எந்த மலையேற்ற முன் அனுபவம் இல்லாத ஒருவர் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் எற முயற்சித்தால் என்ன நடக்கும்? அது தான் The Climb. Image Credit
The Climb
வேலை வெட்டி இல்லாத Samy Diakhate தன் சிறு வயது முதல் விரும்பும் பெண்ணைக் கவர முயல்கிறார் ஆனால், தோல்வியே கிடைக்கிறது.
இதனால், அவரைக் கவர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போவதாகக் கூற, அதை அவர் தோழி நம்ப மறுத்து விடுகிறார்.
ஆனால், Samy Diakhate இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு எவரெஸ்டில் ஏறத் தயாராகி, நேபாளமும் சென்று விடுகிறார்.
அங்கே போன பிறகு தான் தெரிகிறது, எவரெஸ்டில் ஏறுவது எளிதல்ல என்று.
மலையேற்ற பயிற்சி எடுத்தவர்களே திணறும் போது எந்தப் பயிற்சியுமே எடுக்காமல், மலை அதுவும் எவரெஸ்ட் ஏறுவது சாதாரண விஷயமா?!
இறுதியில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தாரா இல்லையா? என்பதே The Climb.
உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
எவரெஸ்ட்
சிறு வயதிலிருந்து படித்து வரும் செய்திகளில் ஒன்று எவரெஸ்ட்.
இதைப் பற்றிப் படிக்காமல் எந்த ஒரு மாணவரும் தனது மாணவ பருவத்தைக் கடந்து வந்து இருக்க முடியாது.
காரணம், உலகின் உயரமான சிகரம் எது? என்ற கேள்வி இல்லாமல் பள்ளியைக் கடக்க முடியாது.
இதன் பிறகும் எவரெஸ்ட் குறித்து நம் பல்வேறு தகவல்களை, செய்திகளை, காணொளிகளைக் கண்டு இருப்போம் ஆனால், எப்படி இருக்கும்? என்று தெரியாது.
அதை இப்படம் அழகாக நமக்குக் காட்டுகிறது.
எப்படிச் செல்ல வேண்டும்? யார் துணை தேவை? எப்படிச் செல்ல முடியாது? பாதை எப்படி இருக்கும்? சூழ்நிலை எப்படி இருக்கும்? ஆபத்துகள் என்ன?
என்று இதுவரை நமக்குத்தெரியாத பல விஷயங்களைப் போகிற போக்கில் கூறுகிறது.
இங்கே உள்ள Base Camp என்றால் என்ன? இது போல எத்தனை நிலைகள் உள்ளன என்பன வியப்பான செய்தியாக உள்ளது.
Samy Diakhate
எப்போதும் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு, நட்பாகப் பேசும் Samy Diakhate படம் முழுக்கச் சாதாரண நபரைப் பிரதிபலிக்கிறார்.
இவங்க ஊர் ட்ராவல்ஸில் கேட்டு நேபாள் வந்தால், இங்கேயுள்ள வசதிகளுக்கும் அவர்கள் கூறியதற்கும் சம்பந்தமே இருக்காது.
ஆனாலும், அதை நினைத்து மனம் தளராமல், வந்தது எதற்கென்று அதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.
இந்நிலையில் காதலிக்காக நேபாள் வந்தது, உள்ளூரில் பெரிய செய்தியாகி விடுகிறது. தினமும் பண்பலையில் இவர் பயணம் பற்றிய செய்தி.
மேலே செல்லச் செல்லத் தொலைபேசி தொடர்பு கிடைக்காததால், பதட்டம், பரபரப்பு என்று இவர் ஊர் அல்லோலகலப்படுகிறது.
நாம் எவரெஸ்டில் பயணப்படுவது போல ஒளிப்பதிவு உள்ளது.
Samy Diakhate உடன் நாமும் பயணிப்பது போலவே உள்ளது. எதார்த்தம் என்னவோ அதை அப்படியே காட்டியுள்ளார்கள்.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம் குறிப்பாக எவரெஸ்டில் என்ன உள்ளது? எப்படிச் செல்ல வேண்டும்? என்ன மாதிரியான சூழ்நிலை இருக்கும்? என்னென்ன சவால்கள் உள்ளன?
போன்றவற்றைத் தெரிந்துகொள்ள விரும்பினால் அவசியம் காணுங்கள்.
இதுவரை எவரெஸ்ட் பற்றிய புரிதலுக்கும், இப்படம் பார்த்த பிறகு உள்ள புரிதலுக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும்.
ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் எவரெஸ்டை காட்டும் விதம் சண்டை காட்சிகளாக எதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கும் ஆனால், இப்படம் அப்படியல்ல.
வழக்கமான படங்களிலிருந்து மாறுதலை The Climb கொடுக்கும்.
NETFLIX ல் காணலாம்.
Directed by Ludovic Bernard
Produced by Laurence Lascary
Written by Ludovic Bernard, Nadir Dendoune, Olivier Ducray
Based on Un tocard sur le toit du monde by Nadir Dendoune
Starring Ahmed Sylla, Alice Belaïdi
Music by Lucien Papalu
Cinematography Yannick Ressigeac
Edited by Romain Rioult
Release date 18 February 2017, 25 January 2017
Running time 103 minutes
Country France
Language French
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
4L (2019 Spanish) | பாலைவனப் பயணம் போகலாமா?!
Comrade in America (2017 – மலையாளம்)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நல்லதொரு அறிமுகம். காண முயற்சிக்கிறேன். நன்றி.
கிரி, பள்ளி பருவத்தில் மறக்க முடியாத ஒரு வார்த்தை எவரெஸ்ட். இந்த வார்த்தை மீது எப்போதும் ஒரு கவர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது.. இந்த படத்தை இது வரை பார்க்க வில்லை.. ஆனால் எவரெஸ்ட் குறித்த இரண்டு, மூன்று படங்கள் பார்த்து இருக்கிறேன்.. வெகு சமீபத்தில் Everest (2015 film) படம் பார்த்தேன்.. பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.. இதுவும் தரமான படம்.. இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்..
நேபாளம் மிகவும் அழகான இடம்.. நான் பணிபுரியும் நிறுவனத்தின் செக்யூரிட்டி ஒரு நேபாளி தான்.. அவனிடம் நேபாளம் குறித்து பல தகவல்களை கேட்டு கொண்டே இருப்பேன்.. அவனுக்கும் ரொம்ப ஆச்சரியம், ஒருத்தனும் நம் ஊரை பற்றி கேட்க மாற்றங்க, நான் மட்டும் கேட்பதால் நிறைய சுவாரசியமான தகவல்களை சொல்லுவான்.. (என்னை விட 10 வயது குறைவானவன்).. நேபாளத்தை சுற்றி பார்க்கவும் எதிர்காலத்தில் திட்டம் இருக்கிறது.. படத்தை பார்த்து விட்டு என் கருத்தை பகிர்கிறேன்.. நன்றி கிரி.
நண்பர் கிரி,சிறுவயதில் கூர்க்காக்கள் இங்கே ரோந்து வருவதைப் பார்க்கும்போது நேபாளம் நம்முடைய நாட்டில் தான் இருக்கிறது,எவரெஸ்ட் சிகரம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நேபாளம் ஒரு தனி நாடு என்று அறிந்ததும் ஏமாற்றமாக இருந்தது.பொதுவாக மலையேற்றம் மிகக் கடினமானதாக இருக்கும், நம்மை உடலளவிலும் ,மனதளவிலும் கடுமையாக சோதிக்கும், வெள்ளிங்கிரி மலை ஏறிய அனுபவத்தை வைத்து கூறுகின்றேன், ஆனால் எவரஸ்ட் மலையில் அடர்த்தியான பனியும்,மேலே செல்லச் செல்ல ஆக்சிஜன் குறைவதும் மிகக்கடுமையான சவலாக இருக்கக்கூடும்.Everest(2015) என்ற திரைப்படம் இதை நம்கண்முன்னே விவரிக்கும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும், நண்பர் யாசின் கூறியது போல நீங்கள் இந்தப் படத்தை பார்க்க விட்டால் கண்டிப்பாக பார்க்கவும்,அதேபோல நீங்கள் ஒரு முறையாவது வெள்ளிங்கிரி மலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்,இதில் கிடைக்கும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது,இயற்கையின் அழகையும்,தனிமையும் ரசிக்கக் கூடிய ஒரு இடம் இது.இயற்கையை விட்டு நாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை இந்த பயணம் நமக்கு உணர்த்தும்.நம் மனதிலிருக்கும் வன்மத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு அருமருந்து இயற்கையிடம் உள்ளது, அது இந்த மலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும். எவரெஸ்ட் என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு ரோஜா பட பாடல் தான் நினைவிற்கு வரும்.” புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” இதோ இப்போதே காதில் பொருத்தும் ஒலிபெருக்கியை (headphone)தேட ஆரம்பித்துவிட்டேன்😁.
கிரி, chai with chitra நேர்காணலில் நாசர் சார் குறிப்பிட்ட Kala (2021 film) மலையாள படத்தை, நேற்றிரவு வெஸ்ட் இண்டீஸ் vs சௌத் ஆப்பிரிக்கா T20 கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நடு இரவில் இந்த படத்தை பார்த்தேன்.. இந்த நொடி வரை படத்தோட நினைவலைகள் ஒரு பக்கம் ஓடி கொண்டே இருக்கிறது.. சமீபத்தில் தான் டேவினோ தாமஸின் சில படங்களை பார்த்தேன்.. பிடித்து இருந்தது. ஆனால் இந்த படம் இதுவரை நான் என் வாழ்நாளில் பார்த்த படங்களிலே சிறந்த திரில்லர் திரைப்படமாக கருதுகிறேன்..
ஒரு திரில்லர் படத்துக்கு வேண்டிய எல்லா விஷியங்களும் இதில் அடங்கி இருக்கிறது.. கதையின் ஓட்டத்தையும் பார்க்கும் போது கணிக்க முடியாதது தான் படத்தின் சுவாரசியம்.. படத்தின் உண்மையான ஹீரோ Sumesh Moor தான்.. காட்சிகளும், பின்னணி இசையும் மிகவும் அருமை.. படத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் சுவாரசியம் குறைந்து விடும்.. படம் திரையரங்கில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகி, பின்பு அமேசானிலும் வெளியாகி உள்ளது..
திரையரங்கில் பார்த்து இருந்தால் படம் செம்மையா இருந்து இருக்கும்.. இனி எப்படியும் குறைந்த பட்சம் பத்து முறையாவது இந்த படத்தை திரும்ப, திரும்ப பார்ப்பேன். படத்தில் கவனிக்க வேண்டிய பல விஷியங்கள் உள்ளது.. கிரி நீங்கள் இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் நிச்சயம் பார்க்கவும்.. கண்டிப்பாக என்னை விட நீங்கள் அதிகம் விரும்புவீங்க!!!
ஒரு நல்ல படத்தை பார்க்கும் போது , உள்ளுக்குள் ஒரு வித புத்துணர்ச்சி ஏற்படுகிறது.. இன்று காலை அலுவலகத்திற்கு கிளம்பும் போதே மனதிற்குள் உற்சாகமாக இருக்கிறது..அந்த உற்சாகம் என்னை என்னும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.. இந்த படத்தை அறிமுகம் செய்த நாசர் சாருக்கும் நன்றி.. இல்லையெனில் ஒரு சிறந்த படத்தை தவற விட்டு இருப்பேன்..
@வெங்கட் ரைட்டு
@யாசின்
“Everest (2015 film) படம் பார்த்தேன்.. பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.. இதுவும் தரமான படம்.. இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும்.”
பார்த்தேன்.. ஆனால், தொடரவில்லை. ஏனென்றால், இவர்களுக்கு ஒரே டெம்ப்ளேட் உள்ளது. பார்க்க முயற்சிக்கிறேன்.
“அவனுக்கும் ரொம்ப ஆச்சரியம், ஒருத்தனும் நம் ஊரை பற்றி கேட்க மாற்றங்க, நான் மட்டும் கேட்பதால் நிறைய சுவாரசியமான தகவல்களை சொல்லுவான்”
நீங்களாவது கேட்டீங்களே 🙂 . எனக்கும் விருப்பம் உள்ளது.
@கார்த்திக்
“நேபாளம் நம்முடைய நாட்டில் தான் இருக்கிறது,எவரெஸ்ட் சிகரம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்”
அட! நானும் அப்படி நினைத்துள்ளேன்.. ஆனால், கூர்க்காவை வைத்தல்ல.
இமயமலை தொடர்பு இருந்ததால் நேபாளமும் நம் நாட்டை சார்ந்தது என்று நினைத்து இருந்தேன் 🙂 .
“நீங்கள் ஒரு முறையாவது வெள்ளிங்கிரி மலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்”
கண்டிப்பாக. எனக்கும் முன்பு இருந்தே விருப்பமுள்ளது. தெரிந்தவர்கள் பலர் சென்று வந்துள்ளார்கள்.
மலையில் ஏறி சென்று வருவது எளிதல்ல என்று கூறியுள்ளார்கள். செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை ஆனால், விருப்ப பட்டியலில் உள்ளது.
பேசாம பக்கெட் லிஸ்ட் ஒன்று தயார் செய்து விட வேண்டியது தான். அப்போது தான் அப்பகுதி போகும் போது நினைவு வந்து செயல்படுத்த முடியும் 🙂 .
“நண்பர் யாசின் கூறியது போல நீங்கள் இந்தப் படத்தை பார்க்க விட்டால் கண்டிப்பாக பார்க்கவும்”
முயற்சிக்கிறேன்.
“காதில் பொருத்தும் ஒலிபெருக்கியை (headphone)தேட ஆரம்பித்துவிட்டேன்😁.”
🙂 🙂 ரசித்த பாடல் நினைவு வரும் போது கேட்க வேண்டும் என்று தோன்றும். இசையமைப்பாளர் தேவா கட்டுரையில் இதை கூறி இருப்பேன்.
ரோஜா அற்புதமான படம், பாடல்கள், காட்சிகள்.
@யாசின் Kala ஏற்கனவே, என் பட்டியலில் உள்ளது. இதற்கு முன் இரு நண்பர்கள் பரிந்துரைத்தனர்.
“இந்த படத்தை அறிமுகம் செய்த நாசர் சாருக்கும் நன்றி.. இல்லையெனில் ஒரு சிறந்த படத்தை தவற விட்டு இருப்பேன்..”
கவலை வேண்டாம், நான் அறிமுகப்படுத்தியிருப்பேன் 🙂 .
அருமையான Feel good movie கிரி though predictable. நீங்கள் பரிந்துரை செய்யும் படங்களை கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம். அப்படி ஒரு wave length நம் இருவருக்கும் 🙂