தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கைக்குப் பிறகு ரஜினி பற்றிய செய்தி விவாதத்துக்குள்ளாகியுள்ளது. Image Credit
ரஜினி என்ன கூறினார்?
பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள், வன்முறையில் ஈடுபட்டது சமூக விரோதிகள் என்று கூறினார்.
ஏனென்றால், வன்முறை நடந்த இடங்களில் இருந்த அடுக்கங்களில் உள்ள கார்களுக்குச் சிலர் தீ வைத்தது, CCTV யில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது போலப் பொதுமக்களின் வாகனங்களைச் சேதப்படுத்தியது உட்படப் பல சம்பவங்கள் நடந்தது. இதைத்தான் ரஜினி கூறினார்.
போராடிய பொதுமக்களைச் சமூகவிரோதிகள்ன்னு சொல்லிட்டாருன்னு ரஜினியை எல்லா ஊடகங்களும் பொளந்தாங்க, பெரிய சர்ச்சையானது.
இதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் ரஜினியை பேட்டி எடுத்த நிருபர் “சமூகவிரோதிகள்ன்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார்.
கோபத்திலிருந்த ரஜினி “அது எனக்குத் தெரியும்” என்றார்.
கோபத்தால் ஏற்படும் இழப்புகள்
ரஜினி கோபப்பட்டால், அவருக்கு இழப்பு ஏற்படுகிறது.
காவேரி பிரச்சனையில் புரட்டு தமிழன் சத்யராஜ் ஆபாசமாகப் பேசியதற்குக் கோபமாகப் பதிலளித்ததில் பெரிய சர்ச்சையானது அனைவரும் அறிந்தது.
அந்த நேரத்தில் பொறுமையைக் கடைபிடித்து இருந்தால், பெரும் பிரச்சனையைத் தவிர்த்து இருக்கலாம் ஆனால், ரஜினியும் உணர்ச்சிகள் உள்ளவர் தானே!
எனவே, அன்று ரஜினி கோபப்பட்டது எப்படி பிரச்சனையானதோ அதே போலத் தூத்துக்குடி பிரச்சனையிலும் கோபப்பட்டதால் சர்ச்சையானது.
ரஜினி செய்த தவறு என்ன?
உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நிருபர் கேட்ட போது,
“வன்முறையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள், சமூகவிரோதிகள் தானே! அதில் யாருக்குச் சந்தேகம் இருக்கப்போகிறது?!“
“வன்முறையில் ஈடுபட்டது யாருன்னு நீங்க சொல்லுங்க?”
என்று அவர்களையே கேட்டு இருந்தால், அதோடு முடிந்து இருக்கும்.
யாருக்குமே கோபத்தில், பதட்டத்தில் பேசும் போது தவறுகள் நடப்பது இயல்பு. தற்போது இப்படிப் பேசி இருக்கலாம் அப்படிப் பேசி இருக்கலாம் என்று கூறலாம்.
ஆனால், அந்தச் சூழ்நிலையில் யோசித்துப்பேச அவகாசம் இருக்காது.
ரஜினி எப்போதும் எதையும் திட்டமிட்டு பேசுவதில்லை, அப்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத் தான் கூறுவார்.
திட்டமிட்டு பேச நினைத்தாலும் அந்த நேரத்தில் மறந்து விடும் என்று மேடையிலேயே ஒப்புக்கொண்டுள்ளார்.
கோபத்தில், பதட்டத்தில் எனக்கு யார் என்று தெரியும் என்று கூறி விட்டார். இது தான் விசாரணை அளவுக்குச் சென்று விட்டது.
பொதுமக்களைச் சமூகவிரோதிகள் என்று ரஜினி கூறி இருக்க மாட்டார் என்று மூளையுள்ள, சுயமாக யோசிக்கும் திறன் கொண்ட அனைவருக்கும் தெரியும்.
ஆனால், ரஜினியை விமர்சிக்க வேண்டும், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்கியவர்களுக்குப் புரியாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25+ லட்சத்தையும் கொடுத்து, ஆறுதலும் கூறி, பொதுமக்கள் அப்பாவிகள் என்று கூறிய ரஜினிக்கு கிடைத்தது வசவுகள் மட்டுமே!
ரஜினியாக இருப்பது எளிதல்ல!
சரி நீங்க சொல்லுங்க!
ரஜினி தவறாகக் கூறி விட்டதாகவே இருக்கட்டும். அப்படியென்றால் வன்முறையில் ஈடுபட்டது யார்?
பொதுமக்கள் என்று கூற முடியாது. சமூக விரோதிகள் என்றால் ரஜினி கூறியது சரியாகி விடும்.
மக்களும் இல்லை, சமூகவிரோதிகளும் இல்லையென்றால், காருக்குத் தீ வைத்தது யார்? பொதுமக்கள் வாகனங்களைச் சேதப்படுத்தியது யார்?
கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பெயர் என்ன?
தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையைப் படித்ததும் கவுண்டர் செந்தில் நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.
அண்ணே ! பூவைப் புய்ப்பம்னு சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.
கொசுறு 1
தூத்துக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், விமான நிலையத்தில் கொடுத்த பேட்டியிலும் ரஜினி என்ன கூறினார் என்ற முழு விவரம் இங்கே உள்ளது.
ரஜினி கூறியதில் என்ன தவறு என்று யார் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க முடியும். எனவே, மாற்றுக்கருத்துள்ளவர்கள் தாராளமாகக் கேள்வி கேட்கலாம்.
கொசுறு 2
இதே பேட்டியில் தான் ரஜினி ‘ஹே.. அடுத்தது என்ன?‘ ன்னுட்டாருன்னு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக ஊடகத்துறையினர் கொந்தளித்தனர்.
ரஜினியும் இவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்டார்!
ஆனால், இதன் பிறகு பலரும் குறிப்பாக திமுகவினர் ஊடகத்துறையை காறி துப்பியுள்ளனர் ஆனால், துடைத்து விட்டுச் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வாழ்க ஊடகம்! வாழ்க ஜனநாயகம்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை பற்றி நான் படிக்கவில்லை..இருப்பினும் ரஜினியின் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வில் ஊடங்கங்கள் எவ்வாறு நடந்து கொண்டது எல்லோரும் அறிந்ததே!!! அது போல தமிழ்நாட்டில் ஏதாவது இயற்கை சீற்றங்களோ இல்லை புயலோ / மழையோ ரஜினி எவ்வளவு கொடுத்தார்?? விஜய் / அஜித் எவ்வளவு கொடுத்தாங்க என்று ஊடகங்கள் இவர்கள் பின்னால் திரியும்.. என்னை பொறுத்தவரை இவர்கள் எதற்காக கொடுக்க வேண்டும்??? கொடுப்பதும் கொடுக்காமல் போவதும் இவர்களின் தனிப்பட்ட விருப்பம்..
நியாமாக சொல்ல வேண்டுமானால் அதற்கான இழப்பீடு கொடுக்க வேண்டியது மத்திய / மாநில அரசு தானே தவிர.. இவர்கள் இல்லை..இது போல நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்வில் செல்பி எடுக்க வந்த இளைஞனின் அலைப்பேசியை தட்டி விட்டதற்காக அவரை பற்றி ஊடககங்கள் தாறுமாறாக எழுதியது.. கம்பராமாயணத்தில் எவரும் செய்யாத சாதனையை இவர் செய்த போது எந்த ஊடகமும் இவரை முன்னிறுத்தி எழுதவில்லை.. இது போல பல நிகழ்வுகளை கூறி கொண்டே போகலாம்..
Super Giri….
@யாசின்
“ரஜினியின் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வில் ஊடங்கங்கள் எவ்வாறு நடந்து கொண்டது எல்லோரும் அறிந்ததே!”
மறக்க முடியாத நிகழ்வு.
“என்னை பொறுத்தவரை இவர்கள் எதற்காக கொடுக்க வேண்டும்??? கொடுப்பதும் கொடுக்காமல் போவதும் இவர்களின் தனிப்பட்ட விருப்பம்..”
அவங்க பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற வயித்தெரிச்சல் மட்டுமே! பிடிக்கவில்லையென்றால் அவர்களைப் புறக்கணித்துட்டு போக வேண்டியது தானே!
“நியாமாக சொல்ல வேண்டுமானால் அதற்கான இழப்பீடு கொடுக்க வேண்டியது மத்திய / மாநில அரசு தானே தவிர”
சரியா சொன்னீங்க.
“நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்வில் செல்பி எடுக்க வந்த இளைஞனின் அலைப்பேசியை தட்டி விட்டதற்காக அவரை பற்றி ஊடககங்கள் தாறுமாறாக எழுதியது”
சிவக்குமாரை ஒரு வழியாக்கிட்டாங்க.
@அருள் நன்றி