தேவை மற்றும் பணி காரணமாக மக்கள் கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். இந்த நகரமயமாக்கலில் கரையும் அடையாளம் குறித்த கட்டுரையே இது. Image Credit
நகரமயமாக்கலில் கரையும் அடையாளம்
உலகமயமாக்கல், தேவை, வசதி, பணி இடம் காரணமாகச் சொந்த ஊரில் வசிக்க முடியாமல் வேறு நகரங்களுக்கு, நாடுகளுக்கு இடம் பெயர்வது வழக்கமாக உள்ளது.
2000 ம் ஆண்டுக்குப் பிறகு வேலைவாய்ப்புக்காகச் சென்னைக்குச் செல்ல ஆரம்பித்த மற்ற மாவட்ட மக்கள், பின்னர் தேவையின் அளவு விரிவாகி, மற்ற மாநிலங்கள், நாடுகள் என்று பரந்து விரிந்து விட்டார்கள்.
முன்பு அவர்கள் இருந்த கிராமம், நகரம் அதிகபட்சம் 30 கிமீ தொலைவில் உள்ள நகரத்திலேயே அனைவரின் தேவை, பணி முடிந்து விடும்.
எனவே, வெகு குறைவான சதவீதத்தினரை தவிர மற்றவர்கள் சொந்த ஊரிலேயே வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.
ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. பல்வேறு தேவைகளுக்காகப் பலரும் சொந்த ஊரை விட்டு நகர்ந்து விட்டனர்.
இதன் காரணமாக அவரவர் அடையாளத்தையும் தொலைத்துக் கூட்டத்தில் ஒருவராக மாறிக்கொண்டு இருக்கிறோம்.
அடையாளம் என்றால் என்ன?
நம் ஊரில் இருக்கிறோம் என்றால், நம்மைப் பற்றி அனைவருக்கும் தெரியும், சொந்தங்கள் உண்டு. நமக்கு என்ற மரியாதை மதிப்பு என்று இருக்கும்.
ஆனால், நகரங்களுக்கு, நாடுகளுக்கு இடம் பெயரும் போது, அதுவே தலைமுறையாகத் தொடரும் போது நமக்கென்று நம் ஊரில் உள்ள அடையாளத்தைத் தொலைத்து விடுகிறது.
ஊருக்கு வந்தால், நம்மை யாருக்கும் தெரியாது. பல தலைமுறையாக வாழ்ந்த இடம் அனாதையாக இருக்கும்.
இன்னும் 20 வருடங்களுக்கு கொஞ்ச நஞ்ச ஒட்டுறவாது இருக்கும், அதன் பிறகு இதுவும் இருக்காது. தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.
முதலில் திருமணம் என்றால் 2000 பேர் என்பது சர்வசாதாரணமாக இருக்கும் ஆனால், தற்போது 500 தாண்டுவதே பெரிய விஷயமாக உள்ளது.
எதிர்காலத்தில் 50 பேர் வந்தாலே சாதனையாக இருக்கும்.
இவ்வாறு குறைவதால் செலவுகள் மிச்சம் என்ற விவாதத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நான் கூற வருவது தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை.
நெருங்கியவர்கள், சொந்தம் குறைந்து, தற்காலிக வட்டம் மட்டுமே இருக்கும்.
மக்களின் விருப்பம்
தற்போதைய தலைமுறையினர் இதை விரும்புகிறார்கள்.
காரணம், இவர்களுக்கு அதிகம் கூட்டம், சொந்தம், விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றில் நாட்டமில்லை.
வாழ்க்கை சுயநலமாகத் தான், தன் குடும்பம் என்று அனைவருக்கும் மாறி விட்டது. இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை காரணம், சூழ்நிலைகள் அவ்வாறு உள்ளது.
ஊரில் இருந்தால், பிக்கல் பிடுங்கல், சொந்தக்காரங்க தொல்லை என்று கூடுதல் குடும்பப் பொறுப்புகளால் அவற்றிலிருந்து விலகி இருக்க நினைக்கிறார்கள்.
எனவே, காலமாற்றத்தில் இவை தவிர்க்க முடியாததாகி விட்டது.
திருமணமாகிய பெண்கள் கணவருடன் வெளிநாடுகளுக்குச் சென்றால், ஊருக்கு வர யோசிப்பதே பல்வேறு கடமைகள், பொறுப்புகள் ஆகியவை அதிகம் என்பதாலே.
ஊரில் இருந்தால், திருமணம், துக்க நிகழ்வுகள், மாமனார் மாமியார் தொல்லை, தேவையற்ற செலவுகள் என்று இவற்றைத் தவிர்க்க நினைக்கிறார்கள்.
எனவே, எதற்கு ஊருக்குச் செல்ல வேண்டும்? இங்கேயே இருந்து விடுவோம் என்பதே பலரின் எண்ணம். அதோடு அங்குள்ள தரமான வாழ்க்கை முறை.
இது ஒவ்வொரு சராசரி குடும்பத்தாரின் எண்ணம். எனவே, இது சரியா தவறா என்பது வேறு விவாதம்.
திரிசங்கு நிலை
எனக்குச் சொந்த ஊரிலேயே (கோபி) இருக்க விருப்பம் ஆனால், பணி காரணமாகச் சென்னையில் தொடர வேண்டிய நிர்ப்பந்தம்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியாக்கு வர முடிந்த என்னால், சென்னையிலிருந்து எங்க ஊருக்குச் செல்ல முடியாத சூழல்.
ஆனாலும், ஊர் சொந்தம், பழக்க வழக்கம் பசங்களுக்கு அந்நியமாகி விடக் கூடாது என்று அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு அழைத்து வந்து விடுகிறேன்.
தற்போது இரு சூழ்நிலைகளுக்கும் பழகிக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.
எங்கள் ஊர் கோபியில் தற்போது வெளிமாவட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்ணின் மைந்தர்கள் குறைந்து வருகிறார்கள்.
இன்னும் 15 – 20 வருடங்கள் சென்றால், கோபியே அந்நியமாகி விடுமோ என்ற கவலை வருகிறது.
கோபி அமைதியான நகரம், வன்முறை, சண்டை இல்லாத இடம் என்பதால், பணி மாற்றலில் வருபவர்கள் இங்கேயே இடம் வாங்கி வீடு கட்டிக்கொள்கிறார்கள்.
எந்தப்பிரச்சனையுமில்லை, வியாபாரமும் நன்கு ஆகிறது என்பதால், வெளி மாவட்ட மக்கள் அதிகளவில் கடைகளைத் திறந்து விட்டார்கள்.
இங்குள்ளவர்களும் பணி காரணமாகச் சென்னை, வெளி மாநிலம், வெளிநாடு என்று நகர்ந்து வருகிறார்கள். எனவே, இப்பகுதி மக்களின் கூட்டமும் குறைந்து வருகிறது.
இதனால், கொங்கு வழக்கே இன்னும் சில வருடங்களில் இருக்காதோ என்று தோன்றுகிறது.
நாங்களே எங்கள் கிராமத்திலிருந்து கோபி நகருக்கு இடம்பெயர்ந்து விட்டோம். இரண்டுக்கும் தூரம் அதிகமில்லை (10 கிமீ) என்பதாலும், உறவினர்கள் அங்கே உள்ளார்கள் என்பதாலும் பந்தம் தொடர்கிறது.
ஆனால், கிராமத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபி அல்லது வேறு இடத்துக்கு இடம்பெயர்வதால், எதிர்காலத்தில் எங்கள் சொந்தமே கிராமத்தில் இருக்காது என்று தோன்றுகிறது.
என்னைப்பொறுத்தவரை சொந்த ஊரிலேயே வேலை, தொழில் பார்த்து அங்கேயே வசிப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களைக் கேட்டால் வேறு மாதிரி கூறலாம். இக்கரைக்கு அக்கரை பச்சை 🙂 .
நமக்கான அடையாளம் என்ன?
எதிர்காலத்தில் எங்கே இருந்தாலும் ஒன்று தான் என்ற நிலை வந்து விடும் என்று கருதுகிறேன். நமக்கான அடையாளம் என்ன? என்று தோன்றுகிறது.
பணி ஓய்வுகாலத்தில் ஊருக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் ஆனால், தெரிந்தவர்கள் யார் இருப்பார்கள் என்று சந்தேகமே மேலோங்கி உள்ளது.
ஏனென்றால், உறவினர்கள் தெரிந்தவர்கள் பலரின் பிள்ளைகள் வெளி இடங்களுக்கு, மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு பணிக்காக இடம் பெயர்ந்து விட்டார்கள்.
இவர்கள் திரும்ப வருவார்கள் என்பது சந்தேகமே! வந்தாலும் முன்பு இருந்த பிணைப்பு (Bonding) இருக்குமா என்பது அதைவிடச் சந்தேகம்!
எனவே, எதிர்காலத்தில் பத்தோடு பதினொன்றாக வாழ்க்கையைத் தொடர வேண்டுமோ என்ற எண்ணம் வருகிறது.
தற்போது பல நிறுவனங்களும் சிறு நகரங்களில் தங்கள் கிளைகளைத் திறந்து வருவது, இதன் தாக்கத்தைக் குறைக்க வழி ஏற்படுத்துவது மட்டுமே ஆறுதல்.
மேற்கூறியவற்றை என் பகுதியை வைத்துக் கூறியுள்ளேன். இது ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொருவரின் சூழ்நிலைக்கும் பொருந்தும்.
இவையனைத்தும் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் நடந்த, நடக்கும், நடக்கப்போகும் சம்பவங்கள்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உண்மையில் இது ஒரு கடினமான பதிவு.. இதை கனத்த இதயத்துடன் படித்தேன்.. மீண்டும் படித்தேன்.. மீண்டும் படித்தேன்.. காரணம் இதில் கூறிய விஷியங்கள் 90% எல்லோருடைய வாழ்விலும் நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று.. என்னை பொறுத்தவரை நான் கடந்து வந்த பாதையை, என் வாழ்வியலை முழுவதும் முடியா விடினும் குறைந்த பட்சம் என் சந்ததியினருக்கு புகுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.. மனைவிக்கு இதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என் நிலை இது தான்..
என் பாட்டன், தந்தை, தாய் கற்பித்த வழி முறைகளை நான் என் சந்ததிகளுக்கு கற்று கொடுப்பது என் கடமையாக நினைக்கிறேன்.. இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள கூடாது என்று நினைக்கிறேன்.. 2004 இறுதிக்கு பின் நான் கோவை, திண்டுக்கல், வெளிநாடு என பயணப்பட்டதால் தற்போது விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது அந்நியப்பட்டதாகவே உணர்கிறேன்.. ஊரில் நிறைய பேர்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.. என்னை அடையாளம் கண்டு பேசுபவர்கள் சிலரை மட்டும் எனக்கு தெரிகிறது.. சொந்தத்தில் நடக்கும் விஷேங்களுக்கு செல்லும் போது என்னை யாருக்கும் தெரிவதில்லை..
(பெரியப்பா பையன் ஊரில் ரயில்வே பணி) உறவினர்கள் இவன் கூட ஏதேனும் நிகழ்வுகளுக்கு செல்லும் போது மட்டும் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றார்.. அவன் ஊரில் இருப்பதால் எல்லா நல்லது / கேட்டதிலும் கலந்து கொள்கிறான்.. என்னுடைய சூழ்நிலை வேறு.. இது போல சமயங்களில் மனதிற்கு கனமாக இருக்கும்..
தந்தை வயதை ஒத்த அவரது நண்பர்களையோ / உறவினர்களையோ சந்திக்கும் தருணத்தில் தந்தை பற்றி அவர்கள் கூறிய பல செய்திகள் என்னை என்றுமே வியக்க வைக்கும்.. தன் வாழ்நாளில் சொந்த குடும்பத்திற்கு என்று எதுவுமே சேர்த்து வைக்காமல் தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி புரிந்து, புரிந்து எல்லோருடைய அன்பையும் பெற்று இருந்திருக்கிறார்.. தந்தை சிறு வயதில் இறந்து போனதால் கால ஓட்டத்தில் நாங்கள் கரைந்து போய் விடுவோம் என்று நினைத்த உறவினர்களுக்கு மத்தியில் ஒரு விருட்சமாக வளர்ந்து நின்றது என் தாயின் தியாகம் மற்றும் இறைவனின் செயல்.. இது தான் கர்மாவோ என்றும் நினைப்பதுண்டு..
என்னைப்பொறுத்தவரை சொந்த ஊரிலேயே வேலை, தொழில் பார்த்து அங்கேயே வசிப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். – சத்தியம் கிரி.. நீங்கள் கூறுவது போல் அவர்கள் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கலாம்.. கல்லுரி பருவத்தில் என் நிலையும் இது தான்.. ஏதேதோ காரணத்தால் எல்லாம் மாறி விட்டது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“என் பாட்டன், தந்தை, தாய் கற்பித்த வழி முறைகளை நான் என் சந்ததிகளுக்கு கற்று கொடுப்பது என் கடமையாக நினைக்கிறேன்.”
மிகச்சரி யாசின். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும், பலரும் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது.
“சொந்தத்தில் நடக்கும் விஷேங்களுக்கு செல்லும் போது என்னை யாருக்கும் தெரிவதில்லை..”
முன்பு பல நிகழ்வுகளைத் தவிர்த்து வந்தேன். தற்போது இது போலச் செய்வதில்லை, அதோடு தவிர்க்க முடியாத நிலையும் உள்ளது.
“தன் வாழ்நாளில் சொந்த குடும்பத்திற்கு என்று எதுவுமே சேர்த்து வைக்காமல் தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி புரிந்து, புரிந்து எல்லோருடைய அன்பையும் பெற்று இருந்திருக்கிறார்.”
இந்நிலை என் அப்பாவுக்கும் பொருந்தும். சில நேரங்களில் கோபமும் வரும். நமக்கு முடிக்க வேண்டிய பணிகளே ஏராளம் இருந்த போது அதைக் கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நேரத்தைச் செலவிட்டு விட்டார்களே என்று தோன்றும்.
ஏனென்றால், தற்போது சில பணிகளை அப்பா இல்லாமல் முடிக்கக் கண்ணைக் கட்டுகிறது. காரணம், விவரங்கள் இல்லை.
கிரி, கிராமம் என்றாலே அதன் எளிமையும் வெகுளியான மக்களும் தான். வெகுளியான, யதார்த்தமான மனிதர்கள் அருகி விட்டார்கள் என்பது உண்மை. கிராமங்களை விட்டு மக்கள் வேலை தேடி கூட்டம் கூட்டமாக சிறு மற்றும் பெரு நகரத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது சமூக மதிப்பீடு என்பது பெரும்பாலும் பணத்தை வைத்து இருப்பதால், இது வெகு வேகமாக நடக்கிறது. நான்கில் ஒருவர் கேட்பது எவ்வளவு சம்பளம் என்பது தான். நகரகங்களில் இருந்து வரும் பணம் , பெரும் வீடுகளாக கிராமத்தில் மாறியிருக்கிறது, ஆனால் அதில் வசிப்பவர்களோ இரண்டு அல்லது மூன்று பேர் தான். இது இயற்கையாக நடக்கிறது யாரையும் குறை கூறுவதற்கில்லை.
கிராமத்திலிருந்து பெரு நகரத்திற்கு படிக்க செல்லும் ஒருவன் ஒரு சில மாதங்களிலே தனது கிராமத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பு குறைவதை காணலாம். நீங்கள் எந்த ஊரை சார்ந்தவர் என்றால் பெரும்பாலோனோர் மாவட்ட பெயரை மட்டும் சொல்வார்கள். மிக சிலரே தனது கிராமம் மற்றும் மாவட்டத்தின் பெயரை சேர்த்து சொல்லுவார்கள். இவர்கள் தான் பெரும்பாலும் கிராமத்தின் ஊர் மாரியம்மன் பண்டிகைகளை தவிர்ப்பார்கள், கேட்டால் பரீட்சை, விடுப்பு கிடைக்கவில்லை என்கிற நொண்டி சாக்கு போக்குகள். அதன் உண்மையான காரணம் விருப்ப இன்மையே. உள்ளூர் மாரியம்மன் காளியம்மன் தெய்வங்கள் கீழானவை என்று அவன் மனதில் உருவாகியது தான். ஒரு படி மேலே , ஒரு சிலர் பெற்றவர்களையே கீழாக பார்ப்பவர்களும் உண்டு. இதற்க்கு முக்கிய காரணம் நம் கல்வி முறையே. நாம் நாமாக இருப்பதை கீழாக நினைக்க வைக்கிறது. மேலும் கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி நமக்கு பெற்றோர்களின் அல்லது ஆசிரியர்களின் வழியாகவோ நடைபெறுவதில்லை. நாம் யார் என்று ஓரளவு உணர்ந்து கொண்டால் நாம் நமது அடையாளங்களை,பண்பாட்டு வழிமுறைகளை அறு படாமல் பேண முடியும்.
பெரு நகரத்திற்கு சென்று குடியேறியவர்கள் பொருளாதார ரீதியில் கிராமங்களுக்கு உதவலாம். அரசு பள்ளிகளை மேம்படுத்துதல், திருவிழாக்களுக்கு கொடை கொடுத்தல் , முக்கியமாக திருவிழாக்களில் கலந்து கொள்ளுதல். இவை அடுத்து தலைமுறைக்கு அவர்கள் வேர் எங்கு உள்ளது என்று தெரியும் இல்லை என்றால் அடையாளமற்றவர்களாக வெறும் நுகர்வோராக அவர்கள் நகரங்களில் வாழ நேரிடும்.
கிராமங்களுக்கு திரும்புவது என்பது ஒரு அறைகூவல். நீங்கள் சிறு வயதில் பார்த்த கிராமம் இருக்காது பல மடங்கு மாற்றம் கண்டு இருக்கும். ஏமாற்றமே மிஞ்சும். எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு மிகை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டால் கிராமத்திற்கு திரும்பலாம்.
@மணிகண்டன்
“கிராமங்களை விட்டு மக்கள் வேலை தேடி கூட்டம் கூட்டமாக சிறு மற்றும் பெரு நகரத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.”
உண்மையே. அதில் நானும் ஒருவன்.
“நகரகங்களில் இருந்து வரும் பணம் , பெரும் வீடுகளாக கிராமத்தில் மாறியிருக்கிறது, ஆனால் அதில் வசிப்பவர்களோ இரண்டு அல்லது மூன்று பேர் தான். இது இயற்கையாக நடக்கிறது யாரையும் குறை கூறுவதற்கில்லை.”
இது இயற்கையான மாற்றமே. தடுக்க முடியாது.
“நீங்கள் எந்த ஊரை சார்ந்தவர் என்றால் பெரும்பாலோனோர் மாவட்ட பெயரை மட்டும் சொல்வார்கள். மிக சிலரே தனது கிராமம் மற்றும் மாவட்டத்தின் பெயரை சேர்த்து சொல்லுவார்கள்.”
சரியாககூறினீர்கள். இதில் கேட்பவருக்குக் கிராமத்தின் பெயரைக் கூறினால் தெரியாது என்பதால், அருகில் உள்ள நகரத்தின் பெயரைக் கூறுபவர்களும் உண்டு.
“பெரும்பாலும் கிராமத்தின் ஊர் மாரியம்மன் பண்டிகைகளை தவிர்ப்பார்கள், கேட்டால் பரீட்சை, விடுப்பு கிடைக்கவில்லை என்கிற நொண்டி சாக்கு போக்குகள். ”
பலருக்கு ஆர்வமில்லை என்பது உண்மையே.. வருத்தமான நிகழ்வு.
ஆனால், எனக்கு இது நேர் எதிர். நான் மட்டுமல்ல, என் பசங்களையும் இதில் ஈடுபடுத்தி நம் பண்பாட்டை நம்பிக்கையைப் புறக்கணிக்க முடியாதபடி வளர்த்து வருகிறேன்.
இதைச் செய்யவில்லையென்றால், நம் அடையாளம் என்னவென்பதே வரும் தலைமுறைக்குத் தெரியாது.
“ஒரு சிலர் பெற்றவர்களையே கீழாக பார்ப்பவர்களும் உண்டு.”
உண்மையே. பாசமே இல்லை.. எனக்கு பசங்களுக்கு பெற்றோர் மீதான பாசத்தை கொண்டு வராத காரணம் பெற்றோர் செயல்களே.
பசங்களுக்கு நல்ல வசதியாக செய்து கொடுக்க வேண்டும் என்று பாடுபட்ட இவர்களுக்கு பிள்ளைகள் தங்கள் மீது பாசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்த தவறி விடுகிறார்கள்.
“பெரு நகரத்திற்கு சென்று குடியேறியவர்கள் பொருளாதார ரீதியில் கிராமங்களுக்கு உதவலாம். அரசு பள்ளிகளை மேம்படுத்துதல், திருவிழாக்களுக்கு கொடை கொடுத்தல் , முக்கியமாக திருவிழாக்களில் கலந்து கொள்ளுதல். இவை அடுத்து தலைமுறைக்கு அவர்கள் வேர் எங்கு உள்ளது என்று தெரியும் இல்லை என்றால் அடையாளமற்றவர்களாக வெறும் நுகர்வோராக அவர்கள் நகரங்களில் வாழ நேரிடும்.”
மிகச்சரியாகக் கூறினீர்கள்.
நம்மால் நேரடி பங்களிப்பு செய்ய முடியாத போது இது போல மறைமுக பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் ஊரிலிருந்து சென்று தற்போது பெரிய தொழிலதிபராக உள்ள அக்னி ஸ்டீல் முதலாளிகளில் ஒருவரான தங்கவேல் எங்க கிராமத்துக்குச் செய்யும் உதவிகள் அளவற்றது.
“நீங்கள் சிறு வயதில் பார்த்த கிராமம் இருக்காது பல மடங்கு மாற்றம் கண்டு இருக்கும். ஏமாற்றமே மிஞ்சும்.”
எங்கள் கிராமம் பெரிய மாற்றமில்லை. அப்படியே தான் உள்ளது. கொஞ்சம் ஓட்டு வீடுகள் குறைந்து தார்ஸ் வீடுகள் அதிகரித்துள்ளது.
அடிப்படை தேவைகளுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்றபடி பெரியவ வித்யாசம் இல்லை.
“எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு மிகை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டால் கிராமத்திற்கு திரும்பலாம்.”
என்னைப்பொறுத்தவரை திரும்பவில்லையென்றாலும் கிராமத்தை மறக்காமல் மேற்குறிப்பிட்டது போல ஏதாவது ஒன்றில் நம் பங்களிப்பைக் கொடுத்துத் தொடர்பில் இருக்கலாம்.