தயாரிக்கப்பட்ட படங்கள் கொரோனா பிரச்சனை காரணமாக வெளியிட முடியாத சூழலால், தயாரிப்பார்கள் தங்கள் படங்களை OTT என்ற ஆன்லைன் தளங்களுக்கு விற்று வருகிறார்கள். Image Credit
திரையரங்கு உரிமையாளர்கள்
இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் பக்கமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவர இருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் OTT வெளியீட்டு அறிவிப்புக்குப் பிறகு.
இந்தியில் அமிதாப்பச்சன் படமும் இதே போல வெளிவருவதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் காரணம்
பல கோடி முதலீட்டில் திரையரங்குகளைக் கட்டியுள்ளோம். இப்படி அனைவரும் ஆன்லைனில் வெளியிட்டால் எங்கள் நிலை என்னாவது?
எனவே, ஆன்லைனில் வெளியிட்டால், இனி அந்நடிகர்களின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம். சூர்யாவின் சூரரைப் போற்றுப் படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள்.
பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெளியிடப்படும் என்றே நம்புகிறேன்.
நியாயம் உள்ளதா?
இவ்விவாதம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்சனை. இதில் உள்ள பிரச்சனைகள் தெரியாமல் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல.
ஆனால், கொரானா காலத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களை நெருங்குவது நியாயமானது அல்ல.
கொரோனா பிரச்சனை எப்போது சரியாகும் என்று யாருக்கும் தெரியாது. தயாரிப்பாளர்கள் அனைவருமே கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரிக்கிறார்கள்.
இந்நிலையில் எத்தனை மாதங்களுக்குத் தயாரிப்பாளர்கள் வட்டி கட்டிக்கொண்டு படத்தை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க முடியும். ஐந்து மாதங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வட்டி என்ன ஆவது?
இவ்வளவு பேசும் திரையரங்கு உரிமையாளர்கள் பல திரைப்படங்களுக்குத் திரையரங்கு கொடுப்பதில்லை. கொடுத்தாலும், வேறு படம் வந்தால், உடனே தூக்கி விடுகிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டால், அவர்கள் பக்க நியாயத்தைக் கூறுகிறார்கள். அதே போலத் தயாரிப்பாளர் நிலையை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?!
சூழ்நிலை வேறு
ஒரு சாதாரணச் சூழ்நிலையில் இது போல நடந்தால் கேட்பதில் நியாயம் உண்டு.
ஆனால், கொரோனா காலத்தில் எப்போது திரையரங்கு திறப்பார்கள் என்று யாருக்குமே தெரியாத சூழ்நிலையில் எவ்வளவு நாள் வட்டி கட்டி காத்திருப்பது?
சூழ்நிலை சரியாகி அரசு அனுமதித்தாலும் எவ்வளவு பேர் உடனே திரையரங்கு வரப்போகிறார்கள்?
அரசு அனுமதித்தாலும் திரையரங்கு செல்லப் பலரும் யோசிப்பார்கள். திரையரங்கில் வெளிவந்தாலும், முன்பு வசூலித்த வசூல் கிடைக்காது.
ரசிகர்கள் மூலமாகத் துவக்க வசூல் கிடைக்கும் ஆனால், பொதுமக்களின் ஆதரவு முன்பு போல இருக்காது.
எனவே, திரையரங்கு முதலாளிகள் இந்தச் சூழலில் தயாரிப்பாளர்களை மிரட்டுவது நியாயமானதல்ல.
மல்டிப்ளெக்ஸ் வந்ததில் தனித் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதை எப்படிக் கால மாற்றம் என்று கூறினார்களோ OTT யும் கால மாற்றம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
திரையரங்கில் பார்க்கும் கொண்டாட்டமான மனநிலை OTT யில் கிடைக்காது ஆனால், மக்கள் அதற்குப் பழகி விடுவார்கள்.
பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு வேண்டும் என்றால் திரையரங்கில் வரவேற்பு இருக்கலாம், மற்றவர்களுக்கு இனி சந்தேகமே!
பிடிக்கிறதோ பிடிக்கலையோ எதிர்காலத்தில் OTT தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக இருக்கும். திரையரங்குப் பிரச்சனை காரணமாக, பலர் OTT தயாரிப்புக்கு நகர்ந்து விட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
தொடர்புடைய கட்டுரைகள்
ரஜினி சாரின் அண்ணாத்தே திரைப்படம் கூட சன் டிவி/ சன் நெக்ஸ்டில் நேரடியக வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதா பேச்சு அடிபடுகிறதே. உண்மையா?
தெரியலை ஜோதிஜி. படமே இன்னும் பாதி கூட முடியலை..
கிரி, திரைத்துறையை பொறுத்த வரை பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படமாலே இருக்கிறது .. நிறைய திரைப்பட தயாரிப்பாளர்களின் சொந்த அனுபவங்களை கேட்டு இருக்கிறேன் .. குறிப்பாக AVM சரவணன் அவர்களின் அனுபவம், என்னுள் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு விடையை கொடுத்தது .. அதுபோல் தயாரிப்பாளர்களின் பரிதாப நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது ..
ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பு என்பது வெற்றிகரமான தொழில் .. ஆனால் தற்போது மிகவும் சிரமமான ஒன்று .. தயாரிப்பில் வெற்றிகரமாக செயல்பட்ட தயாரிப்பாளர்கள் எவரும் கடந்த 15 ஆண்டுகளில் எந்த படமும் தயாரிக்க வில்லை என்பது தான் உண்மை ..
ஏவிஎம் ஓட 175 ஆவது தயாரிப்பு படம் முதலிடம் , விதார்த் நடித்த படம் .. படத்தை எடுத்து விட்டு, விநியோகம் செய்ய ரொம்ப சிரம்மபட்டதாக சொன்னார் .. பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்குகே இந்த சூழல் என்றால் , சின்ன தயாரிப்பாளர்களின் நிலை சொல்ல வேண்டியதில்லை .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
கிரி ஜி நலமா ???
எப்படியும் OTT க்கு எல்லா படங்களையும் விற்கிறார்கள். திரையரங்கத்துக்கே வராமல் நேரடியாக வரும் பெரிய படங்களுக்கு விலை வித்தியாசம் எப்படி இருக்கும்..? ஒரு வேளை மிக நல்ல விலை கிடைத்தால் இதுவே மினிமம் காரண்டீ ஆகிவிடும். பெரிய பட்ஜெட் படங்களுக்கு பயனாளிகளிடமிருந்து “டாப் அப் கட்டணம்” வாங்கினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஈ. ரா
@யாசின் நீங்கள் கூறுவது உண்மை. AVM நிறுவனமே தடுமாறுகிறது என்றால், என்ன சொல்வது?!
திரைத்துறையின் அமைப்பே மாறி விட்டது.
@ஈ ரா நான் நலம். எப்படி இருக்கீங்க? சரியா எட்டு வருடங்களுக்குப் பிறகு வந்து இருக்கீங்க!
உண்மை தான் நாளை இவர்களும் (OTT) சில படங்களை வாங்க மாட்டேன் என்று கூறுவார்கள். அப்போது வேறு சிக்கல் வரலாம்.
நலம்.. உங்கள் தளம் அழகாக இருக்கிறது.. மிக அழகாக எழுதுகிறீர்கள்.. ஏதாவது எழுதணும் என்று நினைக்கும்போது, இங்கே பார்ப்பேன்.. பெரும்பாலும் அதே கருத்து நீங்கள் அழகாக வெளியிட்டு இருப்பீர்கள்.. நேரம் இருக்கும்போது தொடர்பு கொள்ளுங்கள்.. என்னிடம் உங்கள் எண் இல்லை.
ஈ.ரா
நன்றி ஈ.ரா 🙂 . நீங்க எழுதிட்டு இருக்கீங்களா?