கொரோனா தடுப்பூசி இந்தியா முழுக்க அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
துவக்கத்தில் களப்பணியார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது. Image Credit
தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் சிறப்புக் கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கும் ஊசி போடப்பட்டு வருகிறது.
தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததோடு இல்லாமல் அதற்கான முன்னெடுப்புகளையும் சிறப்பாகச் செய்தார்கள்.
பெரும்பான்மை மக்களுக்குத் தடுப்பு மருந்தின் மீது நம்பிக்கையில்லாததால், தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை.
எனவே, தமிழகத்தில் சில இடங்களில் தடுப்பு மருந்துகள் வீணானதாகச் செய்திகள் வந்தது. காரணம், மருந்தைக் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இருப்பு வைக்க முடியும்.
ஆனால், சமீப நாட்களில் (மார்ச் 2021) தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எதிர்மறை எண்ணங்கள்
அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கி இருந்தார், சொல்லப்போனால் தடுப்பூசி போடவே கூடாது என்று நிலையில் இருந்தார்.
கடந்த முறை ஊருக்குச் சென்ற போது அவருக்கு நம்பிக்கையளித்த பிறகு ஊசி போட்டுக்கொண்டார்.
அரசு மருத்துவமனை
பலர் அரசு மருத்துவமனை மீதுள்ள அவநம்பிக்கை காரணமாக, தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்கிறார்கள்.
தவறான எண்ணம்.
அரசு மருத்துவமனையில் மிகச்சிறப்பான திட்டமிடலுடன், தனியார் மருத்துவமனைக்கு ஈடாகச் சிறப்பான கவனிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.
மருத்துவமனைக்கு ஆதார் அட்டை எடுத்துச் சென்றால் போதுமானது.
மெல்லிய ஊசியோ அல்லது அனுபவம் உள்ளவர்கள் போடுவதாலோ ஊசி போடுவதே தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளதா என்று முன்பே கேட்டுக் குறித்து வைத்துக்கொள்கிறார்கள்.
ஊசி போட்டுக்கொண்ட இடத்தில் பின்னர் வலி ஏற்படுகிறது.
தண்ணீர் அதிகம் குடிக்க வலியுறுத்துகிறார்கள். சில இடங்களில் முன்னேற்பாடாகக் காய்ச்சலுக்கு மாத்திரையும் கொடுக்கிறார்கள்.
28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனை
தனியார் மருத்துவமனையில் ₹250 கட்டணத்துடன் ஊசி போடுகிறார்கள். ஊசி போடுவதற்கு ₹50 கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ₹200 கட்டணத்துக்கு ஊசி போடப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையிலேயே சிறப்பாகக் கவனிப்பதாலும், இலவசம் என்பதாலும் இங்கேயே ஊசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.
ஊடகங்கள்
எந்த ஒரு தடுப்பூசிக்கும் லட்சத்தில் ஒருவருக்கு ஏதாவது பக்க விளைவுகள் இருக்கலாம்.
தற்போது ஊடக கவனம் பெறுவதால், இதை ஊடகங்கள் பெரிதாக்குகிறார்கள். மற்றபடி இதுவொரு வழக்கமான நிகழ்வே.
தடுப்பூசி கட்டாயமா?
தடுப்பூசி நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.
தற்போது கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து பயணிப்பவர்களால் மற்ற மாநிலங்களிலும் தொற்றுப் பரவி வருகிறது.
தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 1000 தொட்டுள்ளது.
மீண்டும் பரவாமல் இருந்தால் கூட இது பற்றிய யோசனைக்குப் போகலாம் ஆனால், பரவி வரும் சூழ்நிலையில் கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது, குறிப்பாக வயதானவர்கள்.
இதில் அலட்சியமோ எதிர்மறை எண்ணங்களோ வேண்டாம்.
முன்னரே கூறியபடி முகக்கவசம் அணியாமல் இருப்பது கடுப்பை வரவழைக்கிறது.
எச்சரிக்கை
- முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
- தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
- சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
- கைகளைச் சுத்தமாகக் கழுவுவது அவசியம்.
- கூட்டமான இடங்களை, பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் என்றாலும், பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் திரும்பக் கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமான ஒன்றே.
கொரோனா அறிமுகமான புதிதில் இருந்த பயம் தற்போது இல்லையென்றாலும், கவனக்குறைவாக இருப்பதும், பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதும் சரியல்ல.
தொடர்புடைய கட்டுரை
சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, நீங்கள் கூறியது போல் எனக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள ஒரு தயக்கம் இருந்தது.. ஆனால் தற்போது என் மனநிலை மாறி இருக்கிறது.. இருப்பினும் சில கேள்விகள் மனதில் இருக்கிறது..(கொரோனா அறிமுகமான புதிதில் இருந்த பயம் தற்போது இல்லையென்றாலும், கவனக்குறைவாக இருப்பதும், பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதும் சரியல்ல. உண்மையான வார்த்தைகள்..).
நிறைய பேர்களின் இறப்பு செய்திகளை அடிக்கடி தற்போது கேட்டு வருகிறேன்.. கொரோனவை பற்றி யோசித்தாலே ஏதோ இயற்க்கை மனித குலத்துக்கு கொடுத்த ஒரு தண்டனையாக உணர்கிறேன்.. நிறைய படிப்பினையை கொரோனா கொடுத்து கொண்டே இருக்கிறது.. எல்லோரும் நிச்சயம் பாதுகாப்பாக முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி நடக்க வேண்டும்.. அலட்சியமாக இருந்தால் விபரீதத்தில் முடியலாம்..குறிப்பாக இளைய சமூகத்தினர்க்கு விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்..
என்னுடன் கிரிக்கெட் விளையாடும் 6 நண்பர்களுக்கு கொரோனா வந்தது.. அதில் இரண்டு நண்பர்களுக்கு தாக்கம் அதிகமாகி கிட்டத்திட்ட மரணத்தின் வாசல் வரை சென்று மீண்டு வந்தனர்.. எந்த கெட்ட பழக்கம் இல்லாமல் உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமாக இருந்தவர்கள் தான். இந்த நிகழ்வின் போது தான் எனக்கு கொரோனாவின் பாதிப்பு முழுவதுமாக புரிந்தது. பகிர்வுக்கு நன்றி கிரி.
தற்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் பயன்படுத்துவது வெகுவாகு குறைந்து வருவது கவலைக்குரியது. தடுப்பூசி எங்கள் குடும்பத்து பெரியவர்கள் சிலர் தைரியமாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள். சிலருக்கு இன்னும் தயக்கம் உள்ளது.
@யாசின் நானும் துவக்கத்தில் தடுப்பூசி போடும் எண்ணமில்லை ஆனால், தற்போது அதிகரித்து வருவதால், அலட்சியமாக இருப்பது சரியல்ல.
எனக்குத் தெரிந்து தற்போது சிலருக்கு கொரோனா வந்துள்ளது. வயதானவர்கள் சிலர் இறந்தும் விட்டனர்.
@ராமலக்ஷ்மி உண்மையே. முகக்கவசம் அணிவதை பெரும்பான்மையோர் பின்பற்றுவதில்லை. வயதானவர்கள் தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.
தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் தயக்கம் கூடாது.