தமிழ் மொழியில் தெரிந்து கொள்ளக் கடலளவு செய்திகள், விளக்கங்கள் உள்ளது. எவ்வளவு படித்தாலும் அதன் மீதான வியப்புக்குறையாது. தமிழின் ‘ஆகுபெயர்’ சிறப்பு பற்றிப் பார்ப்போம். Image Credit
ஆகுபெயர் என்றால் என்ன?
பொருள் / உவமை மாறிக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், புரிந்து கொள்ளப்படுவது.
எடுத்துக்காட்டுக்கு, இந்த ஊரே என்னைப் பாராட்டியது!
இந்த ஊர் பாராட்டவில்லை, ஊரில் உள்ளவர்கள் பாராட்டினார்கள். இந்த இடத்தில் ஊர் என்பது ஊரில் உள்ளவர்கள் என்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுவே ஆகு பெயர்.
தமிழின் ‘ஆகுபெயர்’ சிறப்பு
எத்தனையோ இருக்க இதை ஏன் திடீர் என்று கூற வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றி இருக்கலாம் 🙂 . காரணம் உள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு மரக்கன்று நடுதல் குறித்த ஒரு கட்டுரையில் ‘மரம் நடுதல்’ என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அப்போது வலைதளத்தில் எழுதிக்கொண்டு இருந்த ‘ஸ்வாமி ஓம்கார்’ அவர்கள், ‘மரம் நடுதல்’ என்று எழுதி இருந்ததை நகைச்சுவையாகக் கேட்டு இருந்தார்.
அதாவது, மரக்கன்றைத் தானே நடுவார்கள். மரத்தை எப்படி நடுவார்கள்? என்ற அர்த்தத்தில்.
Read : மரக்கன்று நடுதல் என்ற வெட்டி வேலை!
அதன் பிறகு எப்போது எழுதினாலும் ‘மரக்கன்று’ என்று எழுத / பேச ஆரம்பித்தேன்.
தற்போது ‘ஆகு பெயர்’ படித்த போது, நாம் கூறுவது மரத்தை என்றாலும், இந்த இடத்தில் அது மரக்கன்று என்றே பொருள்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ‘ஆகுபெயர்’ என்று ஒரு பெயரும் உள்ளது என்று அறிந்ததும், நாம் தவறாகக் கூறவில்லை என்று மகிழ்ச்சி.
இருப்பினும் ‘மரக்கன்று’ என்பதே சரியென்பதால், இனியும் மரக்கன்று என்றே எழுதுவேன் ஆனால், இதற்கும் விளக்கம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
சமீபத்தில் பல விசயங்கள் எனக்கு மறந்தாலும், சுட்டிக்காட்டிய தவறு மட்டும் எனக்கு மறப்பதே இல்லை.
இப்புத்தகத்தில் இதைப்படித்தவுடன் ‘ஸ்வாமி ஓம்கார்’ கூறியதே நினைவு வந்தது.
ஆகு பெயரில் சில வகைகள்
இட ஆகு பெயர் – இந்தியாவே மகிழ்ந்தது (இந்தியாவில் உள்ளவர்கள் மகிழ்ந்தார்கள்)
பண்பு ஆகு பெயர் – இனிப்பு வாங்கி வந்தேன் (இனிக்கும் பொருளை (ஜிலேபி) வாங்கி வந்தேன்)
தொழில் ஆகுபெயர் – வற்றல் தின்றேன் (வற்றிப்போன உணவுப்பண்டத்தைத் தின்றேன்)
உவமை ஆகு பெயர் – மான் வந்தாள் (மான் போல வந்தாள்)
சினை ஆகு பெயர் – வெற்றிலை நட்டான் (வெற்றிலைக் கொடியை நட்டான்)
அளவை ஆகு பெயர் – ஐந்து கிலோ வாங்கினேன் (ஐந்து கிலோ பொருள் (அரிசி) வாங்கினேன்)
இது போலப் பலவற்றுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் பெயர் – மாணவர்களுக்கான தமிழ்
ஆசிரியர் – என். சொக்கன்
Amazon Link –> மாணவர்களுக்கான தமிழ்
‘மாணவர்களுக்கான தமிழ்’ என்று புத்தகத்தின் பெயர் இருந்தாலும், கற்றுக்கொள்ளும் அனைவருமே மாணவர்கள் தானே! 🙂 .
தமிழை கற்றுக்கொள்வதில், என்றும் மாணவனே!
கொசுறு
இந்தித்திணிப்பு மற்றும் அது தொடர்பான கட்டுரைகளை ஒருங்கிணைத்து ‘இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்‘ என்ற பெயரில் இ-புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
Amazon Link –> இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்
நம்ம மொழில உள்ள சுவை வேறு மொழிகளில் இருக்குமா?? என்று தெரியவில்லை!!! தமிழ் மொழியென்பது கடல் அல்ல “சமுத்திரம்”. எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளி பருகி கொண்டே இருக்கலாம்.. இதன் சுவை என்றும் குறைவதில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின், கடல் சமுத்திரம் இரண்டுமே ஒன்று தானே!