வர்தா புயலையே தெறிக்க விட்ட சென்னை!

5
வர்தா

சென்னையும் அதன் மக்களும் மிக வித்யாசமானவர்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வர்தா புயல் உதவியிருக்கிறது. Image Credit – மு தமிழ்

சென்னை ஒரு விசித்திரமான நகரம்! வடிவேல் சொல்ற மாதிரி இவன் எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவன் 🙂 .

இங்கே நான் நேரில் கண்ட / கேட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்கிறேன். நான் கூறுவது சரியா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வர்தா

திங்கள் காலையில் நேரத்திலேயே அலுவலகம் சென்று விட்டேன் அப்போது பெரிய அளவில் மழையோ காற்றோ இல்லை. 11 மணிக்கு மேல் தான் சென்னையைப் புயல் புரட்டி எடுத்தது.

மாலை எந்த வாகனமோ, பேருந்தோ இல்லை, இருக்கவும் வாய்ப்பில்லை.

சரி! நடந்தே வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தேன் (6.5 KM). அப்போது மழை இல்லை ஆனால், காற்று வீசிக்கொண்டு இருந்தது.

ஸ்டெர்லிங் சாலையிலிருந்து ஹாடோஸ் சாலை வழியாகச் செல்லும் போது ஏகப்பட்ட மரங்கள் விழுந்து கிடந்தன.

திடீர் என்று காற்றில் கிளை ஓடிவது போலச்  சத்தம் கேட்டால் தெறித்து ஓடுவதும், தகரம் படபடக்கும் சத்தம் கேட்டால் தலை தெறிக்கவும் ஓடினேன் 🙂 .

மரங்கள் விழுந்து எங்கும் இலையாக அதன் மேல் வாகனங்கள் சென்று மணமே வித்யாசமாக இருந்தது. அதே போல எதோ அடர்ந்த காட்டுக்குள் செல்வது போல ஒரு உணர்வு.

அலுவலக முன் பகுதியில் இருந்த பெயர் பலகைகள் நொறுங்கி கிடந்தன, கண்ணாடிகள் சிதறிக்கிடந்தன.

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு

மரங்கள் விழுந்த இடத்தின் உள்ளே இருந்த ஒரு பெட்டி கடையில் காஃபி விற்பனை அமோகம்.

அடேய்! ஊரே அலறிட்டு இருக்கு நீங்க காஃபி குடிச்சுட்டு இருக்கீங்களே! என்று நினைத்துக்கொண்டு நடையைக் கட்டினேன்.

அண்ணா மேம்பாலம் அருகே வந்த பிறகு அடித்த காற்றில் நான் பறந்து விடுவேனோ என்று சந்தேகமே வந்து விட்டது.

சைக்கிள் ஓட்டி வந்தவர் காற்றின் வேகம் தாளாமல் இறங்கி “என்னங்க இப்படிக் காற்று அடிக்குதுன்னு” சைக்கிளைப் பிடிக்கவே திணறிக்கொண்டு இருந்தார்.

நான் நடந்தது எப்படித் தெரியுமா..?!

நம் பின்னாடி ஒரு வண்டியைக் கட்டி இழுத்து வந்தால் எப்படிக் கடினமாக முன்னோக்கி முன்னேறுவோம் அது மாதிரி நடந்து கொண்டு இருந்தேன் 🙂 .

புயலை இவ்வளவு அருகில் பார்த்தது வாழ்க்கையிலேயே இது தான் முதல் முறை.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே வந்தவுடன் அங்கே இருந்த கடையில் ஜெனெரேட்டர் வைத்து காஃபி மற்ற தின்பண்டங்கள் அமோகமாக விற்பனை நடந்து கொண்டு இருந்தது.

வர்தா நினைத்து இருக்கும்.. “நான் இங்க நாசம் பண்ணிட்டு இருக்கேன் நம்மை வேடிக்கை பார்த்துட்டு காஃபி குடிக்கறானுகளே!” ன்னு கடுப்பாகி இருக்கும் 🙂 .

அப்படியே நடந்து போயிட்டு இருந்தேன்.. AVM ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் எதோ திருமணம் போல. குதிரை நின்று கொண்டு இருந்தது.

ஜெனரேட்டர் உதவியுடன் அந்த இடமே ஜொலித்துக்கொண்டு இருந்தது காரணம் முழுவதும் இருட்டு இங்கே மட்டும் ஒளி விளக்குகள்.

சிட்டி சென்டர் அருகே சென்றதும் வெடி வெடித்து இருந்தாங்க.

“என்னங்கடா இங்கே நடக்குது.. நகரமே புயலில் கண்டம் ஆகிட்டு இருக்கு.. இப்ப எதுக்குடா வெடிக்குறானுக?!” என்று புரியல.

பின்னர் தான் தெரிந்தது அது கார்த்திகை தீபத்துக்காக வெடிக்கும் வெடி என்று. அடேங்கப்பா! இவங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை போலன்னு நினைத்துட்டேன்.

அநேகமாக புயல் அன்று வெடி வெடித்த ஒரே நகரம் சென்னையாகத் தான் இருக்கும் 🙂 .

கலக்கிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள்

ஒருவழியா வீட்டுக்கு வந்து தூங்கிய பிறகு அலுவலகத்திலிருந்து 1 மணிக்கு அழைப்பு.

ஜெனெரேட்டர் புகைந்து விட்டது என்று. ஐயையோ! இருட்டுல எப்படித் திரும்பச் செல்வது என்று பயமாகி விட்டது. காற்று மழை வேறு.

சரி என்று நண்பனை எழுப்பி அவனிடம் வண்டி வாங்கி மெதுவாகவே சென்றேன். எங்கே கேபிள் தொங்கிக்கொண்டு இருக்கும் என்று தெரியலை.

அந்த நேரத்திலும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டரில் மரங்களை எடுத்துப் போட்டு அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

போகிற வழியில், அப்பவே கிட்டத்தட்ட ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு மரத்தை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்தி இருந்தார்கள்.

இருப்பினும் பல இடங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவு இடமிருந்தது.

மின்சாரம் சில இடங்களில் தற்காலிகமா கொடுக்கத் துவங்கினார்கள்.

தண்ணீரை நிரப்பும் அளவுக்கு மின்சாரம் சில இடங்களில் கொடுக்கப்பட்டது ஆனால், பல இடங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை.

இதில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், காவல்துறை, பிற மாநில துப்புரவு தொழிலாளர்கள் (இதற்காக அழைத்து வரப்பட்டார்கள்), தீயணைப்பு வீரர்கள் என்று அவர்கள் பணியில் மிரட்டி எடுத்தார்கள்.

கடந்த டிசம்பர் மழைக்குக் கெட்ட பெயரைப் பெற்ற சென்னை மாநகராட்சி இந்த முறை மக்களிடையே நல்ல பெயரை எடுத்து விட்டது.

இன்னும் பல இடங்களில் மோசமான நிலை தான் என்றாலும், கடந்த டிசம்பரை ஒப்பிடும் போது மிகச்சிறப்பான பணி.

என்னது புயலா?! எப்போ?!

புயலுக்கு அடுத்த நாளே போக்குவரத்து துவங்கி விட்டது. என்னய்யா இது.. நேற்று தானே புயல் அடித்து ஓய்ந்தது இன்னைக்கு எப்படி இத்தனை பேர் என்று வியப்பாக இருந்தது.

நிறையப் பேரை பார்க்கும் போது வழக்கமான அவசரம் பரபரப்பு இருந்ததே தவிரப் புயல் வந்ததுக்கான அறிகுறியே தெரியலை.

புதன் கிழமை இன்னும் மோசம்… அவரவர் அவரவர் வேலைகளில் தீவிரமாகி விட்டார்கள்.

“டேய்! த்தா ஓரமா போடா!” என்று ஒருத்தன் கூற.. சரி.. சென்னை வழக்கமான நிலைக்கு வந்து விட்டது என்று புரிந்து விட்டது.

TCS பேருந்து கவிழ்ந்தவுடன் அங்கே இருந்தவர்கள் கணமும் தாமதிக்காமல் சங்கலி பிணைப்பாக ஒருவருக்கொருவர் மாறி அந்தப் பேய் காற்றிலும் பேருந்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற முன்னேறிய போது தான் நினைத்தேன்..

“த்தா! எவன் வந்தாலும் சென்னையை ஒன்றுமே செய்ய முடியாதுடா!” என்று புல்லரித்து விட்டது.

வர்தா புயலை என்ன சங்கதி? என்று கேட்ட சென்னை!

நாம் ஒரு அலுவலகத்தில் வேலையை ராஜினாமா செய்து வந்தால், நிறுவனமே நின்று விடும் ஒரு வேலையும் நடக்காது என்று நினைப்போம்.

ஆனால், அது போல ஆகாமல் தொடர்ச்சியாக நாம் பார்த்த பணி சிறப்பாக நடக்கும். செம்ம பல்பாகி விடும்.

நிச்சயம் வர்தா புயல் மனிதனாக இருந்தால், மவனே! போன டிசம்பர் மழைக்கு எப்படியோ சமாளிச்சுட்டீங்க.. இப்ப பாருங்கடா உங்களைப் புரட்டி எடுக்கிறேன் என்று நினைத்துப் புரட்டி எடுத்தது.

ஆனால், சென்னை மக்கள்..

“அப்புறம் வர்தா.. என்ன அவ்வளோ தானா!” என்று நரசிம்மா கேப்டன் போலப் பனிக்கட்டி மேல படுத்துக்கொண்டு “இனி அடுத்தது என்ன சூறாவளியா?!” என்று கேட்டுட்டாங்க! 🙂 🙂 .

அதனால தான் வர்தா கடுப்பாகி சீக்கிரமே கரை கடந்து போய்டுச்சு போல 😀 .

சென்னையை நீங்க எப்படி வேண்டும் என்றாலும் திட்டலாம் ஆனால், சென்னை தனிச் சிறப்பு வாய்ந்தது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

சென்னை வாசியாக இருப்பதில் நிச்சயம் பெருமை கொள்கிறேன்.

வர்தா புயலையே தெறிக்க விட்டவர்கள் நம் சென்னை மக்கள். வாழ்த்துகள் சென்னை மக்களே! இந்த மனஉறுதி இருந்தால் போதும் எவனும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

கொசுறு

மரங்கள் ஆயிரக்கணக்கில் விழுந்து விட்டன. மீண்டும் மரம் வைக்க முயல்வார்களா? என்பதே என்னுடைய கவலை. ஏற்கனவே மரங்கள் நிறைய குறைந்து விட்டன.

தற்போது இதில் நிறைய மரங்கள் அழிந்து விட்டன. அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. சென்னை வாசியாக இருப்பதில் நிச்சயம் பெருமை கொள்கிறேன்……ஆம்.ஆம்.நானும்..அதோடு எந்த பந்தாவும் இல்லாமல் மக்களில் ஒருவனாக நின்ற முதல் அமைச்சருக்கும் அவரது சகாக்களும் பாராட்டுக்கள்.
  கார்த்திக் அம்மா
  kalakarthik

 2. கிரி, புயலின் பாதிப்பையும், நீங்கள் கண்ட நிகழ்வுகளையும் மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். நிச்சயம் இது ஒரு புதுவித அனுபவமாக இருந்து இருக்கும். அதுவும் புயலின் மிக அருகில் இருந்தது இன்னும் சுவாரஸ்யமே!!! (ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு) ரொம்ப ரசிக்கும் படியாக உள்ளது. என்ன நடந்தாலும் அவனவன், அவன் ஜோலியில தெளிவா இருக்காங்க!!!

  இயற்கையின் சீற்றம் மீண்டும், மீண்டும் ஏற்படுவது அச்சமாக இருக்கிறது. அரசாங்கம் முன்னேற்பாடு செய்து மக்களை காக்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி இயற்கையை பாதுகாக்க வேண்டும். பொது மக்களும் அரசாங்கத்தோடு கைகோர்த்து ஒத்துழைக்க வேண்டும். இதுயெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை, நடந்தால் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. சென்னையில் வர்தா புயிலின் தாக்கத்தைத் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம், ஆனால் தங்கள் பதிவு மூலம் தான் ஒரு தனி மனிதனின் இயல்பு வாழ்க்கை எந்தளவு பதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடிகின்றது ,என்ன நடந்தாலும் இயல்பு வாழ்க்கையை உடனடியாக மீட்கும் திறன் ஜப்பானைப் போல சென்னைக்கும் வந்துவிட்டது போல, ஆன கடைசி வரைக்கும் பஸ்சில் இருந்தது புள்ளைங்கனு சொல்லவே இல்லைங்கலே

 4. ரொம்ப ஜாலி மூட் ல இருக்கீங்க போல
  நக்கல் கொஞ்சும் அதிகமா தெரியுது பதிவு ல 🙂
  அதுவும் இந்த வார்த்தை அதிகமா வந்து இருக்கு பதிவுல “த்தா!”

  100 % ஒத்து போகிறேன் “சென்னையும் அதன் மக்களும் மிக வித்யாசமானவர்கள்”
  ஆரம்ப அந்த சென்னை கார்ட்டூன் சூப்பர் எங்க புடிசீங்க தல?

 5. @யாசின் “என்ன நடந்தாலும் அவனவன், அவன் ஜோலியில தெளிவா இருக்காங்க!!!”

  🙂 🙂 அதே அதே!

  ஆறு ஏரி குளங்களை அரசாங்கம் கவனிப்பதே இல்லை..

  @கார்த்திக் அம்மா பன்னீர் செல்வம் இந்த முறை தான் பயப்படாம வந்து இருப்பாரு 🙂 (புயலுக்கு அல்ல)

  @கார்த்திக் அதில் புள்ளைக”ளும்” இருந்தார்கள் 🙂

  @அருண் ஃபேஸ்புக்குல ஒருத்தர் பகிர்ந்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here