பள்ளிக்கட்டணம் எளிதாகச் செலுத்துவது எப்படி?

2
பள்ளிக்கட்டணம்

ந்தியா முழுவதும் பள்ளிக்கட்டணம் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாகி விட்டது. இதை எவ்வாறு திட்டமிட்டுக் கட்டலாம் என்று பார்ப்போம். Image Credit

பள்ளிக்கட்டணம்

70 / 80 / 90 களில் பிறந்தவர்கள் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து இருப்பார்கள். எனவே, இவர்களுக்கு ஆண்டுக்கட்டணமே ₹500 தாண்டாது.

சில பள்ளிகளில் அதுவும் இருக்காது.

எனவே, குழந்தைகளைப் படிக்க வைப்பதில் அக்காலப் பெற்றோர்களுக்குச் சிரமம் இல்லை. கல்லூரி வரும் போதே பணம் தேவைப்பட்டது.

ஆனால், தற்போது LKG முதலே இதற்கான கடினமான சூழ்நிலை துவங்கி விட்டது.

இதற்குக் காரணங்கள் பல உள்ளது. அவை பற்றித் தனிக்கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன் தற்போது பள்ளிக்கட்டணம் எப்படிக் கட்டுவது என்று பார்ப்போம்.

ஆண்டுப் பள்ளிக்கட்டணம் எவ்வளவு?

தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுப் பள்ளிக்கட்டணம் தோராயமாக ₹50,000 முதல் ஆரம்பிக்கிறது. இது ஒவ்வொரு பள்ளியின் நகரம், இடம், பிரபலத்தைப் பொறுத்து ₹1,00,000 தாண்டியும் உள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கட்டணத்தை உயர்த்துகிறது.

மாணவர் விடுதியில் படிக்கும் மாணவ / மாணவி என்றால், பள்ளி & மாணவர் விடுதிக்கட்டணம் சேர்த்து வருடத்துக்குத் தோராயமாக ₹2,00,000 வரும்.

மேற்கூறியது அல்லாமல் இடையிடையே எதையாவது கூறி வசூலிப்பது தனி.

எவ்வாறு வசூலிக்கப்படுகிறது?

ஆண்டுக்கட்டணம் என்பது ஒரே முறையில் முழுக்கச் செலுத்துவது. இதற்குச் சில பள்ளிகள் 5% முதல் 8% வரை தள்ளுபடி அளிக்கிறார்கள்.

அனைத்துப் பள்ளிகளிலும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரைக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். பணம் வைத்துள்ளவர்களுக்கு இதுவும் கூடச் சிறந்த வாய்ப்பு.

ஆனால், இடையில் பள்ளி மாற வேண்டி வந்தால் சிக்கல்.

எப்படிச் செலுத்துவது?

காலாண்டுக்கு ஒருமுறை ₹20,000 / ₹30,000 என்றால், ஒரு மாதத்தில் இத்தொகையைக் கொடுப்பது நடுத்தரக் குடும்பத்துக்குக் கடினமான ஒன்றே.

எனவே, இக்கடினமான சூழ்நிலையைத் தவிர்க்க வங்கியில் RD (Recurring Deposit) வழியாக ஒரு தொகையைச் சேமித்து வரலாம்.

இதன் மூலம் ஒரே நேரத்தில் பெரிய தொகையைக் கொடுக்க நேர்வது தவிர்க்கப்படும்.

RD அல்லாமல் இன்னொரு முறை மியூச்சுவல் ஃபண்ட். வழக்கமான SIP முறையில் அல்லாமல் குறைந்த வட்டியில், RISK இல்லாத fund நிறைய உள்ளது.

இது கிட்டத்தட்ட RD யில் கிடைப்பதை விடக் கூடுதல் வட்டி கிடைக்கலாம் அல்லது இரண்டுக்கும் பெரிய வித்யாசம் இருக்காது.

ஏற்கனவே, SIP (Systematic Investment Plan) போட்டுக்கொண்டு இருப்பவர்கள் இதை முயற்சிக்கலாம் ஆனால், மற்றவர்கள் RD யில் தொடர்வதே நல்லது.

முதல் வருடம் கடினமாக இருக்கும், அதற்கு அடுத்த வருடங்களில் எளிதாகி விடும்.

இதுவே இரு குழந்தைகளுள்ள குடும்பம் என்றால் கூடுதல் சிரமங்கள் உள்ளது. இவர்களுக்கு கட்டாயம் இது போன்ற திட்டங்கள் அவசியம்.

பரிந்துரை என்ன?

ஒவ்வொரு மாதமும் சரியான அளவில் சேமித்து ஆண்டுக்கட்டணம் முழுவதையும் ஒரே சமயத்தில் தள்ளுபடியுடன் கட்டுவது சிறந்தது.

காரணம், தோராயமாக ₹5000 கட்டணம் சேமிக்கலாம்.

இதோடு ஒவ்வொரு காலாண்டுக்கும் கட்டணம் செலுத்தும் தலைவலி இருக்காது.

ஒரே சமயத்தில் செலுத்த விருப்பப்டாதவர்கள் காலாண்டு கட்டணத்துக்கே RD யில் சேமித்துக்கட்டலாம். தேவையற்ற செலவை குறைக்கும், சேமிக்கவும் முடியும்.

காரணம், சேமிக்கவில்லையென்றால், எப்படியும் வேறு காரணங்களுக்காக இப்பணத்தை செலவு செய்து விடுவோம்.

இவ்வாறு திட்டமிடவில்லையென்றால், நமக்கு இருக்கும் மற்ற செலவுகளில் பள்ளிக்கு ஒதுக்க முடியாத நிலையில் கடன் வாங்க வேண்டியதிருக்கும் அல்லது கடுமையான பண நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

எனவே, பள்ளிக்கட்டணத்தின் தொகைக்கு ஏற்ப மாதாமாதம் சேமித்து மொத்தமாக / காலாண்டில் கட்டணம் செலுத்துவது சுமையைக் குறைக்கும்.

பள்ளிக்கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே செல்கிறது. எனவே, திட்டமிடவில்லையென்றால், எதிர்காலம் எளிதாக இருக்காது.

இக்கட்டுரை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கு என்றாலும், கல்லூரி கட்டணம் கட்டுவதற்கும் பொருந்தும்.

தொடர்புடைய கட்டுரைகள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

PPF கணக்கு துவங்குவதால் என்ன நன்மைகள்?

நடுத்தர வர்க்கம் | செலவு சேமிப்பு

நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. இந்த பதிவை படிக்கும் போது என்னுடைய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது.. நான் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளூரில் உள்ள அரசு மேனிலை பள்ளியிலும் படித்தேன்.. 10 ம் வகுப்பு வரை நான் தான் முதல் மாணவன்.. படிப்பு, விளையாட்டு, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாவற்றிலும் நான் தான்.. அதற்கு காரணம் மற்ற வகுப்பு தோழர்கள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாததும், என் ஆர்வத்தை பார்த்து எல்லா ஆசிரியர்களும் என்னை ஊக்குவித்தது தான்.. குறிப்பாக ஆசிரியைகள்..

  5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் பள்ளியில் 10 ரூபாய் TC வாங்கி கொள்ள பணம் கேட்டார்கள்.. நான் வீட்டில் சொன்னா திட்டுவார்கள் என்று சொல்லவில்லை.. நாட்கள் சென்று கொண்டிருக்கிறது என்னுடைய சக வகுப்பு தோழர்கள் எல்லோரும் 6ம் வகுப்பு சேர்ந்து விட்டார்கள்.. நான் தினமும் உள்ளுக்குளே எண்ணி, எண்ணி வருந்தினேனே தவிர, வீட்டில் சொல்ல தைரியம் வரவில்லை.. காரணம் 10 ரூபாய் எனக்கு 10 லட்சம் போல் தோன்றியது..

  அந்த சமயத்தில் தூரத்து உறவினர் ஒருவர் வீட்டில் என் தாத்தாவிடம் பேசி கொண்டிருந்த போது, நான் இங்கு / அங்கு ஓடுவதை பார்த்து என்ன??? பேரன் பள்ளிக்கு போகவில்லையா? என்ற போது என் தாத்தா இல்லை, அவன் விடுமுறையில் இருக்கிறான் என்றார்.. கொஞ்சம் விவரமான உறவினர் கோடைவிடுமுறை முடிந்து, புது ஆண்டு துவங்கி என் பசங்க பள்ளிக்கு சென்று கொண்டிருக்கினார்களே, என்று கூறி என்னை அழைத்து விவரத்தை கேட்டார்..

  நான் பயந்து கொண்டே விவரத்தை சொன்னேன்.. பின்பு என் தாத்தா சரி வா இப்பவே பள்ளிக்கு போகலாம் என்று, என்னை அழைத்து கொண்டு TC வாங்கி.. 6 ஆம் வகுப்பில் அப்பவே சேர்த்து விட்டார்.. போகும் வழியில் கூட கால தாமதம் ஆனதால் பள்ளியில் சேர்த்து கொள்வார்களோ?? இல்லையோ? என்று பயந்து கொண்டே நான் வீதியில் சென்றேன்.. 6ம் வகுப்பு அட்மிஷன் கிடைத்து வகுப்புக்கு சென்றதும், என் நண்பர்கள் எல்லோரும் இங்கு வந்து என் பக்கத்தில் உட்கார், உட்கார், என ஒரே அன்பு தொல்லை..

  ஏனென்றால் நான் கொஞ்சம் நல்ல படிப்பதால் இந்த சலுகை.. நான் அஞ்சி, அஞ்சி பயந்து போனது எல்லாம் ஒரு சில நிமிடங்களில் மாறி விட்டது.. இதெல்லாம் வாழ்வின் வசந்த கால நினைவுகள் .. அந்த நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் இனிமையாக இருக்கின்றது.. திருமணமான பின் என் மனைவியிடம் இந்த சம்பவத்தை மிகவும் சுவாரசியமாக சொன்ன போது, முழுவதும் கேட்டுவிட்டு சரியான “பயந்தாங்கோலி” ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்..

  கடந்த முறை ஊருக்கு சென்ற போது பள்ளி வகுப்பு தோழனை என் வீட்டுக்கு கட்டிட பணிக்கு வந்த போது அவனை சந்தித்தேன்.. கிட்டத்திட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது.. பின்பு அவனிடம் நெடுநேரம் பேசும் போது, எங்களுடன் படித்த பள்ளி நண்பர்களில் பல பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்து விட்டதாக கூறிய போது மனம் கணத்தது.. ராமர், தவமணி, சத்தியகுமார், சசிகலா,புஷ்பராஜ், சரவணன்,கோபால் என சந்திக்க வேண்டிய நண்பர்களின் நீண்ட பட்டியல் உண்டு..

  என் மகன் 3 ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தான்.. இந்தியா சென்ற பின் தற்போது அங்கு படிக்கிறான்.. பள்ளி கட்டணத்தை பார்க்கும் போது, இங்கும், அங்கும் கிட்டத்திட்ட பெரிய வித்தியாசம் இல்லை.. ஒரு தரமான கல்வியை நல்ல பள்ளியில் தரவேண்டும் என்பது என் எண்ணம்.. நல்ல பள்ளி என்றால், பெரிய கட்டிடம் மற்றும் அதிக கட்டணம் வாங்கும் பள்ளி என்பது மனைவியின் எண்ணம்.. மனைவிக்கும் எனக்கும் இது போல விஷியங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது.. இது குறித்த விவாதம் எங்கள் இருவர்க்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..

  சில சமயங்களில் செய்தித்தாள்களில் சில மாவட்ட ஆட்சியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளார்கள் என்பது பார்க்கும் போது உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும்.. ஆனால் நிஜத்தில் நமக்கு இது சாத்தியமா??? என்றால் மிக பெரிய கேள்விக்குறி எழுகிறது??? எந்த நாடாக இருந்தாலும் அரசு தரமான கல்வியை தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டாய கடமை.. இது வியாபாரமாக மாறும் போது தான் பிரச்சனை.. தற்போதைய சூழ்நிலையில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி…

 2. @யாசின்

  “5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் பள்ளியில் 10 ரூபாய் TC வாங்கி கொள்ள பணம் கேட்டார்கள்.. நான் வீட்டில் சொன்னா திட்டுவார்கள் என்று சொல்லவில்லை.”

  இதை தற்போதைய தலைமுறை நம்பவே மாட்டார்கள் 🙂 . அப்போது படித்ததற்கும் பணம் கேட்க நாம் பயந்ததற்கும் தற்போதைய நிலைக்கும் சம்பந்தமே இல்லை.

  ஆனால், பள்ளி மாற்றம் வழக்கமானது தான் இதற்கு ஏன் யோசித்தீர்கள் என்று தான் புரியவில்லை 🙂 .

  சென்னையில் இருந்த போது மாத செலவுக்கு 1500 தேவை ஆனால், அப்பாவிடம் கேட்கும் போது 1000 ருபாய் தான் வாய்க்கே வரும்.

  மாணவர் விடுதியில் மாத செலவுக்கு 20 ருபாய் கொடுப்பார்கள். தற்போது இதையெல்லாம் நினைத்தால் என்னாலையே நம்ப முடியலை.

  “திருமணமான பின் என் மனைவியிடம் இந்த சம்பவத்தை மிகவும் சுவாரசியமாக சொன்ன போது, முழுவதும் கேட்டுவிட்டு சரியான “பயந்தாங்கோலி” ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்..”

  அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் மாதிரியா 😀

  “ராமர், தவமணி, சத்தியகுமார், சசிகலா,புஷ்பராஜ், சரவணன்,கோபால் என சந்திக்க வேண்டிய நண்பர்களின் நீண்ட பட்டியல் உண்டு..”

  எனக்கு பலரை நினைவில்லை. சிலர் மட்டுமே இன்னும் தொடர்பில் உள்ளார்கள்.

  “இது குறித்த விவாதம் எங்கள் இருவர்க்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..”

  இது பெரும்பாலான வீடுகளுக்கு பொருந்தும்.

  “எந்த நாடாக இருந்தாலும் அரசு தரமான கல்வியை தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டாய கடமை.. இது வியாபாரமாக மாறும் போது தான் பிரச்சனை”

  இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு யாசின். அரசாங்க பணி என்பதாலையே பலரின் அலட்சியம் அதிகமுள்ளது. காரணம் வேலை உறுதி என்பதால்.

  சிஸ்டம் மாறனும், அப்போது தான் இதற்கு விடிவுகாலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here