மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக லால் சலாம் படம் எடுக்கப்பட்டுள்ளது.
லால் சலாம்
சிறு வயது முதல் சண்டையிட்டுக்கொள்ளும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த், ஒரு கிரிக்கெட் போட்டியில் மோதும் போது சிறு சண்டையாக ஆரம்பித்து மதக்கலவரமாகி விடுகிறது. Image Credit
இதை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக ஊதி பெரியதாக்க, சிக்கலாகி விடுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே லால் சலாம்.
இது 1993 ம் ஆண்டு நடக்கும் கதையாக வருகிறது.
மத ரீதியான திரைப்படங்கள் எப்போதுமே அனைவரையும் திருப்தி செய்து விடாது காரணம், அவரவர் தங்கள் மதத்தைக் கதையில் நிறுத்திப்பார்ப்பார்கள்.
முதன்மை முஸ்லீம் கதாபாத்திரமாக ரஜினி நடித்துள்ளதாலும், கதை அப்படிப்பட்டது என்பதாலும், முஸ்லிம்களுக்கு இக்கதையில் Upper Hand இருப்பதை மறுக்க முடியாது.
ஐஸ்வர்யா
3 படம் தோல்வியானாலும் ஒரு முதல் பட இயக்குநரின் படம் என்று கூற முடியாத அளவுக்கு இருந்தது.
இதற்கு முன் வந்த ‘மயக்கம் என்ன‘ தனுஷ் கதாபாத்திரமும் 3 படமும் ஒரே மாதிரி என்பதாலும், இப்படம் மக்களைக் கவராமல் போனது.
லால் சலாம் படத்தில் தனது முழு திறமையை ஐஸ்வர்யா காட்டியுள்ளார். இது போன்ற மத ரீதியான கதையை எடுக்கவே மிகத் தைரியம் வேண்டும்.
முக்கியமாக, அதைச் சரியான முறையில் கொடுக்க வேண்டும்.
ரஜினி
இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி நடித்ததாகத் தலைவர் கூறி இருந்தார்.
முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். காரணம், இக்கதாபாத்திரத்தை வேறு யார் நடித்து, கருத்தைக் கூறினாலும் அது புரிந்து கொள்ளப்படாமலே சென்று விடும்.
அதாவது அக்கதாபாத்திரத்தை முஸ்லிமாக மட்டுமே கருதி, அதற்கு தகுந்த எண்ணவோட்டத்தைப் பார்ப்பவர்களுக்குக் கொடுத்து, கூற வரும் கருத்து மக்களைச் சென்றடைந்து இருக்காது.
ஒரு கூட்டத்தில் சக முஸ்லீம் எகிறும் போது அவரை அதட்டி, விமர்சிக்கும் போது வேறு யார் கூறினாலும் பொருத்தமாக இருக்காது.
கவுரவ வேடம் என்றால் Extended Cameo என்று தான் ஆகிறது. கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் வந்து கொண்டே உள்ளார்.
வீட்டிலிருக்கும் போதான உடைகளிலும், ஒப்பனையிலும் கூடுதல் கவனம் எடுத்து இருக்கலாம்.
திரைக்கதை
முதல் பாதியை விட இரண்டாம் பாதி பரபரப்பாகவுள்ளது.
விஷ்ணு விஷாலுக்கு நடிக்க அதிக வாய்ப்பு, அதை அவர் நியாயப்படுத்தியும் உள்ளார். அவருடைய கோபமே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
கிரிக்கெட் போட்டியில் பிரச்சனையாகி கோபத்துடன் விளையாட்டு மைதானத்தில் ஓடி வரும் காட்சி வெறித்தனமாக உள்ளது.
விஷ்ணு விஷால் அம்மாவாக வரும் ஜீவிதா அழுகை காட்சிகளைக் குறைத்து இருக்க வேண்டும், எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எப்படி?
விஷ்ணு விஷாலை ஒப்பிடும் போது விக்ராந்த் வாய்ப்பு குறைவு ஆனால், அவர் பாதிக்கப்பட்டதால், அதைக் கோபத்துடன் கேள்விகளாகக் கேட்கும் போது. ‘சரி தானே!’ என்று தோன்ற வைக்கிறார்.
ரஜினிக்கு தன் மகனையும் விட்டுக்கொடுக்க முடியாமல், நண்பன் லிவிங்ஸ்டன் மகனையும் விட்டுக்கொடுக்க முடியாமல், நெருக்கடியான சூழல்.
இக்காட்சிகளை அழுத்தமாக அல்லது தெளிவாகக் கூறவில்லை, அமைதியாகவே இருப்பதால், ஊகித்தாலும் இறுதியிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.
திருவிழா
திருவிழா நடைபெறாமல் நின்று விட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், செந்தில் அழும் காட்சிகள், மற்றும் பொதுமக்களின் கண்ணீர் நெஞ்சை தொட்டது.
தேர்த்திருவிழா காட்சிகள், இசை, தெருக்கூத்து கலைஞர்களின் பங்களிப்பு என்று உணர்ச்சி பிழம்பாக உள்ளது. தம்பி ராமையா இறுதி வரை சிறப்பான நடிப்பு குறிப்பாக இறுதிக்காட்சியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் போது.
இறுதியில் தேர் வரும் காட்சியை Cliche, க்ரிஞ்சாக காட்டி இருக்க 100% வாய்ப்பு இருந்தது ஆனால், மனதைத் தொடும் வகையில் படமாக்கியிருந்தனர்.
இது போன்ற காட்சிகளைத்தான் ரகுமான் ‘Cliché, க்ரிஞ் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், இல்லை‘யென்று குறிப்பிட்டு இருப்பார் போல உள்ளது.
இடைவேளைக்கு முன்னரும், இறுதிக்காட்சியிலும் கண் கலங்கி விட்டேன். அக்காட்சியில் வரும் பெண்களின் உணர்ச்சியில் எந்த நாடகத்தனமும் இல்லை.
ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு
1993 கதையெனும் போது ஒளிப்பதிவு, கலை இயக்குநருக்குக் கூடுதல் பொறுப்புகள். பெரும்பாலும் கிராமத்திலேயே எடுக்கப்பட்டதால், சவால்கள் குறைவு.
தேர்த்திருவிழாவைச் சிறப்பாக எடுத்ததற்காகப் பாராட்டலாம். தெருக்கூத்து கலைஞர்களின் காட்சிகள், நடனங்கள் ரசிக்கும் படியிருந்தது.
படத்தொகுப்பில் (Editing) தான் சொதப்பி விட்டார்கள். குறிப்பாக இடைவேளை முடிந்து வரும் காட்சியில் செந்திலை பார்த்த பிறகே இது Flashback என்று புரிந்தது.
Non Linear கதையாகக் கொண்டு செல்லும் போது அதிக கவனம் தேவை.
பாடல்களில் ‘ஏ புள்ள’ பாடல் ரசிக்க வைத்தது, மற்றவை காட்சியோடு ஒன்றி வருகிறது. பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
சமீப படங்களில் ரகுமான் பின்னணி இசை முன்பு போல அதிரிபுதிரியாக இருப்பதில்லை. ஜலாலி பாடல் மட்டும் மாஸாக இருந்தது.
யார் பார்க்கலாம்?
சில தமிழ்த் திரைப்படங்களில் முஸ்லிம்களை விமர்சனத்துக்குள்ளாக்கும் வகையிலும், பிராமின்களை கிண்டல் செய்துமே படம் எடுப்பார்கள்.
ஆனால், முஸ்லிம்களுக்கு பெருமையையும், மன நிறைவையும் அளிக்கும்படியான படமாக லால் சலாம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆகச்சிறந்த படமென்று கூற முடியாது ஆனால், இரு மதங்களின் பிரச்சனைகளை வெறுப்புணர்வு தோன்றாமல், இயல்பாகக் கொண்டு சென்றதைப் பார்க்க விரும்புபவர்கள் செல்லலாம்.
மற்றவர்கள் வழக்கமான ஒரு பொழுதுபோக்கு படத்துக்குக் காத்திருக்கலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கடந்த ஞாயிறு நண்பர்களுடன் படத்துக்கு செல்லலாம் என முடிவு செய்து, பின்பு வானிலை (கடும்மழை) சரியில்லாத காரணத்தால் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது படத்தை பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.
பாருங்க யாசின். உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன்.
கிரி. The Kerala story படம் பாருங்க. Zee5 இல் வந்து இருக்கு. செம்மையாக இருக்கிறது. நான் கூட ஏதோ documentry போல எடுத்து இருப்பார்களோ என நினைத்து இருந்தேன். விமர்சகர்கள் இந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு கிடைத்து விடக்கூடாது என்று நல்லாவே இல்லை என தங்கள் விசுவாசத்தை காட்டினார்கள். பல மாநிலங்களில் இந்த படத்தை தடை செய்து தங்கள் சிறுபான்மை வாக்காளர்களை திருப்தி செய்தார்கள். ஆனால் இந்த படம் 100% உண்மை செய்தியை வைத்து என்ன நடந்ததோ அதை சினிமாவாக அழகான திரைக்கதையில் நன்றாக எடுத்து உள்ளார்கள். கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதுங்கள். படம் பார்க்கும் போது பல காட்சிகள் பகீர் என்று இருக்கிறது. எப்படி எல்லாம் பெண்களை ஏமாற்றி மூளை சலவை செய்து அவர்களை ஏமாற்றி அடிமையாக நடத்துகிறார்கள். அந்த மதத்து பெண்களே பிற மத பெண்களை ஏமாற்ற எப்படி நண்பர்கள் போல பழகி சிரியா போன்ற நாடுகளுக்கு பெண்களை கடத்துகிறார்கள் என படம் மிகவும் அதிர்ச்சிகரமான உண்மையை சொல்கிறது. நாம் பாதிக்காதவரை இந்த உண்மை நமக்கு புரியாது இது தான் இந்த படத்தை விமர்சிப்பவர்களுக்கு பதில். கேரளாவில் உள்ள கிறிஸ்துவர்கள் இப்போது தான் இந்த ஆபத்தை அங்கு உணர ஆரம்பித்து உள்ளனர். படத்தில் ஒரு கிறிஸ்துவப்பெண் அவர்களின் மூளைச்சலவை ஏற்காமல் தவிர்க்கும் போது அவருக்கு நடக்கும் கொடுமையை பாருங்கள் படத்தில். நம் மதத்தை நம் மத சடங்குகள் பற்றியும் நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அதை விட முக்கியம் பிற மத அடிப்படை வாதிகளிடம் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நம் பென்பிள்ளைகளுக்கு சொல்லி தரவேண்டும். அதற்கு இந்த படத்தை காடினாலே போதும். நல்ல விழிப்புணர்வாக நிச்சயம் இருக்கும்
கிரி.. நீங்கள் கபில்தேவ் நடிப்பு பற்றி கூறுவீர்கள் என்று எதிர் பார்த்தேன் .
அவர் படத்தில் ஏதும் திருப்பு முனையாக அமைய வில்லையா ?
@ஹரிஷ்
The Kerala Story பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது. எனவே, பார்ப்பேன்.
படம் வெளியாகி ரொம்ப நாட்கள் ஆகி விட்டதால், இதற்கு இனி விமர்சனம் எழுதினால் சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை.
@unmai vilambi
கபில் தேவ் பற்றி ஒருவரி குறிப்பிட்டு இருக்கலாம் ஆனால், நீங்கள் சொல்வது போல அவர் கதாப்பாத்திரம் திருப்புமுனையாக அமையவில்லை.
அதிக பட்சம் 3 – 4 நிமிடங்கள் அவர் காட்சிகள் இருக்கலாம். நிமிடங்கள் முக்கியம் இல்லையென்றாலும், குறிப்பிட்டு சொல்லும்படியான முக்கியக் காட்சியாக இல்லை.