மாற்றான் [2012]

14
மாற்றான்

ளிப்பதிவராக இருந்து இயக்குனராக மாறிய K V ஆனந்த் இயக்கிய நான்காவது படம் மாற்றான். அயன் வெற்றிக்குப் பிறகு சூர்யாவுடன் இரண்டாவது படம் இது.

கனா கண்டேன் சூப்பர் ஹிட் படமில்லை என்றாலும் அனைவரின் பாராட்டையும் பெற்ற படம். அயன் கோ வெற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை, மாற்றான்?

மாற்றான்

சூர்யா அப்பா பல திறமைகள் பொருந்திய மகனை உருவாக்க டெஸ்ட் டியுப் குழந்தையை உருவாக்க நினைக்க ஆனால், இருவர் ஒட்டியபடி பிறக்கிறார்கள்.

இதில் இருவரில் ஒரு சூர்யாவிற்கு மட்டுமே இருதயம் உள்ளது. இருவருமே அப்படியே வளர்கிறார்கள். Image Credit

இந்த நிலையில் இவர்களுடைய அப்பா தயாரிக்கும் பால் பவுடரில் தன்னுடைய “ஆராய்ச்சியை” நுழைத்துப் பெரிய வரவேற்ப்பை பெறுகிறார்.

ஆனால், இதில் தவறு உள்ளது என்று சூர்யா கண்டுபிடிக்க இறுதியில் என்ன ஆகிறது என்பதே படம்.

ஒரு அமைதி சூர்யா, ஒரு ப்ளே பாய் சூர்யா. இரு கதாப்பாத்திரத்தையும் ரொம்ப அழகாகச் செய்து இருக்கிறார்.

முன்பெல்லாம் இரட்டை பிறவிக் கதை என்றால் ஒருவரைக் காட்டினால் அடுத்தவரைக் காட்டமாட்டார்கள், பின் அப்படி இப்படி சரி செய்தார்கள்.

இதில் இருவருமே இணைந்து வருவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டுகிறது. காதல் சண்டை கோபம் உற்சாகம் என்று இருவரும்!! கலக்கி இருக்கிறார்கள்.

காஜலோட, இருவரும் படம் பார்க்கும் போது நடைபெறும் கலாட்டாக்கள் செம ரகளை. இரண்டு சூர்யாவும் பட்டையக்கிளப்பி இருக்கிறார்கள்.

ஆனந்த் படங்களில் சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்கும், குறிப்பாக அதில் வரும் வில்லன்கள் பொருத்தமாக இருப்பார்கள்.

சண்டைக்காட்சிகள்

இதிலும் சண்டைக்காட்சிகள் ரொம்ப நன்றாக உள்ளது. இதில் இருவரையும் நடிக்க வைக்க ரொம்ப சிரமப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதை எடுக்கும் போது சூர்யாக்கு வேலை பெண்டு நிமிந்திருக்கும். சண்டைக்காட்சிகள் “பீட்டர் ஹெயின்”.

இதில் காஜல் மொழி பெயர்ப்பாளராக வருகிறார் 🙂 .

இதுக்குன்னு ஒரு ஆளை எதுக்குப் பிடிக்கணும் என்று, இவரையே மொழி பெயர்ப்பாளர் ஆக்கினால் பாட்டையும் எடுத்துச் சூர்யா கூடப் பேச ஆளையும் கொடுத்த மாதிரி ஆச்சுன்னு நினைத்துட்டார் போல.

இந்த மொழி பெயர்ப்பில் கடுப்பைக் கிளப்பியது, சூர்யா அவர்களிடம் தமிழில் பேசி நக்கல் அடிப்பது.

ஒரு காட்சியில் அப்படி இருந்தால் ஓகே, ஒவ்வொரு காட்சியிலும் இருந்தால்… காட்சியைக் காமெடி ஆக்கி விடுகிறது.

வெளிநாட்டில் நடக்கும் படி காட்சிகளை அமைப்பது விறுவிறுப்பைக் கூட்டும் என்பது உண்மை தான் அதற்காக, இரண்டாம் பாதி முழுவதும் அங்கேயே எடுத்துக் காஜலை மொழிபெயர்ப்பாளர் ஆக்கி இருப்பது சலிப்பைத் தருகிறது.

சில நேரங்களில் டாக்குமெண்டரி படம் போல இருக்கிறது.

வெளிநாட்டுக் காட்சிகளில் வரும் இடங்கள் அனைத்தும் அருமை. பாடல் காட்சிகள் இடங்கள் அனைத்தும் அருமையோ அருமை.

ஹாரிஸ் ஒரே மாதிரி இசையைக் கொடுக்கிறார் ஆனால், பாடல்கள் பிடித்து இருந்தது.

ஆனந்த் மூன்று படம் ஹிட் கொடுத்ததில் கொஞ்சம் கவனக்குறைவா இருந்து விட்டார் போல இருக்கு.

இவர்கள் ரஷ் போட்டுப் பார்த்ததில் இரண்டாம் பாதி இவ்வளவு நீளமாக இருக்கிறதே என்று எப்படி தோன்றாமல் போனது என்று தெரியவில்லை.

தற்போது, இரண்டாம் பாதியில் 25 நிமிடம் குறைத்து இருப்பதாகக் கூறி இருக்கிறார்கள் இதை, முதலிலேயே செய்து இருக்கலாம்.

முதல் பாதி கலக்கலாக உள்ளது. இரண்டாம் பாதி செம இழுவையாக உள்ளது.

Directed by  K. V. Anand
Produced by Kalpathi S. Aghoram
Written by     K. V. Anand, Subha
Starring           Suriya, Kajal Aggarwal, Sachin Khedekar
Music by          Harris Jayaraj
Cinematography   S. Sounder Rajan
Editing by       Anthony
Studio               AGS Entertainment
Distributed by Eros International, Gemini Film Circuit (Overseas)
Release date(s) 12 October 2012[3]

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

14 COMMENTS

  1. வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை நேற்று தான் திரையரங்கில் சென்று பார்த்தேன். நான் பொதுவாக வலையில் எந்த விமர்சனத்தையும் படிக்க விரும்புவதில்லை. சூர்யா படங்கள் எனக்கு பிடிக்கும். இதுவரைக்கும் என்னளவில் சூர்யா ஏமாற்றியதும் இல்லை. படிப்படியான வளர்ச்சி. பிரமிக்கக்கூடியது. நேற்றும் சூர்யா என்பதற்காகத்தான் சென்றேன். அங்கே சென்ற போது போது தான் கே.வி. ஆனந்த் இயக்குநர் என்பதே தெரிந்தது (?) இவர் படங்களும் ரொம்ப பிடிக்கும். என்னளவில் இந்த படம் பிடித்து இருந்தது. வந்த பிறகு தான் வலையில் பல விமர்சனங்களை படித்துப் பார்த்தேன். ஒருவர் கூட நல்ல விதமாக எழுத வில்லை. ஆனால் நிச்சயம் இந்த படம் முதலுக்கு மோசம் இல்லை. எனக்குப் பிடித்து இருந்தது.

  2. அடடா … நேற்று மாற்றானுக்கே போயிருக்கலாமோ? ஆனாலும் பரவாயில்லை. அடுத்த கிழமை நேரம் கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம். நேற்று இங்கிலீஷ் விங்க்ளிஷ் படத்திற்கு தான் போனோம். நல்லா ரசிக்கும்படியாவே இருந்திச்சு.

    துப்பாக்கி ட்ரெயிலர் செம ஸ்டைலிஷ்ஷா இருக்கு…படம் எப்படியிருக்கும்னு சொல்லமுடியாது. டாக்டர் படமாச்சே?

  3. படம் இன்னும் பார்க்கவில்லை… பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. இன்னும் பாக்கல தல ஒரு டைம் பாக்கலாம்னு நினைக்குறேன் உங்க review பாக்கும் போது

    -அருண்

  5. நண்பர் கிரி அவர்களுகு ஒரு சிறு வேண்டுகோள் சமீபத்தில் வெளியான சாட்டை படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுகொள்கீறேன். மிகவும் அருமையான படம்.

    (குறிப்பு : முடிந்தால் அதற்கும் விமர்சனம் தரவும்.)

  6. கிரி
    இந்த படத்தின் ACTION காட்சிகளை பீட்டர் ஹைன் தான் செய்துள்ளார் ஆனால் நீங்கள் அனல் அரசு என்று எழுதி உள்ளீர்கள் ….
    நான் நேற்று ஜூரோங் பாயிண்ட் கோல்டன் VILLAGE THEATRE படம் பார்த்தேன் ….. (குறிப்பு ; இது தான் நான் சிங்கபூருக்கு வந்து பார்க்கும் முதல் படம் )

    • ஸ்ரீகாந்த் நீங்கள் கூறுவது சரி தான். சனி வசந்தம் தொலைக்காட்சியில் போட்ட “தடையற தாக்க” படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் “அனல் அரசு”, அதே நினைவில் எழுதிட்டேன். சுட்டியமைக்கு நன்றி.

  7. திரைக்கதையில் சொதப்பி விட்டார்கள். ஒரு அதிரடி வெற்றித் திரைப்படமாக இருந்திருக்க வேண்டியது. இதே கதைக்கு, இப்படி திரைக்கதை அமைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்… (மாற்றான் படம் பார்க்காதவர்கள் இந்த பின்னூட்டத்தை தவிக்கவும்)
    =================
    ஸ்மார்ட் சூர்யாவும் காஜலும் உகாண்டாவில் லவ்விக் கொண்டிருக்கும் போது படம் தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கம்பெனியில் உளவு பார்த்த ஒரு பெண்ணைப் பற்றிய விவரங்களை சேகரிக்க, யாருக்கும் சொல்லாமல் வந்திருக்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன் ஒலிம்பிக்கில் வென்ற உகாண்டா விளையாட்டு வீரர்களைத் தேடி செல்கிறார்கள் (படத்தில் வருவதைப் போலவே). வீரர்கள் அனைவரும் தற்போது உயிருடன் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். மேலும், யாரோ அவர்களை பின் தொடர்வதை கவனிக்கிறார்கள். இருவரும் அவ்வப்போது ரொமான்ஸ் செய்கிறார்கள்.

    இடையில், அங்கு ஓட்டிப் பிறந்த இரட்டையர்காளாக திரியும் இரண்டு சிறுவர்களைப் பார்த்ததும், சூர்யா பிளாஷ்பேக்-க்கு போகிறார். அவரின் அப்பாவின் ஆராய்ச்சியின் மூலம் இரட்டையர்களாக பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் என்பதை ஒரு பாடலில் மாண்டேஜ் காட்சிகளாக விரிகிறது. அவர்களிடையே அவ்வப்போது வரும் சண்டை, அட்ஜஸ்ட் செய்துகொள்வது, ஒருவருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பது போன்ற சில காட்சிகள் அவற்றில் அடக்கம். இரட்டையர்களுக்கு காஜல் அறிமுகம் ஆகிறார். இருவருக்குமே காஜலை ரொம்பப் பிடிக்கிறது. காஜலுக்கு freeky சூர்யாவை விட ஸ்மார்ட் சூர்யாவைப் பிடித்துப் போகிறது. freaky சூர்யா விட்டுக்கொடுக்க, காஜல்-ஸ்மார்ட் சூர்யா மிகவும் நெருக்கமாகிறார்கள்.

    பிளாஷ் பேக் கட் ஆகி கதை மீண்டும் உகாண்டாவுக்கு திரும்புகிறது. ஒரு விளையாட்டு வீரர் மட்டும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அவர் மூலம், என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு (படத்தில் இருப்பதை போலவே) மற்ற விளையாட்டு வீரர்களின் இருப்பிடம் தேடி செல்கிறார்கள். அங்கு சிறை பிடிக்கப்பட்டு அடைக்கப் படுகிறார்கள். அப்போது சிறையில், காஜல் மூலம் பிளாஷ்பேக் தொடர்கிறது.

    சூர்யா-காஜல் மிகவும் நெருக்கமாகி இருக்கிறார்கள். ஸ்மார்ட் சூர்யா தன் அப்பாவின் குழந்தைகளுக்கான பவுடரில் பிரச்சினை இருப்பதற்கான ஆதாரத்துடன் அப்பாவிடம் சண்டை போடுகிறார், feaky சூர்யா அப்பாவுக்கு சப்போர்ட் செய்கிறார். காஜல்-ஸ்மார்ட் சூர்யா இருவருக்கும் ரொமான்ஸ் எல்லை மீறும்போது freaky சூர்யா தடுக்கிறான். பொறாமையில் தடுப்பதாக ஸ்மார்ட் சூர்யா நினைக்க, இரண்டு சூர்யாவுக்கும் கடும் சண்டை வருகிறது. அதற்குள் ஒரு கும்பல் இரு சூர்யாவையும் தாக்க வருகிறது. கடும் சண்டையில் freeky சூர்யாவிற்கு அடிபட்டு இறந்துவிடுகிறார். இருவரையும் ஆபரேஷன் செய்து பிரித்ததால் சூர்யா இயல்புக்கு வர நீண்ட நாட்கள் ஆனது. அதுவரை ஸ்மார்ட் சூர்யாவை காஜல் கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சூர்யா-காஜல் லவ்வை தொடர்கிறார்கள்.

    மீண்டும் பிளாஷ் பேக் கட் ஆகி கதை மீண்டும் உகாண்டாவுக்கு திரும்புகிறது. சிறையில் எதேச்சையாக சூர்யா சட்டையில்லாமல் இருக்கும் போது, சூர்யாவுக்கு இடதுபுறத்திகு பதிலாக வலதுபுறம் ஆப்பரேஷன் செய்த தழும்பு இருப்பதை பார்த்து “இது ஸ்மார்ட் சூர்யா இல்லை, freaky சூர்யா” என்று புரிந்து அதிர்ச்சி அடைகிறார்.

    —இதே சஸ்பென்சுடன் இடைவேளை—-
    =================

    இடைவேளை முடிந்ததும், என்ன நடந்தது என்று காஜல் சூர்யாவைப் போட்டு உலுக்கி எடுக்கிறார். சூர்யா மென்று முழுங்குகிறார். freaky சூர்யா, தன் மேல் இருந்த காதலால் ஸ்மார்ட் சூர்யாவை கொன்றுவிட்டதாக காஜலுக்கு சந்தேகம் வலுக்கிறது. சிறையில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார். சூர்யா எதுவும் பேசாமல் திறமையாக சிறையில் இருந்து தப்பிக்க வழி செய்கிறார். வெளியே வந்தவுடன் காஜல் சூர்யா மேல் வெறுப்புடனே பழகுகிறார். பொறுக்க முடியாமல், சூர்யா நடந்ததை சொல்கிறார்.

    மறுபடியும் பிளாஷ்பேக்: அதாவது ஸ்மார்ட் சூர்யாவுக்கு அடிபட்டு கோமாவுக்கு போனவுடன், இரண்டு சூர்யாவும் பிரிக்கப்பட்டு, இதயம் freaky சூர்யாவுக்கு மாற்றப்படுகிறது. காஜல், ஸ்மார்ட் சூர்யா மேல் உயிரையே வைத்திருப்பதாகவும், அதனால் freaky சூர்யா இறந்த மாதிரியும், ஸ்மார்ட் சூர்யா உயிர் பிழைத்த மாதிரியும் சூர்யாவின் அப்பா மாற்றி, காஜல் நலனுக்காக freaky சூர்யாவை ஸ்மார்ட் சூர்யாவாக நடிக்க சொல்கிறார். அதற்கு சூர்யா ரொம்ப தயங்குகிறார், ஆனால் freaky சூர்யா இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், காஜல் வெடித்து அழுகிறார். அதைப் பார்த்து சூர்யா மனம் மாறி காஜலை ஸ்மார்ட் சூர்யாவாக காதலிக்க தொடங்குகிறார்.

    இதை சூர்யா சொல்லி முடித்தவுடன், காஜல் அழுது துடிக்கிறார். பின் freaky சூர்யா தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து பழையபடி காதலிக்கிறார். இதற்கிடையில் இருவரும் தேடி வந்த அந்த மர்மப் பெண்ணின் (இவர்தான் சூர்யா அப்பாவின் அலுவலகத்தை உளவு பார்த்தவர்) வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். அவர் இப்போது உயிருடன் இல்லை, ஆனால் அவர் இந்தியாவில் இருந்து அவர் உறவினருக்கு அனுப்பிய ஒரு கடிதம் கிடைக்கிறது. அதில் ஒரு வரியில், சூர்யாவின் அப்பா, ஸ்மார்ட் சூர்யாவை கொன்றுவிடும்படி சில ரவுடிகளிடம் கூறியாதாக இருக்கிறது. இருவரும் அதிர்கிறார்கள். இதைத் தோண்டிப் பார்த்தால், தன் எனர்ஜி பவுடர் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டதால் அப்பாதான் ஸ்மார்ட் சூர்யாவைக் கொன்றுவிட்டார் என்பதையும் அவர்தான் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமருந்து உருவாக்கிக் கொடுத்தார் என்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். உடனே இந்தியாவுக்கு திரும்பி வந்து அப்பாவை அழித்து காஜலை மணக்கிறார். சுபம்.
    ==========

  8. சார் முத்துக்குமார் , மாற்றான் ஸ்டோரி யா விட உங்க ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருக்கு; பேசாம நீங்க கதை எழுதுங்க நல எதிர்காலம் இருக்கு ; ஆனா மாற்றான் படம் எனக்கு பிடுசுருக்கு ;

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஜோதிஜி உங்க முதலுக்கா.. தயாரிப்பாளர் முதலுக்கா 🙂

    @தமிழன் சாட்டை படம் சிங்கப்பூரில் வெளியாகவில்லை.

    @முத்து 🙂 தலை லைட்டா கிர்ர்ர் அடிக்குது

    @அருண் இந்த வாரம் எழுதுகிறேன். நீங்க ஒருத்தர் தான் என்னை எழுதுங்க எழுதுங்க!! என்று சொல்ற ஒரே நல்லவரு 🙂 அப்படி என்ன தான் உங்க ஒருத்தருக்கு மட்டும் ஸ்பெஷல் ஆக இருக்குதுன்னு எனக்கு புரியல.

  10. நண்பா கிரி
    @அருண் ஒருத்தர் சொன்ன நூறு பேர் சொன்ன மாதிரி
    அதனால நீங்க எந்த சாக்கு போக்கும் சொல்லாம நல்ல புள்ளயா பதிவு எழுதுங்கோ பார்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!