சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது [2015]

4
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது பழைய நினைவுகளைக் கொண்டு வந்த படம்.

சென்னை என்றில்லை எங்கும் அறை எடுத்து தங்கி இருப்பவர்களுக்கும் இந்தப் படம் பார்த்தால் பழைய / நடப்பு நினைவுகள் வராமல் இருக்காது. Image Credit

இது படத்தின் திரைவிமர்சனம் அல்ல திரைவிமர்சனம் மாதிரி 🙂

என் சென்னை அனுபவங்களை இந்தப் படம் நினைவுபடுத்தியதால் இது பற்றிப் பகிர வேண்டும் என்று தோன்றியது.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

பாபி சிம்ஹா படம் முழுக்க நிரந்தர அறை கிடைக்காமல் மாறிக் கொண்டு இருப்பதும், இருந்த / இருக்கும் அறைகளில் அதன் கதாப்பாத்திரங்களின் இடையே நடக்கும் சம்பவங்களுமே இந்தப் படத்தின் கரு.

படத்தில் கதை என்று எதுவுமில்லை ஆனால், சம்பவங்களையே சுவாரசியமாகக் கொடுத்து இருக்கிறார்கள்.

இதை அனைவரும் ரசித்துப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை ஆனால், இளைஞர்கள் / இது போல அனுபவங்களைப் பெற்றவர்கள் ரொம்ப ரசித்துப் பார்ப்பார்கள்.

பாபி சிம்ஹாக்கு நடிக்க அசத்தலான வாய்ப்பு. கிடைத்த சந்தர்ப்பத்தைச் செமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குனருடன் அல்லது தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சண்டையில் டப்பிங் பேச மறுத்து விட்டாராம்.

இதனால் இவருக்கு வேறு யாரையோ வைத்து டப்பிங் பேச வைத்து விட்டார்கள் ஆனால், கொஞ்சம் கூட வித்யாசம் தெரியவில்லை. அசத்தலாகப் பொருந்தி இருக்கிறது.

எனக்கு இப்பவும் சந்தேகமாக இருக்கிறது… யார் டப்பிங் என்று?!

சென்னை அறை நண்பர்கள் 

சென்னையில் 12 வருடங்கள் நண்பர்களுடன் அறையில் இருந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் மாதிரியே நான்கு பேர் இருந்த அறையில் ஒட்டிக்கொண்டேன்.

பின்னர் ஓனர் சத்தம் போட்டதால் அருகிலேயே சின்ன அறையைப் பார்த்துக் கொண்டாலும் தூங்க மட்டுமே என் அறை மற்ற நேரங்களில் இங்கே தான் இருப்பேன்.

இந்தக் காலத்தை அனுபவித்தவர்கள் அவர்களது இறுதிக் காலம் வரை மறக்க முடியாது. அத்தனை அனுபவங்கள், சண்டைகள், இனிமையான அனுபவங்கள் என்று கிடைக்கும்.

ஒரு கட்டுரையில் என் வளர்ச்சிக்கு நண்பர்கள் தான் காரணம் என்று கூறி இருந்தேன். அந்த நண்பர்கள் தான் இந்த அறையில் என்னுடன் இருந்தவர்கள்.

துவக்கத்தில் எங்களுடன் இரண்டு மூத்தவர்கள் இருந்தார்கள். இவர்கள் இருந்த போது அடக்கி வாசித்த நாங்கள் இவர்கள் காலி செய்து சென்ற பிறகு ரணகளமாக்கினோம்.

நாங்க 4-5 பேர் அந்தப் பகுதிக்கே அறிமுகமானவர்கள்.

லஸ், மயிலாப்பூர்

நாங்கள் இருந்த இடம் லஸ், மயிலாப்பூர்.

லஸ் சிக்னல் பகுதியில் இருந்த செலக்ட் ஹோட்டல் தான் எங்கள் நண்பர்களின் இரவு நேர டீ குடிக்கும் இடம். இரவு 1 மணிக்கும் கடை திறந்து இருக்கும்.

இங்கே சென்று டீ குடித்துப் பேசி கதையடித்து வருவோம்.

நான் டீ குடிக்க மாட்டேன் எனவே, சும்மா கூடப் போவேன். சில நேரம் போகாமல் தொலைக்காட்சியில் படம் பார்த்துட்டு இருப்பேன்.

ஊரில் இருந்து நேர்முகத் தேர்வு, திருமணம், உறவினர் வீடு, வேறு வேலை என்று நண்பர்கள் எதற்காக வந்தாலும் எங்கள் அறையில் தான் தங்குவார்கள்.

இதனால் எப்படியும் ஆறு ஏழு பேர் தொடர்ச்சியாக இருப்போம். பலருக்கு தற்காலிக தங்கும் இடம் எங்கள் அறை தான்.

ஓனர் சத்தம் போட்டுட்டே இருப்பாரு.. “மூன்று பேருன்னு சொல்லிட்டு இத்தனை பேரு தங்குறீங்க!” என்று சண்டையாக இருக்கும்.

“தொட்டி தண்ணிய காலி பண்ணிடுறீங்க.. எத்தனை வாட்டி நிரப்பி வைக்கிறது” ன்னு செம்ம பாட்டா இருக்கும்.

செய்தி Vs திரைப்படங்கள் / பாடல்கள் 

எங்க அறையில் ஒருத்தன் பல் துலக்கவே ஒரு பக்கெட் தண்ணீர் காலி பண்ணுவான் 🙂 . துவைக்கிறதுன்னா இவனுக்குத் தொட்டி தண்ணீரே தேவை.

இவனும் நானும் ஒரு படம் விடாமல் பார்த்து விடுவோம்.

சூர மொக்கைப் படத்தைக் கூட “ஒரு வாட்டி பாக்கலாம் மச்சி” என்று கூறி மற்றவர்களுக்குப் பேதி கிளப்புவான் 🙂 .

தொலைக்காட்சிக்கு தான் பெரிய சண்டை வரும். ஒருத்தன் செய்தி மட்டுமே பார்ப்பான். நானும் இவனும் திரைப்படங்கள் / பாடல்கள் மட்டுமே பார்ப்போம்..!

இன்னொருத்தன் இரண்டு பக்கமும் கிண்டி விட்டுட்டு அமைதியா!! இருப்பான். இவனுக்கு வேலையே இது தான்.

கொளுத்திப் போட்டுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி உட்கார்ந்துப்பான்.. இங்க ஒரே ரணகளமா இருக்கும் 🙂 .

சேனல் மாற்றிச் சண்டை வரும்.. இதனாலும் எங்களுக்குள் கலாயித்தல் / கிண்டல் ஆரம்பித்துச் சண்டையில் முடியும். தற்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.

நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் 

நாங்க நான்கு பேர் (மூன்று பேர் ஒரே அலுவலகம்) என்றாலும் ஐந்தாவதா ஒரு நபர் தற்காலிகமாக மாறிட்டே இருப்பாங்க.

இது இல்லாமல் நான்கு / ஐந்து பேர் அப்பப்ப!! வந்துட்டு போயிட்டு இருப்பாங்க.

புத்தாண்டு என்றால் ஒவ்வொருத்தரோட மற்ற நண்பர்களும் ஐக்கியமாகி விடுவார்கள்.  அறையில் அதிகபட்சம் நெருக்கிட்டு 7 பேர் படுக்கலாம் இது போன்ற சமயங்களில் 13 பேர் தூங்கிட்டு இருப்பாங்க.

எனக்கு இந்தப் படத்தில் வந்த காட்சி இதைத் தான் நினைவு படுத்தியது.

பக்கத்தில் கூவம் என்பதால் கொசு வேற பிச்சு எடுக்கும். ஜன்னலை சாத்திட்டு கொசு வர்த்தி வைத்தால் அறையே பாய்லர் மாதிரி இருக்கும்.

சில நேரங்களில் கொசு வர்த்தி மீதே கொசு உட்கார்ந்துட்டு இருக்கும்.

“மச்சி! குளித்துட்டு கும்பலா வெளியே கிளம்பாம தனித்தனியா கிளம்பி வேற இடத்துல இருங்க” என்று கூறி விடுவோம்.

அப்பவும் எவனையாவது கலாயித்து அவன் சண்டைக்கு வந்து என்று பஞ்சாயத்தா இருக்கும்.

Read போலீஸ் அடின்னா இது தானா !

கலாயித்தல் என்பது பகுதி நேரப் பணி 

நாங்க நான்கு பேருமே ஒரு விசயத்தில் ஒற்றுமை. செமையா ஓட்டுவோம். எனவே, எவன் வந்தாலும் அவனை ஒரு வழி ஆக்கிட்டுத் தான் விடுவோம்.

இதற்குப் பயந்தே பலர் எட்டிப்பார்க்காமல் இருந்தது உண்டு.

ஏன்டா! நீங்கெல்லாம் மனுசங்களா.. இப்படியாடா ஓட்டுவீங்க. எதோ தெரியாம ஒன்றை சொல்லிட்டேன்னு இப்படிக் கலாயிக்கறீங்க என்று இதோட சில “நல்ல” வார்த்தைகளையும் கூறி காறித் துப்பிட்டு போய்டுவாங்க 🙂 .

ம்ஹீம் துடைச்சு போட்டுட்டு எதுக்கும் அசராமல் எங்கள் பணி ஓட்டுவதேன்னு கிடைத்தவனை எல்லாம் டர்ர் ஆக்கிட்டு தான் விடுவோம்.

சாப்பாட்டு ரணகளங்கள் 

எங்கள் அறையில் இருந்து YMIA மெஸ் (வள்ளுவர் சிலை) அருகில் இருந்தது. பெரும்பாலும் இங்கே தான் சாப்பாடு. இங்கே தான் Unlimited சாப்பாடு கிடைக்கும்.

நானும் இன்னொருத்தனும் அதிகம் சாப்பிட மாட்டோம் ஆனால், மற்றவங்க செம கட்டு கட்டுவாங்க.

ஒருமுறை இவர்களையே மிரட்டும்படி ஒருவர் வந்தார். மலை மாதிரி சாப்பாட்டைக் குவித்து அதில் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிடுவாரு.

நான் சாம்பார் ரசம் மோர் மூன்றுக்கும் போடும் சாப்பாடு இதில் பாதி கூட வராது.

ஒருநாள் இந்த மெஸ் நடத்துபவர் “சார்! நீங்க இனிமே இங்கே வராதீங்க எங்களுக்குக் கட்டுபடியாகாதுன்னு” சொல்லிட்டாரு 🙂 🙂 .

நகைச்சுவைக்காகக் கூறவில்லை உண்மையாகவே நடந்தது.

சாப்பிட போகும் போது ஒன்றாகத் தான் போவோம் சில நேரங்களில் சங்கீதா, வசந்தபவன், சுக நிவாஸ் என்றும் போவோம்.

எங்க கும்பல்ல ஒருத்தன் இருக்கான் அவனுக்குப் பொரியல் போட்டுக் கட்டுபடியாகாது.

சால்னா கொண்டு வரதுக்குள்ள முதல் செட் புரோட்டாவை சூரி காலி செய்துடுவாரே, அது மாதிரி சாப்பாடு வரதுக்குள்ள இவன் பொரியலை காலி பண்ணிடுவான் 😀 .

சர்வர் ஒரு முறைப்போடு தான் வைப்பாரு. சங்கீதா உணவு விடுதியில் வித விதமா வருபவர்களைப் பார்த்து இருக்கிறேன். இதைப் பற்றிக் கூறினாலே ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

பின்னர் தாமதமாக “சரவணபவன்” மைலாப்பூருக்கு வந்தது ஆனால், விலையால் எங்களுக்குக் கட்டுபடியாகவில்லை.

பொதுவா ஒரே அறையில் ஒத்த அலைவரிசையில் உள்ள நபர்கள் இருப்பது என்பது அதிசயமாக நடக்கும். எங்கள் விசயத்தில் அது நடந்தது.

இதில் சண்டை தாறுமாறா நடக்கும் ஆனால், ஓரிரு நாளில் சமாதானம் ஆகி விடும்.

காலனி கலாட்டாக்கள் 

எங்கள் அறைப் பகுதியில் இருந்த ஒரே பேச்சலர் அறை எங்களுடையது மட்டுமே! மற்றவர்கள் அனைவருமே குடும்பங்களாக இருந்தவர்கள்.

இங்க தினமும் நடக்குற கூத்து இருக்கே..! இதுவே பெரிய சீரியல் பார்க்குற மாதிரி இருக்கும்.

இதில் சில சம்பவங்கள் “தணிக்கை” செய்யப்படுகிறது 😉 .

நான் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது உதவி பெறுகிறேன் என்றால் அது முழுமையும் என் சென்னை அறை நண்பர்களாலே!

சென்னை என்னை “வாடா வெண்ணை” என்றாலும் அன்னையாக அனுப்பி வைத்தது 

என்னை, சென்னை அன்புடன் வரவேற்கவில்லை பணமில்லாமல் பல கொடுமையான நாட்களை எதிர்கொண்டு இருக்கிறேன் ஆனால், என்னை ஒரு நல்ல நிலையில் சிங்கப்பூர் அனுப்பி வைத்தது.

எனவே, சென்னைக்கு நான் என்றுமே மானசீகமாக நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.

சென்னையின் கூட்டமும், நெரிசலும் எனக்குப் பிடிக்காத ஒன்று என்றாலும் சென்னை மீது பைத்தியமாக இருப்பவன்.

யார் என்ன கூறினாலும் சென்னையை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன். Image Credit – http://ashwinmohan-creativeblasphemy.blogspot.com

சென்னை மட்டும் என் வாழ்க்கையில் இல்லையென்றால் என் நிலையைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.

சென்னை எனக்கு மட்டுமல்ல என்னைப் போலக் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை கொடுத்தது / கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

எனவே தான் சென்னை மீது எனக்கு எப்போதுமே தனிப் பாசம்.

உண்மையைக் கூறினால் பெரும்பாலானவர்களைச் சென்னை அன்புடன் வரவேற்காது ஆனால், சில காலச் சிரமத்திற்குப் பிறகு அன்புடன் பார்த்துக் கொள்ளும்.

குறைந்தபட்சம் தன்னால் முடிந்த உதவி செய்யும். இதை வைத்து முன்னேறுவது அவனவன் சாமர்த்தியம்.

இதில் சில சம்பவங்கள் நான் ஏற்கனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஒரு ஃப்ளோக்காகத் திரும்ப இதில் வந்து இருக்கும்.

சிறு காட்சிகளின் தொகுப்பு 

பாபி சிம்ஹா இந்தப் படத்தில் அனைத்தையும் அனுசரித்துப் போகும் கதாப்பாத்திரம்.

ரொம்பச் சிறப்பாகச் செய்து இருக்கிறார் குறிப்பாக முகபாவனைகளில் பின்னி எடுத்து இருக்கிறார். அப்படி ஒரு இயல்புத்தன்மை.

இதில் குறிப்பாகப் பாபி சிம்ஹா நண்பர் ஒருவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது.

தன் அண்ணன் மகனுக்குச் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறி வேலை போனதால் பணம் இல்லாமல் எப்படி வாங்குவது அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திணறுவது என்று நடிக்க நல்ல வாய்ப்பு.

இதோடு கடலை போடுபவர்கள், பிக்கப் செய்பவர்கள், சரக்கு, புலம்பல்கள், விரக்தியான பேச்சுகள், நக்கல்கள் என்று பல்வேறு சுவாரசியமான கதாப்பாத்திரங்களும் உள்ளது.

சென்னையில் அறையில் தங்கியவர்களும் இளைஞர்களும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தை அவசியம் பாருங்கள்.

திரையரங்கில் இல்லை இணையத்தில் தான் இனி பார்க்க முடியும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. சென்னை படம் – இன்னும் பாக்கல

    உங்க சென்னை அனுபவம் படிச்சா என்னோட திநகர் bachelor life ஞாபகம் வருது…நட்பை நீங்க ரசிப்பது உங்க பதிவு ல நல்லாவே தெரியுது .. மசினகுடி போட்டோ சூப்பர் இந்த context கு

    – அருண் கோவிந்தன்

  2. படம் நன்றாக இருந்தாலும் இந்த படத்தை மட்டும் பார்க்க கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் .. படத்தை பற்றி தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு படத்தை டவுன்லோட் செய்துவிட்டேன்..படத்தை பற்றி தெரிந்ததும் பார்க்கும் என்ன்னம் இதுவரை வரவில்லை.

    அதிலும் இந்த பதிவு மற்றும் உங்களின் அறை நினைவுகள் என்னை வேணாடா கார்த்தி அலாரம் அடித்துவிட்டது…
    ////பொதுவா ஒரே அறையில் ஒத்த அலைவரிசையில் உள்ள நபர்கள் இருப்பது என்பது அதிசயமாக நடக்கும். எங்கள் விசயத்தில் அது நடந்தது. இதில் சண்டை தாறுமாறா நடக்கும் ஆனால், ஓரிரு நாளில் சமாதானம் ஆகி விடும்./// என்னால் மறக்க முடியாத ஓன்று இருந்த 6 பேரில் தின ஒருவன் என்று முறை வைத்து சண்டை போடுவேன் அந்த சண்டை அதிகபட்சம் சனிக்கிழமை மாலை வரை தான் தாக்கு பிடிக்கும்

    ப்பா என்னா லைப் அது கடவுள் நமக்கு கொடுத்த வரங்களில்
    ஓன்று

  3. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அருண் மசினகுடி படம்ன்னு சரியா சொல்லிட்டீங்க 🙂

    @கார்த்தி நீ கண்டிப்பா பார்க்கணும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here