சின்னக் கோடம்பாக்கம் கோபி வயல்வெளி காட்சிகள்

71
சின்னக் கோடம்பாக்கம் கோபி

பெட்ரோல் புகையையும் தொழிற்சாலை புகையையும் சுவாசித்து, ஜன திரளில் நீந்தி இயந்திரமாக உழைத்து இயந்திரமாகவே மாறி இருக்கும் உங்களைச் சின்னக் கோடம்பாக்கம் கோபி அழைத்துச் செல்ல இட்ட கட்டுரையே இது.

சின்னக் கோடம்பாக்கம் கோபி

கருங்கற்களில் வடிவமைக்கப்பட்ட என் வீடு இது. இவ்வகை கட்டிடங்கள் பழைய கோவில்களில் மட்டுமே காணப்படும்.

இப்போதெல்லாம் இவ்வாறு கட்டுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது, அதற்கு அவசியமும் இல்லை. செலவும் அதிகம்.

இப்போது யாரும் இதை விரும்புவதில்லை. இதில் என்ன விஷேசம் என்றால் இவை அனைத்தும் கொக்கி கற்கள்.

ஒரு கல்லை எடுத்தால் கூடவே இன்னொரு கல்லும் வரும், எனவே இதை மாற்றி அமைக்க முடியாது. இடிப்பதும் மிகச் சிரமம்.

வீடு நீளமாக இருப்பதால் குழந்தைகளுக்கு விளையாடக் கொண்டாட்டம், ஆனால் அம்மாவுக்கு இதில் நடந்து நடந்து முழங்கால் வலியே வந்து விட்டது.

சிறு ஓடையில் வயலுக்குச் சலசலத்து செல்லும் தண்ணீர்

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நம்ம விவசாயி, நிலத்தை உழுது கொண்டு இருக்கிறார். எவனோ! நம்மள “போட்டா” புடிக்கறானேன்னு வெய்யிலை மறைத்துக் கண்ணைச் சுருக்கி கை வைத்துப் பார்க்கிறார்.

அருகில் கொக்குகள் மண் புழுவை எடுக்க உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன

உழுது முடித்த பிறகு

நெல் நடுவதை படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆனால், இதைப் பார்த்து இருக்க மாட்டீர்கள், இதன் பெயர் நாற்றங்கால். அதாவது, விதை நெல்லை போட்டு இப்படி நெருக்கமாகப் பயிர் (நெல்) வளர்ப்பார்கள்.

பிறகு இதைப் பிடுங்கி நடுவதை தான் திரை படங்களில் பார்த்து இருப்பீர்கள்

இவ்வாறு பிடுங்கப்படும் நெற்பயிர்கள் கட்டு கட்டாகக் கட்டப்பட்டு இவ்வாறு நட தயாராக இருக்கும் பாத்தியில் (நிலத்தில்) போடப்படும்

கையில் வைத்து இருக்கும் நெற்பயிர் கட்டுகளில் இருந்து நடும் பெண்கள்.

நடவு முடிந்த பிறகு அழகாகக் காட்சி அளிக்கும் நிலம்.

இந்த விவசாயி எங்கள் வயலில் 20 வருடத்திற்கும் மேலாக வேலை செய்கிறார், உழைக்க வயது ஒரு தடையில்லை என்று உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்தும் இந்தக் கடின உழைப்பாளி ஒய்வு எடுப்பதை பற்றிச் சிந்திக்கவே இல்லை.

இது ஒரு ஓடை

வருடத்தில் 10 மாதங்கள் இந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். சிறு வயதில் பாலத்தின் மீது இருந்து குதித்த நினைவுகள். அது ஒரு கனாக்காலம்

மரம் மீது அழகான பறவை அமர்ந்து இருந்தது, புகைப்படம் எடுக்கும் முன்பு பறந்து விட்டது, ஆனாலும் இந்த மரம் அழகாக இருப்பதாகவே தோன்றியதால் ஒரு கிளிக்.

சரத்குமார்

இங்கு ஏகப்பட்ட திரை படங்கள் எடுத்து இருக்கிறார்கள். சரத்குமாருக்கு மிகப் பிடித்த ஊர் கோபி.

நட்புக்காக படத்தில் சிம்ரன் வெளி நாட்டில் தங்கி படித்து ஊர் திரும்புவார். அப்போது அழைத்து வர விஜயகுமாரும் சரத்குமாரும் அனைத்து ஊர்களுக்கும் கார் அனுப்புவார்கள்.

சரத்குமார் ஒவ்வொரு ஊர் பெயராகச் சொல்லி வருவார் அங்கே அனுப்பியாச்சா என்று கேட்டு, கடைசியாக ‘ஏனுங்க நம்ம கோபி!‘ ன்னு சொல்லி முடிப்பார். அந்த அளவுக்கு ரொம்ப பிரியம், பலருக்கு உதவிகளும் செய்து இருக்கிறார்.

கோபி எமரால்ட் ஹௌஸ்

கோபியில் எமரால்ட் ஹௌஸ் என்ற விடுதி உள்ளது இங்கே தான் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் தங்குவார்கள்.

இங்கே குஷ்பூக்கு என்று நிரந்தர அறை உள்ளது, எப்போது வந்தாலும் அங்கே தான் தங்குவதாகக் கூறுவார்கள்.

அம்மா கிரியேசன்ஸ் சிவா அவர்களின் நண்பர் என் அண்ணன் என்பதால் எனக்குப் பல செய்திகள் கிடைக்கும்.

என் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் குஷ்பூ இருந்த அறையில் தான் தங்குவேன் அந்தப் படுக்கையில் தான் படுப்பேன்! என்று ஒரு வழியாக்கிய கதை உண்டு 🙂 .

கீழே உள்ள அசோக மரங்கள் நிறைந்த இப்பாதையில் ஏகப்பட்ட பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நம்ம கேப்டன் கண்ணுபடபோகுதையா படத்தில் பாடுவாரே “மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு” னு அது இந்த இடம் தான்.

சத்யராஜ், கேப்டன், கார்த்திக், சரத்குமார் படங்கள் உட்பட ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் பாதை உடன் வரும் அசோக மரங்களும். இதில் வண்டியில் செல்லும் போது அப்படியொரு அற்புத அனுபவமாக இருக்கும்.

இப்பகுதியில் செல்லும் போது, சாலை மட்டுமே கறுப்பாக இருக்கும்.

சுற்றியும் பசுமை சூழ்ந்து எங்குக் காணினும் பச்சை நிறமே கண்ணில் தெரியும். சில நேரங்களில் வியப்பாகவும் & பெருமையாகவும் இருக்கும் என் ஊரை நினைத்து.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை இதே போலவே இருக்கும். உங்களுக்குப் புரிந்து இருக்கும் ஏன் இங்கே திரைப்படங்கள் எடுக்க அனைவரும் வருகிறார்கள் என்று.

தற்போது எல்லோரும் லண்டன் சுவிஸ்ன்னு போயிடறாங்க. பொள்ளாச்சியும் இதைப் போல அருமையாக இருக்கும்

கிராமத்து நீச்சல் குளம்

இது தான் கிராமத்து நீச்சல் குளம். அட! கிணற்றைத் தான் அப்படி சொன்னேன். தண்ணீர் வாய்க்காலில் நிறைந்து இருப்பதால் அனைத்து கிணறுகளும் நிரம்பி வழிகிறது.

கிணற்றின் மேலே இருக்கும் தொட்டியைப் போல 5 மடங்கு உயரம் கொண்ட இடத்தில் இருந்து கத்தி கொண்டே குதிப்பேன்.

மேலே உள்ள படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன்.

கோபி

கோபி சுத்தமான நகரம், அகலமான சாலைகள், வரிசையாக அழகாக இருக்கும் கடைகள், நாகரிகமான மற்றும் அன்பான மக்கள் என்று என் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கும் இடம் கோபி மட்டும் தான்.

கோபிக்கு இன்னொரு பெருமை உண்டு ICICI வங்கி சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கிய இரண்டாவது கிளை கோபி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

தொடர்புடைய கட்டுரை

“பச்சை பசேல்னு” ஊரு அதுக்கு “கோபி”ன்னு பேரு

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

71 COMMENTS

 1. கிரி.. மனசு கிடந்தது அடிச்சிக்குது .. இதுதான் வாழ்க்கை.. நாம இப்போ இருக்கிறதெல்லாம்..ஒரு மாயை.. (எவ்வளவு கோடி குடுத்தாலும்..இந்த லைப் எங்கேயும் கிடைக்காது..) என்ன பண்ணுறது.. MGR பாட்டு தான் ஞ்யாபகத்துக்கு வருது.. “வயத்துக்காக..மனுஷன் இங்கு கயிற்றில் ஆடுறான் பாரு…ஆடி முடிச்சி திரும்பி வந்தா அப்புறம் தாண்டா சோறு..”

  நாம தான் நிஜமா ஆடிக்கிட்டு இருக்கோம்..

  உங்கள் பதிவிலேயே..சிறந்த பதிவு..வாழ்த்துக்கள்..

 2. //”வயத்துக்காக..மனுஷன் இங்கு கயிற்றில் ஆடுறான் பாரு…ஆடி முடிச்சி திரும்பி வந்தா அப்புறம் தாண்டா சோறு..”//

  வாங்க வெங்கி. சரியா சொன்னீங்க. ஒரு காலகட்டத்துக்கு பிறகு என் கிராமத்திலேயே இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

 3. வாங்க கயல்விழி முத்துலெட்சுமி முதல் முறையா என் பதிவுக்கு வந்து இருக்கீங்க.

  //சின்ன ஊரு சின்ன ஊருதாங்க.. அழகும் அமைதியும்..ம்//

  கிராமங்களில் மட்டுமே இதை எதிர் பார்க்க முடியும். கோவிலும் வயல்வெளிகளும் நம் மனதை கட்டி போட்டு விடுகின்றன.

 4. வாங்க வெயிலான் நீங்களும் முதல் முறையா வந்து இருக்கீங்க நன்றி.

  //கோபியா? கோபி பக்கத்துலயா? எங்கனு சொன்னீங்கன்னா, நாங்களும் பார்த்துட்டு வருவோம்ல?//

  நீங்கள் படத்தில் பார்ப்பது கோபி க்கு வெளியே 8 கிலோ மீட்டர் தொலைவில் கூகலூர் என்ற கிராமம்.

  ஆனால் கோபி அருகேயும் இதை விட அழகான பகுதிகள் உண்டு, அவை கோபியில் இருந்து பாரியூர் மற்றும் பங்களா புதூர் செல்லும் இடத்தில் உள்ளது, இவை கோபிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. நானே ஒரு சில சமயம் பார்த்து இத்தனை அழகான்னு வியந்து போய் இருக்கிறேன். நீங்கள் செல்லும் சாலை மட்டுமே கருமை நிறமாக இருக்கும் இரு பக்கமும் இயற்கை அன்னையின் பசுமையே எங்கும் படர்ந்து இருக்கும். உங்கள் கண் எது வரை தெரிகிறதோ அது வரை வயல்வெளிகள் மட்டுமே இருக்கும்.

 5. கிரி,

  கோபியா? கோபி பக்கத்துலயா? எங்கனு சொன்னீங்கன்னா, நாங்களும் பார்த்துட்டு வருவோம்ல?

 6. மிகவும் அழகாக உள்ளது கிரி உங்கள் ஊர். உங்க வீடு கருங்கல்லில் தான் கட்டப்பட்டது சத்யமா நம்பறோம். கண்டிப்பாக உங்க வீட்டுக்கு ஒரு முறை விசிட் அடிக்கணும் போல இருக்கே. நான் சில சமயங்களில் யோசித்து இருக்கிறேன், படங்களில் காண்பிக்கப்படும் வயல்வெளிகள் போல நேரில் எங்கு போய் பார்ப்பது என்று. இப்போ விடை கிடைத்து விட்டது… மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது இந்த பதிவு. வாழ்த்துகள்

 7. அடுத்த பதிவு எப்போனு கேட்க வைக்கறீங்களே… உங்களோட எழுத்து நடை நன்றாக உள்ளது…

 8. //கண்டிப்பாக உங்க வீட்டுக்கு ஒரு முறை விசிட் அடிக்கணும் //

  நீ பேசாம என் திருமணத்திற்கு எல்லோரும் ஊருக்கு வந்த போது அவங்க கூட நீயும் வந்து இருக்கலாம்.

  //நான் சில சமயங்களில் யோசித்து இருக்கிறேன், படங்களில் காண்பிக்கப்படும் வயல்வெளிகள் போல நேரில் எங்கு போய் பார்ப்பது என்று. இப்போ விடை கிடைத்து விட்டது//

  🙂

  //மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது இந்த பதிவு. வாழ்த்துகள்//

  நன்றி வித்யா

  //உங்களோட எழுத்து நடை நன்றாக உள்ளது..//

  இன்னும் நீ மற்றவங்க எழுதுவதை பார்க்கலைனு நினைக்கிறேன் ஹி ஹி ஹி நம்மெல்லாம் ஜுஜுபி

 9. //கிரி சாமி நீங்க நாம்ப பக்கம் தாங்க!..//

  அப்படியாங்க ரீல்!!! நீங்க எங்க இருக்கீங்க??

  //நொம்ப நல்ல இருக்குங்க தம்பி!//

  நன்றிங்ணா 🙂

 10. நீங்க நம்ப ஊருக்காரறு தானுங்கணோவ் :-))

  //ஏன்னா பேங்க் ஆப்பு மதுராவை ICICI காரனுங்க வாங்கி போட்டதால சின்ன சின்ன கிராமத்தில கூட ICICI பேங்கி வந்துரிசிங்க.அப்படி எதுனாச்சும் உங்கூர்லேயும் நடந்துச்சீங்களா? தம்பி! //

  அதே தானுங்ணா. சரியா சொல்லி புட்டீங்க? இரண்டாவது கிளை கோயம்புத்தூர் ல கூட தொடங்காம நம்ம ஊர்ல வந்தது நமக்கு பெருமைதானுங்களே!! அங்கே இல்லாத பேங்க் ஆப்பு மதுராங்களா .. என்ன நா சொல்றது?

  அது வேற ஒண்ணுமில்லைங்ணா.. நம்ம ஊர்ர்ல கொஞ்சம் பண புழக்காட்டம் அதிகமுங்க, அண்டர்வேர் பாக்கெட்குள்ள கைய விட்டு கத்து கத்தய பணத்த எடுத்து போடறதா பாத்து, இங்கே உடனே ஆரம்பிச்சுடானுக போல இருக்குங்க .. என்ன நா சொல்றது… 🙂 ஆள பாத்தா ஊர் நாட்டான் மாதிரி இருக்கான் இம்புட்டு பணத்தை வைத்து இருக்கானுங்கலேன்னு அசந்து போய் இருப்பாங்க

 11. //நானா தம்பிங்கண்ணா!.உங்கூரிலிருந்து அப்பிடிக்கா மேக்கா போனா பவானி வருதுலீங்க அதுக்கும் மேல மேக்கா போனா குமாரபாளையம் வருதுங்களா? அதுக்கும் மேல மேக்கா போனா சங்கிரி வருதுங்களா? அதுக்கும் மேல மேக்கா போனாக்க எங்கூரு வந்துருங்க//

  இதுக்கு நீங்க சங்ககிரி பக்கதுலன்னே சொல்லி இருக்கலாம்கோ :-))

  //நொம்ப தொலவோ?…தடம் மட்டும் ஒரே தடந்தாங்க!….. :)//

  நெம்ப தொலைவுங்னோவ்…..இருந்தாலும் பல மேட்டர் தெரிஞ்சு வச்சுருக்கீங்க

 12. //இத்துப்போன ரீல் said…
  சங்கிரில இருந்து மேக்கால போன வைகுந்தமுங்க!.. அதுக்கப்புறம் மேக்கால போனா மகுடஞ்சாவடிங்க.. அதுக்கப்புறம் மேக்க போனா …தம்பி அடிக்க வராதீங்க!…நா ஓடி போயிரனுங்க//

  :-)))

 13. // பிரேம்ஜி said…
  கொஞ்ச நேரம் அலுவல் உட்பட எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் ஒருமுறை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது உங்கள் வயல் வெளி பதிவு//

  உங்களின் தொடர் வருகைக்கும், என்னை உற்சாக படுத்தும் உங்களின் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி பிரேம்ஜி.

 14. //கோபிக்கு இன்னொரு பெருமை உண்டு ICICI வங்கி சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கிய இரண்டாவது கிளை கோபி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.//

  கிரி சாமி நீங்க நாம்ப பக்கம் தாங்க!..
  நொம்ப நல்ல இருக்குங்க தம்பி!

 15. ////கோபிக்கு இன்னொரு பெருமை உண்டு ICICI வங்கி சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கிய இரண்டாவது கிளை கோபி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.//

  கிரி சாமி நீங்க நாம்ப பக்கம் தாங்க!..
  நொம்ப நல்ல இருக்குங்க தம்பி!//
  மேட்டர மறந்து போட்டனுங்க தம்பி..
  கோபியில பேங்க் ஆப்பு மதுரா இருந்துசீங்களா?.. ஏன்னா பேங்க் ஆப்பு மதுராவை ICICI காரனுங்க வாங்கி போட்டதால சின்ன சின்ன கிராமத்தில கூட ICICI பேங்கி வந்துரிசிங்க.அப்படி எதுனாச்சும் உங்கூர்லேயும் நடந்துச்சீங்களா? தம்பி!

  உண்மைத் தகவலுக்காக வேண்டுவது உங்கள் ரீல்..ரீல்..ரீல்…!!!! 🙂

 16. //அப்படியாங்க ரீல்!!! நீங்க எங்க இருக்கீங்க??//
  நானா தம்பிங்கண்ணா!.உங்கூரிலிருந்து அப்பிடிக்கா மேக்கா போனா பவானி வருதுலீங்க அதுக்கும் மேல மேக்கா போனா குமாரபாளையம் வருதுங்களா? அதுக்கும் மேல மேக்கா போனா சங்கிரி வருதுங்களா? அதுக்கும் மேல மேக்கா போனாக்க எங்கூரு வந்துருங்க!.. நொம்ப தொலவோ?…தடம் மட்டும் ஒரே தடந்தாங்க!….. 🙂

 17. //இதுக்கு நீங்க சங்ககிரி பக்கதுலன்னே சொல்லி இருக்கலாம்கோ :-))
  //
  அதிலேயும் ஒரு சமாச்சாரம் இருக்குங்க தம்பிங்கண்ணா!. அது என்னான்னா?
  சங்கிரில இருந்து மேக்கால போன வைகுந்தமுங்க!.. அதுக்கப்புறம் மேக்கால போனா மகுடஞ்சாவடிங்க.. அதுக்கப்புறம் மேக்க போனா …தம்பி அடிக்க வராதீங்க!…நா ஓடி போயிரனுங்க!…

  • ஏனுங்க …செத்த சும்மா இருங்கண்ணா …ரெண்டு பெரும் சேர்ந்துட்டு ரவுசு பண்ணறீங்க !!!

 18. கொஞ்ச நேரம் அலுவல் உட்பட எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் ஒருமுறை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது உங்கள் வயல் வெளி பதிவு.மிக்க நன்றி.

 19. கிராமத்து காட்சியை கண் முன் அழகாக நிறுத்தி இருக்கிறீர்கள். நாற்றாங்கால் படங்களும் அழகு அழகு. இதெல்லாம் எப்போது படம் பிடித்தீர்கள் ? பதிவெழுத வரும் முன்பே படம் பிடித்துவிட்டீர்களா ?

 20. // கோவி.கண்ணன் said…
  கிராமத்து காட்சியை கண் முன் அழகாக நிறுத்தி இருக்கிறீர்கள்.நாற்றாங்கால் படங்களும் அழகு அழகு//

  நன்றி கோவி கண்ணன்

  //இதெல்லாம் எப்போது படம் பிடித்தீர்கள் ? பதிவெழுத வரும் முன்பே படம் பிடித்துவிட்டீர்களா ?//

  ஹா ஹா ஹா ஹா. ஏங்க இப்படி சந்தேகமா கேட்கறீங்க? இந்த படம் சரியாக கடந்த வாரம் ஊருக்கு போய் இருந்தேன் என் அம்மா அப்பாவை கூட்டி வர, அப்போது (29-05-2008 அன்று) எடுத்தது. பதிவெழுத வரும் முன்பு எடுத்து இருந்தால் இதில் பல படங்கள் விட்டு போய் இருக்கும். நம் பதிவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காவே வரிசை படி எடுத்தேன்.

  ஹீ ஹீ ஹீ என் மேல ரொம்ப நம்பிக்கை வைத்து இருக்கீங்க போல …..

 21. // Thala said…
  கிரி உங்கள் மண விழாவுக்கு கோபி வந்த பொழுது
  இந்த இயற்கை காட்சிகளை நானும் கண்டு களித்தேன்,மறுபடியும் வர தூண்டுகிறது. – நன்றி//

  வாங்க சக்தி உங்களின் தொடர் பின்னூட்டம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது நன்றி.

  சக்தி நீங்க வந்தது மார்ச் மாதம், அப்போது இந்த அளவுக்கு இருந்து இருக்காது, தற்போது மிக அருமையாக இருக்கிறது. அப்போது நான் இருந்த வேலை பளுவில் உங்களை பல இடங்களுக்கு கூட்டி செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது. திரும்ப ஒரு முறை வாருங்கள் எல்லோரும், இந்த முறை அனைவரையும் கூட்டி செல்கிறேன். எத்தனை நாளைக்கு தான் சர்வர் பிரச்சனையையும் நெட்வொர்க் பிரச்சனையும் பார்த்து கொண்டு இருப்பது :-))

 22. வாங்க முரளிக்கண்ணன்.

  பணம் என்ற பிசாசை தேடி அலைவதாலும், வழக்கையே போராட்டமாக இருப்பதாலும் ஊரில் இருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே வாய்ப்பிருந்தும் கொடுத்து வைக்காத துரதிர்ஷ்டசாலி நான்.

 23. ஜெகதீசன் said…
  பதிவும் படங்களும் ரெம்ப நல்லா இருக்கு…

  நன்றி ஜெகதீசன்.

  //எனக்கும் இதே ஆசை தான்.. குடும்பத்துடன் ஊரில் செட்டில் ஆகனுமின்னு(அண்ணன் தம்பி எல்லாருடனும்)..
  ஆனால் இன்னும் எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை.. 🙁
  அதுவரை கிராமம் கிராமமாக இருக்குமான்னும் தெரியலை…//

  கவலைபடாதீர்கள், மக்கள் தொகை பெருக்கத்தால் மற்றும் உற்பத்தி குறைவால் விரைவில் நமக்கு உணவு தட்டுப்பாடு மற்றும் பல பிரச்சனைகள் வரும். அப்போது விவசாயத்தின் அருமை அனைவருக்கும் புரியும். அப்போது விவசாயத்தின் அளவும் அதிகரிக்கும் கிராமங்களின் முக்கியத்துவமும் அனைவருக்கும் புரியும்.

 24. //புகைப்படங்கள் அனைத்தும் கண்ணைக் கவர்கின்றன//

  நன்றி உண்மை தமிழன். முதல் முறையா என் பதிவுக்கு வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன் வரவேற்கிறேன் 🙂

 25. கிரி உங்கள் மண விழாவுக்கு கோபி வந்த பொழுது
  இந்த இயற்கை காட்சிகளை நானும் கண்டு களித்தேன்,மறுபடியும் வர தூண்டுகிறது. – நன்றி

 26. பதிவும் படங்களும் ரெம்ப நல்லா இருக்கு…

  //
  ஒரு காலகட்டத்துக்கு பிறகு என் கிராமத்திலேயே இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
  //
  :))
  எனக்கும் இதே ஆசை தான்.. குடும்பத்துடன் ஊரில் செட்டில் ஆகனுமின்னு(அண்ணன் தம்பி எல்லாருடனும்)..
  ஆனால் இன்னும் எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை.. 🙁
  அதுவரை கிராமம் கிராமமாக இருக்குமான்னும் தெரியலை…

 27. நீங்கள் விளக்கியிருக்கும் கருங்கற்களால்தான் நான் படித்த பாளை இஞ்ஞாசியர் பள்ளியின் பல கட்டடங்கள் அமைந்திருக்கும்.
  கிராமம் இல்லாவிட்டாலும், உங்கள் வீட்டைப் போல அடுத்தடுத்து (அறைக்)கட்டுகள் கொண்ட வீட்டில்தான் நாங்களும் வளர்ந்தோம். கயல்விழி அவர்களின் அழைப்பை ஏற்று திண்ணை பற்றி பதிவிடும் எண்ணமிருக்கிறது. பதிவிட்டால் அழைக்கிறேன்.
  வயல் படங்கள் வெகு அருமை. ஜூன் பிட் படம் இந்த சமயத்தில் எடுத்ததுதானா??

 28. //கிராமம் இல்லாவிட்டாலும், உங்கள் வீட்டைப் போல அடுத்தடுத்து (அறைக்)கட்டுகள் கொண்ட வீட்டில்தான் நாங்களும் வளர்ந்தோம்//

  அடுத்தடுத்த அறைகள் ஏன் என்றால் நெல் மற்றும் தானியங்களை கொட்டி வைக்க, பராமரிக்க எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால்.

  //கயல்விழி அவர்களின் அழைப்பை ஏற்று திண்ணை பற்றி பதிவிடும் எண்ணமிருக்கிறது. பதிவிட்டால் அழைக்கிறேன்//

  மறக்காம சொல்லுங்க 🙂

  //வயல் படங்கள் வெகு அருமை. ஜூன் பிட் படம் இந்த சமயத்தில் எடுத்ததுதானா??//

  ஹீ ஹீ ஹீ ஆமாங்க …அப்படியே கமுக்கமா இதுல நுழைத்துட்டேன்

  உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி

 29. படங்களின் யதார்த்தம் அழகாக உள்ளது.எனக்கெல்லாம் இதையெல்லாம் படத்தில் பார்க்க மட்டுமே கொடுப்பினை.

 30. //படங்களின் யதார்த்தம் அழகாக உள்ளது//

  நீங்கள் இது போல கூறவது எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது.

  //எனக்கெல்லாம் இதையெல்லாம் படத்தில் பார்க்க மட்டுமே கொடுப்பினை//

  அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க, பொள்ளாச்சி, கோபி, கோவை, வால்பாறை மற்றும் டாப் ஸ்லிப் ஆகிய இடங்களை திட்டமிட்டு வந்தீர்கள் என்றால் (டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில்) ஒரு கலக்கு கலக்கலாம்.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

 31. //உண்மையிலேயே ஆச்சர்யம்தான் இத்தனை சினிமா படங்களை அங்கு வந்து சூட்டுங்கியும், அது அந்தூர் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் விவசாயத்தின் பேரில் வைத்திருக்கும் மாறாக் காதல் அவ்வூர்க் காரர்களை எண்ணி பெருமைப்படவே கொள்ள வைக்கிறது//

  திரைப்பட படபிடிப்பின் போது அனைவரையும் போல, அதன் மீது உள்ள ஒரு ஆர்வத்தில் அலது திரை நட்சத்திரங்களை பார்க்கும் ஆவலில் வந்து பார்ப்பார்கள் மற்றபடி அது அவர்களை பாதிப்பதில்லை இது அனைவருக்கும் பொருந்தும். விவசாயத்திற்கு தற்போது கூலி ஆட்கள் கிடைப்பது மிக சிரமமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஆண்களுக்கு கொடுக்கப்படும் கூலி 170 ருபாய் அதுவும் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள், அதிலும் பொறுப்பாக வேலை செய்பவர்கள் குறைவு. பெண்களுக்கு 80 ருபாய் ஆகும். பெரும்பாலானவர்கள் மில் வேலைக்கு செல்வதால் ஆட்கள் தட்டுப்பாடு அதிகம். எனவே பலர் கடும் கஷ்டத்திலிடையே தான் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது கலைஞர் அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்தது அல்லவா? அதில் பயன் அடைந்தவர்கள் பலர், கண்டிப்பாக அவர்கள் கலைஞரை மனதார வாழ்த்தி இருப்பார்கள் கட்சி பாகுபாடு இல்லாமல்.

  ஒரு சில விவசாய இடங்கள் பிளாட் போட்டு விற்கப்பட்டாலும், எங்கள் பகுதியில் அவ்வாறு நடப்பது மிக குறைவு. இன்னும் விவாசயத்தின் மீது உள்ள நம்பிக்கையாலும், புதிய இயந்திரங்களின் துணை கொண்டு விவசாயத்தை தொடருவதாலும் தற்போது சமாளிக்க முடிகிறது. தற்போது நெல் சம்பந்தப்பட்ட மிக பெரிய இயந்திரங்களை எங்கள் பகுதி வயல் வெளிகளில் காண முடிகிறது, ஆட்கள் பிரச்சனையால்.

  நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் இதில் உள்ள ஆர்வத்தில் கேட்டதாகவே எனக்கு தோன்றியது எனவே கொஞ்சம் விவரமாக கூறலாம் என்று கூறினேன்.

  உங்கள் வருகைக்கும், நீங்கள் விவசாயத்தின் மீது வைத்து இருக்கும் அன்புக்கும் எங்கள் நன்றி தெகா.

 32. //நிறைய கிராமங்களில் தண்ணீர் ஒரு பிரச்சினையாக விவசாயத்திற்கு அமைந்தாலும், இந்த ஆட்கள் தட்டுப்பாடு அப்படி மீறியும் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் உள்ள ஒரு சில விவசாயிகளையும் அயர்ச்சியுற வைத்துவிடுகிறது.//

  நீங்கள் கூறுவது மிக சரி.

  //இப்பொழுது சட்டை கசங்காமல் பணம் பண்ணுவதிலேயே எல்லோருக்கும் ஆர்வம் அதிகமிருப்பதாகபடுகிறது//

  உண்மை தான். அதில் நாம் அவர்களை குறை கூற முடியாது. வசதியாக வாழ நினைப்பது மனித இயல்பு. யாரும் கஷ்டப்பட விரும்பமாட்டார்கள்.

  விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை இல்லை, அதை உயர்த்தவும் முடியாது. காரணம் அவை மக்களின் அடிப்படை தேவைகள். அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் இவைகள் விலை உயர்ந்தால் கொதிப்படையும் மக்கள் ஆடம்பர செலவாக மிக பெரிய தொலைகாட்சி பெட்டி, பாட்டு பெட்டி, மிக பெரிய வசதி கொண்ட தேவைக்கு அதிகமான வீடுகள் (தற்போது கண்டபடி விலை உயர்ந்து விட்டது அதனால் அதற்கு வாய்ப்பு குறைந்து விட்டது), விலை அதிகம் என்று தெரிந்தும் வாங்கும் தேவையற்ற பொருட்கள் என்று பல வெட்டி செலவுகளை செய்ய தயங்குவதில்லை. ஒரு சில அத்தியாவசியம் என்றாலும் மக்கள் பெரும்பாலும் வருமானம் உயர்ந்தால் இதை போன்று தங்களின் தேவைகளை உயர்த்தி தங்களை நெருக்கடிக்கு ஆளாக்க தயங்குவதில்லை. ஆனால் அடிப்படை பொருட்களின் விலை உயர்ந்தால் முதல் நாளே கூப்பாடு போடுகிறார்கள். காரணம் தினமும் பயன்படுத்துவதால், எனவே இதில் மக்களையும் குறை கூற முடியாது. விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் நட்டதிலேயே அல்லது குறைவான லாபத்திலேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அரசு கொடுக்கும் மானியம் ஒன்றே இதை தடுக்க முடியும். எனென்றால் அரசால் விளை பொருட்களின் விலையை உயர்த்த அனுமதிக்க முடியாது, எனென்றால் பெரும் போராட்டம் வெடிக்கும், விலை உயரவில்லை என்றால் விவசாயிகளுக்கு நட்டம் தான். இதற்க்கு ஒரே வழி அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஆகும். இதுவே ஒரு விவசாயிக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் நட்டம் ஏற்படாமல் தடுக்க வாய்ப்புண்டு. கிராமங்களில் நட்டம் இல்லை என்றாலே பெரிய விஷயம் பிறகு தான் லாபம். இது ஒரு கசப்பான உண்மை.

  //விவசாயத்தின் பொருட்டும், இயற்கைசார் விசயங்களின் பொருட்டும் எனக்கு ஆர்வமிருக்கிறதா என்பதனை இங்கு சென்று கவனித்து வாருங்கள்//

  கண்டிப்பாக படிக்கிறேன்.

 33. //பல வருடங்களுக்கு முன் கோபியில் படித்த பொழுது ஊர் சுற்றிய நினைவுகள் திரும்ப வருகின்றன. நன்றி கிரி.//

  ராமநாதன் எங்க டயமண்ட் ஜுபிலீ யா படித்தீங்க? அப்ப கண்டிப்பாக நீங்கள் இந்த காட்சிகளை எல்லாம் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

  உங்கள் வருகைக்கு நன்றி

 34. //பேச நீங்களும் ஆர்வமாக இருப்பதால் மேலும் தொடர்கிறேன் ;).//

  நான் எப்போதும் ஆரோக்யமான விவாதத்தை வரவேற்கிறேன் தெகா. விதண்டாவாதம் என்றால் ஒதுங்கி விடுகிறேன் 🙂

  //இந்த வளர்ச்சி சமச்சீராக அமைய வேண்டும் அப்பொழுதுதான் எல்லா துறைகளிலும் வளர்ச்சி சீராக இருக்க முடியும்.//

  நீங்கள் கூறுவது 100% சரி ஆனால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு.

  //பண வீக்கத்தை முடுக்கி விட முடியுமே தவிர(தனிப் பட்ட மனித வாழ்விலும் கூட) குறைக்க வாய்ப்புண்டா?//

  வாய்ப்பே இல்லை.

  //மற்ற பொருட்களுக்கு எத்தனை விலையானாலும் எப்பாடு பட்டேனும் வாங்கிக் கொள்ள எத்தனிக்கும் அவர்கள், விவசாயின் கடின உழைப்பிற்கும், ஏறி வரும் மற்ற பொருட்களின் விலைவாசிக்கும் பதில் சொல்லித்தானே விளைவிக்கிறார்கள் என்று யோசிக்கிற மாதிரியே தெரியவில்லை.//

  சரியான கேள்வி. கண்டிப்பாக யோசிக்க மாட்டார்கள், எனென்றால் அவர்கள் விவசாயிகள் கிடையாது, அவர்களுக்கு பாதிப்பு வரும் போது மட்டுமே அதை பற்றி சிந்திப்பார்கள். அவர்கள் பிரச்சனை அரிசி விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு என்ற அளவிலேயே இருக்கும் அதன் பின்னால் பாதிப்பில் இருக்கும் விவசாயிகளை பற்றி இருக்காது, அது அவர்களுக்கு தேவையும் இல்லை. இதுவே நிதர்சனம். மற்ற பொருட்களின் விலை உயரும் போது, அதே போல விவசாயிகளும் தங்கள் விளைவிக்கும் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள் அது தான் நியாயம். அதுதான் தர்மம் ஆனால் அது அடிப்படை பிரச்சனை என்பதால் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், அரசும் அனுமதிக்காது.

  //இதுக்கு என்னதான் தீர்வு?//

  இதுக்கு தீர்வு, அரசால் விலை உயர்வை அனுமதிக்க முடியாது எக்காலத்திலும், அப்படின்னா விவசாயிகள் நட்டத்தில் இருக்க முடியுமா? அதற்கு தான் மானியம். வரும் காலங்களிலும் இது ஒன்று மட்டுமே தீர்வு. ஆனால் இது மிக குறைவாக கொடுக்கப்படுகிறது, இதில் பல தில்லுமுல்லுகள் அரசியல்கள் எனவே தான் விவசாயத்தை தொடருபவர்கள் குறைகிறார்கள், புதியவர்கள் வருவதில்லை.

 35. ஆகா கிரி, உங்கள் சின்ன கோடம்பாக்கத்தை எட்டிப் பார்த்தாலும் பார்த்தேன். அது தெகாவுடன் எத்தனை அருமையான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது.

  தெகா said://தேவையான, நீண்ட பின்னூட்டம் எனக்குப் பிடித்த விசயம் :).//

  எனக்கும்தான். நேரமிருந்தால் என் “கல்விச் சந்தை” இடுகையின் பின்னூட்டங்கள் காண்க.
  http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_29.html

 36. /உங்கள் சின்ன கோடம்பாக்கத்தை எட்டிப் பார்த்தாலும் பார்த்தேன். அது தெகாவுடன் எத்தனை அருமையான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது. //

  110 பதிவுகள் எழுதி இருந்தாலும் இதை போல நல்ல விவாதங்களை கொண்டது 3 மட்டுமே, இந்த பதிவில் அது தெகா அவர்களால் ஏற்பட்டது. அதற்கு தெகாவிற்கு நன்றி.

  //நேரமிருந்தால் என் “கல்விச் சந்தை” இடுகையின் பின்னூட்டங்கள் காண்க//

  கண்டிப்பாக பார்க்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலஷ்மி.

 37. //கிரி தம்பிங்கண்ணா! நானு மேக்கால மேக்காலன்னு எழுதியிருந்ததைத் திருத்தி, சாமி.. எங்கூரிலிருந்து நீங்க சொன்ன ஊருங்கெல்லாம் கிழக்காலதானே இருக்குன்னு சொல்லுவீங்கன்னு பாத்தேன்!.சொல்லலீயே காரணம் என்னப்பா?..//

  ரீல்ணா… நமக்கு இந்த மேக்கால தெக்கால கிழக்கால வடகால எல்லாம் ஒரு வெங்காயமும் தெரியாதுங்கண்ணா, தெரிஞ்சாதானுங்க சொல்ல முடியும். ஹீ ஹி ஹி

 38. //ஆம், 1984 முதல் 87 வரை வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் படித்தது.//

  ஆகா இரண்டு பெரும் ஒரே பள்ளியில் தான் படித்து இருக்கோம். எனக்கு நீங்க 8 வருடம் மூத்த மாணவர்.

  //ஊரை விட்டு வந்து 20 வருடங்கள் ஆகிறது. எவ்வளவு மாறி இருக்கும் என்று தெரியவில்லை//

  ரொம்ப மாற்றம் என்று கூற முடியாது. பழைய கட்டிடங்கள் எல்லாம் புதியதாக மாற்றப்பட்டு விட்டன. போக்குவரத்து அதிகமாகி விட்டது. நிலத்தின் விலை உயர்ந்து விட்டது. நகரம் சுத்தமாக உள்ளது. கோவில்கள் எப்போதும் போல் உள்ளன, சிறிது மாற்றங்களுடன். வயல் வெளிகள் எப்போதும் போல் உள்ளன எந்த மாற்றமும் இல்லாமல்.

 39. //சூப்பர் கிரி உங்க வீடும்,வயலும்,இந்தப் பதிவும்..//

  வாங்க ரிஷான். எங்கடா ஆளையே காணோமேன்னு பார்த்தேன் 🙂

  //இந்தியாவுக்கு வந்தால் உங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்.
  வந்தா இதையெல்லாம் திரும்பவும் சுத்திக் காட்டுவீங்கள்ல?:)//

  கண்டிப்பாக வாங்க. நீங்கள் வருவது டிசம்பர் ஜனவரி மாதமாக இருந்தால் உங்க கண்ணு பச்சை நிறம் ஆகும் வரை சுத்தி காட்டி விடுவேன் :-). மற்ற நாட்களிலும் நன்றாக இருக்கும் (இந்த படங்கள் கூட 10 நாட்கள் முன்பு எடுத்தது தான்) இருந்தாலும் அப்போது மழை சாரலுடன் அருமையாக இருக்கும். திரும்ப சுத்தி காட்ட நான் எங்கங்க ரொம்ப தொலைவா போக போறேன், இதெல்லாம் என் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கு. டகால்னு எகிறிடலாம் வாங்க.

 40. பல வருடங்களுக்கு முன் கோபியில் படித்த பொழுது ஊர் சுற்றிய நினைவுகள் திரும்ப வருகின்றன. நன்றி கிரி.

 41. கிரி,

  படங்கள் கண்ணிற்கு இதமாக இருக்கிறது. கோபியை பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இது வரையிலும் அந்தப் பக்கமாக வந்தது கிடையாது.

  உண்மையிலேயே ஆச்சர்யம்தான் இத்தனை சினிமா படங்களை அங்கு வந்து சூட்டுங்கியும், அது அந்தூர் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் விவசாயத்தின் பேரில் வைத்திருக்கும் மாறாக் காதல் அவ்வூர்க் காரர்களை எண்ணி பெருமைப்படவே கொள்ள வைக்கிறது…

  //கவலைபடாதீர்கள், மக்கள் தொகை பெருக்கத்தால் மற்றும் உற்பத்தி குறைவால் விரைவில் நமக்கு உணவு தட்டுப்பாடு மற்றும் பல பிரச்சனைகள் வரும். அப்போது விவசாயத்தின் அருமை அனைவருக்கும் புரியும். அப்போது விவசாயத்தின் அளவும் அதிகரிக்கும் கிராமங்களின் முக்கியத்துவமும் அனைவருக்கும் புரியும்.//

  இதனை நீங்கள் அறிந்தே வைத்திருப்பது மேலும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது நமது இந்திய நாட்டின் விவசாயம் மேலும் பழைய படி எழுச்சியுருமென்று… படங்களுக்கும் உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி இத் தருணத்தில்.

 42. கிரி,

  தேவையான, நீண்ட பின்னூட்டம் எனக்குப் பிடித்த விசயம் :). விவசாயத்திற்கான ஆட்கள் தட்டுப்பாட்டை என்னால் மிக நன்றாகவே உணர முடிகிறது, நிறைய கிராமங்களில் தண்ணீர் ஒரு பிரச்சினையாக விவசாயத்திற்கு அமைந்தாலும், இந்த ஆட்கள் தட்டுப்பாடு அப்படி மீறியும் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் உள்ள ஒரு சில விவசாயிகளையும் அயர்ச்சியுற வைத்துவிடுகிறது.

  இப்பொழுது சட்டை கசங்காமல் பணம் பண்ணுவதிலேயே எல்லோருக்கும் ஆர்வம் அதிகமிருப்பதாகபடுகிறது.

  ஹும், விவசாயத்தின் பொருட்டும், இயற்கைசார் விசயங்களின் பொருட்டும் எனக்கு ஆர்வமிருக்கிறதா என்பதனை இங்கு சென்று கவனித்து வாருங்கள், நேரமிருப்பின் – அணைத்தும் எனது பதிவுகளே!

  பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்…

  இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?

 43. பேச நீங்களும் ஆர்வமாக இருப்பதால் மேலும் தொடர்கிறேன் ;).

  //வசதியாக வாழ நினைப்பது மனித இயல்பு. யாரும் கஷ்டப்பட விரும்பமாட்டார்கள்.//

  உண்மைதான். ஆனால் இந்த வளர்ச்சி சமச்சீராக அமைய வேண்டும் அப்பொழுதுதான் எல்லா துறைகளிலும் வளர்ச்சி சீராக இருக்க முடியும். நீங்கள் கூறியபடி இந்த பெரிய, பெரிய தொலைக்காட்சி பெட்டிகளும், ஒரு லட்ச ரூபாய் கார்களும் பண வீக்கத்தை முடுக்கி விட முடியுமே தவிர(தனிப் பட்ட மனித வாழ்விலும் கூட) குறைக்க வாய்ப்புண்டா?

  //விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை இல்லை, அதை உயர்த்தவும் முடியாது. காரணம் அவை மக்களின் அடிப்படை தேவைகள்.//

  இது கொடுமையான சூழ்நிலைதான்.. இதுவும் மற்றுமொரு காரணி விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை வீட்டு மணைகளாக மாற்றுவதற்கும். மக்களின் மன நிலை, இது போன்ற அடிப்படை தேவைகளின் விலையேற்றத்தை மற்றும் ஆதரிப்பதே கிடையாது, அவ்வறு கண்களை கட்டிக்கொண்டு மற்ற பொருட்களுக்கு எத்தனை விலையானாலும் எப்பாடு பட்டேனும் வாங்கிக் கொள்ள எத்தனிக்கும் அவர்கள், விவசாயின் கடின உழைப்பிற்கும், ஏறி வரும் மற்ற பொருட்களின் விலைவாசிக்கும் பதில் சொல்லித்தானே விளைவிக்கிறார்கள் என்று யோசிக்கிற மாதிரியே தெரியவில்லை.

  இதுக்கு என்னதான் தீர்வு?

 44. ஹையோ..
  சூப்பர் கிரி உங்க வீடும்,வயலும்,இந்தப் பதிவும்..

  இந்தியாவுக்கு வந்தால் உங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்.
  வந்தா இதையெல்லாம் திரும்பவும் சுத்திக் காட்டுவீங்கள்ல?:)

 45. கிரி தம்பிங்கண்ணா! நானு மேக்கால மேக்காலன்னு எழுதியிருந்ததைத் திருத்தி, சாமி.. எங்கூரிலிருந்து நீங்க சொன்ன ஊருங்கெல்லாம் கிழக்காலதானே இருக்குன்னு சொல்லுவீங்கன்னு பாத்தேன்!.சொல்லலீயே காரணம் என்னப்பா?..

 46. >ராமநாதன் எங்க டயமண்ட் ஜுபிலீ யா படித்தீங்க? அப்ப கண்டிப்பாக நீங்கள் இந்த காட்சிகளை எல்லாம் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

  ஆம், 1984 முதல் 87 வரை வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் படித்தது. பச்சை மலை, பவள மலை, பாரியூர் , கொடிவேரி, தடப்பள்ளி , அரக்கன்கோட்டை வாய்க்கால், பவானி சாகர் என பல இடங்கள் எல்லாம் ஏதோ கனவு போல தெரிகின்றன. ஊரை விட்டு வந்து 20 வருடங்கள் ஆகிறது. எவ்வளவு மாறி இருக்கும் என்று தெரியவில்லை.

 47. கிரி,

  கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியான படங்கள் மற்றும் தகவல்கள். எங்கள் தஞ்சைப் பகுதியும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும் 🙂 வீடு, அற்புதமாக இருக்கிறது. ஓடை அழகு!

  நாற்று வயல்கள், நாற்றங்கால், உழைப்பாளி என்று அனைத்தும் அருமை!

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படிக்க அனுப்பி வைத்த தெக்ஸுக்கும் நன்றி!

 48. //கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியான படங்கள் மற்றும் தகவல்கள்//

  நன்றி தஞ்சாவூரான்.

  //எங்கள் தஞ்சைப் பகுதியும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும் //

  இதை நீங்கள் சொல்லவும் வேண்டுமோ! 🙂

  //நாற்று வயல்கள், நாற்றங்கால், உழைப்பாளி என்று அனைத்தும் அருமை!//

  நீங்களும் படம் எடுத்து போடுங்க, நாங்கெல்லாம் பார்ப்போமில்ல 🙂

  //பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//

  உங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

 49. Just back from Gobi-Singripalayam.

  Enjoyed my time (4 weeks) after 2 years. Started back to work with those green feelings
  –Thambi

  • தம்பி-அண்ணா நீங்க சிங்கிரிபாளையம் யா …ரொம்ப சந்தோசம்!!!
   நான் பக்கத்துலே காசிபாளையம்-ங்கோ …பொறந்து, வளர்ந்து படிச்சது எல்லாம் அங்க தாங்க..!!
   அப்புறம் +2 படிக்க கோபி வந்து அப்பிடியே அங்க செட்டில் ஆயட்டோமுங்க!!
   நீங்க சிங்கரிபாளையதுலே எங்க ? உங்க வீடு அங்க இருக்கா… நானும் சிங்கிரிபாளையம், கொடிவேரி-னு ஊரு முழுக்க சுத்தி இருக்கேனுங்க !!

 50. வாங்க தம்பி. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  உங்கள் சொந்த ஊரே சிங்கிரிபாளையமா? உங்கள் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 51. //நல்ல புகைப்படங்கள். ஊரைப்பார்த்தாப்பல இருக்கு. கோபியில நீங்க எங்க? //

  நான் கோபிக்கு பக்கத்துல கூகலூர்ங்க.

  //நானும் கோபிதான். படிச்சதெல்லாம் வைரவிழா மேல் நிலைப்பள்ளி. 1990-ல் +2 முடிச்சேன்//

  நானும் வைர விழா மேல் நிலை பள்ளியில் தான் படித்தேன், நான் 95 ம ஆண்டு +2 முடித்தேன்.

  //உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்க ஆவல்.//

  படித்து விட்டு உங்க கருத்தை கூறுங்க.

  /ரொம்ப மகிழ்ச்சி,
  நடராஜ கிருஷ்ணன்.//

  எனக்கும் தாங்க நம்ம ஊர்க்காரரான உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க.

 52. ஐயா…

  நல்ல புகைப்படங்கள். ஊரைப்பார்த்தாப்பல இருக்கு. கோபியில நீங்க எங்க?

  நானும் கோபிதான். படிச்சதெல்லாம் வைரவிழா மேல் நிலைப்பள்ளி. 1990-ல் +2 முடிச்சேன்.

  உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்க ஆவல்.

  ரொம்ப மகிழ்ச்சி,
  நடராஜ கிருஷ்ணன்

 53. கிரி உங்களுடைய இந்த இரண்டு பதிவுகளும் என்னையும் ஊர்நினைவுகளுக்கு கொண்டு சென்றிருக்கிறது தோழரே…
  படங்களும் எழுத்தும் அருமை!

  வாழ்க்கை வசப்படுகிற சூட்சுமம் இயற்கையிலும் இருக்கிறது என்பதற்கு கிராமங்களும் அந்த மனிதர்களுமே சாட்சி…

  பல பதிவுகளை எழுதித்தள்ளி விட்டீர்கள் அதுவும் சில நாட்களுக்குள்.. வாழ்த்துக்கள்..

 54. //King… said…
  வாழ்க்கை வசப்படுகிற சூட்சுமம் இயற்கையிலும் இருக்கிறது என்பதற்கு கிராமங்களும் அந்த மனிதர்களுமே சாட்சி…//

  உண்மை தான் கிங். ஆனால் அனைவரும் அதன் முக்கியத்துவம் உணராமல் இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

  //பல பதிவுகளை எழுதித்தள்ளி விட்டீர்கள் அதுவும் சில நாட்களுக்குள்.. வாழ்த்துக்கள்//

  அதில் உருப்படியான பதிவு என்றால் மிக குறைவு தான்.

 55. //சரியாக சொன்னீர்கள். இவர்களுக்கு மூச்சு விடும் நாளில் தான் ஓய்வு கிடைக்கும்//

  கிராமத்து வெள்ளந்தி மக்கள் எப்போதும் உழைத்து இருப்பதையே விரும்புகின்றனர்.

  //அப்புறம் கிரி உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். எப்படி எல்லோருக்கும் பதிவெழுதி… எல்லா பதிவுகளையும் படித்து… இப்படி நல்ல இடுகைகளையும் தொடர முடிகிறது//

  நான் சென்னையில் இருந்த போது தினமும் 12 மணி நேரம் வேலை செய்வேன், சனி ஞாயிறு கூட நிம்மதியாக இருக்க முடியாது. திரை அரங்கில் படம் பார்க்கும் போது கூட சர்வர் டவுன் நெட்வொர்க் பிரச்சனை என்று நொங்கு எடுத்து விடுவார்கள், நிம்மதியாக தூங்கிய ..இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே சிங்கை வந்த பிறகு 8 மணி நேர வேலை மட்டுமே, மற்ற நேரங்களில் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள். எனவே எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது, (குறிப்பாக கல்யாணம் காட்சி என்று எங்கும் போக தேவையில்லை:D)நான் அனைத்து பதிவுகளையும் படிப்பதில்லை, எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை மட்டுமே படிக்கிறேன், பின்னூட்டம் போடுகிறேன்.

  //நான் உங்களை கவனித்து கொண்டிருக்கிறேன் என்ற முறையில் கேட்கிறேன். பதிவெழுதுவது கடினமாக இல்லையா…//

  கடினமாக இல்லை, விருப்பமாக செய்யும் எதுவும் கடினமாக தெரிவதில்லை. பல விசயங்களை விவாதிக்க ஆசை, நாகரீகமான முறையில். குறிப்பாக மக்களின் அன்றாட பிரச்சனைகளை.

  //தீவிரமாக கணிணியில் சில மணி நேரம் தொடர்ந்தால் கண் எரிச்சல் வருகிறது… உங்களால் எப்படி முடிகிறது நண்பரே…//

  எனக்கு அப்படி எதுவும் இல்லை. ஒருவேளை தாமதமாக அந்த பாதிப்பு வருமோ என்னவோ 🙁

  உங்கள் அன்பான விசாரிப்பிற்கு நன்றி தமிழ்சினிமா, தொடர்ந்து வாருங்கள்.

 56. இந்த விவசாயி எங்கள் வயலில் எனக்கு தெரிந்து 20 வருடத்திற்கும் மேலாக வேலை செய்கிறார், உழைக்க வயது ஒரு தடையில்லை என்று உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்தும் இந்த கடின உழைப்பாளி ஒய்வு எடுப்பதை பற்றி சிந்திக்கவே இல்லை}}}}

  சரியாக சொன்னீர்கள். இவர்களுக்கு மூச்சு விடும் நாளில் தான் ஓய்வு கிடைக்கும்.

  அப்புறம் கிரி உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். எப்படி எல்லோருக்கும் பதிவெழுதி… எல்லா பதிவுகளையும் படித்து… இப்படி நல்ல இடுகைகளையும் தொடர முடிகிறது. நான் உங்களை கவனித்து கொண்டிருக்கிறேன் என்ற முறையில் கேட்கிறேன். பதிவெழுதுவது கடினமாக இல்லையா…

  தீவிரமாக கணிணியில் சில மணி நேரம் தொடர்ந்தால் கண் எரிச்சல் வருகிறது… உங்களால் எப்படி முடிகிறது நண்பரே…

 57. வானாளாவிய கட்டிடங்களை பார்த்தாலும் இங்கே கிராமத்தில் கிடைக்கும் ஒரு மன நிறைவுக்கு இணை எதுவுமில்லை.

  கரெக்ட் கிரி எனக்கும் என்ன தான் சென்னையில் இருந்தாலும்
  தஞ்சாவூர் (என் சொந்த ஊர் ) செல்லும் போதெல்லாம் சின்ன
  குழந்தையின் குதுகலம் தான்

 58. எனக்கும் தஞ்சாவூர் கும்பகோணம் இயற்கை எழில் படம் பிடித்து
  இது போல் தர வேண்டும் என்ற ஆசையிருக்கிறது

 59. // r.v.saravanan kudandhai said…
  வானாளாவிய கட்டிடங்களை பார்த்தாலும் இங்கே கிராமத்தில் கிடைக்கும் ஒரு மன நிறைவுக்கு இணை எதுவுமில்லை.//

  உண்மை தான் சரவணன். ஆனால் இதுவும் ஒரு கட்டத்தில் சலித்து விடும். அக்கறைக்கு இக்கரை பச்சை 🙂

  //கரெக்ட் கிரி எனக்கும் என்ன தான் சென்னையில் இருந்தாலும் தஞ்சாவூர் (என் சொந்த ஊர் ) செல்லும் போதெல்லாம் சின்ன குழந்தையின் குதுகலம் தான்//

  மறுக்க முடியாத உண்மை 🙂

  //எனக்கும் தஞ்சாவூர் கும்பகோணம் இயற்கை எழில் படம் பிடித்து இது போல் தர வேண்டும் என்ற ஆசையிருக்கிறது//

  கண்டிப்பாக. தஞ்சாவூர் ல் உள்ள மிகப்பெரிய வயல்வெளிகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். தஞ்சை வந்து இருக்கிறேன் என்றாலும் அதிகம் சுற்றிபார்த்தது இல்லை. ஒருமுறை நேரமிருக்கும் போது என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச்செல்லுங்கள்.

 60. கண்டிப்பாக. தஞ்சாவூர் ல் உள்ள மிகப்பெரிய வயல்வெளிகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். தஞ்சை வந்து இருக்கிறேன் என்றாலும் அதிகம் சுற்றிபார்த்தது இல்லை. ஒருமுறை நேரமிருக்கும் போது என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச்செல்லுங்கள்.

  கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் கிரி நல்வரவு

 61. My father too had landed property in our native village in Tanjore
  District (near Tiruvarur). But, almost all were sold away to pay for marriages of my four sisters. In forty years, the village has undergone tremendous material change. But, the old charm of simplicity is absent now. The place is fit for visit only, for overseas folks like us, to revive our nostalgic memories.

 62. கிரி அண்ணா நானும் கோபி ஸ்ரீ வித்யாலயாவில் படித்தவன் தான் சொந்த ஊர் குன்னதூருக்கு அருகில் ஒரு கிராமம் எனக்கு கோபியை ரொபம்ப பிடிக்கும்.
  நானும் கோபியை பத்தி ஒரு பதிவை எழுதி இருக்கேன் வந்து பாருங்க
  http://yengaoru.blogspot.com/
  http://www.tamiloodagam.blogspot.com

 63. ஆஹா கிரி அண்ணா.. அருமை அருமை. இதைத் தான் நான் போடலாம்ன்னு நெனச்சேன்.. ரெண்டு வருஷம் முன்னாடியே நீங்க போட்டு அசத்திட்டீங்க.. எத்தன பேரு நம்மூருக்கு fans !! நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு !! உங்கள இணையத்துல சந்திச்சதுல ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். மொதல்ல உங்களோட மத்த பதிவு எல்லாத்தையும் படிச்சுட்டு மறுபடி வர்றேன் அண்ணா.

 64. சந்திர மௌலி கண்ணகி அனந்தன் பிரதீபா வருகைக்கு நன்றி

  @சந்திர மௌலி நீங்க சொலது சரி தான்… ஆனால் வேறு வழி இல்லை.

  @ ஆனந்தன் வாய்ப்பு கிடைக்கும் போது கோபி பற்றி எழுதுங்க.

  @ பிரதீபா நன்றி நேரம் கிடைக்கும் போது பதிவுகளை படித்து பாருங்கள். எனக்கும் உங்களை ஆனந்தனை போல நம்ம ஊர் நபர்களை பற்றி அறிவதில் ரொம்ப சந்தோசம் 🙂

 65. ஆஹா அட்டகாசம் போங்க. படங்கள் எல்லாம் அருமை அருமை. நான் இப்போ எதோ ஊருக்கு ஒரு டிரிப் போயிட்டு வந்தா மாதிரி இருக்கு. நெல் நாற்று நடுற நேரங்கள்ல அந்த சேறு மணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாற்று நாட்ட வயில் ஓட்டும்போது நானும் சேத்துல இறங்கி எதையாவது செய்யுறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கும். ச்ச. அதெல்லாம் ஒரு காலம்ங்க. என்னாத்த கம்பியூட்டரு கூட இந்த வாழ்க்கை போங்க கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here