மாநகரம் [2017] | த்தா… இது சென்னைடா!

3
மாநகரம்

 

சென்னையின் தீவிர ரசிகனுக்குச் சென்னையைப் பற்றிய படம் என்றால்.. விட்டுடுவோமா 🙂 . மாநகரம் அப்படியான படம். Image Credit

மாநகரம்

சிக்கலான நாலு கதை ஆனால், ஒவ்வொன்றுக்கும் சிறு சிறு தொடர்பு இணைப்பு அதைச் சரியாகக் கோர்த்து இறுதியில் முடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நான்கு கதைகள் 

திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்து சான்றிதழைத் தொலைத்து விட்டுச் சம்பந்தமே இல்லாமல் தர்ம அடி வாங்கும் ஸ்ரீ.

தறுதலையாகச் சுற்றிக்கொண்டு ரெஜினா திட்டினாலும் அவர் பின்னால் செல்லும் “யாருடா மகேஷ்” படத்தில் நடித்த சந்தீப்.

ஸ்ரீ போல ஊரில் இருந்து சென்னை வந்து வாழ்க்கையை நடத்த நினைக்கும் Call Taxi ஓட்டுநர் சார்லி.

பணம் வசூல் பண்ண பையனைக் கடத்த திட்டம் போட்டு அதற்கு முனீஷ் காந்தை அனுப்ப, அவர் மாற்றி ஒரு பெரிய தலை பையனைக் கடத்தி!!! வந்து விடுகிறார்.

கதையின் சம்பவங்களை இணைத்துக் குழப்பம் இல்லாமல் அசத்தல் திரைக்கதை கொடுத்து இருக்கிறார்.

படத்தின் நாயகன் இயக்குநரே!

சென்னைன்னா கெத்து!

சென்னையைப் போட்டு வெளுத்து வாங்கிப் பின் அப்படியே நம்மையறியாமல் சென்னையை ரசிக்க வைக்கும் திரைக்கதை செம்ம செம்ம 🙂 .

என்னண்ணா! ஆளாளுக்கு ங்கோத்தான்னு (Mute ஆகலை) இங்க சொல்றானுங்க..

சார்லியிடம் ஸ்ரீ வருத்தப்பட்டு அதோட அப்படியே பல சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சென்னை சுயநலமான நகரம் என்று கூற, அதற்குச் சார்லி கொடுக்கும் விளக்கம் இருக்கே.. என் மனதில் ஓடும் வரிகள்.

இங்கே இருக்குறவங்க சென்னையைத் திட்டிட்டு இருப்பாங்க ஆனால், ஒருத்தரும் சென்னையை விட்டுட்டு போக மாட்டாங்க.. என்று கூறி தொடரும் போது திரையரங்கம் கைத்தட்டலில் அதிர்கிறது.

முனிஷ்காந்த் சமீபத்தில் “மோ” என்ற திகில் படத்தில் நடிப்பில் கலக்கி இருந்தார். அதன் பிறகு இதில் அவருடைய ஆகச் சிறந்த நடிப்பு.

மனுசன் திரையரங்கைப் படம் முழுக்கத் தனது அப்பாவித்தன நடிப்பால் அதிர வைக்கிறார். இரு எடுத்துக்காட்டுகள் கூறுகிறேன் எப்படின்னு பாருங்க 🙂 🙂 .

ஒரு கடைக்குச் சென்று 1 ருபாய் மிட்டாய் 10 கொடுங்க என்று கேட்டு வாங்கிவிட்டு “எவ்வளவு ஆச்சுன்னு?” கேட்டுக் கடைக்காரரை மிரள வைப்பார்.

யோவ்! இவனை ஏன்யா பிடித்து வைத்து இருக்க..

சார்! இவன் அந்தமானுக்கு எந்தப் பஸ் போகும்னு கேட்டான். அதான் சந்தேகப்பட்டுப் பிடித்து வைத்து இருக்கேன் எனும் போது திரையரங்கம் வெடிச் சிரிப்புச் சிரிக்கிறது.

முனீஸ்காந்த் ஆளே தெரியாமல் குத்துமதிப்பாகப் பையனைக் கடத்தி வருவது காதில் பூ சுற்றுவது போல இருந்தாலும், நகைச்சுவையில் மறக்கடிக்கப்பட்டு உள்ளது.

திரைப்படங்களில் தறுதலைகளைத் தான் நாயகனாகக் காட்டுவார்கள். இதிலும் அப்படியே! சந்தீப் பொறுப்பற்ற தனமாகச் சுற்றிக்கொண்டு இருப்பார்.

இதுல ஒரு பொறுக்கியை அமிலம் போட்டுத் தாக்கிடுவார்.. இதெல்லாம் நடுத்தர வகுப்புப் பையனுக்கு எப்படிச் சாத்தியம் என்று தெரியலை.

அவன் நிம்மதியா விட்டுடுவானா? ஆனாலும் சந்தீப் செய்யும் முறைக்குத் திரையரங்கில் கை தட்டல்.

மிரட்டும் சண்டை காட்சிகள்

 

சண்டைக் காட்சிகளில் செம்மையாக நடித்து இருக்கிறார். அதற்குப் பின்னணி இசையும் சண்டை வடிவமைப்பும் மிகவும் கை கொடுத்து இருக்கிறது.

அடியெல்லாம் இடி மாதிரி இறங்கி இருக்கிறது. சண்டை காட்சிகளை ரொம்ப ரசித்தேன், மிக இயல்பாக இருந்தது.

ரெஜினா மனிதவளத்துறை (HR) பணியில் இருப்பார்.. நடிக்கப் பெரியளவில் வாய்ப்பில்லை. கதையும் அப்படியில்லை என்பது உண்மை.

பாடல்கள் அனைத்துமே மான்டேஜ் பாடல்கள் என்பதால், ரசிக்க வைக்கிறது.

உறுத்தாத பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

படத்தில் கூற நிறையச் செய்திகள் உள்ளது ஆனால், அவற்றைத் திரையரங்கில் ரசிகர்களோடு காணுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.

ஸ்ரீ சந்தீப் பொருத்தமான தேர்வு

 

ஸ்ரீ எப்படித் திருச்சியில் இருந்த வந்த பையன் கதாப்பாத்திரத்துக்குச் சரியாகப் பொருந்துகிறாரோ அதே போலச் சந்தீப் சென்னை பையன் கதாப்பாத்திரத்துக்கு.

சார்லி கதாப்பாத்திரத்துக்கு வேறு யாராவது புதுமுகத்தைப் போட்டு இருக்கலாம். சார்லியை பெரும்பான்மையான இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இவருக்கு இருக்கும் அனுபவத்துக்கு இவரை வைத்து அசத்தலாம். திறமையான நடிகரைச் சாதாரணக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து அவரின் திறமையை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இது சென்னைடா!

சென்னையை வெறித்தனமா காதலிக்கும் பலரில் நானும் ஒருவன். என்னைக் கோபப்படுத்த சென்னையைத் திட்டினாலே போதும்..

த்தா அப்புறம் என்ன கூந்தலுக்குடா சென்னைக்கு வரீங்க..சென்னையில் இருக்கீங்க..“என்று தான் கேட்கத் தோன்றும். கேப்டன் மாதிரி பொங்கிடுவேன் 🙂 .

இங்கே சென்னையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும் சென்னை எப்படி அவர்களை உயர்த்தி உள்ளது என்று.

அலுவலகத்தில் ஒடிசா பையன் ஒருவன் 10 வருடங்களாகச் சென்னையில் இருக்கான்.. சென்னை எப்படி? என்று கேட்பேன் “Its my second home yaar” என்பான்.

இருந்தாலும் அவனை அடிக்கடி கேட்டு நான் மகிழ்ச்சியடைவது [அவன் நொந்து போய் இருப்பான் 🙂 ] என் வழக்கம் 🙂 .

சென்னை வாழ்க்கையைச் சிங்கப்பூரில் இருந்த எட்டு வருடங்களும் நினைத்து ஏங்கி இருக்கிறேன். இதுவே நான் சென்னை திரும்பக் காரணங்களில் ஒன்று.

வெளிநாட்டில் எத்தனை சொகுசு அனுபவித்தாலும் சென்னையில் சண்டையைப் போட்டுக்கொண்டு திட்டி வாங்கிக்கொண்டு இருந்தாலும் கிடைக்கிற சுகம் சத்தியமா எனக்கு வெளிநாட்டில் கிடைக்கவில்லை.

“த்தா இது நம்ம ஊருடா” ன்னு ஒரு கெத்து இருக்கும் பாருங்க… சொன்னால் சிலருக்கு புரியாது.. அதெல்லாம் ஒரு உணர்வு. புரிந்து கொள்வது சிரமம்.

இந்தப்படத்தைத் திரையரங்கில் சென்று பாருங்கள். உங்களை ஏமாற்றாது.

கொசுறு

மெட்ரோ” படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் தவறவிட்டு இணையத்தில் பார்த்து அடடா! திரையரங்கில் பார்க்காமல் விட்டுட்டோமே! என்று புலம்பி இருக்கிறேன்.

அந்த நிலை “மாநகரம்” படத்துக்கு வரவில்லை.

நன்றி நண்பர் சூர்யா 🙂 .

3 COMMENTS

 1. ரெவியு சூப்பர்.. படம் சூப்பரோ சூப்பர்.. அடுத்து என்ன அடுத்து என்னன்னு போய்கிட்டே இருக்கு கடைசியில் எழுத்து ஓடும்வரை .

 2. கிரி, படமே பார்க்ககூடுதுனு இருக்கும் போது இந்த மாதிரி ஒரு விமர்சனத்தை போட்டு விட்டு (“த்தா இது நம்ம ஊருடா” ன்னு ஒரு கெத்து இருக்கும் பாருங்க…) இது போல ஒரு வசனத்தையும் சொல்லியிருக்கும் போது ” கொய்யலா நா சென்னைல பொறக்கலானாலும், பணிபுரியலானாலும்” சென்னையை பத்தின படம்னும் போது பாக்காம இருக்க முடியுமா??? என்ன??? மாநகரம் இந்த வார இறுதி பட்டியலில் சேத்தாச்சி…

  50 % உங்களின் விமர்சனம் மீதி 50 % முனிஸ்காந்த் அவர்களின் நடிப்புக்குகாக… பசங்க 2 படத்தில் அவரின் இயல்பான நடிப்பினை மிகவும் ரசித்தேன்… அதற்கு பின் ரசிகனாகி விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. —-இது நம்ம ஊருடா” ன்னு ஒரு கெத்து இருக்கும் பாருங்க… சொன்னால் சிலருக்கு புரியாது.. அதெல்லாம் ஒரு உணர்வு. புரிந்து கொள்வது சிரமம்.—–

  கிரி,

  தமிழ் நாட்டை விட்டு வெளியே சென்றவர்கள் செல்பவர்களுக்குத்தான் இது புரியும். தெரியும்.

  100% நிஜம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here