சனாதனம் | ஒழிக்க வேண்டியது எதை?

19
சனாதனம்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Image Credit

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி கலந்த கொண்ட மாநாட்டின் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடு. அந்த மாநாட்டில் டெங்கு, மலேரியா, கோவிட் போலச் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எதோ போகிற போக்கில் கூறினார் என்று கூற முடியாது காரணம், அவரது தந்தையைப் போலவே துண்டு சீட்டில் எழுதி வந்ததை அப்படியே படித்துக்காட்டினார்.

எனவே, இது தெளிவான, திட்டமிடப்பட்ட பேச்சு ஆகும்.

நான் கிறித்துவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என் மனைவி கிறித்துவர் என்று உதயநிதி கூறினார். இவர் எப்போது கிறித்துவராக மாறினார் என்று தெரியாது, இவர் கூறிய பிறகே மாறியது தெரியும்.

தான் சார்ந்த மதத்தைப் பெருமையாக நினைப்பதில் எந்தத் தவறும் கிடையாது ஆனால், அதற்காக அடுத்த மதத்தை ஒழிக்கவேண்டுமென்று கூறுவது எப்படிச் சரி?!

இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு கூறுவது தார்மீக அடிப்படையில் சரியா? அதுவும் அமைச்சர் பதவியில் உள்ளவர்.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் விமர்சனம் இருந்தால் உதயநிதி அதைக் குறிப்பிட வேண்டும், அதற்காக ஒட்டுமொத்த இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும் என்று எப்படி கூறலாம்?

ஒழிக்க வேண்டிய கஞ்சா, சட்டம் சீர் குலைவை, குடியை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கொலைகளை, பெண்களுக்கு எதிரான வன்முறை, சாதிச் சண்டையை ஒழிக்காமல் இந்து மதத்தை ஒழிக்கப்போகிறார்களாம்!

ஒரு நாட்டின் பெரும்பான்மை மதத்தை ஒழிக்கத் தைரியமாக மாநாடு நடத்தும் கூத்தெல்லாம் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் தான் நடக்கும்.

சனாதனம்

இந்து மதத்தின் / வாழ்வியல் முறையின் முந்தைய பெயர் சனாதனம். அதற்கு முன் வேறு பெயரோ அல்லது பெயரே இல்லாமல் தொடர்ந்து இருக்கலாம்.

தற்போது சனாதனம் என்றால் என்ன? என்று கேட்டால், 95% இந்துக்களுக்கு என்னவென்று தெரியாது. உங்கள் நண்பரோ அல்லது தெரிந்தவரோ யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே பதில் வரும்.

சனாதனம் (இந்து மதம்) என்ற கோட்பாட்டில் துவக்கத்தில் பின்பற்றப்பட்டவை காலப்போக்கில் மாறி விட்டது, அடிப்படை தத்துவங்கள் தொடர்கிறது ஆனால், வழக்கங்கள் மாற்றம் பெற்று விட்டன.

எடுத்துக்காட்டு, கடவுள்களை வணங்கும் முறை உட்பட அடிப்படையான தத்துவங்கள் தொடர்கிறது. உடன்கட்டை ஏறுதல், கணவர் இறந்தால் மொட்டை அடித்தல் உட்படப் பல வழக்கங்கள் மறைந்து விட்டன.

சாதி என்பது தனி மனிதர்களால் தொடரப்படுவது. அதை அவர்கள் முயன்றாலே தடுக்க முடியும் அல்லது அரசு நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும்.

ஆனால், சாதியெல்லாம் ஒழியும் என்ற நம்பிக்கை தற்போதைக்கு இல்லை.

இந்துமதத்தின் சிறப்பே காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்வது தான். இதனாலேயே பல விமர்சனங்களைக் கடந்து அனைத்து மக்களாலும் பின்பற்றப்படுகிறது.

இந்து மதத்தின் முக்கியச் சிறப்பு, இந்து மதத்துக்கென்று தலைமை இல்லை. யார் வழிநடத்தலும், கருத்து திணித்தலும் இல்லாமல் தானாகவே வளர்ந்து வரும் மதம்.

இந்து மதத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது.

இக்காரணங்களாலே முந்தைய காலங்களிலிருந்த பிற்போக்கான எண்ணங்கள், வழக்கங்கள் தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வந்துள்ளது.

சனாதனம் என்றால் என்னவென்றே பலருக்குத் தெரியாது. பலருக்கும் தெரியாத, சராசரி நபர் பின்பற்றாத ஒன்றை அழிக்க மாநாடு நடத்துவது எதற்கு?

புரிந்து கொள்வதற்காக,

இந்து மதத்தின் பெயரைத் தற்போது மாற்றி விட்டால், அடுத்த 100 வருடங்களுக்குப் பிறகு மக்கள் இந்து மதம் என்றால் என்னவென்று தெரியாது என்று, தற்போது சனாதனம் என்றால் தெரியலைனு கூறுவது போலக் கூறுவார்கள்.

அந்தச் சமயத்தில் இது போன்ற போராளிகள் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடிக்கொண்டு இருப்பார்கள்.

இது தான் இப்பிரச்சனையின் சாராம்சம். பெயர் மட்டுமே மாறுகிறது மதம் ஒன்று தான். இந்து மதத்தின் அடிப்படை வாழ்வியல் முறை. இது மட்டுமே மாறாதது.

பின்னர் ஏன் சனாதனம் விமர்சிக்கப்படுகிறது?

காரணம், அரசியலன்றி வேறில்லை.

திமுகவினருக்கு சிறுபான்மையினர் வாக்கு வேண்டும். எனவே, இந்துக்களை விமர்சித்தால், சிறுபான்மையினர் வாக்களிப்பார்கள்.

சிறுபான்மையினரும் இந்துக்களை போல ஒரு வகையில் ஏமாந்தவர்கள் தான். காரணம், அவர்களுக்கும் திமுக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பாஜக, இந்து மதத்தைக் காட்டியே வாக்கைப் பெற்று விடுவார்கள்.

ஆனால், அவர்கள் வளர்ச்சிக்கு எதுவும் செய்ய மாட்டார்கள்.

என்ன காறித்துப்பினாலும் இந்துக்களும் துடைத்து விட்டு தங்களுக்கே வாக்களித்து விடுவார்கள் என்பதால், திமுகவினருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.

உதயநிதி பேசும் முன்பு பேசிய வீரமணி, சனாதனமும் இந்து மதமும் வேறல்ல, இரண்டும் ஒன்று தான் என்று கூறினார். வீரமணி கூறியது சரி தான்.

முன்னர் இந்து மதத்தைக் நேரடியாக விமர்சித்து வந்தார்கள் ஆனால், உப்பு போட்டுச் சாப்பிடும் இந்துக்கள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்ததால், பயந்த திமுக கூட்டணியினர் பேச்சை மாற்றிக்கொண்டனர்.

அதாவது இந்து மதம் என்று கூறினால் தானே பிரச்சனை! அதற்குப் பதிலாக சனாதனம் என்று கூறினால் யாருக்கும் புரியப்போவதில்லை.

எனவே, துப்பிய மாதிரியும் ஆச்சு இந்து மதத்தைச் சொல்லவில்லை என்று கூறிக்கவும் வசதியாயிற்று.

இதுவே சனாதனம் பெயர் தமிழகத்தில் புழக்கத்தில் வந்த காரணம்.

திமுகவினரை ஏன் கண்டிக்கவில்லை?

வாய் ஓயாமல் சனாதனம் என்று அனத்திக்கொண்டு இருப்பதில் முதலிடத்தில் இருப்பவர் திருமாவளவன்.

எதுக்குங்க இப்படி சொல்றீங்க என்று கேட்டால்..! சம உரிமை, சமூக நீதி என்பார்.

அப்புறம் ஏன் உங்களைப் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தார்கள், உங்க தொண்டர்களை ஏன் நாற்காலி இருந்தும் அமர வைக்காமல் நிற்க வைத்தே திமுக அமைச்சர்கள் பேசினார்கள் என்று கேட்டால், அதற்கு பதில் அமைதி.

பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தது, கட்சிக்காரர்களை அடிமை போல நிற்க வைத்துப் பேசியது சனாதனமா? அல்லது பகுத்தறிவு, சமூகநீதி பேசும் திமுகவா?

சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால், நம்மை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று அவர்களைக் கேள்வி கேட்காமல், சனாதனத்தைக் கேள்வி கேட்கத் தோன்றுமா?

வாய் கிழிய சமூகநீதி பேசி பேசுற திமுக கட்சிக்காரங்களை இது போல செய்ய வைப்பது எது? சனாதனத்தை வெறுத்தால், இது ஏன் நடக்கிறது?

இதையெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தானே பகுத்தறிவு.

கோவிலில் நுழைய முயன்ற பட்டியலின சிறுவனைக் கெட்ட வார்த்தையில் நாராசமாகத் திட்டிய திமுக பிரமுகரைக் கேள்வி கேட்க ஏன் தோன்றவில்லை? ஏன் கோபம் வரவில்லை.

திருமா மட்டுமல்ல, பா ரஞ்சித் உட்பட சனாதனத்தை குறை கூறுபவர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள். தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களைக் கேள்வி கேட்காமல், ராஜராஜ சோழனை கேள்வி கேட்பார்கள்.

வேங்கை வயல், நாங்குநேரி சம்பவங்களுக்கு என்ன செய்தார்கள்? அதற்கு ஏன் கோபம் வந்து தொடர்ந்து போராட்டம் நடத்தவில்லை!

தற்போது நடக்கும் கொடுமைகளை கேள்வி கேளுங்கய்யான்னா 2000 வருடங்கள் முன்பு நடந்ததை பேசிக் கம்பு சுத்திட்டு இருக்காங்க.

பெரியார் கூறியதைப் பின்பற்றுகிறோம், சமூக நீதியை நிலைநாட்டியவர், ஏற்றத் தாழ்வை போக்கியவர், சாதியை ஒழித்தவர் என்று ஓயாமல் பேசும் வாய், இதையெல்லாம் தொடர்ந்து செய்து வரும் திமுகவினரை ஏன் கண்டிக்க மறுக்கிறது?

இளிச்சவாய இந்து மதம்

இரண்டு நாதியற்றவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

ஒன்று இந்து மதம், இன்னொன்று பிராமணர்கள். இவர்களை என்ன விமர்சித்தாலும் கேட்க ஆள் கிடையாது, எதிர்ப்பே இருக்காது.

  • கலைஞர் சொல்றாரு, இந்து என்றால் திருடன்.
  • ஸ்டாலின் சொல்றாரு, இந்து திருமணத்தில் கூறும் மந்திரம் ஆபாசமா இருக்கு.
  • திருமா சொல்றாரு, கோவில் என்றால் நினைவுக்கு வருவது ஆபாசமாகச் சிலைகள் இருப்பது.
  • உதயநிதி சொல்றாரு, மலேரியா, டெங்கு, கோவிட் மாதிரி இந்து மதத்தை ஒழிக்கவேண்டுமென்று.

எண்ணம் போல வாழ்க்கை. நம் எண்ணங்கள் எப்படியோ செயல்களும், பார்வைகளும் அப்படியே.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இப்படியொரு கொடுமை இந்தியாவில் வேறு எங்கேயாவது நடக்குமா?!

இதைப் போல இன்னொரு மதத்தை விமர்சித்து விட முடியுமா?

ஏன் மேற்கூறிய பிரச்சனைகள், பிரிவினைகள், பிற்போக்கு வழக்கங்கள், சிந்தனைகள், ஏற்றத்தாழ்வுகள் மற்ற மதங்களில் இல்லையா?!

இருக்கிறது ஆனால், விமர்சனம் செய்தால் செருப்படி விழும். அவர்கள் மான, ரோசம் உள்ளவர்கள். தமிழக இந்துக்களுக்கும் அதற்கும் வெகு தூரம்.

எனவே, என்ன விமர்சனம் செய்தாலும், எவனும் ரோசம் வந்து கேட்கமாட்டான். அதை விட முக்கியம் விழுந்தடித்து தவறாமல் வாக்கு செலுத்த வந்துடுவான்.

இவர்களைப்போல உள்ளவர்கள் இருக்கும் வரை, திமுக போன்ற கட்சிகளுக்கு என்ன பிரச்சனை? எதற்குப் பயம்? எதற்குக் கவலை?

உதயநிதியிடம் கோபம் கொள்வதில் அர்த்தமில்லை காரணம், தவறு அவரிடம் இல்லை. அவருக்கு இதைப் போலப் பேச வாக்களித்துத் தைரியம் தரும் இந்துக்களிடம் தான்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்க!

ஒருவர் எதற்கு பயப்படணும்? கவலைப்படனும்? யோசிக்கணும்? என்ன பேசினாலும் வாக்களிக்கத் தயாரா இருக்கும் போது என்ன பிரச்சனை!

சமூகநீதி மற்றவர்களுக்கு மட்டுமா?

  • மூச்சுக்கு முந்நூறு முறை சமூகநீதி பேசும் திமுக, அதை ஏன் தனது கட்சியில், குடும்பத்தில் செயல்படுத்துவதில்லை?!
  • கனிமொழிக்கு கட்சித் தலைவர் பதவியை கொடுக்கலாமே? அல்லது வேறு பெண் தொண்டருக்குக் கொடுக்கலாமே இந்தப் பெரியார் வழித் தோன்றல்கள்.
  • என்ன சாதித்தார் என்று உதயநிதியை அமைச்சர் ஆக்கினார்கள்? கட்சிக்காக உழைத்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்க, இவர் எப்படி நேரடியாக 16 வது கேள்விக்கு வந்தார்?!
  • பட்டியலின நபரைக் கட்சித்தலைவராக்கி அழகு பார்க்கலாமே! சமூகநீதியைத் தெறிக்க விடலாமே!
  • சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் வீட்டு விழாவுக்கு இவர்கள் ஓயாமல் விமர்சிக்கும் சனாதன பார்ப்பானை அழைக்காமல், பட்டியலின நபரை அழைத்து புரட்சி செய்யலாமே!
  • சாதியை ஒழிக்கப் புறப்பட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அவர் பெண்ணுக்கு இன்னொரு சாதியில் காதல் திருமணம் நடந்த போது ஏற்றுக்கொண்டு இருக்கலாமே!
  • எதற்கு அவர்களை உயிருக்குப் பயந்து அடைக்கலம் தேடி அடுத்த மாநிலம் ஓட வைக்க வேண்டும்!
  • நல்ல நேரம் பார்க்காமல் மாநாட்டையோ, கட்சி மற்றும் அவர்கள் வீட்டு நிகழ்ச்சியையோ நடத்தி சனாதனத்தை அழிக்கலாமே!
  • பிள்ளைகளுக்குச் சுத்தமான தமிழில் பெயர் வைக்கலாமே! எதற்கு ஆரிய பெயரில் பெயரை வைக்க வேண்டும்?!
  • புரட்சி பேசும் வீரமணி, பெரியார் அறக்கட்டளைக்கு ஒரு பட்டியலின நபரைத் தலைவராக நியமிக்கலாமே! அது தானே பெரியாருக்குச் செய்யும் மரியாதை.
  • ஊரில் உள்ள பெண்களுக்கு எல்லாம் தாலி அறுக்கும் வீரமணி, அதைத் தன் குடும்பத்தில் துவங்கலாமே! அல்லது திமுகவினர் குடும்பத்தினருக்கு முயற்சிக்கலாமே!
  • நடிகை கஸ்தூரி கூறியது போல, வீட்டிலேயே உள்ள டெங்கு, மலேரியாவை ஒழிக்க உதயநிதி நடவடிக்கை எடுக்கலாமே!
  • சனாதனத்தை ஒழிக்கக் குடும்பத்தில், கட்சியில் ஏராளமான வாய்ப்புகள் இருக்க, இதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு மாநாட்டை அமைத்து இந்து மதத்தை ஒழிக்க வேண்டியது என்ன அவசியம்?

ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கவே சனாதனத்தை ஒழிக்கிறேன்னு கூறினேன் என்று கூறும் உதயநிதி அவர் கட்சியிலேயே, குடும்பத்திலேயே இதைப்பின்பற்றலாமே!

முதலில் நமது வீட்டை, கட்சியைச் சுத்தம் செய்து விட்டு அடுத்தவன் வீடு நாறுதுன்னு சொல்லலாமே!

சமூகநீதி பேசும் அனைவரும் கூறும் அறிவுரை மற்றவர்களுக்குத் தான் இவர்களுக்கு கிடையாது. எனவே, இதை மறைக்க அலறுவது தான் சனாதன ஒழிப்பு.

தற்போது ஏன் பிரச்சனை பூதாகரமாகியது?

சனாதனத்தை ஒழிப்போம் என்று கூவும் கூட்டம் வழக்கம் போலத்தான் இந்து மதத்தை கேவலமாகப் பேசியது.

நாம் என்ன கூறினாலும் அதற்குத் தமிழகத்தில் எவனும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான். எனவே, என்னவெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அதையெல்லாம் பேசலாம் என்று தான் பேசி இருக்கிறார்கள்.

இதுவரை சரி தான் ஆனால், தாங்கள் தற்போது இருக்கும் கூட்டணி I.N.D.I.A என்பதை மறந்து விட்டார்கள். இங்க வாய்க்கு வந்ததைப் பேசி இந்துக்களை இழிவுபடுத்துவது போல வட மாநிலங்களில் பேசி விட முடியாது.

எதிர்க்கட்சிகளே பேசி விட முடியாது, அனுமதிக்க மாட்டார்கள். காரணம், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உதயநிதி பேசியது I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு நெருக்கடியாகி விட்டது.

உதயநிதியும் கெத்து காட்ட நினைத்து, கூலாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக வசனங்களை அள்ளித் தெளித்து வருகிறார், அதனுடைய ஆபத்து புரியாமலே!

ஒரு ட்வீட் போட்டு 3 முறை திருத்தி விட்டார், வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி பேட்டி கொடுக்கிறார், வழக்கம் போலச் சம்பந்தம் இல்லாமல் சிரிக்கிறார், கிண்டலடிக்கிறார், ‘😂’ ஸ்மைலி போடுகிறார்.

சமூகத்தளங்களில் உள்ளவர்களுக்குத் தெரியும் ‘😂’ ஸ்மைலி சிரிப்பதற்காக மட்டுமே போடுவதல்ல, தான் பதட்டமாகவில்லை, கூலாக இருக்கிறேன் என்பதைக் காட்ட என்பதற்காகவும் என்று.

உதயநிதி பதட்டத்தில் இருக்கிறார். வெளியே சிரிக்கிறேன், உள்ளே அழுகிறேன் என்ற நிலை. காரணம், அவர் நினைத்துப் பேசியது / படித்தது ஒன்று நடந்தது ஒன்று.

பதட்டத்தில் தற்போது ‘இந்து மதத்தைப் பற்றி மட்டும் கூறவில்லை, அனைத்து மதங்களையும் கூறியுள்ளேன்‘ என்று பேட்டிகொடுக்கிறார்.

அதாவது இந்துமதம் அல்லாது மற்ற மதங்களையும் ஒழிக்கப்போகிறாரா?! மற்ற மதத்தினர் கவனிக்க 🙂 .

உதயநிதி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

உணராத உதயநிதி

உதயநிதி தலையைச் சீவுவருக்கு ₹10 கோடி என்று ஒரு உபி சாமியார் அறிவித்ததும், அதற்கு ₹10 சீப்பு போதுமே என்று கிண்டலாகப் பதில் கூறினார்.

சாமியார் கூறியது என்னவோ முட்டாள்தனமாகவோ, நகைச்சுவையாகவோ இருக்கலாம் ஆனால், அவர் இந்தச் சர்ச்சையை மேலும் பலருக்குக் கொண்டு செல்கிறார் என்பதை உதயநிதி உணரவில்லை.

உதயநிதி கொடுக்கும் பேட்டி, கிண்டல்கள் அனைத்துமே தமிழக மங்குணிகளை மனதில் வைத்தே!

ஆனால், இவர் தொடர்ந்து பேசப்பேச வடமாநிலங்களில் கோப அலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்பதை உதயநிதி உணரவில்லை.

இதன் தீவிரத்தை I.N.D.I.A கூட்டணி உணர்ந்துள்ளதே அவர்களின் அமைதிக்குக் காரணம்.

ஒரு சர்ச்சை ஏற்பட்டால் அமைதி காப்பதே சிறந்தது ஆனால், தான் வீரன் என்பதைக்காட்ட தெனாவெட்டாக பேசிக்கொண்டிருந்தால், அதன் பின்விளைவுகள் மோசமாகவே இருக்கும்.

என்ன நடக்கும்?

தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இருக்காது காரணம், இங்குள்ள இந்துக்கள் ‘துப்பினா தொடைச்சுக்குவேன்‘ என்று வழக்கம் போல கடந்து சென்று விடுவார்கள்.

இந்தப்பிரச்சனையால் தமிழகத்தில் நடக்கப்போகும் ஒரே நல்ல விஷயம், இந்த மாதிரி வன்மமாக பேசுவது குறையலாம். குறைந்தபட்சம் தேர்தல் வரை.

வெளியே வீரன் மாதிரி பேசினாலும், உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இனி அடக்கி வாசிக்கணும் என்ற பயத்தைக் கொடுத்து இருக்கும்.

மற்ற மாநிலங்களில் இப்பிரச்சனை கொஞ்சம் நாள் எதிரொலிக்கும், பின்னர் வேறு சர்ச்சை வந்தால், இது அடங்கி விடும். காரணம், இந்தியாவில் சர்ச்சைக்கா பஞ்சம்?

ஆனால், பாராளுமன்றத் தேர்தல் 2024 ஏப்ரல் மாதத்தில் வரப்போவதால், இதனுடைய தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். மேடைகளில் பேசப்படும், தொடர்ந்து முன்னெடுக்கப்படும், தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்தப்படும்.

I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் அமைதியாக இருப்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம், என்ன மாதிரியான இடியாப்ப சிக்கலில் உள்ளார்கள் என்பதை.

இதற்குத் தூபம் போடும் விதமாக ஆணவம் காரணமாக, உதயநிதியும் தினமும் ஒரு பேட்டி கொடுத்து நான் சொன்னது சரி என்கிறார், அதோடு மாற்றி மாற்றியும் கூறி அணையாமல் பார்த்துக்கொள்கிறார்.

உதயநிதி இது போலத் தொடர்ந்து பேசி தமிழக இந்துக்களுக்குச் சொரணை வரச்செய்தால் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். ரொம்பக் கடினமான பணி தான், இருப்பினும் தொடர வேண்டுகிறேன்.

திராவிடத்தை ஒழிப்போம் என்று சிலர் போராட்டம் நடத்தினால், அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர் ஆனால், இந்து மதத்தை ஒழிப்போம் என்று தமிழக அமைச்சர்கள் முன்னின்று மாநாடு நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் இந்து மதத்தின் நிலை என்னவென்று புரிகிறதா?!

திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யும் இந்துக்கள் இருக்கும் வரை இந்து மதத்தை அவமானப்படுத்தும் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதைச் சகித்துச் செல்லப் பழகிக்கொள்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தோன்றவில்லை ஆனால், ஒரு நாள் நிச்சயம் இந்து விரோத திமுக ஓரங்கட்டப்படும்.

அந்த நாளுக்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டுள்ளேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

அர்த்தமுள்ள இந்து மதம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

  1. இதை போன்ற மாநாட்டை அவர் வடக்கில் சென்று நடத்த வேண்டும். அவர் ஆளுநரை வம்பிழுக்கும் போது கூறிய “செருப்பாலேயே அடிப்பாங்க ” நிச்சயம் நடக்கும்

  2. Very well said Giri. I am really proud of you! Excellent article.

    அதர்மத்துக்கான எல்லா போரும் வாரிசுளால்தான் முடியும் என்பது விதி

    இந்திரஜித்தன், அஸ்வத்தாமன் என பல வரிசை உண்டு , அவர்கள்தான் சமாதானம் வரும் நிலையிலும் விடாமல் போரை இழுப்பார்கள், எல்லாம் அழிந்துபோக அவர்கள்தான் காரணமும் ஆவார்கள்

    அதர்மம் மீள தலையெடுக்க முடியாதபடி மொத்தமாக அழிய அவர்கள்தான் காரணமாய் இருப்பார்கள், வாரிசுகள் மகிமை அப்படி

    அவர்களே கடைசிகட்ட போரை உக்கிரமாக நடத்தி ஒன்றும் எஞ்சிவிடாமல் அழித்துவிட்டு ஓய்வார்கள் அத்தோடு அதர்மம் ஒழியும் என்பது என்றோ இந்துமதம் சொன்ன உண்மை

  3. “If Hindu Raj does become a fact, it will, no doubt, be the greatest calamity for this country. Hinduism is a menace to liberty, equality and fraternity. On that account it is incompatible with democracy. Hindu Raj must be prevented at any cost.” – DR BR Ambedkar

  4. அந்த மாநாட்டை நடத்தியவர்கள் “முற்போக்கு எழுத்தாளர் கழகம்” -த்தின் பிற்போக்கான எண்ணம். தமிழக இந்துக்களுக்கு உரைக்காதவரை மேலும் மேலும் தொடரும்.

  5. அருமையான நிதானமான அலசல். இதை விட உண்மையை யாரும் தெளிவாக கூறமுடியாது. ஒரு முறை , ஒரே ஒரு முறை பெரும்பாலான ஹிந்துக்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் மாற்று கட்சிக்கு வாக்களித்து திமுகவை வெளியே உட்காரவைத்தால் , அவர்களின் அணுகுமுறையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

  6. இந்தியாவை ஆள்வதே மூன்று சதவீத பிராமணர்கள்தான். தொன்னூறு சதவீத மீடியா சொந்தக்காரர்கள் பிராமணர்களே . பிராமணர்களுக்கு எதிராக எந்த நியூஸ் வந்தாலும் அமுக்கப்பட்டுவிடும் . கலாக்ஷேத்ரா, பத்மசேஷாத்திரி, பாஷ்யம் விஷயங்கள் என்ன ஆயின . ஐஐடியில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நீதிபதிகள் பிராமணர்களே . நீதிபதிகள் எந்த தேர்வும் இன்றி சக நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் . பிஜேபி நடத்தப்படுவதே பிராஹ்மணர்களுக்குகாகத்தான் . அமெரிக்காவிலும் பிராமணர்கள் தங்கள் ஜாதி வெறியை கம்பெனிகளில் நுழைக்கிறார்கள். சிஸ்கோவில் சில வழக்குகளில் பிராம்மணர்கள் குற்றவாளிகள் . கூத்தாடி பயல்களை தலைவராக கருதும் ஐடி கூலிகளுக்கு இந்து மதத்தை பற்றி என்ன தெரியும் . திராவிட கும்பல்களுக்கும் பிஜேபி கும்பல்களுக்கும் நாட்டை சூறை ஆடுவதில் எந்த வேற்றுமையும் இல்லை

  7. @Unmai Vilambi திமுகக்கு தெரியும். எதை எங்கே கூற வேண்டும், எங்கே கூறினால் எதிர்ப்பு இருக்கும் இருக்காது என்று.

    @ஸ்ரீனிவாசன் உங்கள் கருத்து மகிழ்ச்சியை அளித்தது.

    @தங்கமணி

    Don’t copy-paste others’ opinions here. I can also share Ambedkar’s comments which are fav to my argument. It’s not the correct way of discussion. Let me know your personal opinion and I can give you an explanation.

    @அழகு சந்தேகமில்லை.

    @Payapulla சந்தேகமே வேண்டாம். அவர்களுக்கு கிடைக்கும் வாக்கே, அவர்களை இதுபோலத் தைரியமாகப் பேச வைக்கிறது.

    @ramajeyam விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

  8. //நான் கிறித்துவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். என் மனைவி கிறித்துவர் என்று உதயநிதி கூறினார்//

    இத எங்க சொன்னார் WhatsAppலயா.

    அறிவில்லாதவங்களும், மதவெறி புடிச்சவங்களும் மதத்துக்காக vote போடுவாங்க.

  9. @பிரவீன்

    திமுக என்ற கண்ணாடியைக் கழட்டிட்டு பார்த்தால் தான் தமிழ்நாட்டில் நடக்குதுன்னு தெரியும்.

    WhatsApp லையா என்று புத்திசாலித்தனமா கேட்பதாக நினைக்கும் அறிவுக்கு YouTube ல தேடிப்பார்க்கலாம் என்று தோன்றவில்லையா?

    கட்சியைப் பிடித்துத் தொங்கறவங்களுக்கு தன் மதத்தையே இழிவுபடுத்தினாலும் துடைத்து விட்டுப் போக முடியும், மற்றவர்களும் அதையே செய்ய வேண்டிய தலையெழுத்து இல்லை.

  10. @giri

    “WhatsApp லையா என்று புத்திசாலித்தனமா கேட்பதாக நினைக்கும் மூளைக்கு YouTube ல தேடிப்பார்க்கலாம் என்று தோன்றவில்லையா”

    தேடி பாத்தேன் சொல்லியிருக்கார் அதே பேச்சுல நான் இஸ்லாமியன்னும் சொல்லிகொள்வேன்னு சொல்ராரே அத என் எழுதாம விட்டிங்க.

    மத அரசியல்ல DMK க்கும் bjp க்கும் enna வித்யாசம் DMK minority vote காக அவங்களுக்கு அதரவா பேசுறாங்க. Bjp majority vote காக minoroty மக்கள்லால இந்து மதம் ஆபத்துல இருக்குற மாதிரி பேசுறாங்க. ரெண்டுமே தப்புதான்.

    நீங்க மதத்துகாக vote போட்ட கட்சி ஆட்சி புடிக்கலான என்ன பன்னுவிக்க, யாருக்கு vote போடுவிங்க.

  11. @பிரவீன்

    உங்களோட கருத்துக்களிலேயே உங்களுக்கான பதில் உள்ளது.

    “தேடி பாத்தேன் சொல்லியிருக்கார். அதே பேச்சுல நான் இஸ்லாமியன்னும் சொல்லிகொள்வேன்னு சொல்ராரே அத என் எழுதாம விட்டிங்க”

    முன்பு என்ன சொன்னீங்க? WhatsApp லையா ன்னு கேட்டீங்க? இப்ப இஸ்லாமியன்னும் சொல்லிக் கொள்வேன்னு ன்னு சொன்னாருன்னு அடுத்ததுக்கு வரீங்க!

    அதை ஏன் எழுதாம விட்டீங்க என்று கேள்வி கேட்கத் தோன்றிய உங்களுக்கு உதயநிதி பேசியது உண்மையா என்று தேடி பார்க்கத் தோன்றவில்லையே!

    அவர் என்ன வேணாலும் சொல்லுவார்.. அவருக்கு சிறுபான்மையினர் வாக்கு 15% வேண்டும் அதற்காக எதையும் மாற்றிச் சொல்வார்.

    நாங்க போட்ட பிச்சைல தான் திமுக வெற்றி பெற்றதுனு ஒரு பாதிரியார் சொன்னதுக்கு பதிலே கூறாம இருந்தாரே ஸ்டாலின், அதுவே போதும் எந்த நிலையில் திமுக உள்ளது என்று புரிந்து கொள்ள.

    கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு மதமே இல்லைனு உதயநிதி கூறினார்! அப்புறம் எல்லா மதத்தையும் சொன்னேன் என்றார்!

    அவர் மாதிரி நேரத்துக்கு ஒன்று பேசிட்டு இருக்க முடியுமா? அரசியல்வாதி வாய்க்கு வந்ததை பேசி உங்களைப் போன்றவர்களை நம்ப வைக்கலாம்.

    கேட்டால் அதையும் கூறினேன், இதையும் கூறினேன் என்பார். கேட்கறவன் கேனையன் என்பதை மட்டும் சரியா புரிந்து வைத்துள்ளார்.

    இப்படி சொல்கிறவர் சனாதன ஒழிப்பு மாநாடு சொன்ன மாதிரி இஸ்லாம், கிறித்துவம் ஒழிப்பு மாநாடு என்று ஏன் செல்லவில்லை என்று யோசித்தால், மேற்கூறியதுக்கு பதில் கிடைக்கும்.

    இஸ்லாமையும் சொன்னார் என்று கூற தெரிந்த உங்களுக்கு சனாதன ஒழிப்பு போல ஏன் மற்ற மதங்களைக் கூறவில்லை என்று யோசிக்க தெரியல பார்த்தீங்களா?!

    “மத அரசியல்ல DMK க்கும் bjp க்கும் enna வித்யாசம்”

    அப்புறம் ஏன் உதயநிதிக்கு கேள்வி கேட்டு வந்தீங்க? இரண்டுக்கும் பொதுவா கேட்டு இருக்கணும்ல?

    சனாதன ஒழிப்புனு சொன்னதுக்கு வராத கோபம் உதயநிதி சொன்னதை தேடி கூடப் பார்க்காம கேள்வி கேட்கத் தோன்றுகிறதே!

    இது தான் வித்யாசம். இப்படி கேட்கும்படி திராவிடம் மாற்றி வைத்துள்ளது தான் வித்யாசம்.

    இதையெல்லாம் பார்த்துத் தான் ஆத்திரமாக வருகிறது.

    “DMK minority vote காக அவங்களுக்கு அதரவா பேசுறாங்க. Bjp majority vote காக minoroty மக்கள்லால இந்து மதம் ஆபத்துல இருக்குற மாதிரி பேசுறாங்க”

    ஆமாம், அதனால் நானும் பேசுகிறேன்.

    இப்ப நீங்க உதயநிதிக்காக பொங்கி வரலையா? உங்களுக்கேன் இதைக் கேட்கத் தோன்றியது? இந்துமதத்துக்காக ஏன் கேட்கத் தோன்றவில்லை.

    (இதை நீங்க இந்து என்ற அனுமானத்தில் பேசிக்கொண்டுள்ளேன்)

    இரண்டையும் கேட்டு இருந்தால், உங்கள் கேள்விக்கு மதிப்பு இருக்கும் ஆனால், செய்யலையே!

    “நீங்க மதத்துகாக vote போட்ட கட்சி ஆட்சி புடிக்கலான என்ன பன்னுவிக்க, யாருக்கு vote போடுவிங்க.”

    நான் மதத்துக்காக மட்டும் வாக்களித்தேன் என்று யார் உங்க கிட்ட சொன்னாங்க?

    இதுவும் ஒரு காரணம் அதற்காக மோசமான நிர்வாகம், ஆட்சி செய்தால், எதற்கு திரும்ப வாக்களிக்கணும்?

    நான் மட்டுமல்ல எந்தப் பெரும்பான்மை மக்களும் வாக்களிக்க மாட்டார்கள். பாஜக இல்லைனா சுயேட்சைக்கு வாக்களிப்பேன் ஆனால், திமுக க்கு மறந்தும் வாக்களிக்க மாட்டேன்.

    நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் இல்லாமல், மதத்தை மட்டுமே வைத்து ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    மோடி அரசு மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அதோடு இந்து மத உணர்வுகளையும் மதிக்கிறது.

    எனவே, இரண்டுக்குமே சேர்த்து தான் வாக்களிக்கிறேன்.

    இதுவரை ஒரே முறை மட்டுமே தமிழகத்தில் பாஜகக்கு வாக்களித்துள்ளேன். அண்ணாமலை வந்த பிறகு பாஜக மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.

    இனி எதிர்காலத்தில் திமுக ஒழியும் வரை பாஜகக்கு மட்டுமே வாக்களிப்பேன், என்னைச் சார்ந்தவர்களையும் வாக்களிக்க வலியறுத்துவேன்.

  12. @giri

    நா நீங்க எழுதுதனது பொய்ன்னு நினைச்சேன் காரணம் ஒபாமாவுக்கு என்ன தகுதி இருக்கு பதிவுல பாக்கிஸ்தான்ல 60 வருசம் முன்னாடி குறைந்த இந்து மக்கள் தொகை இப்போ குறைந்த மாதிரி எழுதி இருந்திங்க அது பொய். Latest data படி பாக்கிஸ்தான்ல இந்து மக்கள் தொகை அதிகமாயிருக்கு. அதனாலதான் Whatsappல வர்றதே நீங்க Fact Check பன்னமா எழுதுறிங்கன்னு நினைச்சேன்.

    அரசியல்வாதி எல்லாரும் அதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும்தான் அரசிலுக்கு வர்ராங்க அவங்க மக்களுக்கு சேவை செய்ய வர்ராங்கன்னு நினைக்குற அளவு நான் முட்டாள் இல்ல. எந்த அரசியல்வாதிக்கும் கட்ச்சிக்கும் விசுவாசி இல்ல.

    “இதை நீங்க இந்து என்ற அனுமானத்தில் பேசிக்கொண்டுள்ளேன்”

    முதல்ல நான் என்ன ஒரு மனுசனாதான் பாக்குறேன் அப்புறம்தான் இந்து

  13. @பிரவீன்

    “Latest data படி பாக்கிஸ்தான்ல இந்து மக்கள் தொகை அதிகமாயிருக்கு.”

    ஒபாமா கட்டுரையின் மையக்கருத்து பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை அதிகரித்து இருக்கா இல்லையா என்பதல்ல.

    அதோடு உங்க கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன், நான் கூறியது தான் சரி என்று வாதாடவில்லை.

    அங்கு இந்து மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு ஏன் உலக நாடுகள், ஊடகங்கள், இந்தியாவில் உள்ள இடது சாரிகள், இங்கே இந்துக்களை எதிர்த்துப் பொங்குவர்கள் இந்துக்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கவில்லை என்பதே.

    ஒபாமாக்கு இந்தியாவில் நடப்பது மட்டும் தெரிகிறது, பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகள், அவர் லட்சக்கணக்கில் கொன்ற அப்பாவி முஸ்லிம்கள் தெரியவில்லையா? என்பதே கேள்வி.

    நீங்களும் மக்கள் தொகை பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்களே தவிர, இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லையே!

    தற்போது வரை அங்கே அநியாயம் நடக்கிறது.

    “Whatsappல வர்றதே நீங்க Fact Check பன்னமா எழுதுறிங்கன்னு நினைச்சேன்.”

    நான் கூறுவது fact check செய்யாமல் கூறியதாக இருக்கட்டும் ஆனால், இவ்வளவு fact check பேசுற நீங்க செய்து இருக்கணும்ல?

    இங்கே எழுதப்படும் விவரங்களை ஒருமுறைக்கு பலமுறை பலரிடம் உறுதிப்படுத்திய பிறகே வெளியிடுகிறேன்.

    நான் குறிப்பிட்டதிலும் தகவல்கள் தவறு இல்லை, கூறிய காலம் தான் தவறு. அதையும் ஏற்றுகொண்டேன். மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்.

    என்ன தான் எச்சரிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் தவறுகள் நேர்வது இயல்பு. அதற்கு நீங்கள் உட்பட யாரும் விதிவிலக்கல்ல.

    “எந்த அரசியல்வாதிக்கும் கட்ச்சிக்கும் விசுவாசி இல்ல.”

    இந்துக்களுக்கு ஆதரவா சொல்வதை fact check செய்கிறீர்கள் ஆனால், உதயநிதி க்கு எதிரா கூறினால் fact check செய்ய தோன்றாதா?

    பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் சதவீதத்தை புள்ளி விவரமா பேசத் தெரிந்த உங்களுக்கு ஓவர் ஓவர் ன்னு உங்களுக்கு பின்னாடியே நடக்குற சம்பவம் தெரியலைனு சொல்றீங்க.

    “முதல்ல நான் என்ன ஒரு மனுசனாதான் பாக்குறேன் அப்புறம்தான் இந்து”

    கிடையாது.

    உங்களை மனுசனா பார்த்து இருந்தால், இந்துக்கள் துன்புறுத்தப்படுறாங்கன்னு பாகிஸ்தானையும் கண்டித்து இருக்கணும். அவர்கள் செய்வது தவறு என்று கூறி இருக்கணும்.

    இங்கே உதயநிதிக்காக பேசும் போது, இந்து மதத்தை ஒழிப்பேன்னு கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    நீங்க குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளின் கருத்துகளிலுமே இந்து மதத்தின் மீது வெறுப்புணர்வோடு தான் அணுகி இருக்கீங்க, மனுசனா இல்லை.

  14. சரி என்னதான் அண்ணன் எழுதி இருக்கார்னு பாக்கலாம்னு ஒரு ப்ளோ ல படிச்சிட்டு வந்தேன். பாத்தா டக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க.

    //இந்து மதத்தின் முக்கியச் சிறப்பு, இந்து மதத்துக்கென்று தலைமை இல்லை. யார் வழிநடத்தலும், கருத்து திணித்தலும் இல்லாமல் தானாகவே வளர்ந்து வரும் மதம்.//

    ஆனா ஒன்னு னா நீங்க இன்னும் மனு தர்மத்தை படிக்கலன்னு நல்லா தெரியுது. அல்லது நீங்க அத படிச்சதுக்கு அப்புறமும் இப்படித்தான் எழுதுறீங்கனா, உங்கள் தளத்தில் இருந்து நான் விலகி இருப்பது எனக்கு நல்லது

  15. @கார்த்திக்

    “சரி என்னதான் அண்ணன் எழுதி இருக்கார்னு பாக்கலாம்னு ஒரு ப்ளோ ல படிச்சிட்டு வந்தேன்.”

    என்ன எழுதி இருக்காங்கன்னு பார்த்ததுக்கு நன்றி காரத்திக் 🙂 .

    “ஆனா ஒன்னு னா நீங்க இன்னும் மனு தர்மத்தை படிக்கலன்னு நல்லா தெரியுது.”

    கார்த்திக் ஏற்கனவே இது பற்றி நீ எதோ கட்டுரையில் கூறி இருந்தாய், அதற்கு பதிலளித்ததாக நினைவு.

    நான் மனுதர்மத்தை படிக்கவில்லை, படிக்க ஆர்வமும் தற்போதைக்கு இல்லை.

    நீ எதோ மனுதர்மம் மட்டும் தான் சனாதன மதம் என்ற புரிதலில் இருப்பது போல உள்ளது. அதோட இது தான் இந்து மதத்துக்கு அத்தாரிட்டி என்பது போல கூறி வருகிறாய்.

    இந்து மதத்துக்குத் தலைவர் இல்லை, ஏராளமான அறிஞர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் உருவானது இந்து மதம் என்கிற சனாதன மதம்.

    இவர் கூறியதை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.

    எடுத்துக்காட்டுக்கு குரான், பைபிள் போல மனுதர்மம் புத்தகம் இந்து மதத்தில் பின்பற்றப்படவில்லை.

    சிலர் அதில் உள்ள சிலவற்றை எடுத்துப்பாங்க, சிலர் கீதையில் கூறியுள்ளதை எடுத்துப்பாங்க, சிலர் வள்ளலார் கூறியதை எடுத்துப்பாங்க.

    இது மாதிரி ஏராளம் இருக்கு.

    எனக்கு புரியாத விஷயம் நீ எதற்கு மனுதர்மத்தை பிடித்துத் தொங்கிட்டு இருக்கேன்னு!!

    இப்ப அதை யார் பின்பற்றுகிறார்கள்? அப்படியே பின்பற்றினால் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் எந்தக் கட்டாயமும் இல்லை.

    ஒரு மதத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. நல்லது மட்டுமே கூறிய மதம் என்று ஏதாவது உள்ளதா?

    இருந்தால் கூறு தெரிந்து கொள்கிறேன்.

    இந்து மதம் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே உள்ளது. 2000, 3000 வருடங்கள் முன்பு இதில் கூறப்பட்டது அந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்புடையதா இருந்து இருக்கலாம் ஆனால், தற்போது இல்லை.

    உனக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறன். எனவே, அதை நியாயப்படுத்த இதைத் தொடர்ந்து கூறிக்கொண்டு இருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

    பிடிக்காத மருமக கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது போல.

    இந்து மதம் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. உனக்கு பிடிக்கவில்லை, மதிக்கிறேன். எனக்கு பிடித்து இருக்கு அதை பற்றி எழுதுகிறேன்.

    கேள்வி இருந்தால் கேள், பதில் கூறுகிறேன்.

    பிடித்தால் ஏற்றுக்கொள், பிடிக்கவில்லையென்றால் புறக்கணி. அவ்வளவே!

    “நீங்க அத படிச்சதுக்கு அப்புறமும் இப்படித்தான் எழுதுறீங்கனா, உங்கள் தளத்தில் இருந்து நான் விலகி இருப்பது எனக்கு நல்லது”

    மனுதர்மம் புத்தகம் தான் ஒருத்தரை தீர்மானிக்கிறது அப்படித்தானே! சிறப்பான புரிதல்.

    ஒன்று நமக்கு ஒத்துவரவில்லை என்றால் விலகி இருப்பது நல்லது தான். இதைத்தான் துவக்கத்திலிருந்து கூறி வருகிறேன்.

    உன்னோட விருப்ப கட்சி திமுக தற்காலத்தில் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    அதை எதிர்த்து உனக்கு கோபம் வரவில்லை ஆனால், 3000 வருடங்கள் முன்பு எழுதப்பட்ட, தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றுக்கு உனக்கு கோபம் வருகிறது.

    ஏனென்றால், திமுக பற்றி எழுதுகிறேன் அதற்கு ஒரு கருத்து கூட, ஆமாங்கண்ணா இவங்க செய்வது தவறு என்று கூறவில்லை ஆனால், மனுதர்மத்துக்கு மட்டும் வந்து கேள்வி கேட்கிறாய்.

    முரணா இருக்கு!

    இனியும் நான் தொடர்ந்து திமுக, திராவிட மாடல், இந்து மதத்துக்கு விரோதமாக பேசும் அனைவரையும் கடுமையாக விமர்சித்து எழுதுவேன்.

    யாரையும் வற்புறுத்திப் படிக்க வைக்க முடியாது. எனவே, விருப்பம் என்றால் தொடரலாம், விருப்பமில்லை என்றால் புறக்கணிக்கலாம்.

    ஆனால், நான் இப்படித்தான் எழுதுவேன். கேள்வி கேட்கப்பட்டால், புறக்கணிக்காமல் தைரியமாக பதிலளிப்பேன். தவறு என்றால் ஏற்றுக்கொள்வேன்.

  16. அண்ணா எனக்கு இப்போது எந்த மதத்தின் மீதும், அரசியல் கட்சியின் மீதும், கடவுள் மீதும் வெறுப்பும் இல்லை, ஆதரவும் இல்லை. கடந்த காலங்களில் என் வாழ்க்கையில் நடந்த அதீத இழப்புகள், எதிர்பாரா சந்தோசங்கள் இவை எல்லாம் சேர்ந்து கடவுள் மீது இருந்த மதிப்பு மரியாதையை இழக்க செய்துவிட்டன. அதனால் மதம், கடவுள், அரசியல் இவற்றிற்கு நான் எதிரியும் அல்ல, பக்தனும் அல்ல.

    நான் எதிர்ப்பது ஒன்றே ஒன்றுதான் அது சங்கித்தனம். உதாரணத்திற்கு என் மனைவி மருவத்தூர்க்கு மாலை போட்டுக்கிட்டு போறத நான் தடுக்க மாட்டேன். அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. ஆனா விரதம்ன்ற பேர்ல பட்னி கிடக்கறத நான் அனுமதிக்க மாட்டேன். இதுபோன்ற சங்கித்தனத்த கொண்டதுதான் மனு. அத ஏற்றுக்கொண்டு செயல்படும் சனாதன மதம்.

    அப்புறம் சனாதன மதமும் இந்து மதமும் ஒன்னுன்னு சொல்றிங்க. இதுவே முதல்ல தப்பு. நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரன் சூட்டிய பெயர் இது. இதற்கு ஆதாரமும் உள்ளது.

    நான் பெரியார், அண்ணா, கலைஞர் இவங்கள பத்தி படிச்சி அவங்கள தலைவரா ஏத்துக்கிட்டதனால திமுக வ ஆதரிச்சேன். ஆனா இப்போ இருக்க வாரிசு அரசியல்ல எனக்கு விருப்பம் இல்ல. அதனால அரசியல் பதிவுலாம் இப்ப படிக்கறது இல்லனா.

    நான் இப்பவும் சொல்றேன் இனி உங்களுடைய அரசியல் ஆன்மிக பதிவுகளில் இருந்து விலகி இருப்பதே எனக்கு நல்லது.

    இவ்விரு பதிவுகளை தவிர்த்து மற்றவற்றை வழக்கம்போல் படித்துக்கொண்டே இருப்பேன்.

    இன்னும் சொல்ல மனசுல எவ்வளவோ இருக்கு, ஆனா எனக்கு டைப் பண்ண கடினமா இருக்கு.

    அப்புறம் இன்னொரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன். நான் இப்போ பெருந்துறை ல தான் வேலை செய்றேன் ணா . உங்க ஊருக்கு போகணும்னு ஆச. போய்ட்டு வந்து அத பத்தி தனியா ஒரு மெயில் பண்றேன் உங்களுக்கு.

  17. கார்த்தி இந்த மாதிரிக் கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல எனக்கும் சுவாரசியமா இருக்கும். அதை விட்டுட்டு மனுநீதி புத்தகம் நீங்க படிக்கல அதனால் நான் காக்கா ஓட்ட மாட்டேன்ன்னு சொல்வது சரியா?!

    இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலளிப்பது எனக்கு விருப்பமானது. இதைக் கொஞ்சம் திறந்த மனதோடு படிக்கணும், நீ சார்ந்த சித்தாந்த எண்ணத்திலேயே படித்தால், படிப்பது வீண்.

    சரியா!

    “அண்ணா எனக்கு இப்போது எந்த மதத்தின் மீதும், அரசியல் கட்சியின் மீதும், கடவுள் மீதும் வெறுப்பும் இல்லை, ஆதரவும் இல்லை. ”

    கடவுள் மீது விருப்பு இல்லை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், திமுக ஆதரவாளன் தானே!

    “கடந்த காலங்களில் என் வாழ்க்கையில் நடந்த அதீத இழப்புகள், எதிர்பாரா சந்தோசங்கள் இவை எல்லாம் சேர்ந்து கடவுள் மீது இருந்த மதிப்பு மரியாதையை இழக்க செய்துவிட்டன.”

    ஏற்கனவே ஒரு முறை இது பற்றி நீ கூறியதாக நினைவு.. உன் நண்பனுக்கு எதோ நேர்ந்ததாகவும் அதனால், இந்த நிலை எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தாய் என்று நினைக்கிறன்.

    “நான் எதிர்ப்பது ஒன்றே ஒன்றுதான் அது சங்கித்தனம்”

    அது என்ன சங்கித்தனம்? புரியலையே!

    “உதாரணத்திற்கு என் மனைவி மருவத்தூர்க்கு மாலை போட்டுக்கிட்டு போறத நான் தடுக்க மாட்டேன். அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. ஆனா விரதம்ன்ற பேர்ல பட்னி கிடக்கறத நான் அனுமதிக்க மாட்டேன். இதுபோன்ற சங்கித்தனத்த கொண்டதுதான் மனு. அத ஏற்றுக்கொண்டு செயல்படும் சனாதன மதம்.”

    உன்னோட புரிதல் எவ்வளவு தவறா இருக்குன்னு பாரு.. உண்மையிலேயே வருத்தப்படுறேன், எந்த அளவுக்குப் புரிதல் இல்லாமல் ஒன்றை எதிர்த்துக்கொண்டு இருக்கிறாய் என்று.

    விரதம் என்பது கொடூரமான செயல் அல்ல. அது ஒரு வகையில் உடலுக்கு நல்லது.

    விரதம் பற்றி இக்கட்டுரையில் எழுதியுள்ளேன் https://www.giriblog.com/sashti-viratham-why-how/

    இதற்கு நீ கருத்தும் இட்டுள்ளாய் ஆனால், கட்டுரையை உள்வாங்கவில்லை என்று நீ மேற்குறிப்பிட்டதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

    உனக்கு புரிதல் இல்லை என்பதாலையே ஒன்று தவறு என்பதாகி விடாது.

    நீ சொன்ன விரதத்தை ஒரு விஷயத்தில் ஏற்றுக்கொள்கிறேன். வயதானவர்கள் சிலரும் விரதம் இருப்பார்கள், அது அவசியமில்லை.

    அது அவர்கள் உடல்நிலையை பாதிக்கும்.

    எடுத்துக்காட்டுக்கு என் அம்மா விரதம் இருப்பார்கள். நான் கடுமையாக எதிர்த்த பிறகு தற்போது கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள்.

    கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதத்தில், ‘இவ்வாறு பேசுவதை, அனைத்தையும் எதிர்ப்பதை பகுத்தறிவு என்று எண்ணி ஏமாந்தேன்’ என்று குறிப்பிட்டு இருப்பார்.

    அது போன்ற ஒரு நிலையில் தான் நீ இருக்கிறாய். போலி பகுத்தறிவில் ஏமாந்து இருக்கிறாய். நீ படித்த திராவிடம் உன்னை ஏமாற்றியுள்ளது.

    எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, அதே நேரத்தில் என் அம்மா மீது அக்கறையும் உண்டு. எனவே விரதம் வேண்டாம் என்று கூறுகிறேன். அதே சமயம் நான் விரதம் இருக்கிறேன்.

    இது தான் பகுத்தறிவு. நீ செய்வது உன்னை புத்திசாலியாக கட்டிக்கொள்ள கண்ணதாசன் செய்தது போன்ற ஒரு செயல்.

    முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள், அவர்கள் முட்டாள்களா! நோன்பு ஒரு வகையில் அவர்கள் உடலை, மனதை ஒழுங்குபடுத்தும் ஒரு வழி.

    எனவே, புரிந்து கொள்ளாமல் பகுத்தறிவு என்று பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.

    BTW எனக்கு மருவத்தூர் அடிகளார் பிடிக்காத நபர்.

  18. “சனாதன மதமும் இந்து மதமும் ஒன்னுன்னு சொல்றிங்க. இதுவே முதல்ல தப்பு. நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரன் சூட்டிய பெயர் இது. இதற்கு ஆதாரமும் உள்ளது.”

    நான் எப்போது இல்லைனு சொன்னேன்!

    வெள்ளைக்காரன் வைத்தது தான் இந்து மதம் என்ற பெயர்.

    இதற்கு பத்திரிகையாளர் சோ சிறப்பான பதிலை அளித்து இருந்தார்.

    கார்த்திக் ன்னு சொன்னா நீ திரும்பி பார்ப்பே.. அதே மூன்று பேர் இருந்தால், எந்த கார்த்திக்னு குழப்பம் வரும்.

    அது போல அப்போது இந்தியாவில் இந்து மதம் மட்டும் தான் இருந்தது. எனவே, அதற்கு பெயர் தேவைப்படவில்லை.

    பின்னர் கிறித்துவம், இஸ்லாம் உள்ளே வந்த பிறகு பெயர் தேவைப்பட்டது. எனவே, அவன் வைத்தது இந்து மதம்.

    அதற்கு முன் சனாதனம், அதற்கு முன் பெயரே இல்லாமல் பின்பற்றப்பட்டு இருக்கலாம். காரணம், இந்து மதம் அவ்வளவு தொன்மையானது.

    “நான் பெரியார், அண்ணா, கலைஞர் இவங்கள பத்தி படிச்சி அவங்கள தலைவரா ஏத்துக்கிட்டதனால திமுக வ ஆதரிச்சேன்.”

    இதுவும் தவறு கார்த்திக். நானும் திராவிட கட்சிகள் சொன்னதை நம்பி பெரியார் மீது மதிப்பு வைத்து இருந்தேன்.

    ஆனால், பலருடைய கருத்துகளையும், ஆதாரங்களையும் தெரிந்து கொண்ட பிறகு தான், இவர்கள் இவ்வளவு நாட்களாக நம்மை ஏமாற்றி வந்ததே புரிய வந்தது.

    பெரியார் என்ன சாதித்தார்? என்ற கட்டுரையை விரைவில் எழுதப்போகிறேன். அதில் உன் கேள்விகளை முன் வைக்கலாம்.

    கலைஞர் பற்றியும் திராவிடம் பற்றியும் எழுதுவேன், அதையும் படி, ஒருவேளை உன் நம்பிக்கைகள், மதிப்புகள் சரியலாம்.

    “இப்போ இருக்க வாரிசு அரசியல்ல எனக்கு விருப்பம் இல்ல. அதனால அரசியல் பதிவுலாம் இப்ப படிக்கறது இல்லனா.”

    இப்ப நீ திமுக ஆதரவாளனா? இல்லையா? அதை மட்டும் சொல்.

    “நான் இப்பவும் சொல்றேன் இனி உங்களுடைய அரசியல் ஆன்மிக பதிவுகளில் இருந்து விலகி இருப்பதே எனக்கு நல்லது.”

    கார்த்தி பிடிக்காததை படிக்காமல் இருப்பது நல்லது, இதை முன்பிருந்தே வலியுறுத்துகிறேன் ஆனால், தவறான புரிதலில் புறக்கணிப்பது உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வது போல.

    நீ கடவுளை வெறுப்பதாகக் கூறினாய். அது உன் விருப்பம் ஆனால், நான் சொல்வதை கொஞ்சம் கேள்.

    நாம் எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்று எல்லோரும் நம்பினார்கள் என்றால், யாருக்குமே கடவுள் நம்பிக்கை தற்போது இருக்க வாய்ப்பில்லை.

    சில சம்பவங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது. அது நமது விதி. சிலவற்றுக்கு காரணம் தெரியாது. காரணம் தெரியவில்லை என்பதற்காக வெறுப்பது தவறு.

    அதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு அது தொடர்பான புரிதல்களைத் தரும் நூல்களைப் படிக்க வேண்டும்.

    முதலில் எதிலும் ஒரு நம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் வேண்டும். எதிலும் அவ நம்பிக்கை, வெறுப்புணர்வு இருந்தால், எதுவுமே சரியாக நடக்காது.

    இதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன் https://www.giriblog.com/the-miracles-of-your-mind/

    நான் கடவுளை நம்புகிறேன், நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொண்டதால் பல நன்மைகளை பெறுகிறேன்.

    என்னை கடவுள் காப்பதாக நம்புகிறேன், அதை உண்மையாக்கும் சம்பவங்களும் நிறைய என் வாழ்க்கையில் நடைபெறுகிறது.

    எனவே, கடவுள் மீதான நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    எனவே, வெறுப்புணர்வையும், போலி பகுத்தறிவையும் வளர்த்தால், வாழ்க்கையில் எல்லாமே வெறுமையாக, வெறுப்பாக, போலியாக தோன்றும்.

    கடவுளை வெறுக்காமல், நேர்மறை எண்ணங்களை வளர்த்து முழு மனதோடு கடவுளை வணங்கி, முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்.

    நிச்சயம் உன் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

    இவ்வளவு நாட்களாக போலி பகுத்தறிவை பின்பற்றி நீ சாதித்தது என்ன? ஏன் ஒருமுறை நான் கூறியதை முயற்சிக்கக்கூடாது?

    ஒருவேளை நான் கூறுவது கூட உன் மாற்றத்துக்குக் கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதலாமே!

    எனவே, இவ்வளவு நாட்களாக இருந்த எண்ணங்களை ஒதுக்கி மேற்கூறியதை பின்பற்றி என்ன நடக்கிறது என்று பார். பின் முடிவு செய்.

  19. “இவ்விரு பதிவுகளை தவிர்த்து மற்றவற்றை வழக்கம்போல் படித்துக்கொண்டே இருப்பேன்.”

    நன்று ஆனால், ஆன்மிகம் நல்லது, திரும்ப கூறுகிறேன். அரசியலை புறக்கணிப்பது பற்றி எனக்கு வருத்தம் இல்லை காரணம், அதனால் பெறப்போவது எதுவும் இல்லை.

    அரசியலை தெரிந்து வைத்துக்கொள்ளலாம் ஆனால், தீவிரமாக ஈடுபட, விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

    ஆனால், ஆன்மீகத்தால் நீ அடைவது ஏராளம். அது உனக்கு தெரியவில்லை என்பதாலே, தவறான புரிதலில் அதை எதிர்த்துக்கொண்டு இருக்கிறாய்.

    மதத்தைப் போற்று என்பது என் கருத்தல்ல, கடவுளை நம்பு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள் என்பதே நான் கூற வருவது.

    மேலே கூறியபடி நான் கூறியதை திறந்த மனதுடன் படித்து மாற்றிக்கொள்ள முயற்சித்தால், நிச்சயம் உன் வாழ்க்கை மாறும்.

    மாறாக போலி பகுத்தறிவை பின்பற்றினால் வாழ்க்கையும் போலியாகவே இருக்கும். உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டு இருப்பாய்.

    உன் பிடிவாதத்தை, முன் முடிவை, ஈகோவை தளர்த்தி நான் கூறியதை பொறுமையாக யோசித்துப்பார்.

    முடிவு உன் கையில்.

    எதோ ஒரு வகையில் உன்னைப் பிடிக்கும் என்பதாலே இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன்.

    தோராயமாக 2013 ல் இருந்து படித்து வருகிறாய். அதோட என் பையன் பற்றிய ஒரு கட்டுரையில் தான் உன்னோட முதல் கருத்து என்ற அன்பும் ஒரு காரணம்.

    “நான் இப்போ பெருந்துறை ல தான் வேலை செய்றேன் ணா . உங்க ஊருக்கு போகணும்னு ஆச. போய்ட்டு வந்து அத பத்தி தனியா ஒரு மெயில் பண்றேன் உங்களுக்கு.”

    அப்படியா! சூப்பர். நான் அதிக நாள் விடுமுறையில் வந்தால், உன்னைச் சந்திக்க முயல்கிறேன்.

    எங்க ஊரிலிருந்து பெருந்துறை ரொம்ப பக்கம் தான்.

    என் பள்ளி நண்பன் அந்தப்பக்கம் தான் மெடிக்கல் ரெப் ஆக இருக்கான், அவனையும் பார்த்துட்டு, உன்னையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறேன்.

    உனக்கு ஒருவேளை உதவியாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here