குடும்ப நிகழ்வுக்காக ஊருக்குச் சென்று இருந்த வாரம் முழுக்க இரவில் மழை. கோபிப் பகுதி முழுக்க பசுமை போர்த்தி கண்கொள்ளா காட்சியாக மாறி விட்டது.
ஈரோட்டில் இருந்து கோபி வரும் வழியில் சில இடங்களின் அடையாளமே மாறி விட்டது. கடும் அடர்த்தியாக மரங்கள், புற்கள் என்று மலைப்பகுதி போல அசத்தலாக இருந்தது.
வீட்டில் அக்கா பசங்க, என்னுடைய பசங்க என்று பலர் இருந்ததால், நேரம் போனதே தெரியவில்லை.
கோபி –> பங்களாபுதூர்
இரவில் மழை பெய்ததால், அதிகாலையில், நீங்கள் திரைப்படங்களில் காணும் வயல் பகுதியான கோபி –> பங்களாபுதூர் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்லலாம் என்று முடிவானது.
நான், என்னுடைய அக்கா பசங்க இருவர் என்று மூவர் செல்வதாக திட்டமிட்டு, பின் ஒவ்வொருவராக “நானும் வரேன் நானும் வரேன்” என்று அதிகரித்து ஏழு பேர் ஆகி விட்டார்கள்.
6.30 க்கு அனைவரும் கிளம்பினோம், குளிர் ஊசியாகக் குத்தியது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயலும், வாய்க்காலும் மட்டுமே இருந்தால், எப்படி இருக்கும்?! அற்புதமான மனநிலை.
அனைவரும் வாய்க்காலில், ஆற்றில், வயலில் என்று அனைத்து இடங்களிலும் நின்று நிழற்படம் எடுத்துக்கொண்டார்கள்.
என்னுடைய பையன் வினய் மெதுவா என்னிடம் வந்து, “அப்பா! நாம கோபியிலேயே இருந்துக்கலாமா?! ரொம்ப நல்லா இருக்கு” என்று கேட்டான் 🙂 . எனக்கும் விருப்பம் தான் ஆனால், இங்கே வேலை இல்லையே!
நீங்கள் இங்கே பார்க்கும் இடங்கள் அனைத்தும் எங்கள் வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்து துவங்குகிறது.
நகரமா கிராமமா
என்னுடைய பசங்களை முழுக்க நகரத்துப் பையனாக, என்னுடைய குடும்பம் மட்டும் என்ற குறுகிய வட்டத்தில் வளர்க்க எனக்கு விருப்பமில்லை.
எனவே, அவ்வப்போது இவர்களை ஊருக்கு அழைத்து வந்து உறவினர்கள், அவர்கள் பழக்கங்கள், வட்டார வழக்குடன் பழக்குகிறேன்.
அதாவது, ஊர் பாசம் என்ற அற்புதமான உணர்வை தொலைக்க விரும்பவில்லை. பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அண்ணன், அக்கா என்று உறவுகளின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களாக வளர்க்கவே விருப்பம்.
நம்முடைய பழக்க வழக்கங்களில் இருந்து பசங்க விலகி சென்று விடக்கூடாது என்கிற பயம் எனக்குள்ளது. எனவே தான் சொந்த மண்ணுக்குண்டான பாசத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதாக உள்ளது.
இதை இவர்கள் இருவரும் உணர்ந்து இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி. இவர்கள் இருவர் மட்டுமல்ல என்னுடைய அக்கா பசங்களும் இதைவிட பலபடிகள் மேலே இருப்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது.
“மாமா மாமா”ன்னு என் மீது உயிராக இருப்பார்கள், என் மீது மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவர் மீதும். கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன் 🙂 .
Zeon Cinemas
கோபி “இந்திரா” திரையரங்கம் தற்போது Zeon Cinemas என்று மாற்றம் பெற்று இருக்கிறது, பல வருடங்களாக மூடப்பட்டு இருந்தது. தீபாவளியில் இருந்து படம் திரையிடப்படுவதாகக் கூறினார்கள். உண்மையா என்று தெரியவில்லை.
மூன்று திரையரங்குகள் உள்ளன. கோபிக்கு இவ்வளவு அதிகமோ என்று தோன்றுகிறது. கொஞ்ச மாதங்கள் சென்றால் தான், வரவேற்பை பொறுத்துக் கூற முடியும்.
திறக்கப்பட்ட பிறகு செல்லலாம் என்று உள்ளேன், அக்கா பசங்க ஆர்வமாக உள்ளார்கள்.
பிற்சேர்க்கை – இந்திரா Zeon Cinemas | கோபி
Paytm
கோபி “முத்து மஹால்” திருமண மண்டபம் அருகே உள்ளே பெட்ரோல் நிலையத்தில், பெட்ரோல் போட்டுவிட்டு Paytm வழியாக கட்டணம் செலுத்திய பிறகு, குறுந்தகவல் வந்து விட்டதா? என்று உறுதி செய்த பிறகே அனுப்பினார், நான் என்னுடைய திறன்பேசியை அவரிடம் காண்பித்தும்.
துவக்கத்தில் “என்னடா இது ரொம்ப கண்டிப்பா இருக்காங்களே!” என்று யோசித்துக்கொண்டே வந்த போது..
அக்கா பையன் “மாமா! Paytm மாதிரி போலி செயலி செய்து ஒருவரை ஏமாற்றி விட்டார்களாம், அதனால் தான் இப்படி எச்சரிக்கையாக இருக்கிறார்கள்” என்றான்.
அடப்பாவிகளா! மின்னணு பரிவர்த்தனை செய்யவே பலர் யோசித்துட்டு இருக்காங்க, இதில் இது மாதிரி எல்லாம் செய்தால் அப்புறம் எவன் வருவான்! என்று கடுப்பானது.
இது போல செய்பவர்களை சுளுக்கெடுக்க வேண்டும்.
Paytm வழியாக பெட்ரோல் / டீசல் கட்டணம் செலுத்தினால் 1 ருபாய் முதல் நீங்கள் செலுத்தும் கட்டணத்துக்கு ஏற்ப Cashback கிடைக்கும் என்பது உங்களுக்கு கூடுதல் தகவல். Paytm வசதி இருந்தால், இது மட்டுமே பயன்படுத்துவேன்.
தொடர்புடைய கட்டுரை
ஒரு நாள் ஆட்டோ பயணம்! [படங்கள்]
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அடடா பார்க்கவே சந்தோசமா இருக்கு கில்லாடி.
கண்ணுக்கு குளுர்ச்சியான படங்கள். இதை எல்லாம் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது
கிரி, பதிவை பார்த்த உடனே மனசு கணமாகி விட்டது.. சொர்க்கமே என்றாலும் அது நாம் தாய் மண்ணை போல வராது என்பது உண்மையே!!! இது போன்ற பதிவுகள் என்னை இன்னும் ஆழமாக யோசிக்க வைக்கும்.. வாழ்க்கையின் சுவாரசியத்தை பற்றி இன்று படித்தது… உங்கள் பதிவிற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதால் பகிர்கிறேன்..
===============================================
“வாழ்க்கையில சுவாரஸ்யம்னு எதுவும் தனியா இல்லைங்க. எல்லாம் நம்ம கூடத்தான் இருக்கு. வேக வேகமா போற வாழ்க்கையை, மெதுவாக நகர்த்திப் பாருங்க. வாழ்க்கையின் சுவாரஸ்யம் புரியும்.
பிள்ளைகள் பள்ளிக்கு அவசரமாக கிளம்பும் போது அம்மா சோறு ஊட்டிவிடுவா…..அது இனிமை!
கணவன் வேலையை முடிச்சிட்டு அக்கடான்னு சோஃப்ஃபாவுல விழுந்துகிடக்கும்போது மனைவி ‘சுடச் சுட’ காபி கொடுத்தா, அத ரசிச்சிக்கிடே சாப்பிட்டா….அட அட, சுகம் தான்!
அப்பா சொல்படி மகன் கேட்டால்…..சந்தோஷமோ சந்தோஷம்!
இப்படி, வாழ்க்கையின் சுவாரஸ்சியம் நம் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளில் நிறையவே நிறைஞ்சிருக்கு!!!! ஆனா, நாமதான் அதை கவனிக்கிறதே இல்ல!!!! ” சத்தியமான உண்மை..
========================================================
புகைப்படங்கள் அழகாக யதார்த்தமாக இருக்கிறது!!! பதிவை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கிறேன்!!! புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கும் போது, அந்த பச்சை புல்வெளியில் நான் புரள்வதாக உணர்கிறேன்.. அடுத்த விடுமுறையில் நிச்சயம் ஒருமுறை இந்த பகுதிகளுக்கு செல்ல மனம் ஏங்குகிறது!!! பகிர்வுக்கு நன்றி கிரி..
@விஜய் 🙂 நன்றி. இப்ப எங்க ஊர் இப்படி தான் இருக்கு.. ஜனவரி வரை இதே நிலை தான்.
@யாசின் அடுத்த முறை ஊருக்கு வாங்க.. இதே காலங்களில்.
Phonpe வழியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 35 ரூபாய் cashback வருகிறது. இந்த வருடம் முடியும் வரை. பெட்ரோல் விலை உயர்வின் சுமையை தாங்க வைத்தது இதுதான்.