தமிழ்நாடு என்றால் அதன் அடையாளமாகக் கூறப்படுவனவற்றுள் “தினத்தந்தி” நாளிதழுக்கு முக்கிய இடமுண்டு. தினத்தந்தியின் மூலமாகத் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று கூறியவர்கள் ஏராளம்.
தினத்தந்தி
பரபரப்பான தலைப்பு வைப்பதிலும் திரைப்படச் செய்திகளைத் தருவதிலும் பிரபலமான பெயர் கொண்டது.
ஆளுங்கட்சியைப் பகைத்துக் கொள்ளாமல் நடப்பு அரசுக்கு ஓரளவு சாதகமாகவே செய்திகள் வரும் அதோடு செய்திகளில் தன்னுடைய தனிப்பட்ட கருத்தைப் புகுத்தாமல் மக்களிடையே “செய்தியாக” கொண்டு செல்லும்.
அதிகளவான திரைச் செய்திகள், கள்ளக் காதல் செய்திகள், கதறக் கதற கற்பழித்தான் போன்ற செய்திகளால் தினத்தந்தியின் மதிப்பு மற்ற நாளிதழ்களோடு ஒப்பிடும் போது குறைந்து இருந்தது.
இருப்பினும் பெரும்பாலான வாசகர்களுடன் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது.
தினத்தந்தி Vs தினமலர்
தினமலர் தலையெடுத்த போது “தினத்தந்தி நாவிதர் கடைகளில் மட்டுமே இருக்கும்” என்ற விளம்பரத்தின் மூலம் மறைமுகமாகக் கிண்டலடிக்கப்பட்டது. தினத்தந்தி “ஷேவிங் க்ரீம்” துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது போன்ற விளம்பரம்.
“ஒரு கோடி வாசகர்கள்” என்ற விளம்பரம் தினத்தந்தி பக்கம் இருந்து வந்தது.
இச்சமயத்தில் கீழ் தட்டு மற்றும் வணிக ரீதியான மக்களிடம் வரவேற்பு பெற்ற நாளிதழாகத் தினத்தந்தியும் மேல் நடுத்தர, உயர்தட்டு மக்களிடையே தினமலரும் வாசகர்களைப் பெற்றன.
தினத்தந்தி Vs தினமலர் Vs தினகரன்
தினகரனை சன் குழுமம் கையகப்படுத்தி விளம்பரங்கள் மூலமும் துவக்க குறைவான (1₹) கட்டணம் மூலமும் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.
இந்த மூன்று நாளிதழ்கள் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
“இந்து” குழுமத்தில் இருந்து “தமிழ் இந்து” வந்தாலும் இவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. உயர்தட்டு மக்கள் மட்டுமே தற்போது படிக்கிறார்கள். தினமணி புதிய வாசகர்களைப் பெறத் தவறி விட்டது.
விகடன் பேப்பர்
இடையே மாலை நாளிதழ்களுக்குப் போட்டியாக “விகடன் பேப்பர்” களமிறக்கப்பட்டது ஆனால், வந்த வேகத்தில் காணாமல் போய் விட்டது.
காரணம், மாலை நாளிதழ்களுக்கே உண்டான அம்சம் இல்லாமல் விகடன் இருந்தது.
குருவியார் / ஆண்டியார் / கன்னித்தீவு
கன்னித்தீவு / குருவியார் / ஆண்டியார் போன்ற பகுதிகளுக்குத் தனி ரசிகர்கள் இருந்தாலும், படித்த மக்களிடையே ஒரு கிண்டலான மனநிலையையே ஏற்படுத்துகிறது.
இது தினத்தந்திக்கு ஒரு பின்னடைவே.
“கன்னித்தீவு” கதை என்ன நடக்கிறது என்று அதைத் தருபவருக்கே தெரியாது.
தினமலருக்கு அதிமுக / பாஜக ஆதரவு அடையாளமும், தினகரனுக்குத் திமுக அடையாளமும் உள்ளது ஆனால், தினத்தந்திக்கு அப்படி எதுவுமில்லை.
தினத்தந்தி நடப்பு அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல், தவறுகளைக் கடுமையாகச் சாடாமல் செய்தியாக மட்டும் தரும்.
தினத்தந்திக்கு நடப்பு (திமுக / அதிமுக) ஆளுங்கட்சி ஆதரவு செய்தி தருகிறது என்ற பொதுவான மனநிலை உள்ளது.
எங்கள் வீட்டில் (கோபியில்) தினமலர் / தினகரன் என்று வாங்கிப் பின் அவர்கள் தங்கள் கருத்தை நம் மீது திணிப்பதை கண்டு வெறுத்து, வாங்குவேன் என்று நினைத்தே இராத தினத்தந்திக்கு வந்தேன்.
தற்போது கருத்துத் திணிப்பை விடத் தினத்தந்தியின் “செய்தி” போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.
என்ன வியப்பு என்றால், இணையத்தில் தினமும் படிப்பது தினமலர் தளத்தையே! இதற்கு இதனுடைய தள வடிவமைப்பு மிக முக்கியப் பங்காற்றுகிறது.
படிப்பதற்கு எளிதாகவும் அதிகச் செய்திகளைப் படிக்கும்படியுள்ள வடிவமைப்பும் முக்கியக் காரணமாக உள்ளது.
தினமலர் செய்தியாகக் கூறுவது ரொம்பப் பிடிக்கும் ஆனால், கருத்தை திணிக்கும் போது வெறுப்பாகும். எனவே தினமலர் பிடிக்கும் / பிடிக்காது என்று இரண்டு கெட்டானாக இருக்கிறது.
தினகரன் முற்றிலும் திமுக ஆதரவு / அதிமுக எதிர்ப்புச் செய்திகளே இருப்பதால், படிக்க விருப்பமே இல்லை.
கொஞ்சம் பழமையான, பிற்போக்காகப் பார்க்கப்பட்ட தினத்தந்தி தான் தற்போது கலக்குகிறது கலக்கப் போகிறது என்று கூறினால் நீங்கள் நம்பித்தான் ஆகணும்.
காரணம் என்ன?
சமூகத்தளங்கள் வந்த பிறகு செய்திகள் உடனே தெரிந்து விடுகிறது. எனவே, நாளிதழ் செய்திகள் பழைய செய்திகளாகவே அனைவருக்கும் தெரிகிறது.
என்னுடைய தலைமுறையோடு நாளிதழ் வாங்கிப் படித்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் தலைமுறையினர் முடிந்து விட்டார்கள்.
இந்தத் தலைமுறையினர் மற்றும் இனி வருபவர்கள் நாளிதழ் வாங்கிப் படிக்க மாட்டார்கள்.
Playboy / The Independent (UK)
உலகின் மிகப்பிரலமான வயது வந்தோருக்கான புத்தகமான Playboy அச்சு பிரதி நிறுத்தப்பட்டு இணையத்துக்குச் சென்று விட்டது.
காரணம், அப்போது Porn செய்திகளைப் படிக்க / காண இணையம் இல்லை. எனவே, இப்புத்தகம் பிரபலமாக இருந்தது.
இன்றைய நிலை உங்களுக்கே தெரியும். எவர் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் நொடியில் பார்க்க முடியும். எனவே வரவேற்பு குறைந்ததால் Playboy தனது விற்பனையை நிறுத்தி விட்டது.
அனைவரும் இணையத்திலேயே படிக்க விரும்புவதால், அச்சு விற்பனையை நிறுத்தி இணையம் மூலம் செய்திகளைத் தருகிறோம் என்று Playboy நிறுவனம் கூறி விட்டது.
மிகவும் பழமையான உலகின் மிகப்பிரலமான நாளிதழ்களில் ஒன்றான The Independent நிறுவனமும் இதையே அறிவித்து இருக்கிறது. இவர்கள் “இனி டிஜிட்டல் தான்” என்று இணையத்துக்கு முழுவதுமாகச் சென்று விட்டார்கள்.
இந்தியா டுடே (தமிழ்) / சினிமா எக்ஸ்பிரஸ்
தமிழில் நிறையப் புத்தகங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தி விட்டன அதில் குறிப்பிடத்தக்கது இந்தியா டுடே (தமிழ்), சினிமா எக்ஸ்பிரஸ்.
ஒரு காலத்தில் இரு புத்தகங்களும் சக்கைப் போடு போட்டன ஆனால், இணையத்திலேயே படித்து விடுவதால், வாங்குபவர்கள் குறைந்து விட்டனர்.
திரைச் செய்திகளுக்கு எண்ணிலடங்கா இணையத் தளங்களும் செயலிகளும் (App) உள்ளன.
தற்போது நான் எங்கே வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
ஆம். எதிர்காலத்தில் தமிழ் நாளிதழ்களும் வார இதழ்களும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும். கூற வருத்தமாக இருந்தாலும் இது தான் உண்மை.
வரவேற்பு குறைந்து வரும் நாளிதழ்கள்
செய்திகளில் படித்து இருக்கலாம் கடந்த வருட தீபாவளி போனஸ் கொடுக்கவில்லை என்று இந்து பத்திரிகை ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்து நாளிதழ் கொடுக்கும் போனஸ் என்பது மிகப்பெரிய தொகை.
அறை நண்பன் இந்து (ஆங்கிலம்) வில் பணி புரிந்தான், அப்போது அவனுக்குக் கிடைக்கும் போனஸ் மிகப்பெரிய தொகை.
நான் கூறுவது 1998 ம் ஆண்டு. இந்தச் சமயத்தில் ஐடி பிரபலம் இல்லை.
இந்து நாளிதழ் மிகப் பழமையான நிறுவனம் என்பது அனைவரும் அறிந்தது.
அவர்களே கடந்த ஆண்டுப் போனஸ் கொடுக்கவில்லை, என்பதற்காக ஊழியர்கள் போராட்டம் செய்தார்கள். இத்துறையில் இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியே.
“தங்களை வேலையை விட்டுத் தூக்காமல் இருந்தாலே பெரிய விசயம்!” என்று நினைக்கும் நாளும், தற்போது இல்லையென்றாலும் பின்னாளில் வரும்.
ஐடி துறையில் சம்பள உயர்வு / போனஸ் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை வேலையை விட்டுத் தூக்காமல் இருந்தால் சரி என்று எப்படி நினைக்கிறார்களோ! அதே நிலை நாளிதழில் பணி புரிபவர்களுக்கும் வரும்.
மக்கள் இணையத்திலேயே செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்வதால், எதிர்காலத்தில் நிறுவனங்கள், வணிகக் கடைகள் மட்டுமே நாளிதழ்களை வாங்கும்.
பொதுமக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து விடும்.
நாளிதழ் படிக்கவில்லை என்றால் ஒரு மாதிரி ஆகி விடும்.
ஒரு நாள் ஏதாவது காரணத்தால் வரவில்லை என்றாலும் எதையோ இழந்ததைப் போல இருக்கும், ஏமாற்றமாக இருக்கும் ஆனால், வரும் தலைமுறை இது போல இருக்க மாட்டார்கள்.
இங்குத் தான் தினத்தந்தி பாராட்டுப் பெறுகிறது
அச்சு நாளிதழ் மட்டுமல்ல சமூகத் தளங்களிலும், பண்பலையிலும் தொலைக்காட்சியிலும் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது.
சமூகத்தளங்கள்
ஃபேஸ்புக்கில் 2 மில்லியன் பின் தொடர்பவர்களை வைத்துள்ளது. இங்கே இவர்கள் பகிரும் செய்தியின் சுருக்கத்தைக் கொடுக்காமல் சுட்டியை மட்டும் பெரும்பாலும் இணைக்கிறார்கள்.
இணையத்தில் பலரும் சுருக்கமாக விரைவாகத் தெரிந்து கொள்ளவே விருப்பப்படுகிறார்கள் எனவே சுருக்கத்தைக் கொடுக்காமல் வெறும் சுட்டியை மட்டும் கொடுத்தால் பலரும் படிக்காமலே புறக்கணித்து விடுவார்கள்.
எனவே, இணையப் பிரிவில் இருப்பவர்கள் சுட்டியை (Link) கொடுப்பதோடு செய்தியின் தலைப்பையும் கொடுக்க வேண்டும்.
இது தினத்தந்தி இணையதளப் பிரிவினர் தான் மாற்றம் செய்ய வேண்டும்.
இணையத்தில் இன்னொரு பிரச்சனை தினத்தந்தி தளம் Mobile Compatible ஆக இல்லை. எனவே படிக்க மிகச் சிரமமாக உள்ளது.
ஒவ்வொருமுறையும் பெரிது படுத்தி (Zoom) பார்க்க வேண்டிய நிலையுள்ளதால், சமீபமாகக் கடுப்பாகி படிப்பதே இல்லை.
தற்போதெல்லாம் Mobile Compatible Skin என்பது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகும்.
என் தளத்தை தற்போது Mobile ல் படித்துக்கொண்டு இருந்தால், படிக்க எளிமையாக இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
தினத்தந்தி (Mobile) தளம் சென்று படித்தால், கடுப்பாக இருக்கும். இதற்குத் தளத்தை “Responsive Theme” தளமாக மாற்றம் செய்ய வேண்டும்.
இதைத் தினத்தந்தி இணையப் பிரிவு தான் சரி செய்ய வேண்டும். ஏன் இன்னமும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை!
இணையதளங்களின் வருவாய்க்கு “Ad Blocker” பெரிய தலைவலியாக வந்து விட்டது. எனவே, தொலைக்காட்யே தற்போதைய நிலைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய ஒன்று.
தொலைக்காட்சியின் முக்கியத்துவம்
தொலைக்காட்சியில் தந்தி டிவி மீது விமர்சனங்கள் இருந்தாலும் குறைவான காலத்தில் முக்கியத் தொலைக்காட்சிகளுள் ஒன்றாக வளர்ந்து விட்டார்கள்.
இந்த வளர்ச்சியில் பாண்டேவின் பங்கு முக்கியமானது.
துவக்கத்தில் பிற்போக்கு போலத் தோன்றினாலும் இறுதியில் தினத்தந்தி சிறப்பாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, எதிர்காலத்தில் தினத்தந்தி நாளிதழில் சரிவு ஏற்பட்டாலும் இணையம் / தொலைக்காட்சியை வைத்து இவர்களால் தங்கள் நிறுவனத்தைச் சமாளிக்க முடியும்.
தினமலர் நாளிதழ் இணையத்தில் தினத்தந்தியை விடப் பல படி முன்னே இருந்தாலும் அதற்கு என்று செய்தி தொலைக்காட்சி இல்லாதது பின்னடைவாக உள்ளது.
தினகரனுக்குச் சன் / கலைஞர் இரு தொலைக்காட்சிகள் உள்ளது அதோடு இது அரசியல் கட்சியைச் சார்ந்தது. எனவே இது பற்றிக் கூறுவதில் அர்த்தமில்லை.
இந்து நாளிதழும் துவக்கத்தில் NDTV உடன் இணைந்து செய்தி சேனலை நடத்தியது ஆனால், தொடர முடியவில்லை. எவ்வளவு பெரிய தவறு என்று பின்னால் உணர்வார்கள்.
இதோடு நாளிதழ்கள் அரசு விளம்பரங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல். இதுவே அவர்களை நடுநிலையாக இருக்க முடியாதபடி செய்கிறது.
தொலைக்காட்சி என்றால் இந்த அளவு நெருக்கடியில்லை. TRP பொறுத்துத்தான் வருமானம்.
தந்தி தொலைக்காட்சி திமுக ஆதரவு நிலை எடுத்துள்ளது.
dtNext
dtNext என்ற ஆங்கில இணைப்பையும் சென்னையில் கொடுத்து வருகிறது. இது எதிர்பாராத வியப்பு.
தினத்தந்தி இம்முயற்சி எடுக்கும் என்று நினைத்ததே இல்லை.
Hello FM
பண்பலை ஒளிபரப்பில் குறிப்பிடத் தக்க அளவில் இடத்தைப் பிடித்துள்ளது. தினத்தந்தி நிறுவனம் திட்டமிட்டு செயல்படுத்தி வருவது, பாராட்டுக்குரிய செயல்.
எதிர்காலத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும்
தற்போது இருந்தே இணையம் / தொலைக்காட்சி போன்றவற்றில் தங்கள் நிறுவனத்தை நிலை நிறுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் போட்டியை சமாளிக்க முடியும்.
இல்லையென்றால் எதிர்காலப் போட்டியைச் சமாளிக்க முடியாது.
எதிர்காலத்தில் தற்போதுள்ள போட்டியை விட கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த விசயத்தில் தினத்தந்தி ஓரளவு பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டது.
எதிர்காலம் காணொளிகள் காலம்
தற்போதைய நிலைக்குத் தினத்தந்தியே எதிர்காலத்தில் பெரியளவில் பிரச்சனையில்லாமல் சமாளிக்கும் என்று தோன்றுகிறது. காரணம், எதிர்காலம் காணொளிகள் காலம்.
தற்போது ஃபேஸ்புக், YouTube க்குப் போட்டியாக வரத் துடிக்கக் காரணம் அதற்குக் கிடைக்கும் வரவேற்பு!
விமர்சனம் எழுதிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் Video Blogging சென்று விட்டார்கள் காரணம், அதில் வரும் விளம்பர வருவாய் மற்றும் மக்கள் மன மாற்றம்.
துவக்கத்தில் வலைத்தளம் எனப்படும் Blog பிரபலமாக இருந்தது அதன்பின் சமூகத்தளங்கள் எனப்படும் ஃபேஸ்புக் / ட்விட்டர் பிரபலமானது பின் WhatsApp தற்போது Video Blogging.
மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
நான் எழுதும் Blog இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் சென்றால் படிக்கவே ஆள் இருக்க மாட்டார்கள்.
ஏதாவது முக்கியக் கட்டுரை / சர்ச்சை கட்டுரைக்கு மட்டுமே படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
இத்தளம் மனத் திருப்திக்காக எழுதுவதால், தற்போது Blog வரவேற்பு குறைந்தாலும் என்னைப் பாதிக்கவில்லை.
இதுவே நான் இதில் வரும் விளம்பரங்களையோ / பிரபலத்தையோ எதிர்பார்த்து இருந்தால், என்றோ ஏறக்கட்டி இருப்பேன்.
மக்களின் எண்ணம், எதாக இருந்தாலும் சுருக்கமாக விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதே இந்த மாற்றங்களுக்குக் காரணம்.
எதுவுமே நிரந்தரமில்லை
கால மாற்றத்தில் செய்தி நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், போட்டி மிகுந்த உலகத்தில், விஞ்ஞான வளர்ச்சியில் காணாமல் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இது அவர்களை மட்டுமல்ல அவர்களை நம்பி இருக்கும் ஊழியர்களையும் பாதிக்கும் செயல்.
அதே போல நாளிதழில் பணி புரியும் ஊழியர்களும் இதையே நம்பிக் கொண்டு இராமல் வருமானத்துக்கு வேறு வழிகளையும் தற்போது இருந்தே முன்னேற்பாடாக செய்து வருவது நல்லது. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது!
தினத்தந்தி தனது செய்திகளில் இன்னும் கள்ளக்காதல், பாலியல் ரீதியான செய்திகள் என்று உதவாக்கரை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்திகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
இதுவே நிறுவனத்தின் மீது மரியாதையைக் கொடுக்கும்.
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாதவரை எதுவுமே நிரந்தரமில்லை, இது மற்ற அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் மட்டுமல்ல தினத்தந்திக்கும் பொருந்தும்.
தொடர்புடைய கட்டுரைகள்
மின்னஞ்சல் அழியப்போகிறதா? – 2012 (Published in One India)
“Blog” அழிந்து வருகிறதா? – 2015
படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?! – 2015
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
“முன்பு எங்கள் வீட்டில் (கோபியில்) தினமலர் / தினகரன் என்று வாங்கிப் பின் அவர்கள் தங்கள் கருத்தை நம் மீது திணிப்பதை கண்டு வெறுத்து, நான் வாங்குவேன் என்று நினைத்தே இராத தினத்தந்திக்கு வந்தேன்.”
me too
குறிப்பாக “கன்னித்தீவு” கதை என்ன
நடக்கிறது என்று அதைத் தருபவருக்கே
தெரியாது என்று நினைக்கிறேன்.
Same feeling…..
பத்திரிக்கைத் துறை சார்ந்த நண்பர் ஒருவரிடம் சில மாதங்களுக்குப் பின்னால் பேசிக் கொண்டிருந்த சில விசயங்களை உங்கள் எழுத்து வாயிலாக படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாட்டில் 70 இளைஞர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தினந்தந்தியை வாரத்தில் சில நாட்களாவது வாசிக்காமல்வளர்ந்து இருக்க முடியாது. பிறகு தான் தினமலர் தொடங்கி மற்ற பத்திரிக்கைகள்.
நான் சந்திக்கும் பணிபுரியும், படித்துக் கொண்டிருக்கும் இளையர்கள் 80 சதவிகிதம் பேர்கள் பத்திரிக்கைகள் எதையும் படித்ததே இல்லை என்பதை பெருமையாக குற்றவுணர்ச்சி இல்லாமல் சொல்கின்றார்கள். ஆனால் இங்கே மாற்றம் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கரெக்டா சொன்னீங்க.
ரங்கராஜ் பாண்டே குறுகிய காலத்தில ரொம்ப Famous ஆயிட்டாரு. அவரால் தினத்தந்தி தொலைக்காட்சியும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் அவர் நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரிடம் பேட்டி கொடுக்க வரும் பிரபலங்கள் அவர் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்கவே நான் விடாமல் அந்த நிகழ்ச்சியை பார்ப்பேன். முக்கியமாக வீரமணி, பழ.கருப்பையா. பேட்டிகள் மிகப்பிரபலம்.
நீங்கள் எழுதிய இந்த கட்டுரையை அப்படியே தினதந்திக்கு Feedback அனுப்பிடுங்க. நானும் மொபைலில் அவங்க வெப்சைட் படிக்க முடியலைன்னு ரொம்ப கடுப்பு ஆகி இருக்கேன்.
தினத்தந்தி பேப்பர் எல்லாம் அக்மார்க் மஞ்ச பத்திரிகை தான். கற்பழிப்பு செய்தியை பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி ரசிச்சு ரசிச்சு எழுதுவாங்க.
பலசமயம் எனக்கு இப்படி ஒரு கற்பழிப்பு நடந்து இருக்கா இல்ல இவங்களே ஏதோ ஒரு பேர், ஊரு போட்டு கற்பழிப்பு செய்தி போடுறாங்களான்னு தோனும். அவங்க போடுற கற்பழிப்பு செய்தி எந்த தொலைக்காட்சியிலும் வந்து நான் பார்த்ததே இல்லை. இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கற்பழிப்பு செய்தி தினமும் கிடைக்குது.
நீங்க சொல்ர மாதிரி தினத்தந்தி பேப்பர் செய்தி தரத்தை உயர்த்தனும். மொபைல் தளத்தையும் கொண்டு வரணும். நானும் தினத்தந்திக்கு ஒரு மெயில் போடுறேன்.
கிரி. இப்போ தினத்தந்தி வெப்சைட் மொபைலில் பார்க்கும் போது mobile compatible skin ஆக வருகிறது. நீங்க சொன்னது தினத்தந்தி காதுல விழுந்துடுச்சு போல. உடனே மாத்திட்டாங்க.
கிரி, கல்லூரி பருவத்தில் பத்திரிக்கை துறையின் மீது கொண்ட காதலால் ஒரு ஆறு மாத பகுதி நேர DIPOLMA வை முடித்தேன்.. அந்த நாட்கள் அவ்வளவு அழகான நாட்கள்.. சிறு வயது முதலே தினமணியின் மீது எனக்கு காதல் அதிகம். தினத்தந்தியும் அதிகம் படிப்பதுண்டு. தினமலர் இணையத்தில் மட்டும் படிப்பதுண்டு.
புத்தகங்களை இணையத்தில் படிப்பதை அதிகம் வெறுக்கிறேன். வேறு வழியில்லாமலும் சமயத்தில் படிக்கிறேன். மிகவும் நேர்த்தியாக, தெளிவாக, அழகாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மிக சிறந்த பதிவை படித்ததாக ஒரு உணர்வு.
இந்த பதிவை யாரேனும் ஊடகங்களில் பணிபுரியும் சகோதரர்கள் முறையாக கொண்டு சேர்த்தால் உங்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும் என்பது என் கணிப்பு… நீங்கள் பணிபுரிவது IT துறையாக இருப்பினும், பத்திரிக்கை துறையிலும், உங்களுக்கு இருக்கும் அழமான அறிவை கண்டு வியக்கிறேன்.
நண்பன் ஒருவன், ஒரு முறை பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க எண்ணி கட்டணத்தை கேட்ட போது தான், தெரிந்தது இவர்களின் தோராய வருமானம்.. ஊடகத்துறை ஒரு வலுவான சாதனம். அவற்றால் நல்ல சமுதாய சிந்தனையை எளிதில் விதைக்க முடியும். பகிர்வுக்கு நன்றி கிரி.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ஜோதிஜி இனி படிப்பவர்கள் எல்லாம் இணையத்துக்கு சென்று விடுவார்கள். நாளிதழ் வாங்கிப் படிப்பவர்கள் மிகக் குறைந்து விடுவார்கள்.
@நவீன்
“பலசமயம் எனக்கு இப்படி ஒரு கற்பழிப்பு நடந்து இருக்கா இல்ல இவங்களே ஏதோ ஒரு பேர், ஊரு போட்டு கற்பழிப்பு செய்தி போடுறாங்களான்னு தோனும். அவங்க போடுற கற்பழிப்பு செய்தி எந்த தொலைக்காட்சியிலும் வந்து நான் பார்த்ததே இல்லை. இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கற்பழிப்பு செய்தி தினமும் கிடைக்குது.”
நிஜமாகவே எனக்கும் இதே சந்தேகம் உள்ளது. கள்ளக் காதல் செய்திகள், வன்புணர்வு செய்திகள் என்று பாலியல் தொடர்பான செய்திகளே அதிகம் இதில் காணக் கிடைக்கும்.
நல்ல செய்திகளும் தருகிறார்கள் ஆனால், மேற்கூறிய செய்திகளே இவற்றை முன்னிறுத்துகின்றன.
“கிரி. இப்போ தினத்தந்தி வெப்சைட் மொபைலில் பார்க்கும் போது mobile compatible skin ஆக வருகிறது. நீங்க சொன்னது தினத்தந்தி காதுல விழுந்துடுச்சு போல. உடனே மாத்திட்டாங்க.”
எனக்கு எந்த மாற்றமும் தெரியலை. அப்படியே தான் உள்ளது.
அதோடு இதை உடனே மாற்றி விட முடியாது. கொஞ்சம் காலம் எடுக்கும். இவர்கள் எப்போது சரி செய்வார்களோ!
@யாசின் தற்போது போட்டிகளின் விளைவால் ஊடகங்களின் தரம் குறைந்து விட்டது. செய்தியை யார் முதலில் கொடுக்கிறார்கள் என்பதே முக்கியமாக இருப்பதால், செய்தி சரியா தவறா என்பதை உறுதிப்படுத்துவதில்லை.
செய்தி தவறாக இருந்தால், அதையும் ஒரு “செய்தி” யாக்கி விடுகிறார்கள்.
தற்போதெல்லாம் ஒரு பரபரப்பான செய்தி என்றால் அதை இரண்டு நாள் கழித்துப் பார்த்தால், அதற்குள் பல வடிவங்கள் அந்த செய்திக்கு கிடைத்து இருக்கும்.
http://dailythanthi.com/ வெப்சைட் மொபைல் வியூவில் தெரியும்.
நவீன் நான் கூறுவது, நீங்கள் ஃபேஸ்புக் அல்லது மற்ற தளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் சுட்டியை (Link) க்ளிக் செய்தால், நான் கூறும் பிரச்சனை வரும். இது போல நான் நேரடியாக (m.dailythanthi) சென்று படிப்பதில்லை.. அதற்கு நான் செயலியைத் தான் பயன்படுத்துவேன்.
அருமையான blog , எதையோ தேட உருப்படியான பதிவை கண்டேன்