தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி 1967 முதல் மாறி மாறி ஆட்சி அமைத்து இருக்கும் கழகங்களுக்குப் போட்டியாக பாஜக வந்த பிறகு தற்போது விவாதங்கள் அதிகரித்துள்ளன. Image Credit
அதில் ஒன்று திராவிடம் அழிந்து தேசியம் மலரும் என்பது.
திராவிடம் அழியுமா?
சுருக்கமாகக் கூறினால் திராவிடம் அழியாது ஆனால், மாற்றம் பெறும்.
எப்படி என்பதைப்பார்ப்போம்.
பேசியே வளர்ந்த கட்சி
திராவிடம் வளர்ந்தது அவர்களுடைய பேச்சு மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால். பேசியே ஆட்சிக்கு வருபவர்கள் திராவிடக் கட்சியினர்.
தற்போது கொள்கைகளைப் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதை தவிர்த்து, திராவிடம் எப்படி வளர்ந்தது, மாற்றம் அடைந்தது என்பதையே பார்க்கப்போகிறோம்.
ஒரு கட்சி வளர, இளைய தலைமுறையினரை அதிகம் கவர வேண்டும். காரணம், அவர்களில் ஏற்படும் மனமாற்றம் அவர்கள் வளர்ந்தும் தொடரும்.
அதோடு இளம் ரத்தத்துக்கு வேகம் அதிகம்.
திராவிடர் கழகம்
நீதிக்கட்சியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் திராவிடர் கழகமானது.
தமிழகத்தில் பல மொழியினரும் இருந்ததால், தமிழை முன்னிறுத்தி பெயரை வைக்காமல், தென் பகுதியைக் கணக்கிட்டு இப்பெயரை வைத்தார்கள்.
ஆனால், திராவிடம் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களில் எவரும் மதிப்பதில்லை, மாநில அரசியலில் முன்னிறுத்துவதில்லை.
இவர்கள் வெறுக்கும் ஆரியப்பெயரே திராவிடமாகும். திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல.
பெரியார் தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததால், அண்ணா கோபித்துக்கொண்டு பிரிந்து ஆரம்பித்தது தான் திமுக.
1965 ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களே முக்கியப்பங்கை அளித்தனர். இப்போராட்டம் திராவிடக் கட்சிகளுக்கு வளர்ச்சியைக் கொடுத்தது.
1949 ஆண்டில் திமுக உருவாக்கப்பட்டு 18 வருடங்களுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965 ல் உச்சத்தில் இருந்தது.
காமராஜர்
காமராஜர் செய்த சாதனைகள் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
சாதனைகள் படைத்த காமராஜரையே அவரது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் 1967 ம் ஆண்டு திமுக தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது.
இது எவராலும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது இருந்த பகுத்தறிவுக் கொள்கைகள், அரிசி விலை உயர்வு எதிர்ப்பு பேச்சுகள், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் திரைப்படக் கவர்ச்சி, இந்தி எதிர்ப்பு ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்று இருந்தது.
இவற்றோடு கலைஞரின் பேச்சு, திரைப்படத்துறையில் உள்ளவர்களின் ஆதரவு ஆகியவை திமுகக்கு கவனம், ஈர்ப்பைக் கொடுத்தது.
இதன் பிறகு திமுகக்கு ஏறுமுகமாக இருந்தது. பின்னர் வந்த இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றாலும், அதன் பிறகு சில ஆண்டுகளே வாழ்ந்தார்.
திராவிடம்
திராவிடக் கழகம் வாக்கரசியலில் ஈடுபடாமல், தனது கொள்கைகளைப் பரப்புவதிலேயே இன்றுவரை தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
இதன் பிறகு எம்ஜிஆர் கட்சிக்கணக்கை கேட்டதால், கலைஞரால் நீக்கப்பட்டு, பின்னர் எம்ஜிஆர் அதிமுக துவங்கி போட்டி திராவிடக்கட்சியானார்
எம்ஜிஆர் இறக்கும் வரை திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. அதன் பிறகு இன்று வரை திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சி செய்து கொண்டுள்ளன.
காமராஜர் தோற்றதற்கு முக்கியக்காரணங்களில் ஒன்று அரிசி விலை உயர்வு.
1967 ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று கூறி ஆட்சிக்கு வந்து அதை திமுக செயல்படுத்தவில்லை.
திமுக அரசியல் வாக்குறுதி பொய்யிலே ஆரம்பித்து, தற்போது வரை தொடர்ந்து, அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
பங்காளி கட்சிகள்
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக தோன்றியது அப்போது திமுகவுக்கு பின்னடைவாக இருந்தாலும், திமுக வெற்றிகரமாக தொடர போட்டிக் கட்சியே காரணம்.
அதிமுக இல்லையென்றாலும், வேறொரு சித்தாந்தம் வந்து இருக்கலாம், அது கம்யூனிசம், தேசியமாகக் கூட இருந்து இருக்கலாம்.
ஆனால், இன்று திமுக அதிமுக இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வருவதால், அவர்களுடைய சித்தாந்தம் தொடர்ந்து கொண்டுள்ளது, மக்களும் வேறு வழி இல்லாமல் இரண்டில் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலேயே உள்ளனர்.
எதிர்காலத்தில் அதிமுக பலமிழக்கும் போது தற்போது வேகமாக வளர்ந்து வரும் தேசியம் போட்டி இடத்தைப் பிடிக்க ஆரம்பிக்கும். அப்போது திராவிட சித்தாந்தம் பின்னடைவை சந்திக்கும்.
எனவே தான் பங்காளி கட்சிகள் வெளியே அடித்துக்கொள்வது போல இருந்தாலும் உள்ளுக்குள் இணக்கமாக இருந்து இருவருமே விட்டுக்கொடுத்துப் போகின்றனர்.
எதனால், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இல்லை, எதனால், திமுகவை அதிமுக கேள்வி கேட்பதில்லை என்று யோசித்தால், விடை கிடைக்கும்.
திராவிடம் எதுவுமே செய்யவில்லையா?
திராவிடத்தை வெறுப்பவர்கள் திராவிடம் எதுவுமே செய்யவில்லை, கலாசாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது என்று விமர்சிக்கிறார்கள்.
இது உண்மையா?
இதற்கு உண்மை, பொய் என்று நேரடிப் பதிலாகக் கூற முடியாது.
காரணம், வட மாநிலங்கள் எல்லாம் பகுத்தறிவு, சமூகநீதி போன்றவற்றில் பின்தங்கி இருந்த போது தமிழகம் அவர்களை விட விழிப்புணர்வு பெற்று இருந்தது.
அதோடு வளர்ச்சித் திட்டங்களிலும் முன்னேறிய மாநிலமாக இருந்தது. கல்வியில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று இருந்தது, சமச்சீர்க் கல்வி வரும்வரை.
தமிழகத்தின் துறைமுகம், வணிகத்துக்கு ஏற்ற மாநிலமாக இருந்ததாலும், மக்களும் படித்தவர்களாக இருந்ததால், தொழில்துறையில் வளர்ச்சி பெற்றது.
தற்போதும் ஊரகச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் மற்ற மாநிலங்களுக்குச் சவால் கொடுக்கும் வண்ணமே உள்ளது ஆனால், புதிய மாநில சாலைகள் அமைப்பது, உட்கட்டமைப்பு, ஊழல் ஆகியவற்றில் சீர்கெட்டு விட்டது.
திராவிடம் வந்து தான் தமிழகம் முன்னேறியதா?
இல்லை.
காரணம், தமிழகம் எப்போதுமே பின்தங்கி இருந்தது இல்லை. மக்களாட்சி என்றில்லை, மன்னராட்சி முதலே தமிழகம் சிறப்பான நிலையில் இருந்தது.
மக்களும் சுறுசுறுப்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தனர்.
இதன் பிறகு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தமிழகத்தை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றனர். குறிப்பாகக் காமராஜர் நீர் மேலாண்மை, கல்விக்குச் செய்த செயல்கள் அளப்பரியது.
இயல்பாகவே தமிழர்கள் புத்திசாலிகளாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும், வன்முறையில் உடன்பாடில்லாதவர்களாகவும் இருந்தனர்.
எனவே, தமிழர்களை யார் ஆட்சி செய்தாலும் நல்ல பெயரை எடுத்து இருக்க முடியும்.
முதல் மாணவன்
இதை புரிந்து கொள்ள எளிய எடுத்துக்காட்டைக் கூறுகிறேன்.
தமிழகம் எப்போதுமே கீழே இருந்தது இல்லை. அதாவது பள்ளியில் எப்போதுமே முதல் மூன்று இடங்களில் வரும் மாணவனைப்போலவே தான் இருந்தது.
அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து காமராஜர் மேம்படுத்தினார். அதையே திராவிடமும் செய்ததே தவிர, வீழ்ந்து கிடந்த தமிழகத்தை தூக்கி நிறுத்தவில்லை.
தற்போதைய தனியார்ப் பள்ளிகள் பல, நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தங்களது பள்ளியில் சேர்த்துக்கொண்டு, ‘பாருங்கள் எங்கள் மாணவர்களின் திறனை!‘ என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள்.
இதில் என்ன பெருமையுள்ளது? படிக்காத மாணவனை முதல் மதிப்பெண் வாங்கச்செய்வதே சிறப்பு.
தற்போது உபியில் யோகி செய்து கொண்டு இருப்பது தான் மாற்றம்.
அது போலக் காங்கிரஸ் ஆளும் போது இருந்தே சிறப்பாக இருந்த தமிழகத்தைத் தாங்கள் தூக்கி நிறுத்தியதாகத் திராவிடம் பெருமை கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் தமிழகத்தோடு பயணித்தார்கள் அவ்வளவே.
திமுக அல்லாமல், வேறு கட்சி வந்து இருந்தாலும், அதற்கேற்ப தமிழகம் தன்னை தகவமைத்துக்கொண்டு இருக்கும் என்பதே உண்மை.
துவக்கத்தில் விமர்சனங்கள் இருந்தாலும், பல வளர்ச்சித் திட்டங்களைத் திராவிடம் செய்தது ஆனால், நாளடைவில் ஊழல், அதிகாரம், அடக்குமுறை, குடும்ப அரசியல், கட்ட பஞ்சாயத்து, வன்முறை என்று பாதை மாறி விட்டது.
இதன் பின்னர் பகுத்தறிவு, சமூகநீதி என்று கூறி அதைத் தனக்கு மட்டும் இல்லையென்று செயல்பட்டு வருகிறது. பகுத்தறிவு என்று இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்துகிறது. தனது கட்சியிலேயே சமூகநீதியைப் பின்பற்றுவதில்லை.
இது போலக் கொள்கைகளுக்கும் திமுகவுக்கும் பெரிய இடைவெளி வந்து விட்டது.
தலைமுறை
திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை, இரு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்து, (1967 – 1969) காலமாகி விட்டார்.
அதன் பிறகு கட்சிப்பொறுப்பை எடுத்த கலைஞர் குடும்பம் இன்று வரை கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதாவது தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன், மகள், மருமகன் என்றாகி விட்டது.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள், அர்த்தமுள்ள இந்து மதத்தில்,
மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாழ்ந்தவர்களும் இல்லை, மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை என்று முன்னோர் கூறுவார்கள் என்று பட்டினத்தார் கூறுகிறார் என்று குறிப்பிட்டு இருப்பார்.
அந்த மூன்று தலைமுறை கலைஞர், ஸ்டாலின், உதயநிதி. அதன் இன்னொரு அர்த்தம் உதயநிதியோடு கட்சி களை இழந்து விடும் அல்லது இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிருந்து திமுக விலகி விடும்.
மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர்களைப் பாருங்கள். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் சரிவு இருக்கும், அவர்கள் தாத்தா இருந்த போது இருந்த பெருமை மரியாதை இருக்காது.
இதற்கு ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த குடும்பத்தை எடுத்தாலே தெரிந்து விடும். எனவே, இது உலக நியதி. எவரும் தப்ப முடியாது.
உதயநிதி
உதயநிதியின் காலத்திலேயே திமுக வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும், கலைஞர் குடும்பத்துக்கு மரியாதை குறைந்து வேறொருவர் கட்சிப் பொறுப்பை எடுக்கலாம்.
உதயநிதி கடையை நடத்துவதே திமுக என்ற ஆலமரத்தின் பின்புலம், பில்டப் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் அடிமையாக இருக்கும் கட்சி விசுவாசிகளாலே!
இவையில்லையென்றால், எந்தத்திறமையும் இல்லாத உதயநிதி எப்போதோ காணாமல் போய் இருப்பார்.
எளிதாகப் புரிந்துகொள்ள, உதயநிதி பின்னால் உள்ள, திமுக என்ற கட்சி, கலைஞர், ஸ்டாலின் இந்த மூன்றையும் நீக்கி விட்டால், அவர் யார்? என்ன அடையாளம்?
இவருக்கு கிடைத்த பொறுப்புகள் அனைத்துமே மேற்கூறிய தகுதிகளால் மட்டுமே!
சித்தாந்தம்
எப்போதுமே தொடர்ந்து ஒரு சித்தாந்தமே எக்காலத்திலும் கோலோச்சிக் கொண்டு இருக்க முடியாது என்பதும் உலக வழக்கு.
ஒரு காலத்தில் கோலோச்சிய கம்யூனிசம் நிலை என்ன ஆனது? யாராவது நினைத்து இருப்பார்களா? கம்யூனிசம் இப்படியொரு பரிதாப நிலைக்கு வரும் என்று.
இந்தியாவில் கேரளாவில் மட்டுமே கம்யூனிசம் உள்ளது. தற்போது கேரளாவும் மோசமான ஆட்சியால் பரிதாப நிலையில் உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் சம்பளம் கொடுக்கவே பணம் இல்லாமல் திண்டாடி வருகிறது.
திராவிடம் என்று ஐந்து மாநிலங்களையும் இணைத்துத் தமிழக திராவிட கட்சிகள் பேசினாலும், தமிழகத்தில் மட்டுமே திராவிடம் உள்ளது.
எனவே, திராவிடச் சித்தாந்தமும் அதனுடைய Threshold யைத் தொட்டு விட்டது என்று கருதுகிறேன். மக்கள் சலிப்படைந்து தேசியம், தமிழ் தேசியம் என்று நகர்கிறார்கள்.
இவ்வளவு நாட்களாகத் தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது, அல்லது மற்ற கட்சிகளை அழித்து வாய்ப்பைக் கொடுக்காமல் திராவிடம் பார்த்துக்கொண்டது.
ஆனால், காலம் விடுமா? அது தன் வேலையைச் செய்துகொண்டே தானே இருக்கும். எனவே, மாற்றங்கள் தவிர்க்க முடியாது.
பாஜக
அண்ணாமலை வந்த பிறகு தமிழக பாஜக வளர்ந்து வருகிறது. எதிர்காலம் தேசியம் Vs திராவிடம் என்றே அமையும்.
பாஜக ஒரு முறை தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்து விட்டால், அதை 10 ஆண்டுகளுக்கு அகற்றுவது கடினம். காரணம், அவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்.
இவ்வளவு நாட்களாக இந்துக்களை முட்டாள்களாகவே, தங்களது மதத்தின் பெருமையை உணராமலே திராவிடம் வைத்து இருந்தது.
ஆனால், சமூக வலைத்தளங்கள், பாஜக முன்னெடுப்பு, விழிப்புணர்வு ஆகியவை மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
எனவே, 2026 ல் முடியவில்லையென்றால், 2031 ல் பாஜக ஆட்சியைப் பிடித்து விடும்.
இந்துக்கள் வாக்கு வங்கி
பாஜக ஆட்சியைப் பிடிக்கும் போது இந்துக்களுக்கான மரியாதை, மதிப்பு திரும்பக் கிடைக்கிறது என்று அர்த்தம். இதன் இன்னொரு அர்த்தம் திமுகவின் இந்து மத எதிர்ப்பு, போலி பகுத்தறிவு பரப்புரைகள் செல்லாது என்பது.
எனவே, எதிர்காலத்தில் இந்துக்களைப் பகைத்துக்கொண்டு, தற்போது போலக் கேவலமாக விமர்சித்துக்கொண்டு கட்சியை நடத்த முடியாது.
இந்துக்களின் வாக்கு வங்கி என்று ஒன்று உருவாகி விட்டால், தமிழகத்தில் அனைத்து மதங்களையும் மதிக்கும் எண்ணம் கட்சிகளுக்கு வந்து விடும். ஒரு மதத்தை மட்டும் தவறாகப் பேசி மற்ற மதங்களுக்கு கொடி பிடிக்க முடியாது.
எதிர்காலத்தில் திமுகவுடன் அதிமுக இணைக்கப்பட்டாலும் வியப்பதற்கில்லை. காரணம், திராவிடத்தின் அடையாளமாக திமுக மட்டுமே வாக்கரசியலில் இருக்கும்.
எனவே, திராவிடம் அழியாது ஆனால், கொள்கைகள் மாற்றம் பெற்று விடும்.
தொடர்புடைய கட்டுரைகள்
திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?
திராவிடரா? தமிழரா? | எதில் பெருமை?
ஸ்டாலின் நிர்வாகத் திறமை உள்ளவரா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி. காலத்திற்கு தகுந்தாற்போல் கொள்கைகளும், கோட்பாடுகளும் தானாகவேமாற்றம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. தானாக மாற்றம் பெறவில்லை என்றால் அதை சிலர் தனது சுயலாபத்துக்குக்காக தடை செய்கின்றார் என்று தானே அர்த்தம்.. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் இன்னும் மக்களின் நிலை மாறவில்லை என்றால்.. பின்பு எப்போது மாற்றம் வரும்?
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மட்டும் தான் நடக்கிறது.. ஆளும் கட்சி எதிர்க்கட்சியை தூற்றுவதும்.. பின்பு அவர்கள் இவர்களை தாக்கி பேசுவதும் தான் நிகழ்கிறது. அரசியல்வாதிகளின் சொத்து பட்டியில் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது.. அரசியலை ஒரு பணமீட்டும் கருவியாக எண்ணினால் இது தான் நிலை. ஒரு பொதுக்கூட்ட மாநாட்டிற்கு கோடிகளில் செலவு செய்ய படுகிறது..
இதெல்லாம் யார் வீட்டு பணம்? இவர்களுக்கு எப்படி கிடைத்தது? நடுத்தர குடும்பத்தில் சராசரி மனிதன் நேர்மையாக வாழ்ந்து தன் வாழ்நாளில் எதனையுமே அனுபவிக்காமல் செத்து மடிவது தான் அதிகம்.. ஆனால் அரசியல் வாதிகளின் நிலை.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் மக்கள் இவர்களை தேர்ந்துடுகின்றனர். ஆனால் ஆட்சி முடியும் போது இவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது. ஒரு அரசியல்வாதியாவது தான் வாழும் காலத்திலே கடுமையான தண்டனை விதித்து, அவன் நேர்மையற்ற முறையில் சம்பாரித்தது எல்லாம் அரசு கையகப்படுத்தியது என்ற செய்தியை நான் இதுவரை படிக்கவில்லை. திருமதி. சசிகலாவின் வழக்கின் தீர்ப்பே எனக்கு தற்போது வரை புரியவில்லை.
எல்லாம் மாறும்.. மாற்றம் நடைபெறும் என்ற எல்லா சாதாரண பொதுமக்களை போல் நானும் பல வருடமாக காத்திருக்கிறேன்.. பேசினால் நிறைய பேசிக்கொண்டே போகலாம் கிரி. அரசாங்கத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியர் வேலைக்கு ஒரு தகுதி நிர்ணயம் இருக்கின்ற போது, நம்மை 5 ஆண்டுகாலம் ஆளப்போகும் ஒரு அரசியல்வாதிக்கு எந்த குறைந்தபட்ச தகுதியும் தேவையில்லை என்பது எப்படி?? இன்று வரை புரியாத புதிர்..
@யாசின்
“காலத்திற்கு தகுந்தாற்போல் கொள்கைகளும், கோட்பாடுகளும் தானாகவேமாற்றம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. தானாக மாற்றம் பெறவில்லை என்றால் அதை சிலர் தனது சுயலாபத்துக்குக்காக தடை செய்கின்றார் என்று தானே அர்த்தம்.”
நீங்கள் கூறுவது சரி.
இதில் அடிப்படை கொள்கைகள் மாற்றம் பெற்றால், அதன் சித்தாந்தமே கேள்விக்குறியதாகி விடும் ஆனால், மற்ற மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.
திராவிடத்தின் அடிப்படை பகுத்தறிவு. அது நபருக்கு நபர் மாறுபடுகிறது.
“ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மட்டும் தான் நடக்கிறது.. ஆளும் கட்சி எதிர்க்கட்சியை தூற்றுவதும்.. பின்பு அவர்கள் இவர்களை தாக்கி பேசுவதும் தான் நிகழ்கிறது. அரசியல்வாதிகளின் சொத்து பட்டியில் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது.”
இவர்கள் தான் பங்காளி கட்சிகள் என்று கூறி விட்டார்களே. அதனால் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
“அரசாங்கத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியர் வேலைக்கு ஒரு தகுதி நிர்ணயம் இருக்கின்ற போது, நம்மை 5 ஆண்டுகாலம் ஆளப்போகும் ஒரு அரசியல்வாதிக்கு எந்த குறைந்தபட்ச தகுதியும் தேவையில்லை என்பது எப்படி??”
எதிர்காலத்தில் இதற்கான வரையறைகள் வர வாய்ப்புள்ளது.