சமச்சீர் கல்வி முறை விமர்சனத்துக்குள்ளானது ஏன்?

3
சமச்சீர் கல்வி முறை JEE-NEET-exams

சமச்சீர் கல்வி முறை

மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒருங்கிணைத்துச் சமச்சீர் கல்வி முறை 2010 – 2011 ம் ஆண்டு, கலைஞர் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்தது மிகச்சிறப்பானது. போக்குவரத்துக் கழகங்களை ஒருங்கிணைத்துப் பெயர் மாற்றியது, மாவட்டங்களின் பெயர் மாற்றியது போலக் கல்வி முறையையும் ஒருங்கிணைத்தது வரவேற்பை பெற்றது.

ஏன் இந்த ஒருங்கிணைப்பு?

கல்வி முறையில் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து அனைவருக்கும் ஒரே மாதிரியான படிப்பைக் கொண்டு வரச் செய்த முயற்சி தான் சமச்சீர் கல்வி முறை.

பாடத்திட்டம் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சரியான அளவில் இருக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது. Image Credit

காரணம், நகரங்களில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, வளர்ச்சியடையாத கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்காது என்ற எண்ணத்தில் பாடத்திட்டம் கடினமாக இல்லாமல் வடிவமைக்கப்பட்டது.

இத்திட்டம் கொண்டு வரப்பட்ட போது பாடங்கள் கடினமாக இருந்ததாகக் கூறி, குறைக்க ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதன் பிறகு குறைக்கப்பட்டது என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

துவக்கத்தில் பாராட்டைப் பெற்ற சமச்சீர் கல்வித்திட்டம் பின்னர் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இதன் பிறகு ஓரிரு வருடங்களில் சமச்சீர் கல்வி முறை தரமானதாக இல்லை என்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை CBSE பள்ளியில் சேர்க்க துவங்கினார்கள்.

இவையல்லாது, ‘அரசுப்பள்ளி மாணவர்களும் நம் பிள்ளைகளும் ஒன்றா?!‘ என்று கெளரவக் குறைச்சலாகக் கருதியவர்களும், CBSE பள்ளியில் சேர்த்தார்கள்.

எதிர்ப்பு

2010 ம் ஆண்டில் 1 & 6 வகுப்புகளுக்குச் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு 2011 ல் ஆட்சிக்கு வந்த ‘ஜெ’, சமச்சீர் கல்வி முறை தரமற்றது என்று எதிர்த்தார்.

‘ஜெ’ எதிர்ப்பால், மாணவர்களுக்குப் புத்தகம் வழங்குவது தாமதமானது.

பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில், மற்ற வகுப்புகளுக்கும் செயல்படுத்தி, பாட புத்தகங்களை விநியோகிக்கச் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

‘ஜெ’ அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீட் தேர்வு

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்போதைய முதல்வர் ‘ஜெ’ அவர்களால், தமிழகத்துக்குத் தற்காலிகமாக விலக்குப் பெறப்பட்டது ஆனாலும், நீட் தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் இடைப்பட்ட காலத்தில் தயார் செய்யப்படவில்லை.

பாடத்திட்டத்தை மாற்றத் திட்டமிடப்பட்டது ஆனால், செயல்படுத்தப்படவில்லை. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நீட் தேர்வின் முக்கியத்துவம் அரசால் கொண்டு சேர்க்கப்படவில்லை.

எனவே, மாணவர்கள் படிப்பிலும், மனதளவிலும் இத்தேர்வுக்குத் தயாராகவில்லை.

பாடத்திட்டமும் நீட் தேர்வை எழுதும் அளவுக்குச் சிறப்பானதாக இல்லையென்பதால், தேர்வை மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

சமச்சீர் கல்வி முறை ஒரு பிரச்சனை என்றாலும், ‘ஜெ’ அரசும் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு அக்கறை கொள்ளவில்லை.

எனவே, குழப்பங்கள், பிரச்சனைகள் அச்சமயத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தன.

இதனால் பாதிக்கப்பட்டது அக்காலக் கட்டங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே! அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற முடிவுகளால், செயல்களால், எதிர்ப்புகளால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது.

மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்ததற்கு தமிழக அரசியல் கட்சிகளே காரணம்.

NCERT (The National Council of Educational Research and Training)

மத்திய அரசாங்கத்தால் 1961 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு NCERT. மத்திய மாநில அரசாங்கங்களுக்குப் பாடத்திட்ட முறையை வெளியிடுகிறார்கள்.

மத்திய அரசின் CBSE அமைப்பு, NCERT பாட அடிப்படையில் பாடத்திட்டத்தை எடுத்துக்கொண்டது.

மற்ற மாநிலங்களும் தங்கள் மாநில பாடத்திட்டத்துக்கு எடுத்துக்கொண்டன, சில மாநிலங்கள் அவற்றில் மாறுதல் செய்து கொண்டன.

சமச்சீர் கல்வி முறையும் NCERT கல்வி முறையை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்படியே இருந்தாலும் மாணவர் திறனை மேம்படுத்தக்கூடிய அளவில் வடிவமைக்கப்படவில்லை என்பதே குற்றச்சாட்டு.

NEET JEE

இந்திய அளவில் நடத்தப்படும் NEET, JEE தேர்வுகள், NCERT கல்வி வழிகாட்டுதலை அடிப்படையாக வைத்துக் கேள்விகள் அமைக்கப்படுகின்றன.

பலரும் நினைப்பது போல CBSE பாடத்திட்டத்தை வைத்தல்ல.

CBSE பாடத்திட்டம் NCERT கல்வி முறையை அடிப்படையாக வைத்து இருப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.

சமச்சீர் கல்வி இதற்கு ஈடுகொடுக்க முடியாததால், கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினார்கள்.

தமிழக மாணவர்கள் திறமையற்றவர்கள் அல்ல, பாடத்திட்டம் சரியில்லை அல்லது மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டமாக இல்லை.

தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளச் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் போதாது.

தமிழகப் பாடத்திட்டம்

தமிழகத்தில் Blue Print எனப்படும் முக்கியக் கேள்விகளை வைத்துத் தேர்வு எழுதும் முறையாலும், மனப்பாடம் செய்து எழுதும் முறையாலும் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளுடன் போட்டிபோட முடியவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, தமிழகச் சமச்சீர் பாடத்திட்டம் Advanced ஆக இல்லாமல், அடிப்படை அளவிலேயே இருந்தது.

இதனால் தமிழக மாணவர்களை விடச் சில மாநில மாணவர்கள் திறமை குறைந்து இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.

‘ஜெ’ இறப்புக்கு பிறகு தமிழக நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், உச்சநீதிமன்றமும் மறுத்து விட்டது.

இதனால் மாணவர்கள் எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

எனவே, முதல் முறை மிகக் கடுமையான விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்தன.

மாற்றப்பட்ட பாடத்திட்டம்

இதன் பிறகு ‘ஜெ’ ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடத்திட்ட முறையைக் கல்வியாளர்கள் உதவியுடன் எடப்பாடி அரசு மாற்றத் துவங்கியது.

2018, 2019 ல் 11 மற்றும் 12 வகுப்புப் பாடத்திட்டங்கள் CBSE பாடத்திட்டத்தைவிடச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

2020 ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், புதிய பாடத்திட்டத்தின் படி எழுதியவர்கள். 97% கேள்விகள் தமிழகப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது.

நீட் தேர்வுக் கேள்விகள் CBSE பாடத்திட்டத்தை விட தமிழகப் பாடத்திட்டத்தில் அதிகளவில் அல்லது இணையாக வந்து இருந்தன.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் ‘11 & 12 ம் வகுப்புப் பாடத்திட்டங்களைப் படித்தாலே போதும், இவற்றில் இருந்து தான் அனைத்துக் கேள்விகளும் கேட்கப்பட்டன‘ என்று கூறினார்கள்.

இதற்கு முன்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு 11ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படாமல் 12 ம் வகுப்புப் பாடங்களே நடத்தப்பட்டன அல்லது குறைந்த மாதங்களே 11 ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்பட்டன.

வரும் காலங்களில், 11 & 12 ம் வகுப்புப் பாடத்திட்டங்களை மாணவர்கள் சரியாகப் படித்தாலே போதுமானது, நீட் பயிற்சி வகுப்பு தேவையிருக்காது என்ற நிலை வரும்.

தவிர்த்து இருக்கக்கூடிய தவறு

நான்கு கல்வி அமைப்புகளைக் ஒருங்கிணைத்தது மிகச் சரி. அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டதும் சரி.

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பாடத்திட்டம் இல்லாமல் போனதே தவறு.

இதைக் கல்வித்துறையாளர்கள் கலைஞருக்குக் கூறவில்லையா? கூறி, கலைஞர் கேட்கவில்லையா?

ஏன் என்றால், ‘ஜெ’ அளவுக்குக் கலைஞர் பிடிவாத குணம் கொண்டவரல்ல, மாற்றங்களை ஏற்றுக் கொள்பவரே.

இது யாருடைய தவறாக இருந்தாலும், இறுதியில் கலைஞர் அரசின் தவறு, சமச்சீர் கல்வித்திட்டத்தின் தவறு என்றே கூறப்படும். இது நியாயமான விமர்சனமே!

தற்போது எடப்பாடி அரசு வடிவமைத்த பாடத்திட்டத்தை 2010-2011 கல்வியாண்டில் வைத்து இருந்தால், நீட் தேர்வை நம் மாணவர்கள் ஊதி தள்ளியிருப்பார்கள்.

இதைக் கலைஞர் செய்து இருந்தால், வரலாற்றில் இடம் பிடித்து இருப்பார்.

தமிழகக் கல்வி முறையே வேறு கட்டத்துக்குச் சென்று இருக்கும். மேலும் பல திறமையான மாணவர்கள் உருவாகி இருப்பார்கள்.

தேசிய தேர்வுகள்

NEET மட்டுமல்ல, JEE போன்ற தேர்வுகளிலும் எளிதில் வெற்றி பெற்று இருப்பார்கள். தற்போது மற்ற மாநில மாணவர்களே இதில் முன்னணியில் உள்ளார்கள்.

முன்பே புதிய பாடத்திட்டம் அமலாக்கப்பட்டு இருந்தால், தற்போது தமிழக மாணவர்கள் நிலையே வேறாக இருந்து இருக்கும்.

10 வருடங்களாகப் படித்து, ஊறி எந்தத் தேசிய தேர்வையும் சமாளிக்கும் திறனைப் பெற்று இருப்பார்கள்.

தற்போது நடக்கும் நீட் பிண அரசியலுக்கு வழியே இருந்து இருக்காது.

நீட் தேர்வு கொண்டு வந்து, தமிழக மாணவர்களே அதிகம் பயன்பெறுகிறார்கள்!‘ என்று மற்ற மாநிலங்களில் புகைச்சல் ஆகி இருக்கும்.

யாரோ செய்த தவறின் காரணமாக எப்படியோ இந்நிலை ஏற்பட்டு விட்டது.

முதலில் இருந்து ஆரம்பிக்கும் நிலை

தற்போது நாம் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். கிட்டத்தட்ட பொன்னான 10 வருடங்கள் வீணாகி விட்டது.

வரும் காலங்களில் நம் மாணவர்கள் தெறிக்க விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால், சரியான பாடத்திட்டத்தை முன்பே அமைக்காமல் விட்டோமே என்று ஆதங்கமாக உள்ளது.

தமிழக மாணவர்கள் முன்னணியில் இருப்பதைப் பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டிய நேரத்தில், தற்கொலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

திரும்பவும் கூறுகிறேன், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பிரச்சனைகளை, தோல்விகளை எதிர்கொண்டதற்கு முழுக்க அரசியல்வாதிகளும், பொறுப்பில் இருந்தவர்களுமே காரணம், மாணவர்கள் அல்ல.

வரும் காலங்களில் நிச்சயம் நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து தேசிய தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் கலக்குவார்கள்.

குறிப்பு

எதனால் நம் மாணவர்கள் பின் தங்கினார்கள், பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் என்பதை, பல கட்டுரைகளைப் படித்து, விவாதித்துத் தெரிந்து கொண்டதை என் ஆதங்கமாக எழுதியுள்ளேன், வேறு எந்த நோக்கமுமில்லை.

இக்கட்டுரை ஓரளவு புரிதலைக் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

பிண அரசியல்

இரு மொழிக் கொள்கை சரியா தவறா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி, ரொம்ப தெளிவா, புரியும் படி, நேர்த்தியா எழுதி இருக்கீங்க.. கட்டுரையை படித்த பின் தான் எனக்கு பல கேள்விகளுக்கனான விடைகளும், விவரங்களும் முழுமையாக புரிந்தது.. உண்மைய சொல்லப்போனால் சமச்சீர் கல்வி முறை என்று பல இடங்களில் கேட்டதுண்டு.. ஆனால் அதை பற்றி முழுமையான விவரம் தெரியவில்லை.. இதை எதிர்த்து போராட்டங்களும், எதிர்ப்புகளும் நடந்தவைகள் செய்திகளில் பார்தததாக நினைவில் இருக்கிறது..

    என்னுடைய சொந்த அனுபவத்தில் படிப்பிற்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை என்னுடைய முதல் நேர்காணலின் போது தான் உணர்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், நான் படித்த படிப்பிற்கும், கொடுத்த வேலைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை.. ஆனால் இந்த புரிதல் எனக்கு ஏற்பட 10, 12, UG, PG இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது..

    படிக்கும் போது இந்த படிப்பு தான் வாழ்க்கை என்ற நிலையில் படித்தேன்.. படிப்பை முடித்து விட்டு வெளியே வந்த பின்பு தான் எல்லாம் புரிந்தது.. தற்போது கூட ஒரு விஷியம் புரியவில்லை.. ஆண்டுதோறும் புது, புது பல கல்லூரிகள் (குறிப்பாக பொறியியல் கல்லூரிகள்) தொடங்கப்படுகிறது, மாணவர்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது, ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க படிக்கின்றனவா என்றால் கேள்வி குறியே???

    வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடுத்தர அதற்கு கீழ் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் தான் மிக பெரிய பிரச்சனை.. குறிப்பாக அரசு பள்ளியில் படித்து முடித்து விட்டு வெளி வருபவர்களின் நிலை கொஞ்சம் கடினம்..

    அரசு அலுவலகத்தில் கடை நிலை ஊழியரை கூட ஏதோ ஒரு வகையில் தேர்வு வைத்து தான் தேர்ந்து எடுக்கின்றனர்.. ஆனால் நம்மை ஆளும் அரசியல்வாதிகளுக்கு “தேர்தல்” வெற்றி மட்டும் தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.. ஒரு ஏழைக்கு மூன்று வேளை உணவு என்பது சரித்திர சாதனையாகிறது.. ஆனால் அரசியல் வாதிகளின் ஊழல் விண்ணை முட்டுகிறது..

    தகுதியான நபர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும்.. பாரம்பரியம் மிக்க பாரத கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்.. பாரதி கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. @mika கலைஞர் அறிமுகப்படுத்தியதால் எதிர்த்தார்களா அல்லது உண்மையிலேயே எதிர்த்தார்களாக என்பது தெரியாது ஆனால், எதிர்ப்பு சரியே.

    @யாசின் நன்றி 🙂 . அரசியல் சலிப்பே மேலிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!