தைத் தவிர எந்த விருதின் மீதும் எனக்கு ஆர்வமில்லை, ரஜினிக்கு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்பியதுமில்லை, அது அவசியமுமில்லை இந்த ICON விருது உட்பட.
ஒவ்வொரு ரஜினி ரசிகனும் இதைத்தான் நினைக்கிறான்.
மக்கள் கொடுக்கும் வெற்றியே மகத்தான விருது. யார் கொடுத்ததே என்றே தெரியாமல் இருக்கும் ‘தலைவர்’ என்பதே என் விருப்பமான விருது.
ICON விருதால் ரஜினிக்கு எந்தப் பெருமையுமில்லை, அந்த விருதுக்குத் தான் பெருமை.
காரணம், வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தால், இப்படியொரு விருது கொடுக்கப்படுகிறது என்பதே பலருக்குத் தெரிய வராது, விவாதிக்கப்பட்டும் இருக்காது.
கமலுக்கு ஏன் கொடுக்கவில்லை? ரஜினிக்கு என்ன தகுதி உள்ளது? என்று கேட்பவர்களுக்குக் கமல் மீது அக்கறை என்று அர்த்தமில்லை, ரஜினி மீது பொறாமை, காண்டு, வன்மம்.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது.
தொடர்புடைய கட்டுரைகள்
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,
ஒரே வானம்,
ஒரே சூரியன்,
ஒரே “சூப்பர் ஸ்டார்”
கவிஞர் வாலி ஒருமுறை இளையராஜாவை பற்றி சொன்னது!!! இளையராஜாவின் பிறப்பு என்பது, சாதாரண மானிட பிறப்பு அல்ல!!! பல யுகங்களில், ஒரே ஒரு முறை மட்டும் நடக்க கூடிய அதிசயம்.. நான் சூப்பர் ஸ்டாரையும் அது போல தான் பார்க்கிறேன்..
“நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். பொறாமை, வயித்தெரிச்சல் முன்னேற்றம் தராது! கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது”
—- இதுவும் சூப்பர் ஸ்டார் சொன்னதுதான் 🙂 நன்றி கில்லாடி.
இந்த பதிவு ரசிகரின் மனநிலையில் எழுதி இருந்தாலும், புலம்பல் போல இருக்கிறது