பயணக்குறிப்புகள் [07-11-2011]

12
பயணக்குறிப்புகள் [07-11-2011]

ந்த முறை தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் சென்று இருந்த நாட்கள் உண்மையாகவே நிஜ!! விடுமுறையாக இருந்தது.

பெரும்பாலும் ஊருக்குப் போனால் உறவினர்கள் வீட்டுக்குச் செல்லவே சரியாக இருக்கும் நம்ம வீட்டில் அம்மா அப்பாவுடன் இருக்கவே முடியாது.

திருமணமானால் இது பெரிய பிரச்சனைங்க!

ஒரு வாரம் ஊருக்குப் போனால் பயண நாள் உறவினர்கள் வீடு என்று போனால் ஒரு நாள் நம்ம வீட்டில் இருந்தாலே பெரிய விஷயம்.

இந்த முறை முதலிலேயே கூறி விட்டேன் ரொம்ப முக்கியம் (அதுவே பத்து வீடு வரும்) என்றவற்றை தவிர வேறு எங்கும் செல்லப்போவதில்லை என்று 🙂 .

கிராமம்

நாங்கள் தற்போது எங்கள் கிராமத்தில் (எட்டு கிலோ மீட்டர் தான்) இருந்து நகரமான கோபி(செட்டிபாளையம்) குடிபெயர்ந்து விட்டோம்.

ஆனால், தீபாவளிக்கு கிராமத்து வீட்டிற்க்கே செல்லலாம் என்று அனைவரும் ஏக மனதாக முடிவு செய்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் அங்கே தான் இருந்தோம்.

இணையம் தொலைக்காட்சி என்று எதுவும் கிடையாது. நான் தொலைக்காட்சியைக் கொண்டு வரக் கூடாது என்று கண்டிப்பாக கூறி இருந்தேன்.

ஒவ்வொரு தீபாவளி அன்றும் நினைப்பேன் நம் குடும்ப சந்தோசத்தை கெடுப்பதே இந்த டிவி தான்.

இது இல்லாமல் இருந்தால் தான் தீபாவளி நமக்கு தீபாவளி மாதிரி இருக்கும் இல்லை என்றால் இதுவும் “விடுமுறை நாள் கொண்டாட்டம்” ஆகி விடும் என்று.

தொலைக்காட்சி

கடந்த மூன்று வருடங்களாக தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல முடியவில்லை இந்த முறை சென்றதால் கண்டிப்பாக தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன்.

ஊருக்கு வேறு சென்றதால் தொலைக்காட்சி இல்லாதது நன்றாகப் போய் விட்டது. நினைத்து இருந்தால் ஏற்பாடு செய்து இருக்க முடியும் ஆனால், அது இருந்தால் யாரும் பேச மாட்டார்கள்.

அனைவரும் இதையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என்பதால் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து அதன் படியே அனைவரும் இருந்து விட்டோம்.

நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க தொலைக்காட்சி இல்லாம இருந்தது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தலை யாருக்குமே இது இல்லாமல் இருந்தது பெரிய பிரச்சனையா தெரியலை.

குழந்தைகள்

குழந்தைகள் (என் பையன், என் அக்காக்கள் குழந்தைகள்) அனைவரும் கார்ட்டூன் பார்க்காமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

அதோடு அனைவரும் நெருங்கிப் பழகினார்கள். என் பையன், அண்ணா அக்கா என்று அவங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தான்.

அக்கா அம்மா அப்பா என்று அனைவருக்கும் பேச அதிக வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிகைக் காலங்களில் தொலைக்காட்சி இல்லாமல் இருப்பதால் இத்தனை நன்மையா என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

இனி எந்தத் தீபாவளிக்கும் தொலைக்காட்சி கிடையாது என்று முடிவு செய்து விட்டேன். சும்மா பேச்சுக்கு இல்லைங்க நிஜமாகவே.

இதைப்போலப் பண்டிகை காலங்களில் தொலைக்காட்சி இல்லாம இருந்து பாருங்க அப்பத் தெரியும், நீங்கள் எவ்வளவு விசயங்களை மகிழ்ச்சிகளை தவற விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று.

இந்த நேரங்களில் நான் கிரிக்கெட் ஸ்கோர் மட்டும் நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

செடிகள்

நான் வைத்த மரங்கள் (செடிகள்) எல்லாம் இந்த மழைக்கு சூப்பராக வந்து இருந்தது. பார்க்கவே ரொம்ப சந்தோசமாக இருந்தது.

அடுத்த முறை ஊருக்கு வரும் போது பெரிய மரங்கள் ஆகி விடும் 🙂 .

வேலாயுதம் Vs ஏழாம் அறிவு

தீபாவளி திரைப்படங்களில் வேலாயுதம் தான் முதல் இடம். ஏழாம் அறிவு அதற்குப் பிறகு தான்.

எங்கள் ஊர் திரையரங்கம் கோபி ஜெயமாருதியில் வேலாயுதம் போட்டு இருந்தார்கள்.

நம்ம கவுண்டர் சின்னத் தம்பி படத்துல படம் பார்த்துட்டு கண்ணை மூடிட்டே டிவிஎஸ் ஓட்டிட்டு வரேன்னு ரகளை பண்ணிட்டு வருவாரே அந்த படம் பார்க்கும் திரையரங்கம் தான் இது 🙂 .

QUBE ஆடியோ என்று போட்டு இருந்தார்கள் சரி சூப்பரா இருக்கும் என்று நினைத்துப்போனால் எக்கோ ஆகி கொலை வெறி ஆக்கி விட்டார்கள் ஒரு இழவும் புரியல.

படம் முழுக்க வேலாயுதம் வேலாயுதம்னு யாரைப்பார்த்தாலும் சொல்லிட்டு இருக்காங்க. கடைசில விஜய் எண்ணெய் எல்லாம் தடவி ப்ளைன் பேக் காட்டி பயம் காட்டிட்டாரு.

இந்தப்படத்துல ஒரு காட்சில இவர் யார் தெரியுமா! என்று ஒரு பெருசு எடுத்து விடும் அது மாதிரி இதுல எங்காவது படையப்பா தலைவர் மாதிரி வாட் ஏ மேன்! என்று யாரும் கூறி விடுவார்களோ என்று பீதி ஆகிட்டேன்.

தலைவரைப் பார்த்தே ஏற்கனவே கலவரம் ஆகி இருந்தேன்.

திரையரங்கம்

கோபில ஒரு திரையரங்கம் கூட உருப்படியாக இல்லை. கூட்டம் வராததால் அவர்களும் பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்கள்.

எப்படி இருந்த ஸ்ரீ வள்ளி திரையரங்கம் இப்ப எப்படியோ ஆகி விட்டது.

எனக்கு இது ரொம்ப வருத்தம். இது எங்கள் உறவினர் திரையரங்கம் தற்போது லீஸ் க்கு விட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஏழாம் அறிவு இதைப்போல (இரண்டு) டப்பா திரையரங்கில் வெளியாகி இருந்ததால் சிங்கப்பூர் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று இங்கே வந்து பார்த்தேன்.

தமிழ் ஜல்லியை குறைத்து இன்னும் திரைக்கதையை ஸ்க்ரிப்பாக்கி இருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் முருகதாஸ், அடுத்த படம் விஜய் கூட என்று நினைக்கிறேன்.

ஸ்ருதி

படத்தில் வரலாறு கூறி அறிவுரை சொல்வதைப் போல வருவதால் மக்களுக்கு சலிப்பாகி விட்டது என்று நினைக்கிறேன். ஸ்ருதிக்கு சுத்தமா நடிக்கவே தெரியலை.

தமிழைப் பற்றி பேசும் படத்தில் இவர் பேசும் தமிழ் கொடுமையாக இருக்கிறது வட மாநில மக்கள் பேசும் தமிழைப் போல. சூர்யா ஸ்ருதி கெமிஸ்ட்ரி சுத்தமா வொர்க் அவுட் ஆகலை.

சூர்யா, கமல் பொண்ணு என்பதாலோ என்னவோ பயந்த மாதிரி தான் கட்டிக்கூட பிடிக்கிறார் தொட்டும் தொடாமல்.

மற்றபடி படம் அருமை, அதைக் கொடுத்த விதத்தில் தான் முருகதாஸ் ஸ்லிப் ஆகி விட்டார்.

இரண்டு படத்தில் எனக்கு ஏழாம் அறிவு தான் ஓகே. தலைவர் பொண்ணு முதல் முறையாக இயக்கிக்கொண்டு இருக்கும் “3” படத்திற்கு தனுஷ் ஹீரோயின் இவர் தான்.

என்ன ஆகப்போகிறதோ! தயவு செய்து டப்பிங் வேற யாராவது கொடுங்கப்பா!

சிமென்ட் சாலை

கோபியில் கொடுமையான சாலைகளாக இருந்தவை எல்லாம் தற்போது சிமென்ட் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டு நன்றாக உள்ளது.

தேர்தலுக்காக ஒவ்வொருவரும் செலவழித்த தொகை (எங்க கிராமம் உட்பட) பற்றிக் கேட்டால் நொந்து விடுவீர்கள்.

ஒரு வார்டு மெம்பரே லட்சக்கணக்கில் செலவு செய்து இருக்கிறார். பணத்தை “தண்ணீராக” செலவழித்து இருக்கிறார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் பணம், சரக்கு, பிரியாணி என்று சட்டமன்ற தேர்தலுக்குச் சற்றும் குறையாமல் நடந்து இருக்கிறது.

பெண்களுக்குப் புடவை!! இதைப் பற்றிக் கேள்விப்பட்டதை எல்லாம் விளக்கினால் டென்ஷன் ஆகி விடுவேன் என்பதால் இதோடு நிப்பாட்டிக்குறேன். கிர்ர்ர்ர்

கருங்கரடு முருகன் கோவில்

நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் செல்லும் கருங்கரடு முருகன் கோவில் குடும்பத்துடன் சென்று வந்தேன்.

அமைதியான சூழ்நிலை, மரங்கள் அதிகம் உள்ள இயற்கை சூழ்ந்த இடம். இந்தக் கோவிலில் மட்டுமே என்னால் நிம்மதியாக இருக்க முடிகிறது.

கூட்டம் இல்லாதது, பழமையோடு இருப்பது, குன்றின் மீது இருப்பது, இயற்கையான சூழலில் இருப்பது.

டைல்ஸ் மார்பிள் என்று எதுவும் வராமல் பழைய அழகு அப்படியே இருப்பது போன்ற காரணங்களே இதன் மீது எப்போதும் எனக்கு இருக்கும் பிரியத்திற்கான காரணம்.

இது வரை எத்தனையோ கோவிலுக்குச் சென்று இருக்கிறேன் சபரிமலை, பழனி உட்பட ஆனால் இந்த முருகன் கோவில் மட்டுமே எனக்கு ரொம்பப் பிடித்த இடம்.

இந்தக்கோவில் பல திரைப்படங்களில் வந்துள்ளது.

நான் கூறிய கோவிலையும் எங்கள் கிராமத்தையும் வீட்டையும் பின் வரும் இடுகைகளில் புகைப்படங்களாக காணலாம்

என்னுடைய கிராமத்து பயணம் புகைப்படங்களுடன்

சின்ன கோடம்பாக்கம் “கோபி” வயல்வெளி காட்சிகள்

கோவை

துணி எடுக்கக் கோவை சென்று இருந்தோம். ஸ்ரீதேவியில் புடவைகள் நன்றாக இருந்தன அவர்களுடைய சர்வீஸ் ம் நன்றாக இருந்தது.

குழந்தைகளுக்கான உடைகள் திருப்தியாக இல்லை சென்னை சில்க்ஸ் ல் நன்றாக இருந்தது ஆனால், விலை அதிகம்.

பொதுவாகவே அனைத்து இடங்களிலும் உடைகளின் விலைகள் மிக அதிகமாக இருக்கிறது. கிராஸ்கட் ரோடு கூட்டத்தால் திணறிக்கொண்டு இருந்தது.

இதைப்போலப் பண்டிகை காலங்களில் காரைப் பார்க் செய்வது என்பது பெரிய விசயமாக உள்ளது.

எப்படியோ லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் ல் காரை நிறுத்தி விட்டோம். அதில் எங்க காரை எடுக்கும் முன்பே அந்த இடத்தில் நிறுத்த பயங்கரப் போட்டி.

இரண்டு முறை கோவை சென்று இருந்தேன் ஒரு முறை அக்கா பையன் மனைவி நான் மூவரும் ஒரு முறை சென்று இருந்தோம்.

அந்த முறை இவன் மாம்ஸ்! காஃபி சாப்பிடலாம் என்றதால் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னபூர்ணா கௌரி சங்கர் சென்றோம்.

சரி அவன் கம்பெனிக்கு நாம் ஒரு காஃபி குடிப்போம் என்று காஃபி சொன்னேன் என்னோட மனைவி கப் ஐஸ்க்ரீம் என்றார் சரி என்று இதை ஆர்டர் செய்தோம் பில் எவ்வளவோ வந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள். 80 ருபாய்.

எனக்கு கண்ணைக்கட்டி விட்டது டேய்! ஒரு காஃபி சாப்பிட வந்து 80 ருபாய் பழுத்து விட்டதே என்று சொன்னேன்.

காஃபி 18 ருபாய் ஐஸ்க்ரீம் 44 ருபாய் அது கூட அவர்களே தயாரித்த சாதா ஐஸ்க்ரீம் தான். அருண் ஐஸ்கிரீம் மாதிரி எல்லாம் இல்லை.

ஒரு மொக்கை ஐஸ்கிரீம் க்கு 44 ருபாய் எல்லாம் ரொம்ப அதிகம். அநியாயம்!

நான் இனி மறந்து கூட காஃபி குடிக்க மாட்டேன். நான் எப்போதும் காஃபி குடிக்க மாட்டேன்.. சரி! இவனுக்கு கம்பெனி கொடுப்போமே என்று வாங்கினேன்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அடுத்த முறை அனைவரும் குடும்பத்துடன் சென்ற போது அந்த பக்கமே எட்டிப் பார்க்கவில்லை 🙂 .

நண்பர்கள்

சென்னையில் உள்ள என் அலுவலக கிளைக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்று இருந்தேன். பழைய நண்பர்களை எல்லாம் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

ஒரு நாள் தான் அங்கே இருந்ததால் நிறையப்பேரை பார்க்க முடியவில்லை.

அந்த இரவு தான் என் சென்னை அறை நண்பர்களுடன் கேரளா செல்ல முடிவு செய்து இருந்தோம்.

ரொம்ப சூப்பராக இருந்தது. இது பற்றி அடுத்த இடுகையில் எழுதுகிறேன் குறிப்பா அலப்பி போட் ஹவுஸ்.

Read: அலப்பி படகு வீடு சுற்றுலா

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. நான் எந்தப் பண்டிகைக்கும் தொலைக்காட்சியை ஆன் செய்வதில்லை, பல வருடங்களாகவே:)! பயணம் இனிதே அமைந்தது அறிந்து மகிழ்ச்சி. கேரளா டூர் பற்றி அறியக் காத்திருக்கிறோம். புகைப்படங்களுடன்தானே பதிவு:)?

 2. பயணக்குறிப்புகளை சுவாரசியமாக தந்திருக்கிறீர்கள். இளைய தளபதியை யாரும் தோற்கடிக்க முடியாது

 3. உங்கள் பயணம் நீங்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் இனிதே அமைந்தது என்பது உங்கள் இப் பகிர்வை படிக்கையில் புரிகிறது

  ஏழாம் அறிவு விமர்சனம் தனி பகிர்வாக தருவீர்கள் என்று எதிர் பார்த்தேன் கிரி

 4. வணக்கம் கிரி அவர்களே,

  நீண்ட நாள் கழித்து உங்கள் இடுகையை படித்ததில் மகிழ்ச்சி.உங்கள் பயணகுறிப்பு அருமையாக இருந்தது .மேலும் தலைவர் கௌரவ வேடத்தில் நடித்த ரா ஒன்னைப் பாற்றி நீங்கள் எதுவும் கூறவில்லையே?அதேப் போல் உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்தும் நீங்கள் குறிப்பிடவில்லை.நேரமின்மையால் இவை விடுபட்டிருக்கும் என நினைக்கிறேன்.

 5. பயண குறிப்புகள் அருமை. நான் இம்முறை ஊர் சென்ற பொது, விளை நிலம் வாங்கியுள்ளேன். விவசாயம் செய்வது, farm house அமைப்பது என் பிளான். வயதானால் நிம்மதியாக சில நாள் இருக்க உதவி செய்யும்னு நினைக்கிறேன். வெளிநாட்டில் இருப்பது ஒரு மாய வாழ்க்கையே.

 6. நான் வைத்த மரங்கள் (செடிகள்) எல்லாம் இந்த மழைக்கு சூப்பராக வந்து இருந்தது. பார்க்கவே ரொம்ப சந்தோசமாக இருந்தது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது பெரிய மரங்கள் ஆகி விடும் /
  பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள் மரங்களுக்கு..

 7. பயணக்குறிப்புகள் நன்றாக உள்ளது.
  கேரளா டூர் பற்றிய பதிவு படிக்க ஆவலாக இருக்கிறேன்.

 8. வாங்க தல வாங்க!!!
  ரொம்ப நல்லா இருக்கு பயண குறிப்பு.. பையன் என்ன பண்ணுறான் தல.. அட்டகாசமா இருக்கான் நல்லா சுட்டி யா இருப்பான் போல:)

  ஜி,
  உங்க மெயில் செக் பண்ணுங்க Time கிடைக்கும் போது

  – அருண்

 9. @ராமலக்ஷ்மி என்னுடைய புகைப்பட கருவி சரியாக இல்லை எனவே இருப்பதிலே ஓரளவு சுமாரான!! படத்தை பகிர்கிறேன் 🙂

  @காயத்ரி நாகா ரைட்டு

  @பாலா 🙂 🙂

  @சரவணன் உங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம். ஏழாம் அறிவு ஏற்கனவே வரைமுறை இல்லாமல் பலர் எழுதித் தள்ளி விட்டார்கள் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது.

  @இளவசரன் ரா ஒன் பற்றி ரஜினி பற்றிய ஒரு இடுகையில் எழுதுகிறேன் பின்னர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது தானே! ஆனால் நான் கொஞ்சம் திமுக விற்கும் கிடைக்கும் என்று நினைத்தேன் ஆனால் மொத்தமாக கவுத்து விட்டார்கள்.

  @ஆனந்த் நீங்க ஃபார்ம் ஹவுஸ் வாங்குவதே இந்த வெளிநாட்டு பணத்தின் மூலம் தானே! 🙂 யாரும் (சில விதி விலக்குகள் தவிர்த்து) இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் சூழ்நிலைகள் நம்மை இப்படி ஆக்கி விடுகிறது. என்ன செய்வது!

  @வாசுகி அதில் உங்களைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு இருக்கு 🙂

  @அருண் உங்களை காணாமல் போனவர்கள் லிஸ்ட் ல சேர்க்கலாம்னு இருந்தேன் நல்லவேளை வந்து விட்டீர்கள் 🙂

 10. கருங்கரடு முருகன் கோவில் மேலிருந்து பார்த்தால், வயல்களின் அணிவகுப்பு கண்ணுக்கு குளுமையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here