இக்கட்டுரையில் கணவனின் இறப்புக்குப் பின் மனைவி நிலை என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். Image Credit
தற்போது பெண்கள் சுயமாக முடிவெடுக்க முடிகிறது, சொந்தக்காலில் நிற்க முடிகிறது.
கணவரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை என்று முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள்.
கடந்த தலைமுறைப் பெண்கள்
ஆனால், கடந்த தலைமுறைப் பெண்கள் நிலை அவ்வாறு இல்லை.
வீட்டில் இருக்கும் வரை பெற்றோருக்கு அடங்கி இருக்க வேண்டும், திருமணம் ஆனதும் கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடங்கி இருக்க வேண்டும்.
இவர்கள் யாராவது ஒருவர் கட்டுப்பாட்டினுள் தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் யாராவது ஒருவர் சொல்படியே நடக்க வேண்டியுள்ளது.
தானாக முடிவு எடுத்து ஒரு காரியத்தைச் செயல்படுத்த முடியாது.
குறிப்பாகத் தன் மகனுக்கோ மகளுக்கோ இருக்கும் அதிகாரம் கூட இந்தப் பெண்களுக்குக் கிடையாது.
எங்காவது செல்ல வேண்டுமா? உடை எடுக்க வேண்டுமா? எதையாவது வாங்க வேண்டுமா? யாரையாவது பார்க்கப் போக வேண்டுமா? என்று எந்த விசயம் என்றாலும் கணவனின் அனுமதி வேண்டும்.
தன்னுடைய பிறந்த வீட்டிற்கு எட்டிப் பார்த்து வர வேண்டும் என்றாலும் அனுமதி வேண்டும், பெற்றோர்கள் மிக அருகிலேயே இருந்தாலும் கூட.
சம்பாத்தியம் இல்லை
இவர்களுக்குச் சம்பாதித்தியம் கிடையாது எனவே, இவர்களிடம் பணம் இருக்காது. அத்யாவசிய தேவைக்குக் கூடக் கணவர்கள் பணம் கொடுத்து வைக்க மாட்டார்கள்.
எனவே, அனைத்துக்கும் கணவனை எதிர்பார்க்க வேண்டிய நிலை.
பெரும்பாலும் இவர்கள் 80% வாழ்க்கை, அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடிந்து இருக்கும்.
முக்கியமாகக் கணவனுடன் இருந்த நேரத்தை விடச் சமையலறையில் இருந்த நேரமே அதிகமாக இருக்கும்.
முதலில் பெற்றோருக்கு, பின் கணவனுக்கு, பின் கணவனின் பெற்றோருக்கு, பின் தன் குழந்தைகளுக்கு, பின் உறவினர்களுக்கென்று தனது இறுதிக் காலம் வரை பயந்து பயந்தே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாக இருக்கிறது.
குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மோசமானவர்கள் என்று கூறவில்லை ஆனால், அவர்கள் நிலையில் இருந்து பார்த்தீர்கள் என்றால், நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று புரியும்.
திறமையானவர்கள்
திறமையானவர்களாக இருப்பார்கள் ஆனால், திருமணம் ஆனதும் அனைத்தும் முடக்கப்படும். கணவன் எதை அனுமதிக்கிறானோ அதை மட்டுமே தொடர முடியும்.
சிலர் கல்லூரியில் பெரிய படிப்பை முடித்து இருப்பார்கள் ஆனால், இங்கே அது பயனில்லை. வேலைக்குச் செல்ல ஆர்வம் இருக்கும் ஆனால், அனுமதி கிடைக்காது.
புதிதாக முயற்சிக்க நினைப்பார்கள் ஆனால், முடியாது.
பெரும்பாலான கணவர்கள் அனுமதி மறுக்கக் காரணம், இதெல்லாம் கொடுத்து நம்முடைய தேவை இல்லாமல் ஆனால், பிடிப்பு போய் விடுமே என்ற பயமே காரணம்.
மனைவி நம்மைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற [EGO] எண்ணம்.
இது முந்தைய தலைமுறையில் சர்வ சாதாரணமாக இருந்தது. நம் குடும்பத்திலேயே நடந்து இருக்கும் ஆனால், நமக்கு அது பெரிய விசயமாகத் தோன்றி இருக்காது.
இதற்காக முந்தைய தலைமுறை கணவர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்ற அர்த்தத்தில் இதைக் கூறவில்லை.
நல்லவர்கள் தான் ஆனால், நம் கட்டுப்பாட்டை மீறி மனைவி சென்று விடக் கூடாது என்ற பயமே இது போன்றவற்றை செய்ய வைக்கிறது.
சுதந்திரம்
கணவனிடம் சுதந்திரம் பெற்ற சில பெண்கள் இதை கூடுதல் உரிமையாக எடுத்துக்கொண்டு மோசமாக நடந்து கொள்வதும் நடக்கத் தான் செய்கிறது.
எந்த விசயத்திலும் நன்மை தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன. எங்களுக்குச் சுதந்திரத்தை கொடுக்க இவர்கள் யார்? என்று தற்காலப் பெண்கள் கேட்கிறார்கள்.
இப்படியெல்லாம் முந்தைய தலைமுறையில் கேட்க முடியாது.
நான்கு வருடத்திற்கு முன்பு முதல் அக்காவின் (எனக்கு மூன்று அக்கா) கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
கிட்டத்தட்ட அக்கா கணவரும் இதே பிரிவில் தான் வருவார். மிகவும் கட்டுப்பாடானவர்.
நல்ல மனுசன் தான் என்றாலும் ரொம்பக் கோபப்படுவார் அதோடு, அவரை மீறி எதுவும் நடந்து விட முடியாது.
அக்காவை சிறு (20) வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.
இதனால், வாழ்க்கை அனுபவமும் இல்லை என்பதால், கணவர் என்ன கூறுகிறாரோ அதன் படியே அக்கா வாழ்ந்து வந்தவர். உலகமே தெரியாமல் வாழ்ந்தவர்.
அப்பா வழக்கமான நபர்களிலிருந்து மாறுபட்டவர். எங்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தவர்.
சிறு வயதிலேயே, எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
இரண்டாவது அக்காவிற்கும் எனக்கும் அதிக அனுபவங்கள் காரணம், நாங்கள் வீட்டை விட்டு வெளியே தங்கி இருக்க வேண்டி வந்ததால்.
எங்களுக்குப் பல இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது அதனால், அனுபவம் கிடைத்தது ஆனால், 20 வயதிலேயே திருமணம் ஆகிச் சென்ற அக்காவிற்கு அந்த வீடு மட்டுமே உலகம் என்று ஆகி விட்டது.
அதனால், வெளியுலகம் பற்றிய அனுபவம் கிடைக்கவில்லை.
ஒருவேளை எங்களைப் போல வாய்ப்புக் கிடைத்து இருந்தால், தற்போது அவரின் ஆர்வத்தை வைத்துப் பார்க்கும் போது எங்களைவிட மிகச் சிறப்பாக வந்து இருப்பார்.
அக்கா கணவர்
கணவர் இறந்தது அக்காவிற்கு மிகப் பெரிய இழப்பு தான் ஆனால், இதன் பிறகே அக்கா வெளியுலகிற்கு வந்தார்.
அக்கா கணவர் இறந்த போது அக்காவிற்கு ஒன்றுமே தெரியாது (என்று நான் நினைத்து இருந்தேன்) எப்படி குடும்பத்தைச் சமாளிக்கப் போகிறார்?
மகனை எப்படி வழி நடத்துவார் என்று கவலையாக இருந்தது.
அப்பாவியாக வளர்ந்து கணவன் சொல்வதை மட்டுமே கேட்டு வாழ்க்கையில் பாதியைக் கடந்தவர் எப்படி எதிர்காலத்தைச் சமாளிக்கப் போகிறார்? என்ற அச்சம் இருந்தது.
எங்கள் அனைவரின் ஆதரவு இருக்கும் என்றாலும், அவரது தனிக் குடும்பம் தானே!
தெளிவு / தைரியம்
அக்கா கணவர் இறந்த இரண்டாவது நாள் அக்கா பேசிய பேச்சில் தெரிந்த உறுதியையும், அதுவரை அமைதியாக இருந்தவர் பேசிய தெளிவான பேச்சையும் கேட்ட போது நானும் இரண்டு அக்காவும் வாயடைத்துப் போய் விட்டோம்.
அக்கா இப்படி எல்லாம் பேசுவார் என்று நினைத்ததே இல்லை.
இதன் பிறகு என் அப்பாவின் அறிவுரை, ஆலோசனை அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது. உடல் பலத்தை விட மன பலமே முக்கியம். அது இருந்தால், எதையும் சாதிக்கலாம்.
முந்தைய தலைமுறைப் பெண்கள் கணவனின் இறப்பிற்குப் பின்னரே சுதந்திரம் பெறுகிறார்கள். இதைக் கூற சங்கடமாக இருந்தாலும் இது தான் உண்மை.
ஸ்கூட்டி
பேருந்தில் கூட எப்படி போவதென்று தெரியாமல் இருந்த அக்கா ஸ்கூட்டி பழகிக்கொள்கிறேன் என்று கூறினார். இதற்கு வழக்கம் போல எங்கள் வீட்டில் முழு ஆதரவு.
இதன் பிறகு அவரின் ஆர்வத்தைப் பார்த்து நாங்களே சற்று மிரண்டு தான் போனோம். அவ்வளவு உற்சாகமாக வண்டி ஓட்டிப் பழகி விட்டார்.
தற்போது எங்கள் வீட்டிற்கு (இரு வீட்டிற்கும் 4 கிலோ மீட்டர் தூரம் தான்) வர யாரையும் எதிர்பார்க்க வேண்டி இராமல் அவரே வண்டி எடுத்து வந்து விடுகிறார்.
அக்கா வண்டி பழகும் போது உறவினர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள் ஆனால், யார் கூறுவதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி இருந்தோம்.
அக்காவின் வேகத்தை / ஆர்வத்தைப் பார்த்து, கணவரிடம் அனுமதி கிடைக்காத உறவினப் பெண்கள் பலர் இவருடன் சேர்ந்து பழக ஆரம்பித்து விட்டார்கள்.
“வண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்க மாட்டேன் என்று கூறினீங்க.. இப்பப் பாருங்க நாங்களே கற்றுக்கொண்டோம்” என்று கூறி விட்டார்கள்.
அக்கா வண்டி ஓட்டுவதை உறவினர்கள் யாராலும் நம்பவே முடியவில்லை.
இது போல ஒவ்வொரு விசயத்திலும் முழு சுதந்திரம் / ஆதரவு கிடைத்ததால், இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்து இருந்த திறமைகள் வெளியே வந்தன.
திறமையானவர்கள் வாய்ப்புக் கிடைத்தால், தங்களை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினேன்.
முந்தைய தலைமுறை பெண்கள் என்றில்லை, சூழ்நிலை வரும் போது எவருக்குமே இப்படித்தான்.
தற்போது அக்கா காட்டாற்று வெள்ளம் மாதிரி இருக்கிறார்கள். பல வருடங்களாகத் தள்ளிச் சென்று கொண்டு இருந்த ஒரு பிரச்சனையைப் போராடி முடித்தார்.
அக்கா கணவர் செய்ய முடியாததை இவர் செய்து முடித்தார்.
கடந்த முறை “தம்பி! நான் கார் ஓட்டக் கற்று கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிய போது (இவர்கள் வீட்டில் கார் உள்ளது) தலை சுற்றி விட்டது.
அப்பா “செயலில் ரொம்ப வேகம் வேண்டாம் நிதானமாகப் போகலாம்” என்று அக்காவை அமைதிப்படுத்தி இருக்கிறார்கள்.
அனைவரும் மோசமல்ல
லாஜிக்காகக் கவனித்துப் படித்து இருந்தால் ஒன்றை கவனித்து இருக்கலாம். அது மற்ற இரு அக்காக்களும் உதவுவார்கள் என்று கூறி இருந்தேன்.
அதாவது, அவர்கள் மற்ற எங்கள் இருவருக்கு உதவ வேண்டும் என்றால், அவர்கள் கணவர் அனுமதித்து இருக்க வேண்டும் அல்லவா!
ஆம்! இரு அக்கா கணவர்களும் ரொம்ப புரிந்து கொண்ட நபர்கள். கணவர்கள் என்றால் அனைவருமே பிரச்சனை செய்பவர்கள் அல்ல என்பதைக் கூறவே இதைக் கூறினேன்.
எனவே அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம்.
கணவன் இறந்த பிறகு மனைவியால் துவக்கத்தில் சிரமப்பட்டாலும் தனது இறுதிக்காலம் வரை சமாளிக்க முடியும்.
ஆனால், அதே மனைவி இறந்து விட்டால் துவக்கத்தில் சமாளிக்க முடிந்தாலும் போகப் போகக் கணவனின் நிலை பரிதாபம்.
மனைவியின் அருமை இந்தக் காலகட்டத்தில் தான் கணவர்களால் புரிந்து கொள்ள முடியும். இதை நான் நேரிடையாக அதிகம் பார்த்து இருக்கிறேன்.
நான் கூறியது பொய் என்று நீங்கள் கருதினால், பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
எனக்கு மூன்று அக்கா என்பதால், பெண்களின் மனதை புரிந்து கொள்ள அதிக வாய்ப்புக் கிடைத்தது. எனவே, அதையொட்டியே இதை எழுதினேன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையின் மையக் கருத்தைக் கூறி, அக்காவிடம் அனுமதி பெற்ற பிறகே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Girls are always best Anna … They have unique value .. எந்த நிலைமையா இருந்தாலும் வர வரைக்கும் தான் யோசிப்பாங்க வந்துட்டா ஆண்களை விட ரொம்ப அழகாவே face பண்ணுவாங்க.. லைக் உங்க அக்கா மாதிரி… but இப்போ இருக்க girls எல்லாம் ரொம்பவே தெளிவா இருக்காங்க. as u said எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கனும் னு நினச்சா முடியாது. நாம தான் ஏதோ ஒரு லாஜிக் வச்சிக்கிட்டு அது தான் universal னு நினச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்..but everything has changed … இப்போ போய் உடன் கட்டை ஏறுதல் பத்தி பேசினால் எப்படி நாம எல்லாரும் சிரிப்போமா அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாட்கள்ல கணவன் இறப்பிற்கு பின் மனைவின்ற quotes எல்லாம் இல்லாமலே போய்டும் …பேசினாலும் சிரிப்பாங்க ..so உங்களோட இந்த பேஜ் should be historical .. 🙂 as usual narration was so good ….
🙂
//எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைக்காதே! அனைவரையும் திருப்தி படுத்த முயற்சிக்காதே!//
கிரி இந்த பிரச்சினை எனக்கும் இருக்கு… இருந்தும் எல்லாப்பழியும் என் மேல தான் விழுது.
ஒரு குடி(சொந்தக்)காரருக்கு அப்பப்போ பணம் அன்பின் காரணமா செலவுக்கு கொடுத்துவறீங்க வச்சுக்குங்க திடீர்ன்னு எனக்கு 25000 பணம் வேணுமின்னு சொன்னா எதுக்கு கேக்குறார் அது உண்மையான்னு ஆராய மாட்டீங்களா ? அதைதான் நான் செஞ்சேன். உடனே அவரது மனைவி எல்லாம் அவன் (என்) மனைவியினாலதான் இப்படி நடக்குது அவ பேச்சை தான் கேக்குறான்னு பழி சொல்லி இப்போ முகத்தை திருப்பிகிட்டு இருக்காங்க. நிஜத்தில் என் மனைவி எதிலும் தலை இடுவதே இல்லை.
திருமணத்திற்கு பின்பு என் மனைவியை BEd படிக்க வைத்தேன். காரும் ஓட்ட கற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறேன். நம்மை நம்பி வந்தாலும் அவரவர்க்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை (வாழும் வழியை) ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஊக்கப்படுத்துங்கள் உங்கள் சகோதரி தைரியமாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளலாம்…
அன்னை தெரசாவின் புகைபடத்தை எங்கு பார்த்தாலும் ஒரு வரி மட்டும் மனதுக்கு தோன்றும்…. (கருவுற்றிருந்தால் ஒரிரு குழந்தைக்கு தாயாகி இருப்பார், கருணையுற்றதால் அனைவர்க்கும் தாயாகினார்).. எத்தனை பெரிய தியாகம்..
ஒவ்வொரு ஆணும் சமைக்க கத்து கிட்டலே பெண்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் இயல்பாக புரிந்து கொண்டு மதிக்க ஆரம்பிச்சிடுவாங்க, காரல் மார்க்ஸ் சொல்லி புரியாத சமத்துவம், ஒரு கைப்பிடி வெங்காயம் நறுக்கும் போது தெளிவா புரியும்…
உடன் பிறந்தவர்களுடன் பிறப்பது வரம்… நீங்கள் வரத்தை பெற்றவர்..
உடல் பலத்தை விட மன பலமே ஒருவருக்கு முக்கியம். அது இருந்தால், எதையும் சாதிக்கலாம் : சத்தியமான வரிகள். பகிர்வுக்கு மகிழ்ச்சி கிரி.
நான் பார்த்த அளவில் ஆர்வமாக வாகனம் பழகும் பெண்கள் மிக சிறந்த டிரைவர்களாக இருக்கின்றரர்.
அதனால் கூடிய விரைவில் கார் கற்று கொடுங்கள். உறவுகள் அவர்களின் ஆர்வத்துக்கு தடையாக இருப்பதாக வருத்தப்படும் நீங்களே அவரின் ஆர்வத்துக்கு தடை விதிக்காதிர்.
நானும் இதை என் குடும்பத்தில் பார்த்திருக்க்கின்றேன்.
சிறந்த பதிவு கிரி..
முதலில் இந்த பதிவு எழுத தூண்டுதலாக இருந்த 3 அக்காவிற்கும், உங்களுக்கு முன் மாதிரியான அப்பாவிற்கும் வாழ்த்துக்கள்.
கடந்த தலைமுறைப் பெண்களின் நிலையை நன்கு உணர்ந்து எழுதி இருக்கீங்க..இது போல எத்தனை திறமைகள் மண்ணோடு மண்ணாக மடிந்து போனதோ!!! 🙁
தற்போது பெண்களின் நிலை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும்..இன்னும் கிராமங்களில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றன என்பதற்கு உங்க முதல் அக்காவே ஒரு உதாரணம்..
கணவன் இறப்பிற்கு பின் சுதந்திரம் என்பது வேதனையான உண்மை..
பெண்ணை கடவுளாக போற்றும் இந்திய சமூகத்தில் தான் பெண்ணிற்கு எதிரான கொடுமைகளும் தினமும் நடந்தேறி கொண்டு இருக்கின்றன..
எத்தனை பெரியார், பாரதியார்கள் வந்தாலும் பெண்ணிற்கு சமூக கட்டுப்பாடுகள் குறைந்த பாடு இல்லை.
இதுவும் கடந்து போகும் என்பது போல இந்நிலையும் மாறும்…
உங்கள் அக்கா வாழ்வை எதிர்கொண்டிருக்கும் விதம் மனதுக்கு நிறைவாக உள்ளது. பக்கபலமாக இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கிரி, அருமை… சொல்ல வார்த்தைகளே இல்லை….
மிகச் சிறந்த பதிவு. கணவரை இழந்த எனக்கு ஏற்கனவே இருந்த தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. மிக்க நன்றி
கார் ஓட்டுவதெல்லாம் இன்று ஒரு விசயமே இல்லை என் அப்பா 60 வயதில் மூன்று மாதத்தில் கற்றுக்கொண்டார். ஆர்வம் எதையும் கற்றுக்கொள்ள வழி வகுக்கும்….
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ராஜ்குமார் குடிப்பார் என்று தெரிந்தும் அனுப்புவது தவறான ஒன்று என்பது என்னுடைய கருத்து.
@யாசின் எங்க இருந்தாவது ஒரு உதாரணம் போடுறீங்க 🙂 நீங்க விரைவில் ஒரு Blog துவங்க வேண்டும் என்று என் விருப்பம். அளவா எழுதுங்க.. அப்போது தான் தொடர்ந்து எழுத முடியும்.
@வினோத் நான் எங்க பாஸ் தடை விதித்து இருக்கேன்னு கூறி இருக்கிறேன்! அப்பா நிதானமாகப் போகலாம் என்று கூறி இருக்கிறார் என்று தான் கூறினேன். நீங்களாகவே ஏன் முடிவு செய்து கொள்கிறீர்கள்!!
கிரி.. உங்கள் வார்த்தைக்கு நன்றி கிரி.. முன்பே குறிப்பிட்டது போல் BLOG துவங்க விருப்பம் உண்டு..
அப்படி ப்ளாக் துவங்கி என் எழுத்துகளால் மற்றவர்கள் பாதிப்படைந்தால் முழு பொறுப்பும் உங்களை மட்டுமே சேரும்… வலைஉலகில் நீங்கள் தான் எனக்கு முதல் ரோல் மாடல்…
==============================
சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தளத்தை http://hussainamma.blogspot.ae/ இணையத்தில் பார்த்தேன்..
உங்களுக்கு முன்பே அறிமுகம் இருக்கும் என நினைக்கிறன். அறிமுகம் இல்லையெனில் நேரம் இருப்பின் வாசிக்கவும்..சில கட்டுரைகள் நகைச்சுவையாக, எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..
🙂 நீங்க தளம் துவங்குங்க… துவக்கத்தில் வாசகர்களை சேர்க்க சிரமமாக இருக்கும். நீங்கள் பொறுமையாக எழுதிக் கொண்டு இருந்தால், நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவில் வந்து விடலாம். பொறுமை ரொம்ப அவசியம். ஹிட்ஸ் க்காக எழுதாதீங்க.. அது துவக்கத்தில் உதவியாக இருந்தாலும், நிலைத்து நிற்க முடியாது. இந்த இடத்திற்கு வர எனக்கு எட்டு வருடம் ஆகி இருக்கிறது.
இன்னும் சில விசயங்கள் உள்ளது. அது உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் கூறுகிறேன் 🙂 .
யாசின், ஹுசைனம்மா அவர்கள் தளம் ஏற்கனவே தெரியும். என் தளத்திலும் அவர்கள் கருத்து கூறி இருக்கிறார்கள். ஒரு இடுகையில் நீங்க கூட அவருக்கு பதில் கூறி இருக்கீங்க! 🙂 மறந்து இருக்கலாம்.
https://www.giriblog.com/deepavali-a-experience/
My grandma died first and my grandfather latter. From the death of grandma , my grandfather used to cry many times daily. within two years he too died due to sorrow. What you told is cent percent true. Ladies can manage after the death of their husband. But, in case of gents its very difficult.
கிரி அண்ணா எனக்கு அக்கா என்று யாரும் இல்லை .. இக்கட்டுரையை படிக்க படிக்க எனக்கு செம பொறாமையா இருந்தது. எனக்கு ஒரு அக்கா கூட இல்ல. ஆனா உங்களுக்கு மூன்று அக்காக்கள். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, மாமா , பெரியப்பா, சித்தப்பா , தாத்தா, பாட்டி இந்த உறவுகள் மட்டும் அமைவது இறைவன் அருளால் (அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் செத்தான்) எனக்கு அப்பாவை மட்டும் கொடுத்துவிட்டு மற்ற யாவரையும் கொடுக்க மறந்து விட்டான் படுபாவி …
துவக்கத்தில் வாசகர்களை சேர்க்க சிரமமாக இருக்கும். நீங்கள் பொறுமையாக எழுதிக் கொண்டு இருந்தால், நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவில் வந்து விடலாம். பொறுமை ரொம்ப அவசியம். ஹிட்ஸ் க்காக எழுதாதீங்க.. அது துவக்கத்தில் உதவியாக இருந்தாலும், நிலைத்து நிற்க முடியாது. இந்த இடத்திற்கு வர எனக்கு எட்டு வருடம் ஆகி இருக்கிறது.
இரண்டு பேரும் இந்த விசயத்தில் ஒரே தீர்மானமான கருத்தைக் கொண்டு இருக்கின்றோம் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது கிரி.
Nice Write up Giri. But just to tell you that.. now a days being realistic is also a problem and there are certain cases where you will get irritated with woman folk I have seen the other side of women having much freedom as to what they have to do and husband’s grumbling b’cos they cannot say anything now… Me too though I do not have sisters I grew up with my aunts five of them together right from my school days so I know the advantages and dis advantages of freedom for women.
Kamesh