சஷ்டி விரத அனுபவங்கள்

7
Murugan சஷ்டி விரத அனுபவங்கள்

ல வருடங்களாகச் சஷ்டி விரதம் இருக்க நினைத்தும் ஏனோ பல்வேறு காரணங்களால் முடியவில்லை. இந்த வருடமும் எந்தத் திட்டமும் இல்லை.

சஷ்டி விரதத்துக்கு முதல் நாள் இரவு, மனைவி தான் இருக்கப்போவதாகக் கூறினார். உடனே எந்த யோசனையும் இல்லாமல் நானும் இருக்கிறேன் என்று கூறி விட்டேன்.

முடிவானதும் பழங்கள் மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு செய்தேன். Image Credit

சஷ்டி விரத அனுபவங்கள்

சஷ்டி விரதத்துக்கு முதல் நாள் இரவு சரியாகச் சாப்பிடவில்லை, காலையிலும் எதுவும் சாப்பிடவில்லை. மதியம் மட்டும் பழச்சாறு மற்றும் பழங்கள் சாப்பிட்டேன்.

ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால், பசி பிரச்சனையில்லை ஆனால், தலை வலிக்கும். முதல் நாள் முழுக்கத் தலைவலியாக இருந்தது.

இரண்டாவது நாளில் இருந்து பழகி விட்டது. தினமும் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, கொய்யா மட்டுமே சாப்பிட்டேன். பால், காஃபி எதுவும் கிடையாது.

நம்ம விரதம் இருக்கும் சமயத்தில் தான் எல்லாமே நடக்கும்.

நண்பர்களின் சந்திப்புக்காக ஒரு இடத்துக்குச் செல்ல, இரவு உணவாகச் சிக்கன், மட்டன் என்று வைத்து இருக்கிறார்கள். இதைப் பார்க்காதவரை பிரச்சனையில்லை, பார்த்த பிறகு பசியில் கடுப்பாகி விட்டது.

இதன் பிறகும் பல இடங்களில் ‘சத்திய சோதனை’ 🙂 .

வடிவேல் ஒரு படத்தில் குடிப்பதில்லை என்று முடிவு செய்த பின், பொன்னா’ரம்’ பாடலுடன் பல சரக்கு பெயர்களாக அவருக்கு முன் வந்து கடுப்பேற்றும் அது மாதிரி தான் விரத நாட்களில் ஆகிறது 🙂 .

தொடர்ச்சியாக ஆப்பிள் சாப்பிட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு ஆப்பிளே வெறுத்து, ஆப்பிள் சாப்பிடவே பிடிக்கலை. வாழைப்பழம் சாப்பிட்டுச் சமாளித்துக்கொண்டேன்.

சூரசம்ஹாரம்

ஆறாவதுநாளான சனி இரவு எங்கள் பகுதி சூரசம்ஹாரம் பார்த்து வந்தேன். கிட்டத்தட்ட 20+ வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்.

எங்க ஊரில் சின்ன வயதில் பார்த்தது, தற்போது தான் பார்க்கிறேன்.

எங்க ஊர் அளவுக்குப் பிரம்மாண்டமாக இல்லையென்றாலும், சிறப்பாகச் செய்து இருந்தார்கள். அங்கே இருந்த பசங்க அவங்களால முடிந்த அளவுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

இது போன்ற விஷயங்களில் தற்கால இளைஞர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், இவர்கள் களத்தில் இறங்கி இவற்றைச் செய்வது, பாராட்டுக்குரிய செயல்.

சஷ்டி விரதம்

எப்பவுமே வேண்டுதல் வைத்துத் தான் ‘சஷ்டி விரதம்’ இருப்பார்கள். நான் வேண்டுதல் இல்லாமல் சஷ்டி விரதம் துவங்கினேன்.

ஏனென்றால், திடீரென்று முடிவு செய்ததாலும் வேண்டுதல் வைக்கும் அளவுக்கு எனக்குப் பிரச்னை இருப்பதாக நான் கருதவில்லை என்பதாலும்.

மூன்று நாள் கழித்து எங்கள் நில நீதிமன்ற வழக்குகுறித்த ஒரு செய்தி வந்ததும் தான் நினைவு வந்து அதை வேண்டுதலாக வைத்தேன்.

முருகனாகப் பார்த்து நமக்கு நினைவுபடுத்தி இருக்கிறார் என்று நானே நினைத்துக்கொண்டேன் 🙂 .

ஏனென்றால், அது ஏன் இந்த நேரத்தில் நடக்க வேண்டும்!

எல்லாத்துக்கும் காரணம் இருக்கு.. நாம தான் காரணத்தைக் கண்டறியனும். சிலதை கண்டுபிடிக்கலாம் சிலது தாமதமாகப் தெரிய / புரியவரலாம்.

நீதிமன்ற வழக்குகள், குழந்தை வேண்டி, திருமணம் நடக்க போன்ற வேண்டுதல்கள் தான் குறிப்பிடத் தக்க வேண்டுதல்களாகக் கூறுவார்கள்.

சக்தி வாய்ந்த விரதம்

நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம்.

சொன்னா நம்ப மாட்டீங்க, பல வருடங்களாகக் குழந்தை இல்லா நண்பரின் குடும்பத்துக்காக, அவரது மனைவி நான் எழுதி இருந்த சஷ்டி விரதத்தைப் படித்து, விரதம் இருந்து, குழந்தை உண்டானதாகச் சமீபத்தில் கூறினார்.

நண்பருக்குக் குழந்தை பிறந்தது தெரியும் ஆனால், எனக்கு இக்காரணம் தெரியாது.

சமீபத்தில் சந்தித்த போது, நண்பரது மனைவி குறிப்பிட்டு ‘அந்த முருகன் தான் இந்தக் கண்மணிகளைக் கொடுத்தார்‘ என்று கூறி எனக்கும் நன்றி கூறினார்.

தற்போது இரு குழந்தைகள். ஏதோ ஒரு வகையில் என் எழுத்தும் சிலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்ததற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதே குழந்தைகள் தான். துவக்கத்தில் இருந்தே குழந்தை இல்லாமல், வேண்டுபவர்களிடம் கூடுதல் பாசம் உண்டு.

அவர்களுக்காக எனக்குத்தெரிந்த ஆலோசனைகளைக் கூறுவேன். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம், எனக்கு அதில் வருத்தமில்லை.

அனைவருக்கும் சஷ்டி விரதத்தைப் பரிந்துரைக்கிறேன்.

இதுவரை முயலாதவர்கள் முயன்று பாருங்கள். நல்லது நடக்கத் தாமதமானாலும் கெட்டது நடக்க வாய்ப்பில்லை.

எனவே, மனதுக்கு உடலுக்கும் நல்லதான சஷ்டி விரதம் இருங்கள். சஷ்டி விரத அனுபவங்கள் பெறுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

“சஷ்டி விரதம்” ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்

அழகன் முருகன்

“ஓதி மலை முருகனின் அற்புதம்”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் கில்லாடி. கர்மா எப்போதும் active ஆ இருக்கும் 🙂

  “சஷ்டி விரதம்” ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள் — மறுபடியும் படித்தேன். அடுத்த வருஷம் நம்மளால விரதம் இருக்கமுடியுமா அப்படின்னு. கண்டிப்பா முடியும்னு தேனுது. பார்க்கலாம். நன்றி கில்லாடி

 2. கேப்டன் அடுத்த வருடம் சஷ்டி விரதம் இருங்க. எனக்கு முதல் நாள் மட்டும் ஒரு மாதிரி இருந்தது அப்புறம் பழகி விட்டது.

 3. @மனோஜ் கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறேன்.

  இதுவரை நான் வேண்டிக்கொண்ட 3 நண்பர்களுக்குக் குழந்தை கிடைத்துள்ளது. உங்களுக்கும் குழந்தை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  சஷ்டி விரதம் மிகவும் சக்தி மிகுந்தது. முயற்சி செய்யுங்கள். கடவுள் பிரார்த்தனையோடு மருத்துவ முயற்சிகளையும் எடுங்கள்.

 4. மனோஜ் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். அடுத்த முறை பின்வருவனவற்றை முயன்று பாருங்கள்.

  சஷ்டி விரத நாட்களில் புத்திரபாக்யம் வேண்டி விரதமிருப்போர். இந்த இரு பாடல்களையும் நாள்தோறும் குறைந்தது ஆறு முறையும், அதிகப்படியாக 108 முறையும், மனமுருகி பாராயணம் செய்யுங்கள்.

  புத்திரபாக்கியம் பெற்றிட

  ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
  ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
  வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
  நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.

  அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
  பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனி யாகக்
  கருணைகூர் முகங்கள் ஆறுங் கரங்கள்பன்னிரண்டும் கொண்டே
  ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here