தீபாவளி | ஒரு அனுபவ வெடி!

14
தீபாவளி

ட்டுப்பாடுகளால் தீபாவளி கொண்டாட்டம் மக்களிடையே குறைந்து வந்தாலும், குழந்தைகளிடையே கொண்டாட்டம், பரவசம், ஆர்வம் என்று இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. Image Credit

தீபாவளி

சிறு வயதில் தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே பரபரப்பு துவங்கி விடும். லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, தாஜ்மகால், செங்கோட்டை வெடிகள் பற்றிய கணக்குகள் துவங்கி விடும்.

எனக்கும் அக்காவுக்கும் சண்டையாக இருக்கும், கடைசியில் அவருடைய வெடியையும் நானே வெடித்து விடுவேன்.

தீபாவளி முதல் நாள், அடுத்த நாள் வெடி விடுவதை நினைத்து மனம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சாமி படத்தின் முன்பு புதுத் துணியை அம்மா வைத்து இருப்பார்கள். சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்துத் தயாராக இருக்கும்.

இரவு தூக்கமே வராது ஆனால், என்னை அறியாமல் தூங்கி விடுவேன்.

தீபாவளியை நினைத்துக்கொண்டே தூங்கியதால், அம்மா விடியற்காலை தொட்டாலே போதும் அலறி அடித்துக்கொண்டு எழுவேன்.

புதுத் துணி

அவசரமாகக் குளித்துப் புதுத் துணி அணிந்து தயார் ஆகி வெளியே வந்தால், அப்பா என்னைக் கண்காணிக்க தயாராக இருப்பார்.

அவர் முன்னாடி தான் வெடிகளை விட வேண்டும், கொஞ்சம் நான் செட் ஆனதும் பிறகு கிளம்பி விடுவார்.

துவக்கத்தில் கட்டு கட்டாக வெடி வைப்பேன், பின் தீரும் நிலை வந்தவுடன் வெடி சரத்தைப் பிரித்து ஒவ்வொன்றாக வெடிக்கத் துவங்குவேன் 🙂 .

அணுகுண்டு வைத்து அந்த ஏரியாவையே கலங்கடித்துக்கொண்டு இருப்பேன்.

நாங்கள் தோட்டத்தில் இருந்ததால் அருகில் வீடுகள் எதுவும் இருக்காது. எங்கள் வீட்டு நாய்களுக்குத் தீபாவளி என்றாலே தலைவலி தான்.

எங்காவது ஓடிப் போய் விடும் என்பதால், ஒரு அறையில் வைத்துக் கட்டி, பூட்டி வைத்து விடுவோம்.

ஒரு முறை வெடிக்காத வெடியின் மருந்தைக் கொட்டி பற்ற வைத்து உடன் இருந்த உறவினர் பையனுக்குக் கையில் தீக்காயம் ஏற்பட்டு விட்டது.

இது ஒரு சோகமான சம்பவம் ஆகி விட்டது. அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கை ஆகி விட்டேன்.

சலிக்காமல் இரவு வரை வெடி வெடித்துக்கொண்டே இருப்பேன். தற்போது ஒரு வெடி வெடிக்கக் கூட ஆர்வமில்லை 🙂 .

அக்கா பசங்க “மாமா! வாங்க வாங்க!” என்று இழுப்பார்கள்,  அவர்கள் திருப்திக்காகச் சில வெடிகளை விட்டு வருவேன்.

காலம் தான் நம்மை எப்படி மாற்றி விடுகிறது.

இது என் அனுபவ வெடி 🙂

தீபாவளி வந்தாலே “காசைக் கரியாக்காதீங்க, பட்டாசு வாங்காதீங்க” என்று சிலரின் அறிவுரைகளும் கூடவே வந்து விடும்.

இந்தச் சமயங்களில் எங்கிருந்து தான் கிளம்பி வருவார்களோ!

இந்த ஒரு நாள் செய்யும் செலவு தான் நம் சொத்தை அழித்து விடுகிறதா?” தினமும் அடிக்கும் “தம்”, காசைக் கரியாக்குவதில் வராதா? வாரம் ஒரு முறை “தண்ணி” அடிப்பது காசை வெட்டிச் செய்வதில் வராதா?

மாதம் ஒரு முறை சென்று தன்னை அழகு படுத்துகிறேன் என்று ஆயிரக்கணக்கில் செய்யும் செலவுகள் எந்தக் கணக்கில் வரும்?

பெரியவர்கள் செய்யும் வெட்டிச் செலவுகள் கணக்கில் எடுக்கப்படாது ஆனால், குழந்தைகள் வருடத்தில் ஒரே ஒரு முறை வெடிக்கும் பட்டாசுகள் காசைக் கரியாக்குவது போலத் தெரிகிறது!!

என்ன லாஜிக் இது.

தார்மீக உரிமை உள்ளதா?

தம் அடிக்கும் எவருக்கும் காசைக் கரியாக்காதீர்கள் என்று கூற தார்மீக உரிமை உள்ளதா?

தினம் காசைக் கரியாக்கி கொண்டே, உடன் உடல்நலத்தையும் கெடுத்துக்கொண்டு இந்த அறிவுரையைக் கூற எப்படி முடிகிறது?

முதலில் நம்மைச் சரி செய்வோம் பிறகு குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவோம்.

அவரவர் குடும்ப வருமானத்திற்கு ஏற்பக் குழந்தைகளுக்குப் பட்டாசு வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள், ஆடம்பரமாக அல்ல.

ஒரு Family Gift Box வாங்கினால் அதிலேயே அனைத்து வகை பட்டாசுகளும் உள்ளன.

பணப் பிரச்சனை, கடைசி காலம் வரை இருக்கும் அதற்காக, திடீர் சிந்தனைவாதிகள் ஆகி குழந்தைகளின் இந்தச் சிறு மகிழ்ச்சிகளை அழித்து விடாதீர்கள்.

இதை கூறும் போது “தவமாய் தவமிருந்து” ராஜ்கிரண் நடிப்பு தான் மனதில் வருகிறது.

தீபாவளி அன்று தன் குழந்தைகளுக்குப் புதுத் துணி பட்டாசு வாங்கித் தர ஆர்டர் கிடைக்காமல் அவர் படும் பாடும்.

கிடைத்த பிறகு இரவு முழுவதும் கடுமையாக உழைத்துப் பணம் கிடைத்த பிறகு அதில் புதுத் துணிகள், பட்டாசுகள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுத்து, தன் உடல் கடுமையாகக் களைப்படைந்து இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து மனம் நிறைவடைவதைப் பார்க்கும் போது, இது தான் வாழ்க்கை என்று தோன்றியது.

அந்த நேரத்தில் பணத்தை “கரியாக்குவதெல்லாம்” நினைவில் வரவே இல்லை.

பாதுகாப்பு

வெடிகள் வாங்கி தந்தால் மட்டும் போதாது, அவர்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் ஆர்வத்தில் ஏதாவது செய்து விடுவார்கள்.

தீபாவளி அடுத்த நாள் வரும் செய்திகளிலே இதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எனவே கரியாக்காதீர்கள் என்று கூறுவதில் தான் எனக்கு உண்டபாடில்லையே தவிர, பாதுகாப்பில் கூறப்படும் அறிவுரைகள் எதிலும் எனக்கு மாற்றுக்கருத்துகள் கிடையாது. பாதுகாப்பு முதல் இடம் தான்.

நானே முறையாக வெடிக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்பதை கூறியுள்ளேன்.

கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் என் கண்ணே போய் இருக்கும். எனவே, ஆபத்தான வெடிகளை / முறைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.

ஒரு நாள் மகிழ்ச்சி நம் வாழ்வை, வாழ்நாள் சோகம் ஆக்கி விடக் கூடாது.

சில நேரங்களில் கடைசியில் புஸ்வானம் வெடித்து விடும். எனவே, புஸ்வானம் பூவானமாகத்தானே வரும்!! என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்.

இது பென்சில் பட்டாசு போன்றவைக்கும் பொருந்தும்.

தொலைக்காட்சி

இவற்றோடு உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்வது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணித்துக் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.

கோவிலுக்குச் செல்லுங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு செல்லுங்கள். குடும்பத்துடன் திரைப்படத்திற்கு செல்லுங்கள்.

ஒரு தீபாவளியை தொலைக்காட்சி இல்லாமல் கொண்டாடிப் பாருங்கள், எவ்வளவு மகிழ்ச்சிகளை இழந்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

“தீபாவளி” என்பது மதங்களைத் தாண்டிக் குழந்தைகள் அனைவருக்கும் பொதுவானது தான்.

மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாடுங்கள். தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

14 COMMENTS

  1. நல்ல அனுபவங்கள்…!

    முடிவில் நல்ல பல கருத்துக்கள்… நன்றி…

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  3. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    “தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்”
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  5. WELL SAID கிரி… மிக பெரிய சந்தோசத்துக்காக ஒரு சிறிய தொகையை செலவிடுவது ஒன்றும் என் பார்வையிலும் தவறாக தெரியவில்லை. சிறு வயதில் தெரு தெருவாக சென்று நண்பர்களுடன் வெடிக்காத வெடிகளை பொறுக்கியடுத்து அதை வைத்து நாங்களே வெடிகள், அணுகுண்டு, ராக்கெட்டுகள் செய்து அப்துல் கலாம் அவரது சாதனையை முறியடிக்க பார்ப்போம்.. இன்று என்னுடைய பாக்கெட்டிலிருந்து சில்லறை கிழே விழுந்தாலும் சுற்றி முற்றி பார்த்து விட்டு எடுக்கும் மனநிலை.. போலியான மனநிலை… இன்று நினைத்தால் கூட பிரமிக்கவைக்கிறது.. தீபாவளி முதல் நாள் இரவு எத்தனை நாட்கள் அழுது இருப்பேன் தெரியுமா??? ஏன் ஒரு இந்து குடும்பத்தில் பிறக்கவில்லை என்று??? அந்த நாட்களின் நினைவு நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை…

  6. தீபாவளி வாழ்த்துகள்.

    எந்த வயதிலும் பட்டாசு வெடிப்பது இன்பமானதே. ஆனால், எதிலும் அளவோடு இருப்பது எல்லா வகையிலும் நல்லதுதானே.

    @Mohamed யாசின்: ஏன்? பெருநாட்களுக்குப் பட்டாசு வெடிப்பதில்லையா? நாங்களெல்லாம், நோன்பு பெருநாளுக்கு தொழுகை முடிந்ததும் பட்டாசு வெடிப்பதுதான் முதல் வேலை. சாப்பாடு கூட அப்புறம்தான்.

  7. @ஹுசைன்ம்மா, இல்லை இதுவரை பெருநாட்களுக்கு பட்டாசு வெடித்ததில்லை… படிப்பு முடித்து வெளியில் வேலைக்கு சென்ற பின் குடும்பதோடு பெருநாள் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது..

  8. என்னால் தான் அவன் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடியவில்லை.

    ———————————————————————————————

    🙂 🙂

  9. அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    @யாசின் நீங்கள் கூறியது மனதை தொட்டது. தீபாவளி என்றாலே அது குழந்தைகள் அனைவருக்கும் பொது தான்.

    @ராஜேஷ் என்ன சிப்பு வேண்டி கிடைக்கு சிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!