அலப்பி படகு வீடு சுற்றுலா

22
அலப்பி படகு வீடு

நெருங்கிய நண்பர்கள் 8 பேர் இணைந்து அலப்பி படகு வீடு சுற்றுலா செல்லத் திட்டமிட்டோம்.

சென்னையில் எந்த அளவிற்கு ரணகளமாக இருந்தோமோ அதே போல நீண்ட வருடங்களுக்குப் பிறகு அனைவரும் ஜாலியாக இருந்தது சரவெடியாக இருந்தது.

சென்னையில் ரயிலில் புறப்பட்டு அலப்பி வந்தடைந்தோம்.

அலப்பி

அலப்பி ஊர் கேள்விப்படாதவர்கள் ரொம்பக்குறைவு. அங்கே என்ன பிரபலம் என்று தெரியவில்லை என்றாலும், ஊர்ப் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

இவ்வளவு பிரபலமான ஊர் பேருந்து நிலையம் மோசமாக இருந்தது தான் அதிர்ச்சியாக இருந்தது.

அலப்பி படகு வீடு

அலப்பி ஊர் படகு வீட்டிற்கு மிகப்பிரபலமானது. ஆயிரக்கணக்கான படகுகள் இங்கே உள்ளது. நம்ம ஊர்ல பேருந்து போல இவர்களுக்குப் படகு தான் போக்குவரத்து.

பேருந்து நிறுத்தம் போல பல இடங்களில் படகு நிறுத்தம் உள்ளது இங்கே ஏறி இறங்கிக் கொள்கிறார்கள்.

பல இடங்களில் பேருந்து கிடையாது முழுவதும் படகு தான்.

முன்பே படகு வீட்டிற்கு முன் பதிவு செய்து இருந்தோம், உடன் என்னுடைய நண்பனுடைய கேரளா நண்பனும் வந்து இருந்ததால், எங்களுக்கு மொழிப் பிரச்சனை எதுவுமில்லை,  மலையாளம் பேசுபவர்கள் தமிழ் நன்கு அறிந்து இருக்கிறார்கள்.

குறைந்த பட்சம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனவே, சமாளிக்க முடியும்.

படகு வீடு செக் இன் டைம் மதியம் 12 மணி செக் அவுட் டைம் காலை 9 மணி. பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட ஆட்டோ பயணத்தில் படகு வீட்டை அடைந்து விடலாம்.

படகு அமைப்பு

தேவைக்குத் தகுந்த படகைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது ஒரு அறை, இரண்டு அறை, மூன்று அறை என்று. நாங்கள் எட்டுபேர் இருந்ததால் மூன்று அறையுள்ள படகு வீட்டை முன்பதிவு செய்து இருந்தோம் கட்டணம் 12 ஆயிரம் (*2011).

ஹோட்டல் அறைக்கு ஈடாக இருந்தது (வெஸ்டர்ன் டைப் டாய்லெட் உட்பட) மேல் தளத்தில் பால்கனி, பின்புறம் சமையல் அறை உள்ளது. படகு ஓட்டுபவர் சமையல் செய்பவர் என்று மூன்று பேர் இருந்தார்கள்.

நம்மைத்தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். ஓட்டுனர் மற்றும் சமையல் செய்பவர்கள் தவிர.

சமையல்

மதியம் கறி மீன் பொளிச்சு மற்றும் கேரளா அரிசி, சாம்பார் மற்றும் பழங்கள் உணவாகக் கொடுத்தார்கள். கறி மீன் வாய்ப்பே இல்லை செம சூப்பரா இருந்தது.

பேக் வாட்டர் பயணம்

மதியம் நம்மை ஏற்றிக்கொண்ட பிறகு புறப்படும் படகு பேக் வாட்டர் என்று அழைக்கப்படும் நீர்ப் பகுதியில் செல்ல ஆரம்பிக்கிறது.

மிகப்பெரிய பரந்து விரிந்த நீர்ப்பகுதி. நம்மைப்போலப் பலரை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான படகுகள் இதே போலச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

கண்டபடி சுற்ற முடியாது அவர்களுக்கென்று விதிமுறைகள் உள்ளது அதன் படி தான் செல்ல வேண்டும்.

சாலையில் நாம் எப்படி வண்டி ஓட்டுகிறோமோ அதே போல அங்கேயும் சிக்னல் உண்டு, பாதைகள் உண்டு அதன் படி தான் செல்ல வேண்டும்.

ஹார்ன் எல்லாம் அடிப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 . படத்தில் இருப்பது படகு நிறுத்தம் பேருந்து நிறுத்தம்போல.

முதலில் ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம். யாரோ ஒருவர் பெயர் கூறினார்கள் மறந்து விட்டது, அவர் தான் இதைச் சீராக்கி தண்ணீரில் பாதை அமைத்துப் படகு சவாரி செய்யும்படி அமைத்தாராம். இதன் பிறகு சுற்றுலாக்கு பிரபலமானதாம்.

இது நடந்தது தற்போது அல்ல பல காலம் முன்பே. பாருங்க அவர் அப்போதே எப்படி அட்டகாசமாக யோசித்து இருக்கிறார் என்று!

படத்தில் தெரியும் வயல்ப்பகுதி போல இருக்கும் இடம் முன்பு தண்ணீரால் சூழப்பட்டு இருந்ததாம், அதை வெளியேற்றி இது போலக் கரை அமைத்து மாற்றி இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான படகுகள்

பீக் ஹவர்சான (ரிடர்ன்) காலையில் படகுகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தை நோக்கிச் செல்வதால் போக்குவரத்து நெரிசலாக இருக்கும்.

படத்தில் பாருங்கள், வரிசையாகச் சென்று கொண்டு இருக்கிறது. வரிசையாகப் பேருந்து நின்றால் எப்படி இருக்கும் அதே போல இருந்தது.

படகு ஓட்டுனரிடம் விசாரித்த போது இங்கே ஆயிரக்கணக்கான படகுகள் இது போல ஓடுவதாகக் கூறினார். மலைப்பாக இருந்தது.

மாலை 5.30 மணி வரை படகு சுற்றிக்கொண்டு இருக்கிறது. பின் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விடுகிறார்கள் அடுத்த நாள் காலை எட்டு மணி வரை.

மோட்டல்

மாலையில் சுற்றிக்கொண்டு இருக்கும் போது நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல் போல இங்கே ஒரு கரையில் இடம் உள்ளது 🙂 .

அங்கே ஒரு இடத்தில் நிறுத்தினால் நாம் இறங்கி நமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் (பெப்சி, கோக், பிஸ்கட், பழங்கள். இளநீர், சமைக்க மீன்!!) பின் திரும்பப் படகு கிளம்பி விடும்.

முன்னரே கூறியபடி மதியம் காலை உணவு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்கள் இரவிற்கு நாம் தான் வாங்கித்தர வேண்டும், அதற்கும் இவர்களே உதவுகிறார்கள். இரவில் கொசுக்கடி ரொம்ப மோசமாக இருந்தது.

பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததால், கொசுக்கடி தவிர்க்க முடியாததாக இருந்தது.

நாங்கள் இருந்த படகு உரிமையாளரின் வீட்டின் அருகே நிறுத்தி எங்களுக்கு அங்கே இருந்து கேபிள் கனக்சன் கொடுத்தார்கள். அனைத்து சேனலும் வந்தது.

மதுபானம்

மதுபானம் அருந்துபவர்கள் அலப்பி பேருந்து நிலையம் அருகிலேயே வாங்கி வர வேண்டும். படகிற்கு வந்த பிறகு ஏற்பாடு செய்வது என்பது சிரமம்.

படகு உள்ளே ஐஸ் கட்டிகள் போடப்பட்ட ஃப்ரீஸர் உள்ளது இருப்பினும் ஃப்ரீஸர் உள்ளதா என்று முன்னரே உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

படகில் போலிஸ் ரெய்டு நடைபெற்றாலும் நடைபெறலாம் எனவே மறக்காமல் வாங்கியதிற்கு ரசீது வைத்துக்கொள்வது நல்லது.

நீங்கள் நண்பர்களுடன் வந்தால் மதுபானம் அருந்துபவராக இருந்தால் நிச்சயம் வாங்கி வரவும் ரொம்ப அருமையான அனுபவமாக இருக்கும் அளவோடு இருந்தால்.

குளியல்

படகு காலைச் சரியாக 9 மணிக்குத் திரும்ப நம்மை ஏற்றிய இடத்திற்கே வந்து விட்டு விடும் நாம் அதற்குள் படகிலேயே குளித்துக் காலை உணவை முடித்துக்கொள்ளலாம்.

குளிக்கத் தண்ணீர் நன்றாக உள்ளது பேக் வாட்டர் கிடையாது சோப்பு முதற்கொண்டு அங்கேயே கொடுத்து விடுகிறார்கள். உணவுடன் ஃகாபியும் கிடைக்கும்.

நாங்கள் சென்ற படகில் அருமையாக உணவு செய்து கொடுத்தார்கள் அனைத்துமே நன்றாக இருந்தது. நான் மதியம் சாப்பிட்ட போது கேரளா அரிசி தான் சாப்பிட்டேன். நமது அரிசியும் கொடுக்கிறார்கள்.

படகுக் கட்டணங்கள்

சீசனுக்கு தகுந்த மாதிரி அலப்பி படகு வீடு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் சென்றால் கட்டணம் குறைவாக இருக்கும்.

நாங்கள் முதலில் குமரகோம் தான் செல்லலாம் என்று இருந்தோம் ஆனால், அதிக கட்டணம் என்பதால் இங்கே வந்தோம்.

அதே படகு வீடு தான் எந்த மாற்றமும் இல்லை. இங்கே 12 ஆயிரம் கட்டணம் இதே குமரகோமில் 20000 கேட்டார்கள். எனவே, நான் அலப்பியையே உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

குடும்பத்துடன் நண்பர்களுடன் என்று எப்படி சென்றாலும் இது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.

என்ஜாய் பண்ணுவதில் இரண்டு வகை உள்ளது ஒன்று ஊர் ஊராகச் சுற்றுவது பல இடங்களைப் பார்ப்பது.  இன்னொன்று இதைப்போல ஒரு இடத்தில் இருந்து கொண்டு எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் பேசி மகிழ்வது

இதில் நீங்க எந்த வகையாகச் சென்றாலும் வழக்கமான மன நெருக்குதல்களில் இருந்து நிச்சயம் ஒரு இளைப்பாறுதல் கிடைக்கும்.

நாங்கள் பயன்படுத்திய படகு பற்றிய விவரங்கள் இவை. ஒரு நிறுவனமே பல்வேறு வகையான படகுகளை வைத்துள்ளார்கள்.

நம் தேவைக்கு ஏற்றார்ப்போலத் தேர்வு செய்து கொள்ளலாம். இவர்கள் தளத்தைப் பார்வையிட்டால் உங்களுக்குப் பேக்கேஜ் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும்.

Angel Queen Travels
Specialist in backwater package
Contact person: Tomeychen Palackal
Mobile: +91 98475 04216
Mail ID: angelqueentours@yahoo.com

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

22 COMMENTS

 1. //தமிழ்ப் பற்றாளர்கள் சினிமா துறையினருக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் எங்களைப் போன்றவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன்//

  அதுல்லாம் முடியாது!!! உங்கள் பயணத்தை எதிர்த்து நான் போராட்டம் நடத்தலாம்’ன்னு இருக்கேன்!!! 🙂

 2. 15 வருடமாக நண்பர்களுடன் தொடர்பில் உள்ளது நல்ல ஆரோக்கியமான விஷியம்… இனி வரும் காலங்களிலும் தொடர என் பிராத்தனைகள் & வாழ்துக்கள்.. எனக்கும் ஒரே ஒரு நண்பன் உண்டு..சக்தி!!! (7 ஆண்டுகளாக)…

 3. மீண்டும் ஒருமுறை கேரளா டூர் போகும் ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் பகிர்வு:)! இலங்கை செல்லும் ஆசை எனக்கும் உண்டு.

 4. தயவு செய்து இலங்கை செல்ல வேண்டாம் நண்பா…. நம் தமிழ் மக்கள் குருதி படிந்த பூமி அது… அந்த பூமியில் ஒரு தமிழன் உள்ளசாமாக சுற்றலாமா…. உங்கள் சொந்த விஷயத்தில் நான் தலை இடுகிறேன் என்று நினைத்தாலும் பரவாயில்லை…. என்னை அசிங்கமாக திட்டினாலும் பரவாயில்லை….
  தயவு செய்து இலங்கை பயணத்தை ரத்து செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…. அப்படியே போனாலும் அங்கு நடக்கும் அவலங்களை படம் பிடித்து உங்கள் வலைபதிவில் போடுங்கள்…. வாழ்த்துக்கள்…

  தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்…

  இப்படிக்கு
  சுமன்(தமிழன்)

 5. சூப்பர் கிரி. நெருங்கிய நண்பர்களோட சேர்ந்து எங்க போனாலும் அது சூப்பர்தான் கிரி. செம்ம லொக்கேஷன் போல… எனக்கும் இந்த படகு வீட்டுக்கு ஒரு தடவ குடும்பத்தோட போகணும்னு ரொம்ப நாளா ஆசை. மூணாறு, தம்பதி சகிதமா போக வேண்டிய ஹனிமூன் ஏரியா பாஸ், அங்க நண்பர்களோட ஊர் சுத்திப் பாக்க ஒண்ணுமே இல்ல.

  சுற்றுலான்னு யோசிச்சோம்னா நம்ம தமிழ் நாட்டுக்குள்ள ஊட்டி, கொடைக்கானல் தவிர எதுவும் தோன மாட்டேங்குது, இப்ப அங்க போறதும் வேஸ்ட், ஒண்ணும் உருப்படியா இல்ல அங்க. பக்கத்து கேரளா & கர்நாடகாவ பாருங்க, சுற்றுலாத்துறை எவ்ளோ நல்லா இருக்குன்னு…

 6. ஆலப்புழை என்பது தானே அலப்பி, சரிதானே?

  எனக்கும் (எங்களுக்கும்) ஆசையுண்டு. இந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்று.

 7. அன்புள்ள கிரி,

  உங்களுடன் நாங்களும் கூடவே பயணித்த உணர்வு. பகிர்வுக்கு நன்றி.

  >>இடையில் நடந்த கலாட்டாக்களும் கேரளாவில் நடந்த கலாட்டாக்களும் சென்சார் செய்யப்பட்டு விட்டது

  வழக்கமாக ஹாலிவுட் மற்றும் பாலிவுட் டி.வி.டி-க்களில் “deleted scenes “என்று ஒரு பின்னிணைப்பு இருக்கும். இந்தப் பதிவின் தொடர்ச்சியை எதிர்பார்க்கலாமா ? :-)))

 8. ஆலப்புழை போகாமலே சுற்றிப் பார்த்த அனுபவத்தை வாசகர்களுக்கு கிரியால் மட்டும் தான் கொடுக்க முடியும் …வாழ்க்கை வாழ்வதற்கே! நன்கு உணர்ந்து உள்ளீர்கள் கிரி…இந்த சந்தோசம் என்றும் நீடிக்கட்டும்!!!

 9. வாசிக்கும் போதே பிரமிப்பாக உள்ளது, இலங்கைக்கு வரும் பொது நிச்சயம் சந்திப்போம்; என்னையும் நினைத்துப் பார்த்ததற்கு நன்றி 🙂

 10. முருகேசன் சுப்பையா அவர்கள் எடுத்த எர்ணாகுளம் படங்கள் அனைத்தும் பிரமாதம். [என்ன கேமரா உபயோகிக்கிறார் எனத் தெரிவிப்பாரா?]

  எனது குமரகம் பயணப்படங்கள் சில இந்தப் பதிவில்: http://tamilamudam.blogspot.com/2010/02/pit.html

  அனைத்துப் படங்களும் ஃப்ளிக்கர் தளத்தில் இங்கே: http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/sets/72157625430241291/

 11. @ சங்கர் வெங்கட்,
  மிக்க மகிழ்ச்சி:)! (ஒரு வருடம் முன்) நான் வாங்கியிருப்பதும் Nikon D5000 -தான். கேரளப் படங்கள் சோனி W80 -ல் எடுத்தது. இப்போது D5000-யே உபயோகிக்கிறேன்.

  உங்களது மற்ற ஆல்பங்களும் பார்த்தேன். எல்லாப் படங்களும் அருமை.

 12. @சரவணகுமரன் 🙂 🙂

  @யாசின் விட்டுக்கொடுக்கும் தன்மையும் புரிந்துணர்வும் இருந்தால் இது போல என்றும் தொடரலாம்.

  @ராமலக்ஷ்மி அனைவரும் சந்தோசமாக போய் வாங்க 🙂

  @சுமன் 🙂 இது நான் ஒருவன் முடிவு செய்வதில்லை அனைவரும் முடிவு செய்வது.

  @முத்து அதற்கு அவர்களைப்போல சுற்றுலாத் தளங்கள் நம் பகுதியில் ரொம்பக்குறைவாக இருப்பதும் உண்மை.

  @ஜோதிஜி ஏற்க்கனவே யாசின் கூறிட்டாறு 🙂

  @ஸ்ரீநிவாசன் ஹா ஹா ஹா உங்க கமெண்ட்டை ரொம்ப ரசித்தேன் 😀

  @காயத்ரி நாகா நான் சென்ற சுற்றுலாக்கள் மிக மிக குறைவு. என் வாழ்க்கையிலேயே இதைப்போல சென்றது அதிபட்சம் ஐந்து அல்லது ஏழு இருக்கலாம். உங்கள் அன்பிற்கு நன்றி.

  @ஜீவதர்ஷன் இலங்கை என்றால் உங்களை மறக்க முடியுமா! 🙂 உங்களை நண்பராகக் கொடுத்த தலைவருக்குத்தான் நன்றி சொல்லணும் 🙂

  @ சங்கர் வெங்கட் உங்க படங்கள் அனைத்தும் அருமை. தேர்ந்த புகைப்படக்காரரைப்போல எடுத்து இருக்கிறீர்கள். கேமராவும் அசத்தல் பளபளன்னு இருந்தது. ராமலக்ஷ்மி அவர்களுக்கும் புகைப்படங்கள் மீது ரொம்ப ஆர்வம். அவருடைய தளம் சென்று பாருங்கள்.

 13. ஹாய் கிரி, மிக அருமைய சொல்லிட்டீங்க… போகணும் போல இருக்கு…

  அடுத்த மாதம் என் நண்பர்களுடன் குடும்பமாக ஏலகிரி போகலாம் என முடிவு செய்துள்ளோம்…

  அதை பற்றிய தகவல் ஏதும் இருந்தாலோ அல்லது வேறு யாம் எழுதி இருந்தாலோ கண்டிப்பாக பகிரவும்….

  மிக்க நன்றி..

 14. அலப்பி டூர் நல்லா இருக்கும் கிரி… நான் போய் வந்திருக்கிறேன்….

  சென்ற வருடம் இலங்கை டூர் சென்றிருந்தேன்… எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை!!

 15. //நாங்கள் மூணாரும் சென்றோம் ஆனால் அங்கே குறிப்பிடும்படியான இடம் எதுவுமில்லை அருகில் உள்ள “ராஜமலை” சென்றோம் ஆனால் ஒன்றுமே இல்லை மலை ஏறினது தான் மிச்சம்

  கிரி இந்த லிங்கை ஒரு பார்த்து வாருங்கள்…
  http://bharathidhas.blogspot.com/2011/01/bharathis-munar-trip.html
  நான் பார்த்த வரை ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, மூணாறு ஆகிய நான்கில் மூணாறு டாப். நீங்கள் அனைத்து இடங்களையும் பார்க்கவில்லை என்று நினைக்கிறன். அடுத்தமுறை செல்லும் போது சொல்லுங்கள், உங்களுக்கு செல்லவேண்டிய இடங்கள் போன்ற தகவல்கள் தருகிறேன்…

  நன்றி 🙂

 16. நீங்கள் மூணாறு பற்றி தந்த தகவல் மிகவும் தவறானது … ஏதோ இரண்டு இடம் சுற்றி விட்டு அங்கு பார்க்க வேறு எதுவும் இல்லை என்று சொல்ல வேண்டாம் இதுபோன்ற ஒரு இடம் காண முடியாது எனக்கு மிகவும் பிடித்த இடமும் மூணாறும் ஒன்று கடந்த வருடமும் சென்றேன் அது போல் இந்த வருடமும் செல்கிறேன் அதுவும் நாளை மறுநாள் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here