Lucia [2013] | நான் பார்த்த முதல் கன்னடத் திரைப்படம்

4
Lucia

த்தனையோ மொழிகளின் திரைப்படங்களைப் பலர் பரிந்துரைத்துள்ளார்கள். திரைப்படங்களை ரசிக்க மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை ஆனால், ஒருவர் கூட நம் சக மொழிப் படமான கன்னடப் படத்தைப் பார்க்கக் கூறியதில்லை. Image Credit

Lucia

பலரும் “Lucia” என்ற படத்தைப் பற்றிக் கூறியதால், இதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இந்தப் படம் எப்படி இருக்கும்? என்ன கதை? என்று எதுவுமே தெரியாமல் பார்த்தேன்.

Lucia படம் பார்த்தவர்கள் தெளிவாகப் புரிகிறது என்று கூறி இருந்தாலும், English subtitle இருந்தும் கொஞ்சம் குழப்பம் / சந்தேகங்கள் இருக்கவே செய்தது, இருப்பினும் இதை ரசிப்பதில் பெரிய தடையாக இல்லை, படம் ரொம்பப் பிடித்தது.

வியப்பாக உள்ளதா!! எத்தனையோ மொழித் திரைப்படங்கள் இது போல ஆகி இருக்கிறது. ஒன்றுமே புரியாமல் கூடத் திரைப்படத்தை ரசித்து உள்ளேன்.

பவன் குமார்

இயக்குனர் பவன் குமார், கன்னடத்தில் ரீமேக் படங்களை எடுப்பதையும் இதன் மூலம் திரையுலகை அழித்து வருவதையும் எதிர்த்துக் காரசாரமாக எழுதி இருக்கிறார்.

தமிழில் இவர் படத்தைக் கேட்க ஒரு பிரபல நடிகர் தயாராக இருந்தும் (யாருப்பா அவர்!), தன் தாய் மொழியான கன்னடத்திலேயே எடுக்க விரும்பி இருக்கிறார்.

இயக்குனராக இவருக்கு இது இரண்டாவது படம். பவனுக்கு திரைப்படங்கள் மீது அளவுகடந்த Passion.

கன்னட நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும், பணம் மட்டுமே குறியாக இருப்பவர்களையும், இதுபோலப் படங்களை வரவேற்கும் ரசிகர்களையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்.

ரீமேக் திரைப்படங்களாக எடுத்துக் கன்னட திரையுலகையே ஒழித்து விட்டார்கள் என்று செம வாங்கு வாங்கி இருக்கிறார். இவர் கூறுவதில் உண்மையும் இருக்கிறது.

Crowd funding

இவர் படத்திற்கு தயாரிப்பாளர்கள் எவரும் வரவில்லையாததால் பொது மக்களே பணம் போட்டு ஏகப்பட்ட “தயாரிப்பாளர்கள்” மூலம் இந்தப் படம் உருவாகி இருக்கிறது (Crowd funding).

75 லட்சத்தில் உருவாகி 3 கோடி வரை வசூலித்து இருக்கிறது (தகவல் விக்கிபீடியா). படத்தைப் பார்த்தால், 75 லட்சத்தில் முடித்தது போலத் தெரியவில்லை.

சில கோடிகள் ஆனது போல அதன் உருவாக்கம் நமக்குக் காட்டுகிறது.

பல போராட்டங்களைச் சந்தித்து, சவால் விட்டு எடுக்கப்பட்ட படத்தை வெற்றி பெற வைப்பது எவ்வளவு மன உளைச்சலான செயல், இதையும் பவன் கூறி உள்ளார்.

கன்னடப் படம் பார்க்காததுக்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. கொடுமையான நாயகன், படு மோசமான கதை, கன்றாவியான உருவாக்கம் என்று இருக்கும்.

பார்க்க வாய்ப்புக் கிடைத்தும், சில நிமிடங்கள் மட்டுமே பார்த்து உள்ளேன். பார்த்த இந்த முதல் கன்னடப் படம் சேர்த்து வைத்துக் கொடுத்தது போல இருக்கிறது 🙂 .

கனவு உலகம்

படத்தின் கதை நிஜ உலகத்திலும் கனவு உலகத்திலும் நடப்பது. கேட்க என்னவோ போல இருந்தாலும், உருவாக்கத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கிறது.

இது குறித்து மேலும் கூறி இந்தப் படத்தைப் பற்றிய சிறப்புகளைக் குறைக்க விரும்பவில்லை.

திரைக்கதையை அமைக்க எவ்வளவு சிரமப் பட்டு இருப்பார்கள் என்று படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

கொஞ்சம் தவறினாலும் படம் சூர மொக்கையாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது.

Sathish Ninasam

நாயகனாக நடித்து இருக்கும் Sathish Ninasam தாறுமாறான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

படு லோக்கலாகவும் ஒரு பணக்கார நடிகராகவும் தன் நடிப்பை மிக மிகச் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

சொன்னா நம்ப மாட்டீங்க.. கனவு உலகத்தில் வருபவரை நான் துவக்கத்தில் வேறொருவர் என்றே நினைத்து இருந்தேன்.

ஒரு பிரபலமான நடிகர் எப்படி இருப்பாரோ! எப்படி நடந்து கொள்வாரோ! அவருடைய உடல்மொழி எப்படி இருக்குமோ அதே போல நடித்து அசத்தி உள்ளார்.

குறிப்பாக ஒரு காட்சியில் நடித்து முடித்து ஒருவரிடம் பேசிக்கொண்டே “ஜூஸ்” குடிக்கும் காட்சி.

நாயகன் ஒரு சாயலில் பாக்யராஜ் மகன் சாந்தனு போல இருக்கிறார்.

இதில் வரும் “ஜம்ம ஜம்ம” பாடலை நவீன் பாடி இருக்கிறார். இவர் ஆர்கெஸ்ட்ராவில் பாடிக்கொண்டு இருந்தவர். இதில் முதல் முறையாகப் பாட வைத்து இருக்கிறார்கள்.

பிரபலமான பாடல்களை ஆர்கெஸ்ட்ராவில் பாடிக்கொண்டு இருந்ததால் முதன் முதலாகப் பின்னணி பாட ரொம்ப சிரமப்பட்டு உள்ளார்.

எப்படிப் பாட வேண்டும் என்பதை பொறுமையாகக் கற்றுக்கொடுத்து ஒரு வழி ஆக்கி / ஆகி இருக்கிறார்கள்.

படத்தில் சிறப்பாக வந்ததால், நிச்சயம் சிரமப்பட்டதிற்கு கிடைத்த பலனை நினைத்து மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.

இயக்குனர்கள் குத்துப்பாட்டை கதைக்கு மிக அவசியம்!! என்று கூறுவார்கள். இதில் வரும் குத்துப் பாடல் கதையோடு ஒன்றி வருகிறது.

எனவே, உண்மையாகவே கதைக்கு அவசியம் தான் 🙂 . இரு பாடல்கள் வண்ணமயமாக நன்றாக உள்ளது.

துவக்கத்தில் வரும் Helu Shiva பாடலுக்குக் கிட்டத்தட்ட அடிமையாகி விட்டேன். இதைப் பாடிய நவீன் குரலும் பாடலின் Base இசையும் அட்டகாசமாக இருக்கிறது.

இதை ஒரு நல்ல தரமான ஒலிப் பெருக்கியில் கேட்டால் பட்டாசாக இருக்கும்.

ஒரே வருத்தம் பாடல் நீளம் 2.50 நிமிடங்கள் தான். நீங்களும் கேட்டுப்பாருங்க.

திரைத்துறையில் நடக்கும் சில விசயங்களையும் போட்டு வாங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே நமக்குத் தெரிந்து இருந்தாலும், இதில் இவரின் நடிப்பில், இயக்குனரின் உருவாக்கத்தில் பார்க்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள் பவன்!

Directed by Pawan Kumar
Produced by Audience films and Home Talkies
Written by Pawan Kumar
Starring Sathish Ninasam, Sruthi Hariharan
Music by Poornachandra Tejaswi
Cinematography Siddhartha Nuni
Release dates July 20, 2013 (London Film Festival) September 6, 2013 (India)
Country India
Language Kannada

தொடர்புடைய கட்டுரை

கே ஜி எஃப் [2018] முதல் அத்தியாயம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. தவமாய் தவமிருந்து இது படம் இல்லை கிரி.. பல நடுத்தர குடும்ப தந்தைகளின் வலிகள்… கோவையில் பணிபுரிந்த போது சக்தியுடன்,மேட்டுபாளையத்தில் பார்த்த முதல் திரைப்படம்..இடைவேளை விட்டும் இருக்கையை விட்டு இருவரும் எழுந்திருக்கவில்லை… ராஜ்கிரணுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை…

    சிறு வயது முதலே தாத்தா,பாட்டியின் மடியில் வளர்ந்ததால், எனக்கு முதல் பெற்றோர் அவர்கள் தான் இன்றும்… என்னுடைய மகன் விடுமுறைக்கு ஊருக்கு சென்ற போது மற்றவர்களை விட தாத்தாவிடம் தான் பாசமாக இருப்பதாகவும்,

    என் தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு யார் கூப்பிடடாலும் வராமல் அடம் பிடித்து அழுகிறான் என மனைவி கூறிய போது… கண்ணில் கண்ணீர் வந்தது… யார் சொல்லி கொடுத்தது அவனுக்கு இதை???

  2. இரண்டு மாதத்திற்கு முன்பே பார்த்துவிட்டேன். படம் சூப்பர்… ஹாலுசினேஷன் போல எதெல்லாம் உண்மையோ அது பொய். எதெல்லாம் பொய்யோ அது உண்மை என்று படம் கலந்து கட்டி இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

    நானும் பல கன்னடப்படங்களை பார்த்தாலும் லாஜிக்கே இல்லாமல் கதை நடிப்பு பாடல் ஆக்ஷன்னு இருக்கும். சில நேரத்தில் ஹீரோ ஹீரோயின் காம்பினேஷன் பார்க்கும்போது இதையெல்லாம் நாம பாக்குரத்துக்கா பொறந்தோம்ன்னு நினைக்க தோணும். (உதா: துனியா பட ஹீரோ மற்றும் ப்ரனிதா) ஒரு வேளை தமிழ் நாட்டையும் மத்தவங்க அப்படித்தான் பாக்குறாங்களோ என்னவோ.

    மஞ்சப்பை : ராஜ்கிரணை தவிர வேறெதுவும் இந்த படத்தில் பிடிக்கவில்லை, காரணம்…
    லக்ஷ்மிமேனனை பார்க்கும்போதெல்லாம் என்னமோ அந்தகால மண்ணெண்ணெய் பேரலுக்கு புடவை கட்டினமாதிரி இருக்கு.
    விமல் எப்பபார்த்தாலும் வயிறு பிராபளம் வந்த மாதிரியே மூஞ்சை வச்சிக்குறார். அதுக்கு தகுந்த மாதிரி அமெரிக்க எம்பசியிலேர்ந்து (உட்புறம்) விமல் வெளியில் வரும்போது பாருங்க… எம்பசியின் கதவு என்னமோ பாத்ரூம் கதவு மாதிரி இருக்கு.
    படத்தின் பல கட்டங்கள் செயற்கையான நடிப்பு (ராஜ்கிரண் உட்பட), திரைக்கதைன்னு இருக்கு.

  3. lucia is nice movie .. all songs my favorite especially helu siva yakingade …..
    do you want me to suggest any gujrati movie anna ….?
    but condition applied atleast 1 min have to watch continuously … 🙂

  4. இன்னும் சில வாரங்கள் ஓய்வு கிடைக்கும் என்றே நம்புகின்றேன். எனக்கும் கன்னட மொழி படங்கள் ஏதாவது ஒன்றை பார்க்க வேண்டும் என்ற ஆசையுண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here