சென்னை மாநகரப் பேருந்து

11
சென்னை மாநகரப் பேருந்து

சிங்கப்பூரில் இருந்து வந்த பிறகு பிரச்சனையாக இருந்த ஒரே விசயம் சென்னை மாநகரப் பேருந்து பயணசீட்டுக்கு சில்லறை கொடுப்பது வாங்குவது மட்டுமே!

இரண்டு மாதமாக மாநகரப் பேருந்தில் சுற்றியதில் கிடைத்த அனுபவங்களே இவை!

சென்னை மாநகரப் பேருந்து

எல்லோரும் சரியா சில்லறை வைத்துக்குங்க!” ன்னு நடத்துநர்  ஆரம்பிக்கும் போதே இவர் மீதியை கொடுப்பாரா?! என்று தோன்ற ஆரம்பித்து விடும் 🙂 . வடிவேல் மாதிரி மீதியைக் கொடுப்பாரா மாட்டாரா என்று யோசனையாகவே இருக்கும்.

சமீபத்தில் படித்த ட்விட் ஒன்று இப்பிரச்சனை சார்ந்து ரசிக்கும்படியாக இருந்தது.

நாம் இயற்கையை ரசித்த படி செல்வது நடத்துனர் கொடுக்கும் மீதிச் சில்லறையில் தான் இருக்கிறது“. சரியாத்தான் கூறி இருக்காங்க 🙂 .

ஒரு வாரம் சமாளித்தேன் பல பேருந்துகள் மாற வேண்டி இருந்ததால், தொல்லை தாங்காமல் 1000₹ பாஸ் வாங்கி விட்டேன். தற்போது பல பேருந்துகள் மாறிப் பட்டையக் கிளப்பிட்டு இருக்கேன் 🙂 . Image Credit

சரி.. இனி நம்ம “சொகுசு”!! பேருந்துகள் உட்படச் சில பேருந்துகளைப் பார்ப்போம்.

சொகுசுப் பேருந்துகள்

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் டப்பா பேருந்துகளை எல்லாம் சொகுசு பேருந்து என்று கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சூர மொக்கை என்ற வார்த்தைக்கு மேல் ஒன்று இருந்தால் அதற்குப் பொருத்தமானவை நம் சென்னை மாநகரப் சொகுசுப் பேருந்துகள்.

சாதாரணப் பேருந்துகளை விட மோசமான நிலையில் இருக்கின்றன.

சாதாரணக் கட்டணப் பேருந்துகள் கூட அமருவதற்கு நன்றாக உள்ளன ஆனால், சொகுசுப் பேருந்தை எந்தப் புண்ணியவான் வடிவமைத்தாரோ! அதைப் பொறுப்பில் இருந்து யார் அனுமதித்தார்களோ!! கடவுளுக்கே வெளிச்சம்!

ஓட்டுநர் பின்புறம் உள்ள இருக்கையும் அதற்கு இடது பக்கமுள்ள இருக்கையில் உட்கார வேண்டும் என்றால் நீங்கள் நான்கடி உயரம் தான் இருக்க வேண்டும். உங்கள் காலை மட்டும் நுழைக்க முடியும், உட்கார முடியாது.

டயர் மேலே வரும் இருக்கைகள் நான்கு பக்கமும் இதே நிலை தான்.

இங்கே மட்டுமல்ல நடுவிலும் சில இருக்கைகள் இதே போலத் தான் உள்ளன. பலர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் சிரமப்பட்டு விதியை நொந்து அமர்ந்து வருகிறார்கள்.

என் சந்தேகம் இதை எப்படி வடிவமைத்தார்கள், எப்படி அனுமதித்தார்கள்?!

ஒன்றிண்டு பேருந்துகள் இப்படி இருக்கும் போல என்று நினைத்தேன் ஆனால், பெரும்பாலான சொகுசு பேருந்துகள் இந்தப் பரிதாப நிலையில் தான் உள்ளன.

இதற்குச் சாதாரணக் கட்டண பேருந்தே இருக்கை நன்றாக உள்ளது.

சாதாரணக் கட்டணப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து என்று எல்லாமே ஒன்று தான். அனைத்து நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கிறது. எந்தப் பெரிய வித்யாசமும் இல்லை. நிறுத்தவில்லை என்றாலும் நெரிசலில் நின்று விடும்.

எனவே, இது முழுமையான பகல் / இரவு கட்டணக் கொள்ளை என்பதைத் தவிர்த்து மக்களுக்கு வேறு எந்தப் பயனுமில்லை.

பல பேருந்துகள் எதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு ஓடுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறது.

கட்ட வண்டியை விட மோசமாக உள்ளது. ஓட்டுநர்கள் நிலை மிகப் பாவம்.

குளிர்சாதன வசதிப் பேருந்து

தற்போது இவ்வகைப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதுவும் குறிப்பாக 570 தடம் (CMBT – சிறுசேரி) 90% இவையே உள்ளன.

நான் இதுவரை சென்றதில்லை ஆனால், சொகுசு பேருந்து என்றால் இதைத் தான் நியாயமாகக் கூற முடியும்.

கட்டணம் அதிகம் மற்றும் 1000₹ பாஸில் இதற்கு அனுமதியில்லை என்பதாலும் இது வரை சென்றதில்லை. ஒரு நாள் முயற்சிக்க வேண்டும். இதிலும் நெரிசல் நேரங்களில் கூட்டம் அள்ளுகிறது.

அரசாங்கம் வேண்டும் என்றே சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கைகளைக் குறைத்து விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

சாதாரணக் கட்டணப் பேருந்து

29C போன்ற ஒரு சில தடங்களில் இன்னும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது ஆறுதல்.

இதில் பார்த்தால் வசதி குறைந்தவர்கள் போல உள்ளவர்கள் கூடச் சாதாரணக் கட்டணப் பேருந்து தூரத்தில் வருவது தெரிந்தும்  விரைவு / சொகுசு பேருந்துகளில் ஏறிச் செல்கிறார்கள்.

சாதாரணப் பேருந்தில் கட்டணம் 6 ருபாய் என்றால் விரைவு மற்றும் சொகுசுப் பேருந்தில் 9 / 13 என்று வருகிறது. வேகம் செல்லும் காலம் எல்லாம் ஒன்று தான்.

மிகச் சிறு அளவில் வித்யாசம் இருக்கலாம் அதுவும் எப்போதாவது தான்.

பெண்கள் @ MTC

முன்பெல்லாம் பொது இருக்கைப் பகுதியில் இடமிருந்தாலும் பெண்கள் அமரமாட்டார்கள். அப்படியே அமர்ந்தாலும் அது வயதானவர்களாகத் தான் இருக்கும்.

ஆனால், தற்போதெல்லாம் பெண்கள் இந்தப் பகுதியில் யோசனை கூட இல்லாமல் அமருகிறார்கள். அதோடு நேராக இந்தப் பகுதிக்குத் தான் வருகிறார்கள்.

ஏறும் போது ஆண் அமர்ந்து இருந்து இடமிருந்தால் “அப்பாடா! உட்காரலாம்” என்று வருவதற்குள் பெண்கள் அமர்ந்து விடுகிறார்கள்.

முன்பெல்லாம் ஆண் அருகே பெண்கள் அமரவே மாட்டார்கள் தற்போது உல்டாவாக இருக்கிறது. ஒரு வகையில் இது பாராட்டப்பட வேண்டிய மாற்றம்.

ஆனால், தற்போது பெண்கள் பொது இருக்கையையும் (ஆண்களுக்கென்று அனைவரும் கருதும் பகுதி) ஆக்கிரமிப்பதால் எங்களுக்கே இடமே கிடைப்பதில்லை.

சில நேரங்களில் “மகளிர் மட்டும்” பேருந்தில் ஏறி விட்டோமோ என்று சந்தேகம் கூட வந்து உள்ளது!

அதனால் பெண்களே! ஆண்கள் மீது கருணை காட்டுங்கள் 🙂 .

கருணை என்றதும் ஒன்று நினைவுக்கு வருகிறது. வயதான பெண்கள் / கர்ப்பிணி பெண்கள் வந்தால் ஆண்களே எழுந்து இடம் கொடுகிறார்கள்.

பெண்கள் எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பது போலவும் தூங்குவது போலவும் பாவ்லா செய்கிறார்கள் 🙂 .

பேருந்துகள் எண்ணிக்கை

சென்னை போல வேறு எந்த நகரத்திலும் இதுபோலப் பேருந்துகள் எண்ணிக்கை இருக்குமா! என்பது சந்தேகமே.

எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் செல்லப் பேருந்து வசதி உள்ளது. இதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஊழல், பராமரிப்பில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு போன்றவை இல்லாமல் சரியான மேற்பார்வையுடன் சென்னை மாநகரப் பேருந்துச் சேவை இருந்தால், இந்தியாவிலேயே சிறப்பான சேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பான நகரம், உதவும் மக்கள் ஆனால், சென்னை மாநகரப் பேருந்து நிர்வாகத் திறமை குறைந்த, ஊழல் நிறைந்த நிர்வாகத்திடம் சிக்கி சின்னப் பின்னமாகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

பயணிகளைக் கவர்ந்த தமிழக அரசுப் பேருந்துகள்!

சென்னை மாநகரச் சிவப்பு நிறப் பேருந்து

வணக்கம் சென்னை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. மாநகர பேருந்தின் கடைசி சீட்டு பெண்களுக்கானது ப்ரோ .

  2. தாங்கள் கூறிய அனுபவங்களை தான் நாங்கள் அன்றாடம் அனுபவத்து வருகிறோம் நண்பரே..

  3. ஹாய் கிரி

    பேருந்து அனுபவம் அருமை. அதுவும் சற்று உடல்பருமன் ஆனவர் என்றால்(என்னை போல்) மிகவும் கடினம். குளிர்சாதன வசதி பேருந்து பயணம் அருமையாக இருக்கும். மிக விரைவாக இடத்தை அடைய வேண்டும் ஆனால் இதில் தான் செல்ல வேண்டும். மற்ற பேருந்துகள் 60 நிமிடங்கல் எடுத்து கொண்டால் குளிர்சாதன வசதி பேருந்து 45 நிமிடங்களில் செண்டு விடும் என் என்றால் பிக்கப் ஜாஸ்தி.

    பொங்கல் பற்றி எழுதுங்கள்

  4. …… நாம் இயற்கையை ரசித்த படி செல்வது நடத்துனர் கொடுக்கும் மீதிச் சில்லறையில் தான் இருக்கிறது“. சரியாத்தான் கூறி இருக்காங்க 🙂 …….

    ட்வீட் சரி ஆனால் அதில் சிறு மாற்றம்….. சென்னை நகர சாலைகளில் இயற்கை ஏது…. ஆகையால் புகையும் ரோட்டோர கடைகளும் என்று இருந்தால் மிகச் சரியாக இருக்கும்……
    சில்லரை பிரச்சினை பெரும் பிரச்சினையே…. 1000 ரூபாய் பாஸ் தான் சிறந்தது…. நானும் அதிகம் பேருந்துகளில் 50 ரூபாய் பாஸ் வாங்கி தான் செல்வேன். போகும் இடத்திற்கு 40 தான் ஆகும் என்றால் கூட. காரணம் சில்லரையும் கண்டக்டரும்…..
    சொகுசு என்பது பெயரில் மட்டுமே…. நீங்கள் சொன்னது போல் சாதாரண பேருந்துகளில் இருக்கையும் இட வசதியும் தாராளம்….. மற்றபடி பணம் வசூலிக்க அவர்களுக்கு ஒரு வழி அவ்வளவே….. ஒருமுறை நான் வேண்டும் என்றே பெண்கள் இருக்கைகள் பக்கம் உட்கார்ந்து சண்டை போட்டு விட்டு சிறு பிரச்சனை ஆகி பிறகு அந்த பக்கத்தில் இருந்த பெண்களே எழுந்து இடம் கொடுத்தார்கள்…. ஆனால் அதன் பின் நான் பேருந்தில் பெண்கள் இருக்கைகள் முழுவதும் காலியாக இருந்தாலும் அமருவதில்லை…… பேருந்து எண்ணிக்கை அதிகம் உன்மையே…… சொகுசு பேருந்துகளின் வடிவமைப்பு அனுமதி எல்லாம் கமிஷன் தொகை மட்டுமே……
    இவ்வளவு பெரிய பின்னூட்டத்திற்கு காரணம் நான் என்னை போன்ற சக பயணியிடம் (போராளியிடம்) கூற தேக்கி வைத்து இருந்த குமுறல்களே….. ஆனால் பேருந்தின் ஜன்னல்களின் அனுபவங்களை கூற மறந்து விட்டீர்கள். அதுவும் குமுறலே…..
    ?? பொங்கல் + ஜல்லிக்கட்டை பற்றி எழுதுங்கள்…..

    உங்கள் சென்னை வாழ்க்கை மேலும் (உண்மையாகவே) சொகுசாக ??அமைய வாழ்த்துக்கள்….

  5. கிரி அடிக்கடி எழுதுங்க. பேருந்துகள் நிலை பற்றி சரியா கூறி இருக்கீங்க. குறைந்த காலத்தில் பேருந்து பயணத்தில் உள்ள பிரச்சனைகளை கூறி இருந்தது ஆச்சரியமாக இருக்குது.

    பொங்கல் பற்றி எழுதுங்க.
    பொங்கல் பற்றி எழுதுங்க.
    பொங்கல் பற்றி எழுதுங்க.
    பொங்கல் பற்றி எழுதுங்க.
    பொங்கல் பற்றி எழுதுங்க.

    🙂 🙂 நானே ஐந்து முறை கேட்டுட்டேன். மெட்ரோ பற்றி எப்ப எழுதுவீங்க?

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கமல் நான் இல்லைன்னு சொல்லலையே 🙂 இப்ப எல்லா இருக்கையுமே அவர்களுக்குத் தான் 🙂

    @சந்தோஷ் கடந்த வாரம் குளிர்சாதன பேருந்தில் சென்றேன். புழுதி தொல்லை இல்லாமல் இருந்தது. குளிர் அப்படி ஒன்றுமில்லை.. காற்றுத் தான் வந்து கொண்டு இருந்தது.

    புதிய பேருந்தில் மட்டுமே குளிர் சாதன வசதி நன்றாக உள்ளது என்று நினைக்கிறேன்.

    @பிரகாஷ் சென்னைல எங்கங்க இயற்கை.. சும்மா பொதுவா சொன்னேன்.

    ஆமாம் ஜன்னல் பற்றி கூற மறந்துட்டேன்.. அதோட பேருந்து நிறுத்தம் இருக்கைகள் பற்றியும். இவை நன்றாக உள்ளது. ஸ்டீல் ல இருப்பதால் அதிகம் குப்பை தேங்காமல் அனைவரும் அமரும்படி உள்ளது.

    ஜன்னலில் இருந்து பார்ப்பது என்றால் எதோ திருட்டுத்தனமாக பார்ப்பது போல எட்டி / குனிந்து தான் பார்க்கணும் 🙂

    கடந்த வருடங்களில் தான் இது போல கோமாளித்தனமான மாற்றங்கள்.

    @ik Way பள்ளி வீடு மற்ற பொருட்கள் என்று ஏகப்பட்ட செலவுகள் உள்ளது. எனவே கார் பற்றி சிந்திக்கக்கூட முடியலை 🙂

    @சிவா மெட்ரோல செல்ல வேண்டும். துணைக்கு சரியா நண்பர்கள் எவரும் கிடைக்கவில்லை. நிழற்பட கருவியும் கிடைத்தால் சென்று வர வேண்டும். காத்திருக்கிறேன் 🙂

    பொங்கல் பற்றி எழுத கேட்டவர்களுக்கு நன்றி 🙂 . ஆறிய பொங்கலாக இருக்கும்..அது தான் யோசிக்கிறேன்.

  7. தல,

    நீங்க சந்தோசமா இருக்கீங்க நு கேக்கவே சந்தோசமா இருக்கு… 3 மாசமே ரொம்ப நாள் ஆன பீல் கொடுக்குது

    நண்பர்கள், குடும்பம், உறவினர்கள், அலுவலக நண்பர்கள், சொந்த ஊர் – இந்த ஆர்டர் ரே சூப்பர் ர இருக்கு :).. இன்னும் கொஞ்ச நாள் ல சென்னை வரும் போது உங்கள சந்திக்க போறேன் நு நினச்சாலே குஷி யா இருக்கு .. c u soon thala

    – அருண் கோவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here