English Vinglish படத்தின் விமர்சனத்தோடு, இடையே தொடர்புடைய என் Engliஷ் Vingliஷ் வாழ்க்கைச் சம்பவங்களையும் இணைத்து உள்ளேன்.
படம் பார்க்காதவர்கள் யோசித்துத் தொடரவும். முக்கிய சம்பவங்கள் கூறப்பட்டு உள்ளது.
அதோடு பெரிய கட்டுரை கூட 🙂 பொறுமை இருந்தால் தொடருங்கள்.
ஸ்ரீதேவி
நீண்ட நாட்கள் கழித்து வரும் போது அட்டகாசமாக வருபவர்களை “Back with BANG” என்பார்கள் அதாவது, அவர்களது வருகை அதிரடியாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஸ்ரீதேவிக்கு இந்த வாசகம் நிச்சயம் பொருந்தும். வாழ்க்கையில், எது கற்றுக்கொண்டாலும் பயன்படுத்தவில்லை என்றால் சில நாட்களில் மறந்து விடும்.
நீங்க ஒரு தொழில்நுட்பத்தில் சிறந்தவர் என்றால், அதில் கொஞ்ச நாள் பணி புரியவில்லை என்றால் அதில் உள்ள சில விசயங்கள் மறந்து விடும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் UNIX இயங்கு தளத்தில் [OS] பணி புரிகிறீர்கள் என்றால் கொஞ்ச நாள் பணியில் இல்லை என்றால் அதில் உள்ள Commands மறந்து விடும்.
பின் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு சரி ஆகி விடும் ஆனால், நீச்சல் அது போல இல்லை. ஒரு முறை கற்றுக்கொண்டால் சாகும் வரை மறக்காது, இடையில் எத்தனை வருடங்கள் நீங்கள் நீச்சல் அடிக்கவில்லை என்றாலும்.
நடிப்பு எப்படி என்று தெரியவில்லை… ஆனால், ஸ்ரீதேவிக்கு அது நீச்சல் போன்றது போலத் தான் என்று இந்தப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன்.
அட அட! என்ன நடிப்பு…!! நடிப்பில் சரவெடி என்றால் இவரது நடிப்பை நிச்சயம் கூறலாம்.
16 வருடங்கள்
16 வருடங்கள் நடிக்காமல், தற்போது வந்து இப்படி பின்னுவெதென்றால் என்ன கூறிப் பாராட்டுவது. இவரது நடிப்பை, புகழ்வதிற்கு முக்கியக் காரணம் உள்ளது.
ஆங்கிலம் தெரியாதவர் எப்படி விழிப்பாரோ / அவமானப்படுத்தும் போது எப்படி முகபாவனையை கொடுப்பாரோ அதை அப்படியே பட்டாசாகக் கொடுத்து இருந்தார்.
எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்? என்று கேட்கிறீர்களா? ஏன் என்றால் இவருடைய நிலையில் இருந்து வந்தவன் என்பதால், இதோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
ஒருவேளை ஆங்கிலம் துவக்கத்திலேயே நன்றாகக் கற்றுக்கொண்டவர்கள் / இது போல பிரச்சனைகளை சந்திக்காதவர்களுக்கு இவருடைய நடிப்பின் ஆழம் புரியாமல் கூட போகலாம். அடிபட்டவனுக்குத் தானே வலி தெரியும்.
அந்த வகையில் இவருடைய ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன்.
கதை
குடும்பத்தலைவியான ஸ்ரீதேவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவரால், இவருடைய மோசமான ஆங்கிலத்திற்கு கிண்டலடிக்கப்படுகிறார்.
இதனால் மனதளவில் மிகவும் உடைந்து போய் இருப்பார்.
இந்த சமயத்தில் ஒரு திருமணத்திற்காக நியூயார்க் செல்ல வேண்டி வர, அதுவும் தனியாக அங்கே சென்று எப்படி சமாளிக்கிறார்! என்பது தான் கதை.
ஸ்ரீதேவி தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை. அங்கே சென்றால் ஆங்கிலம் பேச வேண்டி வருமே! என்று அவருக்கு பயம், மகளுக்கோ அம்மா அங்கே வந்து என்ன சொதப்பப் போகிறார்களோ என்ற பயம்.
ஸ்ரீதேவி மகளின் நண்பியின் அம்மா வழிமறித்து ஆங்கிலத்திலேயே பேச, எப்படியோ ஒற்றை வார்த்தை போட்டு சமாளித்துக்கொண்டு இருக்கும் போது, அவருடைய மகள் பேசி சமாளித்து அவரை அழைத்துச் சென்று விடுகிறார்.
மகளின் ஆசிரியர் ஆங்கில பந்தா எல்லாம் செய்யாமல் (அவருக்கு ஹிந்தி நன்றாக வராது) இவரிடம் பேசுவதால் ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைகிறார்.
இதில் ஒரு விஷயம் அந்த ஆசிரியர் ஹிந்தியை தேசிய மொழி என்று கூறுவதாக வருகிறது ஆனால், இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை.
என் Engliஷ் Vingliஷ்
நான் பள்ளியில் படித்த போது ஆங்கிலம் என்றாலே பாகற்காய் தான். தமிழ்வழி என்பதால் சுத்தமாக ஒன்றுமே தெரியாது.
ஐந்தாவது வந்து தான் ஆங்கில வார்த்தையையே எழுத்துக்கூட்டி படித்தேன். “இளங்கோ” என்ற பள்ளித் தோழன் தான் சொல்லிக் கொடுப்பான். இவன் பெயர் மட்டும் நினைவு இருக்கிறது இதனால் 🙂 .
ஸ்ரீதேவிக்கு வார்த்தை உச்சரிப்பு [Pronunciation] சரியாக வராது. அவரது சிறிய மகனாலையே கிண்டலடிக்கப்படுவார்.
எனக்கு உச்சரிப்பு பிரச்சனை இல்லை. பேசுவது தான் ஒன்றும் தெரியாது. நண்பர்கள் பலருக்குக் கூட இன்னும் ஆங்கில உச்சரிப்பு சரியாக வருவதில்லை.
அவர்களும் அதை மாற்றிக்கொள்ள முயற்சித்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலம் சரளமாகப் பேசினால் மட்டும் போதாது உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
ஸ்ரீதேவி நியூயார்க் செல்ல பல அறிவுரைகள் கூறப்படும். எப்படி பேசுவது? என்ன பதில் கூற வேண்டும் என்று மனப்பாடம் செய்து இருப்பார்.
விசா வாங்க போகும் போதே உளறி அப்புறம் அருகில் உள்ளவரால் காப்பற்றப்படுவார்.
நேர்முகத்தேர்வு
முதன் முதலில் நேர்முகத்தேர்வு அடையாரில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சென்று அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று கூறி அனுப்பி விட்டார்கள்.
அதன் பிறகு எப்படியோ வேறு வேலையில் சேர்ந்தாலும், ஆங்கிலம் பேச வேண்டி வந்தால் நாக்கெல்லாம் உலர்ந்து விடும். என்ன பேசுவதென்றே தெரியாது.
வேலையில் சிறப்பாக இருந்தாலும் ஆங்கிலம் தெரியாமல் இருந்ததாலையே ஒரு சில விசயங்களை தவிர்க்க வேண்டியதாக இருந்தது.
அசிங்கப்பட வேண்டுமே என்று அதை தவிர்த்து விடுவேன், வேலை தெரிந்தும்.
தற்போது இருக்கும் இடம் சிங்கப்பூர் (Update : Back to Chennai).
தற்போது இருக்கும் இதே நிறுவனத்தின் சென்னை கிளையில் சேர மூன்று முறை நேர்முகத்தேர்வு சென்றேன் என்று சொன்னால் பலர் நம்பமாட்டார்கள்.
Rejected
நண்பனின் உதவியால் நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். நேர்முகத் தேர்வு வரையே அவனால் உதவ முடியும், நேர்முகத் தேர்வில் நடப்பதற்கு அவன் பொறுப்பல்ல.
அங்கே இருந்த அதிகாரி என்னை சாதாரண கேள்விகள் தான் கேட்டார் அதாவது, என்ன செய்கிறாய்? என்ன பிடிக்கும்? இது போல கேள்விகள் தான் கேட்டார்.
இதற்கே என்னால் பதில் கூற முடியவில்லை. அமைதியாகவே இருந்தேன். Rejected (இது நடந்தது 2000 ல்).
திரும்ப ஒரு முறை சென்றேன், இதே நிலை!! Rejected. அவர் கேட்டது, “தவறாக இருந்தாலும் பரவாயில்லை, சாதாரணமாகப் பேசு அது போதும்.
உன் தொழில்நுட்பத் தகுதியில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆனால், இது பன்னாட்டு நிறுவனம் [MNC] இங்கே யாராவது வெளிநாட்டவர் வந்து கேள்வி கேட்டால் நீ எப்படி பதில் அளிப்பாய்?” காரணம் நான் இருப்பது IT Support Dept.
அவர் கேட்டது நியாயமான கேள்வி ஆனால், நான் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு வார்த்தை கூட வரவில்லை.
எனக்கு ரொம்ப அசிங்கமாகப் போய் விட்டது, என்னடா இது! இவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்று.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் மூன்றாவது முறையும் நான் எதுவும் பேசவில்லை. அவர் செம கடுப்பாகிட்டார்.
முதல் முறை தவிர்த்து மீதி இரண்டு முறை வந்தது நண்பன் உதவியால் மட்டுமே! இல்லை என்றால் வாய்ப்புக் கிடைத்து இருக்காது.
6 மாத ஒப்பந்தம்
பிறகு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம் அதாவது ஆறு மாதம் Contract ல் இருப்பது, இதற்குள் பேசி விட்டால் வேலை தொடரும் இல்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படுவதாக.
இதற்கு ஒரு குருட்டு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன்.
நான் அப்போது இருந்த நிலை ரொம்ப சிரமம். பணப் பிரச்சனை ஏகப்பட்டது. வேலையை விட்டு அனுப்பி விட்டால் பழைய நிறுவனத்திற்கும் போக முடியாது.
புது வேலையும் எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை.
வேலையில் சேர்ந்த பிறகும் ஆங்கிலம் எனக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
இதனால் பல்வேறு சிரமங்களை அவமானங்களை சந்திக்க நேர்ந்தது ஆனால், வேலையில் சிறப்பாக இருந்ததால் யாரும் ஒன்றும் கூற முடியவில்லை.
Dell Support
எங்கள் நிறுவனத்தில் Dell கம்ப்யூட்டர் வைத்து இருப்போம் அதில் ஏதாவது பிரச்சனை என்றால் கஸ்டமர் சப்போர்ட் அழைத்துக் கூற வேண்டும். அதற்கு ஆங்கிலம் தெரிய வேண்டுமே!! பிரச்சனை.
இதற்கும் உடன் பணி புரியும் நண்பர்கள் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை.
ஒருமுறை சரி! நாமே முயற்சித்துப் பார்க்கலாம் என்று, பலமான ஒத்திகை எல்லாம் பார்த்து (யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து) பேசும் போது அனைத்தும் மறந்து விட்டது ஸ்ரீதேவி போல.
என்ன கூறுவது என்று தெரியாமல் சரியான பிரச்னையை கூறாமல் ஒரு மொக்கையான பதிலைக் கூறி விட்டேன்.
எதிர் முனையில் பேசியவருக்கு நான் ஒரு அரைகுறை என்று நிச்சயம் உடனே புரிந்து இருக்கும். அவர் “நீங்கள் மறுபடியும் சரியாக சோதித்து விட்டு அழையுங்கள்” என்று கூறி விட்டார் ஒரு சிரிப்புடன்.
எனக்கு பலத்த அவமானமாகி விட்டது.
பதட்டத்தில் நாக்கெல்லாம் உலர்ந்து ஒரு மாதிரி ஆகி விட்டேன். அதன் பிறகு எப்படியோ சமாளித்து கொண்டு இருந்தேன்.
தற்போது தயக்கம் இல்லாமல் பேச முடிகிறது என்றாலும், சில நேரங்களில் இச்சம்பவம் நினைவிற்கு வந்து போகும்.
ஆறு மாதம் முடிந்தும் ஆங்கிலம் சுமார் தான் ஆனால், நான் பணியில் சிறப்பாக இருந்ததால் அவர்களால் உடனே எடுக்க முடியவில்லை.
அந்த அதிகாரி என்னை மறுபடியும் நேர்முகத்தேர்வு செய்ய விருப்பமில்லை வேறு யாரையாவது வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
நான் இவர் நிலையில் இருந்து இருந்தால் என்னை அப்பவே வீட்டிற்கு அனுப்பி இருப்பேன் 🙂 .
பின் முன்பு போல மோசமில்லாமல் எதோ உளற, சரி என்று எடுத்துக்கொண்டார்கள். இதன் பிறகும் அந்த அதிகாரி என் மேல் கோபமாகவே இருந்தார்.
பின் அவருக்கு சில தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்து தர அதோடு, வேறு சில சம்பவங்களாலும் என் மீது அவருக்கு மதிப்பு வந்தது.
இதன் பிறகு அவர் எனக்குக் கொடுத்த உற்சாகம் என்னால் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது.
இந்த அதிகாரியின் பெயர் “சுரேஷ்”. இதை இங்கே குறிப்பிடுவதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
Emigration Check
ஸ்ரீதேவி நம்ம ஊரில் எப்படியோ Emigration சமாளித்து சென்று விடுவார் ஆனால், அங்கே போய் மாட்டிக்கொள்வார்.
அங்கே உள்ளவர் என்ன காரணத்திற்க்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்ததை மறந்து, ஒரு நடிப்பு காட்டுவார் பாருங்கள்.. யப்பா! பின்னிட்டாரு. என்ன நடிப்பு!!
பதட்டத்தில் “சகோதரியின் திருமணத்திற்கு வந்ததாகக் கூற இருந்ததை, மாற்றி இவருடைய திருமணத்திற்கு அவர் வருவதாகக் கூறி விடுவார்”.
படத்தில் ரொம்பப் பிடித்த காட்சிகளில் இது முதல் இடம். க்ளாஸ்.
அவருடைய பதட்டமான நடிப்பை பார்த்து, எப்படி இது போல ஒரு நடிப்பை வழங்கினார் என்று நினைத்து நினைத்து வியப்படைந்தேன்.
எனக்கும் என்ன சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் கூறி இருந்தாலும் சிங்கப்பூர் சென்று, எல்லாமும் மறந்து விட்டது.
பிறகு அவர் என்னை ரொம்ப இம்சிக்காமல் அவரே நான் கொடுத்த தகவல்களை சரி பார்த்து அனுப்பி விட்டார்.
நான் முடித்து வெளியே வந்த பிறகே என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
Mc Donald
ஸ்ரீதேவி நியூயார்க் வந்த பிறகு வெளியே செல்ல வேண்டி இருக்கும், அப்போது காத்திருக்கும் நேரத்தில் ஒரு காஃபி குடிக்கலாம் என்று உள்ளே சென்று அதை ஆர்டர் செய்ய அவர் படும் பாடு இருக்கே!…. என்னையே அங்கே அப்படியே பார்த்தேன்.
அவர் அதில் என்னென்னல்லாம் தவறு செய்தாரோ அத்தனையும் நான் செய்தேன் (அவர் கூறிய சிலவற்றை மட்டும் நான் செய்யவில்லை).
இங்கெல்லாம் சாப்பிட ஏதாவது வாங்குறதுக்குள்ள மனுஷன் கொலை வெறி ஆகிடுவான்.
எப்படி என்றால், ஒன்றை கேட்டால் அதில் இரண்டு option கேட்பார்கள் அதில் ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு இரண்டு option கூறுவார்கள். நமக்கு செம கடுப்பாகிடும்.
யோவ்! எதையாவது கொடுத்து தொலைங்கய்யா! என்கிற நிலைக்கு வந்துடுவோம்.
இதிலும் அப்படியே வரும் அதற்கு ஸ்ரீதேவி தவறு தவறாக சொல்லும் போதும், என்ன சொல்வது என்று தெரியாமல் மேலே கீழே பார்ப்பதும், அவங்க அவமானப்பட்டதை தாங்க முடியாமலும் நடிப்பாங்க பாருங்க….! அசத்தல்.
சிங்கப்பூர் மெக்டொனால்டில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் பல ஒத்திகை பார்த்த பிறகே செல்வேன் (வந்த புதிதில்).
இதில் கூடுதல் பிரச்சனை இவர்களின் ஆங்கிலம். ஆங்கிலத்தை கொலை செய்வார்கள்.
நமக்கே அரைகுறை, இதுல இவங்க பேசுறது மோசமான ஆங்கிலம்.
வந்த புதிதில் இவங்க கிட்ட மாட்டிட்டு நான் பட்டபாடு யப்பா!
ஒவ்வொருமுறை ஆர்டர் செய்யும் போதும் ஏதாவது பிரச்சனை வரும். நான் ஒன்று சொல்வேன் அவர்கள் ஒன்று கொடுப்பார்கள். செம கடுப்பா இருக்கும்.
திரும்ப விளங்க வைப்பது கொடுமை என்பதால் அதையே வாங்கிட்டு வந்திடுவேன்.
ஸ்ரீதேவி சொன்ன மாதிரி தப்பு தப்பா எவ்வளவு சொல்லி இருப்பேன் / சமாளித்து இருப்பேன் என்று நினைத்தால்…. 🙂 .
Read: சிங்கப்பூர் மெக் டொனால்டும் என் தலைவலியும்! [November 2009]
நான்கு வாரத்தில் ஆங்கிலம்
ஸ்ரீதேவி “நான்கு வாரத்தில் ஆங்கிலம்” கற்கும் வகுப்பு சென்று ஆர்வமாகக் கற்றுக்கொள்வார். அங்கே சில சுவாரசிய சம்பவங்கள் நடக்கும்.
இதில் பிரெஞ்ச் மொழி பேசுபவராக வருபவரின் கதாப்பாத்திரம் குழப்பமானதாகவே உள்ளது.
கடைசி வரை இவரை வைத்து என்ன கூற வருகிறார்கள் என்று புரியவில்லை.
சென்னையில் இருந்த போது ஆங்கிலம் கற்க பல இடத்திற்கு போய் இருக்கிறேன். கூச்ச சுபாவம் என்பதால், அதுவே எனக்கு பெரிய பின்னடைவு ஆகி விட்டது.
பேசக் கூறுவார்கள், அதற்கு பயந்தே வகுப்பிற்கு போகாமல் இருந்த நாட்கள் உண்டு.
ஒரு வயதான மேடம் சொல்லிக் கொடுத்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.
நம்ம ஆளுங்க Problem னு சொல்லும் போது கவனித்துப் பாருங்க… “பிராளம்” என்று தான் சொல்லுவாங்க B யை முழுங்கிடுவாங்க.
அதே போல “Liked”. இதை “லைக்கிடு” னு சொல்லுவாங்க. “லைக்டு” என்று தான் சொல்லணும்.
அப்புறம் ஒரு எஸ்ஸே மாதிரி எழுதிட்டு வந்து பேசக் கூற, இதற்கு பயந்து / கூச்சப்பட்டு அங்கு போவதையே நிறுத்திட்டேன் 😀 .
“ஏக்சிடன்ட்” (Accident) வார்த்தையும் நம்ம ஆளுங்க வாயில மோதி “ஏக்ஸ்ரன்ட்” என்று “நசுங்கி” விடும் 🙂 .
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இந்த வார்த்தையை ஏன் கொலை பண்ணுறாங்க என்பது புரியாத புதிர்.
சென்னையில் டிப்ளமோ படித்த போது அங்கே இருந்த மேடம் கேள்வி கேட்க, பதில் கூறத் தெரியாமல், Madam I am from Tamil Medium I don’t know English என்று கூற, அவர் இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் என்னை அமரக்கூறி விட்டார்.
அவருக்கு தமிழ் சரியாகத் தெரியாது (மலையாளி).
அதன் பிறகு என்னை எப்போதாவது தான் கேள்வி கேட்பார். மேடம் / பசங்க பேசுவது புரியாமல் நான் பட்ட சிரமம் இப்ப நினைத்தாலும் எனக்கே பரிதாபமாக இருக்கிறது.
கொடுமையான நாட்கள் அவை. ஆங்கிலத்தால் மதிப்பெண் குறைந்ததால், அழுத கதை எல்லாம் உண்டு.
ஊரில் வெற்றி வீரனாக மதிப்பெண் [2nd Rank] வாங்கி விட்டு, இங்கே டம்மி பீசாக மாறியதை தாங்க முடியவில்லை.
நான்கு வாரத்தில் பேச முடியுமா?
அனைவரும் எதிர்பார்த்தது போல, கடைசியில் ஸ்ரீதேவி ஆங்கிலம் பேசுவதாகக் காட்டி உள்ளார்கள்.
ரொம்ப சினிமாத்தனம் ஆக்காமல் ஓரளவு நம்புகிற மாதிரி காட்டியிருப்பது ஆறுதல் ஆனால், நிஜத்தில் நான்கு வாரத்தில் இப்படி பேச முடியாது.
எனக்கு நான்கு வருடங்கள் ஆகியும் இது போல வரவில்லை என்பது வேறு விஷயம்.
தற்போது கிடைத்த அனுபவங்கள், தெரிந்த கொள்ள விரும்பும் ஆர்வங்கள், சூழ்நிலை ஆகியவற்றால் பெட்டர் [தான், சூப்பர் இல்லை 🙂 ].
தற்போது முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் ஆங்கிலம் சிறப்பாக இருந்து இருந்தால் இன்னும் உயர்ந்து இருக்க முடியும் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆங்கிலம் மட்டுமே ஒருவரை உயர்த்தி விடாது ஆனால், அதுவும் நம்முடைய வளர்ச்சியில் ஒரு முக்கியக் காரணி என்பதை மறுக்க முடியாது.
சுருக்கமாக, கூச்சத்தை விட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால், ஆங்கிலமல்ல எந்த மொழியும் நம் வசம்.
ஸ்ரீதேவியை என்னைப் போன்றவர்களின் பிரதிநிதியாகத் தான் பார்க்கிறேன். நம் கஷ்டத்தை ஒருவர் பிரதிபலிக்கும் போது கிடைக்கும் மன நிறைவே தனி.
ஸ்ரீதேவி மீண்டும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் குறிப்பாக இது போன்ற இயல்பான படங்களில்.
சிறப்பான படத்தை வழங்கியதற்காக இதன் இயக்குனர் கெளரி ஷிண்டேவிற்கும் அற்புதமான நடிப்பை வழங்கிய ஸ்ரீதேவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சுரேஷ்
இந்த கட்டுரையை என் மீது எப்போதும் அக்கறை கொண்டு இருக்கும் “சுரேஷ்” என்ற அந்த அதிகாரிக்கு சமர்ப்பிக்கிறேன்.
இடையில் மூன்று வருடம் SWISS வங்கியில் இருந்தேன் அப்போது சென்னை அலுவலக Farewell “All staff” மின்னஞ்சலில் அவர் பெயரைக் குறிப்பிடாமல், அவருக்கு நன்றி தெரிவித்து தனியாக ஒரு பெரிய மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.
பின்னர் தான் All staff மின்னஞ்சலில் அவர் பெயரைக் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமே!
தனி மின்னஞ்சல் நன்றியை விட இது போல அனைவர் முன்பும் நன்றி கூறுவது சிறப்பாக இருந்து இருக்குமே என்று தோன்றியது.
இதை நினைத்தவுடன் ரொம்ப சங்கடமாகி விட்டது. ‘அடடா! ஒரு அருமையான நன்றி கூறும் வாய்ப்பை வீணடித்து விட்டோமே‘ என்று மன உறுத்தல் ஆகி விட்டது.
சுரேஷ் சார்! அன்று நான் கூறி இருந்தால் ஆயிரம் பேர் தான் படித்து இருப்பார்கள்.
தற்போது என்னுடைய Blog ஃபேஸ்புக் பேஜ், கூகுள் +, மின்னஞ்சல், கூகுள் ரீடர் என்று கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் படிக்கிறார்கள் (இதில் பல நம் அலுவலக நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்).
இவர்கள் அனைவர் முன்னிலையிலும் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நல்லா இருக்கு.
Giri, I am typing this on my iPad and find it easier to do so in English – please excuse me. Actually I remember some facts differently. In the second interview, I wanted to be sure that I was not prejudiced against you and so I asked another person to interview you. He too concurred with me. It was then that I said I will appoint you but will personally enforce the probation and fire you after six months, if you showed no improvement. Thereafter, whenever I met you in office I would speak to you only in English and you will try and respond in English. As time went on I could see your English improving so much so, I later used to talk to you in Thamizh 🙂
Now the important thing, you really worked hard and you were one of the most committed persons I know. Secondly, you persevered and learnt English and that is what, I am sure, helped you go to Singapore eventually. But my greatest joy was when I saw your posting as Regional IT Manager, APAC 🙂
Even today wherever I teach Soft Skills to young students in rural areas of Tamil Nadu, I use you as an example to inspire them.
Well done, Giri and thank you for giving me that rather undeserved praise. It is you and your efforts that did it!
சுவாரஸ்யம்:). நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
/காலையில் சென்று “எங்க, வீட்டைக் காணோம்!!” என்று கேட்டானாம்/
குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது:)!
கிரி அண்ணே! நம்ம அனுபவமும் இதேமாதிரிதான். ஊர்ல இருக்கும் போது சென்னைல வேல தேடினா இங்கிலீஷ் வேணும்ன்ற காரனத்தால விழுப்புரம் பாண்டிசெரின்னு வேல பார்ததாகட்டும். துபாய் வரும்போதும் வந்தும் ஆங்கிலத்தால நான் பட்ட கஷ்டத்தை இப்ப நெனச்சாலும் சிரிப்புதான் வருது. கிராமபுரத்துல இருந்து வர்ற எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. நம்ம கிட்ட இருக்குற கூசத விட்ட தன்னால engilsh கத்துக்கலாம் அப்படிங்குறத அனுபவதுலதான் தெரிஞ்சிக்க முடிந்தது. ஊர்ல நண்பர்கள் எல்லோரும் சொல்லுவாங்க கூச்ச படமா பேசு ஆங்கிலம் ஒரு பெரிய விசயம் இல்லன்னு. ஆனா கூச்சம் தப்பா பேசிட்ட என்ன பண்றதுன்னு கூச்சம். ஆனா துபைல கூச்ச பட்டாலும் நாம சொல்ல வேண்டியது சொல்லித்தான் ஆகணும்ன்ற கட்டாயம் வரும்போது தப்போ சரியோ எப்படியாவது கூறிவிடுவோம். அதனால கூச்சம் நம்ம விட்டு விலகிடிச்சி. தமிழ் தெரிஞ்சவங்க கிட்ட ஆங்கிலத்துல பேசத்தான் கூச்சம இருக்கும் தமிழ் தெரியாத ஒருத்தர்கிட்ட ஆங்கிலத்துல தப்பு தப்பு பேசினாலும் நாம பெருசா கவலை படறது இல்ல. தப்ப பேசினாலும் நாம சொல்ல வந்த கருத அவருக்கு புரிய வெச்சிட்ட மனசுக்கு ஒரு திருப்தி வரும். இந்த படாத பாத்ததும் இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள்ள அசைபோட ஆரம்பிச்சேன். பகிர்வுக்கு நன்றி.
கிரி நானும் உங்களை போல் தான் இங்கிலீஷ் எனக்கு மகா எரிச்சல் பிடித்த விஷயம்
வேலைக்கு வந்த பின் தான் அதன் சக்தி தெரிந்தது
இங்க்லீஷ் விங்க்ளிஷ் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
கிரி,
அருமையான பதிவு. சுரேஷ் போன்றவர்கள் எல்லா கம்பெனிகளிலும் இருந்தால் கிரி போன்ற திறமைசாலிகளை எல்லா கம்பெனிகளிலும் பார்க்கலாம் இல்லையா?
உங்களுடைய விடாமுயற்சியை நான் பாராட்டுகிறேன். ஆங்கில கதைகள் நிறைய, நிறைய படித்துதான் நான் என்னுடைய ஆங்கில எழுத்து மற்றும் பேச்சு திறமையை வளர்த்துக்கொண்டேன்; நீங்களும் அதனை பின்பற்றினால், உங்களுக்கு நிறைய ஆங்கில எழுத்துக்களும், அவற்றை பயன்படுத்தும் சூழ்நிலையும் புரிய வரும்.
அருண்
giri
tamil mediathil paditha ovvoruvarum ethir kolum mukiamana prachinai ithu..
aangilam olungaga pesa theriyamal erpadum koochamum, pathatamum, avamanamum
athai unarnthu parthavargaluke puriyum..
nalla pathivu..
ipothum kooda thiru.suresh avargalin pathivil ulla sila english vaarthaigalukaga dictionary theda vendi irukirathu…..intha smiley epdi edukirathu giri?
பகிர்வுக்கு நன்றி கிரி.. ஊரில் வெற்றி வீரனாக மதிப்பெண் [2nd Rank] வாங்கி விட்டு, இங்கே டம்மி பீசாக மாறியதை தாங்க முடியவில்லை. SAME BLOOD ..
SAME BLOOD , Mohamed Yasin . During college my college days
நானும் இதே பிரச்சினை சந்தித்தேன் என் கல்லுரி முதலாம் ஆண்டில் , வகுப்பில் எந்த கேள்வி கேட்டாலும் நான் ஒரே பதில் சொல்லுவேன் ” I Don ‘t Know Madam / Sir ” , பிறகு நண்பர்கள் உதவியுடன் புரிந்து படித்தேன், முதல் செமஸ்டர் ல class 2nd rank எடுத்தேன் .
அதன் பிறகு வகுப்பில் எனக்குஎன்று ஒரு மரியாதை கிடைத்தது . அந்த நிமிடம் தான் என்னாலும் சாதிக்க முடியும் என்று எண்ணினேன்.
நம்ம நிலைமை வேற ஆங்கிள்.. இங்கிலிஷ் ரிட்டன் எக்ஸாம்ல எல்லாம் 90க்கு மேல மார்க் வாங்கிட்டு, பிறகு பேச்சுன்னு வரும்போது பப்பப்பே கேஸு.. அவ்வ்
இலங்கையிலும் பீட்ஸா ரிலீஸ் பற்றி பேச்சைக் காணோம்..ஆரண்யகாண்டத்திற்கும் அதே கதி.. 🙁
நண்பா கிரி
நமக்குள் நூறு நூறு ஆண்டுகாலமாக ஏற்றிய அடிமை எண்ணமே இவ்வாறு ஆங்கிலத்தை கடினமாக உணருகிறோம் ……உண்மையில் ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு எண்ணத்தையும் சுலபம் என்று நினைத்து செய்தால் வெற்றி நிச்சயம்……ஆனாலும் தோல்வி வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை மட்டும் நாம் நம் இளைய தலைமுறையினருக்கு கற்று கொடுத்துவிட்டால் அவர்கள் பல மடங்கு மனபலம் பெற்று ஆங்கிலம் கற்பது , பிறருடன் பழகுவது, திருமணம் செய்துகொண்டு நல் வாழ்வு வாழ்வது , போன்ற பல விஷயங்களை சிறப்பாக செய்வர்……இது நம் முன்னோர்களிடம் இயல்பாக இருந்தது…..கால போக்கில் அவை யாவும் திட்ட மிட்டு மாற்ற பட்டது….அவைகளை மீட்டு எடுப்போம் ……
இந்தப் படத்தின் வெற்றிக்கு, பார்வையாளர்களுக்கு தம் கதையைச் சொல்கிறது என்கிற எண்ணத்தைத் தோன்றவைத்ததும் காரணம் என்று நினைக்கிறேன்.
ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும், வேலைக்கு வந்ததும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதும் எல்லாருக்கும் வந்துவிடாது. எனக்கும் சிரமம் இருந்தது.
முன்பு என்னுடன் வேலைபார்த்த ஒரு கிராஃபிக் ஆர்டிஸ்ட் – மலையாளி திறமையானவர், ஆனால் ஆங்கிலம்தான் பிரச்னை. அப்போது அங்கு புதிதாய்ச் சேர்ந்த முன்கோபி இங்கிலாந்துகார மானேஜருக்கு, அவரது திக்கித் திணறிப் பேசும் ஆங்கிலத்தைக் கேட்கப் பொறுமை இல்லாமல் என்னை மொழிபெயர்ப்பாளராகப் பயன்படுத்திக் கொள்வார், தர்ம சங்கடமாக இருக்கும். அதேசமயம் முதலாளியான அரபியும் இதே கிராஃபிக் ஆர்டிஸ்டும் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வார்கள். அமெரிக்காவில் மேல்நிலை பட்டம் பெற்று வேலைசெய்தவர் அந்த அரபி.
இந்த தமிழ் சாப்ட்வேர் லிங்க் எனக்கு அனுப்ப முடியுமா சார்
நல்லா எழுதியிருக்கீங்க கிரி. உங்கள் நண்பர் சுரேஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
நடிப்பு எப்படி என்று தெரியவில்லை… ஆனால், ஸ்ரீதேவிக்கு அது நீச்சல் போன்றது போலத் தான் என்று இந்தப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன். அட அட! என்ன நடிப்பு…!!
———————————————————
Today i saw the movie in AVM Rajeswari theater. Her acting was awesome. She acts even minute expressions very beautifully. I like that french man acting also. simply a superb movie.
கொசுறு 3 செம
படம் எனக்கும் ஓரளவு புடிச்சுது
உங்க கதை இன்னும் சுவாரஸ்யமா இருக்கு டைரக்டர் இல்லேனா ஹீரோ ஆகிடலாமா தல?
அனைவரின் வருகைக்கு நன்றி
@சுரேஷ் சார் நன்றி
@அருண் உங்கள் ஆலோசனைக்கு நன்றி. பின்பற்ற முயற்சிக்கிறேன்.
@அகிலா “:-)” இது சந்தோஷ ஸ்மைலி “:-(” இது சோக ஸ்மைலி. இதை நீங்கள் ” ” இல்லாமல் கொடுங்கள் வந்துவிடும். சாட்டில் கொடுப்பது போலத்தான்.
@Lazur Stalin http://www.google.com/transliterate/tamil இங்கே செல்லுங்கள்.
@ராஜேஷ் எனக்கும் அந்தப்படம் போகும் எண்ணமில்லை. நான் எதிர்பார்க்கும் காட்சிகள் இருப்பதாக யாரும் கூறவில்லை, எனவே இணையத்தில் முடிந்தால் பார்த்து விடுவேன்.
@அருண் ஓரளவு!! பிடிச்சுதா? 🙂
//நான் இவர் நிலையில் இருந்து இருந்தால் என்னை அப்பவே வீட்டிற்கு அனுப்பி இருப்பேன்.//
//என்னை அப்பவே வீட்டிற்கு அனுப்பி இருப்பேன்.// !!!!
suprrrrr…..
I am studying in tamil medium, I dont know english. ITHAI nanum use panni irukean…
NEEGA dell iku call pannuna mathiri … JOB mattera Nanum call panni english try pannunean but opposite la oru girl oru 1 minute sirichanga…next time another girl call cut pannitanga Avanga kita job vacancy irukutha nu keakanum call pannuna… Avanga peasuna english enaku suthama puriyala…ipadiyae nalla opportunities romba miss panni irukean…
Aparam dappa english vachu job vangunathu oru periya comedy…
SAME SAME