இரண்டாம் உலகப்போர் (1941) சமயத்தில் சங்கேத வார்த்தைகளை அனுப்பும் ஜெர்மனியின் ‘Enigma‘ தந்தி சாதனத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே U – 571 கதை.
Spoiler Alert
கதையின் சுவாரசிய திருப்பங்கள், முக்கிய இடங்களைக் விமர்சனத்தில் கூறுவதில்லை ஆனால், இவற்றைக் கூறினாலே படம் பார்க்கும் போது புரியும் என்பதால், சில காட்சிகளைக் கூறியுள்ளேன். Image Credit
உடன்பாடில்லாதவர்கள் அப்பகுதியை கடந்து விடலாம்.
U – 571
அமெரிக்க இங்கிலாந்து வர்த்தக, கூட்டுப்படைகளின் நூற்றுக்கணக்கான கப்பல்களை ஜெர்மானிய U – Boat எனும் நீர்மூழ்கி கப்பல்கள் தகர்த்து விடுகின்றன.
Enigma சாதனத்தின் உதவியோடு சங்கேத வார்த்தைகளில் ஜெர்மனி செய்திகளைப் பரிமாறுவதால், இவர்களால் அதைக் கண்டறிய முடிவதில்லை.
இந்நிலையில் ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல் பழுதடைந்து இருப்பதாக உதவி கேட்டு அவர்கள் தலைமைக்கு அனுப்பும் தகவல் அமெரிக்காவுக்குக் கிடைக்கிறது.
இதனால், ஜெர்மனிய நீர்மூழ்கி கப்பல் அடையாளங்களுடன் வடிவமைத்து, அவர்களை ஏமாற்றி நீர்மூழ்கி கப்பலைக் கைப்பற்றிச் சாதனத்தை எடுக்க ஜெர்மனிய மொழி தெரிந்த அமெரிக்க வீரர்களை அனுப்புகிறது.
இவர்களுடன் மற்ற வீரர்களும் இணைந்து திட்டமிட்டபடி, ஜெர்மனிய உதவி படை வருவதற்கு முன்பே செல்கிறார்கள்.
அனைத்தும் சரியாக முடியும் சமயத்தில் எதிர்பாராத பிரச்சனையாகிறது.
மிகவும் கடினமான சூழ்நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் டைலர், சாதனத்தைக் கைப்பற்றினாரா? அனைவருக்கும் என்ன ஆனது? என்பதைத் திகில் சம்பவங்களுடன் விவரித்துள்ளார்கள்.
டைலர்
இதைப் போர் படமாகக் கருதி எளிதில் கடந்து சென்று விடலாம் ஆனால், மேலாண்மை என்ற விஷயத்தை அழகாகக் கூறியுள்ளார்கள்.
அமெரிக்க நீர்மூழ்கி கேப்டனாக டைலர் வரவேண்டியது, கடைசி நேர மாறுதலில் Mike Dahlgren என்பவர் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.
டைலர் தான் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்த சக வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது ஆனாலும், தலைமையின் கட்டளையை ஏற்றுச் செல்கிறார்கள்.
இடையே டைலரிடம் பேசும் கேப்டன் Mike Dahlgren…
‘ஒரு கேப்டன் தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் உறுதியான முடிவை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்‘
என்று அறிவுரை கூறுகிறார்.
ஜெர்மனிய நீர்மூழ்கி கப்பலைக் கைப்பற்றும் முயற்சியில் Mike Dahlgren இறந்து விடுவதால், தற்காலிக கேப்டனாக டைலர் பொறுப்பேற்கிறார்.
பொறுப்பேற்கும் சூழ்நிலை மிகக்கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம், இவரது முடிவால் உயிரிழப்பு ஏற்படலாம் ஆனால், தலைமை கூறியுள்ளதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம்.
மிக மிக நெருக்கடியான காலக் கட்டம்.
சென்டிமென்ட்டுக்கு இடம் கொடுத்தால், மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும். நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும்.
எடுக்கப்படும் கடினமான தைரியமான முடிவுகளால் மிகப்பெரிய இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற இக்கட்டான சூழ்நிலை.
இந்தச் சூழ்நிலையை டைலர் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே பரபர திரைக்கதை.
அனைவருக்கும் நல்லவராக இருக்கக் கூடாது
அனைவருக்கும் நல்லவராகப் பொறுப்பில் உள்ளவர் இருக்க முடியாது. அப்படி இருக்க நினைத்தால், அவரால் பொறுப்பை வகிக்க முடியாது.
சில முடிவுகள் சிலரை பாதிப்புக்குள்ளாக்கும் ஆனால், பெரும்பான்மையினருக்கு நன்மை பயக்கும் என்றால், கடினமான முடிவையும், செயல்படுத்தி ஆக வேண்டும்.
எடுக்கப்படும் முடிவால் அப்பாவியின் உயிரும் பாதிக்கப்படலாம் ஆனால், நாட்டைக் காப்பாற்ற இது போன்ற சூழ்நிலையில் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு அப்பாவி பாதிக்கப்படுகிறார் என்ற மன குழப்பத்தில் தயங்கினால், பல உயிர்கள் பாதிக்கப்படலாம். எனவே, சென்டிமென்ட் பார்க்கும் நேரமல்ல.
அவ்வாறான சூழ்நிலையில் எடுக்கப்படும் முடிவு தவறாகவும் போகலாம் ஆனால், ‘என்ன செய்வதென்று தெரியவில்லை‘ என்று விழித்துக்கொண்டு இருக்கக் கூடாது என்பதை இப்படம் விளக்குகிறது.
ஒரு குழுவைத் தலைமை ஏற்று நடத்துபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். முடிவுகள் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சிறப்பாக விளக்குகிறது.
‘எனக்குத் தெரியாது‘ என்று கூறக் கூடாது. முடியுமா முடியாதா என்று தான் கூற வேண்டும். Do or Die என்பதே இப்படம் கூற வரும் கருத்து.
காட்சியமைப்பு / ஒளிப்பதிவு
இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என்று குழப்பமாக உள்ளது! அனைத்துமே உண்மை என்பது போலவே காட்சிகள் உள்ளது.
நீர்மூழ்கி கப்பல்கள் ஏவுகணைகளில் தாக்கும் காட்சிகள், வெடிகுண்டு வீசித் தாக்குவது என்று மிரள வைக்கும் காட்சிகளாக உள்ளது.
மேலே சென்றால் வெடிகுண்டுகளால் நீர்மூழ்கி கப்பல் தாக்கப்படும், தப்பிக்க ஆழத்துக்குச் சென்றால், அழுத்தம் காரணமாக நீர்மூழ்கி கப்பல் வெடித்து விடும்.
கரைக்குச் சென்றால், புலி கொன்று விடும், தண்ணீரில் இருந்தால், முதலை கொன்று விடும் என்ற நிலை.
என்ன முடிவு எடுப்பது?
நீர்மூழ்கி கப்பலில் ஆழத்துக்குச் சென்றால், வரும் ஒலி திகிலாக்குகிறது.
சிறு சத்தம் கூட இல்லாமல் அனைவரும் அமைதியாக எதிரி தாக்குதலைக் கண்காணிக்கும் போது நம் இதயத்துடிப்பு எகிறி விடும்.
Sound editing க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் U – 571 பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். NETFLIX ல் உள்ளது.
Directed by Jonathan Mostow
Produced by Dino De Laurentiis, Martha De Laurentiis
Screenplay by Jonathan Mostow, Sam Montgomery, David Ayer
Story by Jonathan Mostow
Starring Matthew McConaughey, Bill Paxton, Harvey Keitel, Jon Bon Jovi
Music by Richard Marvin
Cinematography Oliver Wood
Edited by Wayne Wahrman
Distributed by Universal Pictures
Release date April 21, 2000
Running time 116 minutes
Countries United States, France
Languages English, German
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, படத்தோட கதை கரு எனக்கு விருப்பமானது. காரணம் ஜெர்மனி குறித்த எந்த விதமான வரலாற்று கதைகளை எப்போதும் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.. சிறு வயதிலே ஜெர்மனி எனக்கு விருப்பமான நாடு.. காரணம் என்ன வென்று தெரியவில்லை. நிச்சயம் படத்தை பார்ப்பேன்.. பகிர்வுக்கு நன்றி.
அருமையான படத்தின் அறிமுகத்துக்கு நன்றி
Padam Arumaiyaga ullathu.
Mudinthal T-34 and Midway padaithai parka parnthuiraikerean
@யாசின் இப்படத்தில் ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பலின் தரம் அமெரிக்கர்களையே வியக்க வைக்கும் .
@மதிசுதா 🙂
@சுரேஷ் பார்க்க முயற்சிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி. NETFLIX & Prime ல உள்ளது ஆனால், இந்தியாக்கு இல்லை.