சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது.
வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு
இலஞ்சி எனும் நாட்டில் சங்கொண்டபுரம் என்ற நகரை பகீரதன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அம்மன்னனை காண வந்த நாரதரை ஆணவம் கொண்ட பகீரதன் அலட்சியப்படுத்தினான்.
இதனால் கோபமடைந்த நாரதர், பல நாடுகளை வெற்றி பெற்றுக் கொண்டு இருந்த கோரன் எனும் அசுரனிடம், நீ பகீரதனை வெற்றி பெற்றாலே திறமையானவன் என்று நம்புவேன் என்று சிண்டு முடிக்கிறார்.
சவாலாக எடுத்துக்கொண்ட கோரன், பகீரதன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடிக்க, பகீரதன் தப்பித்துக் காட்டில் தஞ்சம் அடைகிறான்.
அங்குத் துர்வாச முனிவரைக் காணும் பகீரதன், தனக்கு உதவும்படி கேட்கிறான்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, பாதிரி (பட்டரி) மரத்தடியில் உள்ள முருகனை வணங்கி வந்தால், குறைகள் தீரும் என்று துர்வாச முனிவர் கூறுகிறார்.
அவ்வாறு வணங்கி வந்த பகீரதன், முருகனுக்கு வள்ளி தெய்வானையுடன் கட்டிய கோவிலே வல்லக்கோட்டை முருகன் கோவில் ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது.
தல சிறப்புகள் என்ன?
வெள்ளிழமைகளில் முருகனை வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
திருமணம் தள்ளிச் செல்பவர்கள் வேண்டிக் கொள்ளலாம்.
அருணகிரி நாதர் இத்திருக்கோவில் குறித்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அன்னதானம் இக்கோவிலின் சிறப்பாகக் கூறப்படுகிறது.
50, 100 என்று நபர்களுக்கு அன்னதானம் வழங்க வழிமுறைகளைத் திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
நெய் தீபம் செலுத்தலாம்.
கோவில் எப்படியுள்ளது?
1000+ ஆண்டுகள் பழமையான கோவில்.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் முருகன் சிலையும், உடன் வள்ளி தெய்வானை சிலைகளும் உள்ளன.
திருவிழாக்காலங்களில் கூட்டத்தைத் தாங்கும் அளவுக்குக் கோவில் உள்ளது.
விநாயகர், அம்மன் சன்னதி உள்ளன.
தொலைவிலிருந்து பார்த்தாலும், முருகன் தெளிவாகத் தெரியும்படி உள்ளது.
கோவிலின் கருவறை எந்த நாகரிக அலங்காரமும் இல்லாமல், விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகனை காணும் படி இருப்பது அழகைக் கூட்டுகிறது.
மைலாப்பூர் கற்பகாம்பாள் கருவறையை நினைவுபடுத்தியது.
ஏழு அடியுள்ள முருகனை காண அற்புதமாக உள்ளது. அலங்காரத்துடன் அட்டகாசமாக முருகன் உள்ளார்.
கண்களை விலக்குவது சிரமமான ஒன்றாகவே இருந்தது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு.
பசு, கன்று, புறா வளர்க்கிறார்கள். மயில் இருந்த இடத்தில் புறா உள்ளது.
கோவிலுக்கு வெளியே குளம் உள்ளது. குளம் அருகிலேயே பெருமாள் கோவில் உள்ளது.
கோவிலின் முன்னே ஏராளமான கடைகள் உள்ளன. பூசைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
கோவிலுக்கு எப்படிச்செல்வது?
கோயம்பேட்டிலிருந்து 40 கிமீ தொலைவில் ஒரகடம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 9 கிமீ தொலைவில் கோவில் உள்ளது.
தாம்பரம் பகுதியிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது.
முன்பு சாலை மோசமாக இருந்ததால், கோவிலுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.
தற்போது மேம்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில்
இங்கே இருந்து 17 கிமீ தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
சிங்கப்பெருமாளின் மூன்றாம் கண்ணைச் சில நொடிகள் காட்டுகிறார்கள்.
இங்குப் பிரசாதம் விஷேசமாகக் கூறப்படுகிறது. சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் இருக்கிறார்களாம்.
மலையைக் குடைந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. வல்லக்கோட்டை முருகன் கோவில் செல்பவர்கள், சிங்கப்பெருமாள் கோவிலுக்கும் சென்று வரலாம்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பணியிடத்தின் மிக அருகில் இருந்தும் செல்லவில்லை. விரைவில் தரிசிக்க வேண்டும் 🙏🏽
புதிய, புதிய வழிபாட்டு தளங்களுக்கு சென்று, அவற்றை குறித்த தகவல்களையும் திரட்டி எல்லோருக்கும் பயன்படும் விதம் அதை சிறப்பாக வடிவமைத்து பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.
தல வரலாறு சுவாரஸ்யம். பயனுள்ள தகவல்கள்.
@பாலா எப்போதுமே அருகில் உள்ளவர்கள் அவ்விடங்களுக்கு செல்ல மாட்டார்கள். இது அனைவருக்கும் பொருந்தும் 🙂 .
@யாசின் & ராமலக்ஷ்மி நன்றி