மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்.
சில ரசிக்கும்படியும், சில என்னைய்யா இது இப்படி ஒரு ஆசை என்றும், சில வித்யாசமான ஆசைகளாகவும், சில சப்பையான ஆசைகளாகவும் இருக்கும்,
ஆனால், ஆசைப்படுபவருக்கு அது ரொம்பப் பிடித்ததாக இருக்கும்.
எனக்கும் ஏகப்பட்ட வித்யாசமான, விவகாரமான, ரசிக்கும்படியான ஆசைகள் உண்டு.
லாரி
எனக்கு சிறிய வயதில் லாரியில் செல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசை, அதுவும் லாரியின் டாப்பில் (ஓட்டுனர் மேல் உள்ள பகுதி) உட்கார்ந்து செல்ல வேண்டும் என்பது. இது எப்படி நிறைவேற முடியும்? ஆனால் முடிந்தது.
அப்பா எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக சுயேட்சையாக நின்று, ஊர் பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். கோபியில் தான் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார்கள்.
வெற்றி பெற்றதும் அப்பா ஆதரவாளர்கள் ஒரு லாரியில் ட்ரம்ஸ் எல்லாம் தயார் செய்து, மேளத்துடன் எங்கள் ஊரை நோக்கிக் கிளம்பி விட்டார்கள்.
லாரியில் மேளச் சத்தம், வெளியே பட்டாசுச் சத்தம் காதைக் கிழிக்கிறது.
லாரி டாப்
எல்லோரும் என்னைக் காருக்குள் தள்ளி ஊருக்கு அழைத்துச் செல்ல, நான் பிடிவாதமாக காரில் வரவில்லை என்று கூறி, லாரி டாப்பில் ஏறி அனைவருடன் உட்கார்ந்து கொண்டேன்.
லாரி கிளம்பியவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அப்பா வெற்றிபெற்றதை விட, லாரி டாப்பில் உட்கார்ந்த தருணம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டது. லாரியின் பின்புறம் மேளச்சத்தம் டாப்பில் நான்.
தற்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.
கோபியின் மிகப்பெரிய சாலையில் ஒரு லாரி, மேளச்சத்தத்துடன் எங்கள் ஊர் நோக்கிச் செல்கிறது அதில் டாப்பில் நான்.
பென்ஸ் காரில் போனால் கூட இவ்வளவு மகிழ்ச்சியடைந்து இருக்க மாட்டேன். இவற்றை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அப்பா ஜெயித்தது மற்றவர்களுக்கு எப்படியோ, நீண்ட நாள் லாரி ஆசை நிறைவேறியதில் பரம சந்தோசம்.
இப்பவும் கூட இது போல லாரியில் செல்ல ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்று ஏக்கமாக உள்ளது.
ஆட்டோவில் ஒரு நாள்
இது போல ஒரு ஆசை தான் ஆட்டோவில் ஒரு நாள் சுற்ற வேண்டும் என்பது.
கிரி! அவனவன் விமானத்தில் சுற்றனும் பென்ஸ் காரில் சுற்றனும் என்று நினைத்துட்டு இருக்க, நீங்க ஆட்டோவில் சுற்றனும் என்று சொல்றீங்களே! என்று கேட்கறீங்களா!
அது தான் கூறினேனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை என்று 🙂 .
கோபியில் இருந்தால் என்னால் முடிந்தவரை என்ன நினைக்கிறேனோ அதைச் செய்ய முடியும். அந்த அளவிற்கு அனைத்து இடங்களிலும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
அக்காவிற்கு தெரிந்த ஒருவர் உள்ளார். ஆறுமுகம் என்பது அவர் பெயர்.
கோபியைச் சுற்றி உள்ள ஊர்களுக்கு பாராசூட் எண்ணெய் விநியோகம் செய்யும் டீலர்ஷிப் எடுத்து இருக்கிறார்.
தினமும் இவற்றை ஆட்டோவில் சென்று விநியோகம் செய்து வருகிறார்.
நமக்கு இது போதாதா! சிக்குனாருடா ஒருத்தர் என்று, அவரைத் தொலைபேசியில் அழைத்து என்னை ஒரு நாள் உங்களுடன் ஆட்டோவில் அழைத்துச் செல்வீர்களா? என்று கேட்டவுடன்.
ஹலோ! என்னங்க அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க.. எப்பன்னு சொல்லுங்க நானே வந்து உங்களை அழைத்துக்கொள்கிறேன் என்று கூற ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டது.
அவருடன் இன்னொரு பையனும் வந்து இருந்தான். மூவரும் ஆட்டோவில்! அவனும் கொஞ்ச நேரத்தில் அண்ணா அண்ணா! என்று ரொம்ப நெருக்கமாகப் பழகி விட்டான்.
நம்ம தான் யாரு இருந்தாலும் நட்பாக்கி விடுவோமே! 🙂 .
பசுமை
கோபியிலிருந்து கிளம்பி பசுமை கொஞ்சும் இடங்களாகிய பங்களாப்புதூர், TN பாளையம், கணக்கம் பாளையம் மற்றும் புளியம்பட்டி வழியாக கோபி வருவதாகத் திட்டம்.
ஊரெல்லாம் தண்ணீர் பிரச்சனை ஆனால், இங்கே மட்டும் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கேமரா கொண்டு வந்து இருந்ததால் வழியெங்கும் படம் எடுத்துக்கொண்டே வந்தேன்.
வண்டியே நம்முடையது தானே! அதனால் எங்கு வேண்டும் என்றாலும் விரும்பினால் நிறுத்திப் படம் எடுத்துக்கொள்ள முடியும். செம சுவாரசியமாக இருந்தது.
வெயிலும் சுத்தமாக இல்லை. செம க்ளைமேட் அதனால், படம் எடுக்கும் போது கொஞ்சம் இருட்டாக இருந்தது.
திரும்ப வரும் போது வெயில் வந்து விட்டது, அதில் படங்கள் பளிச்சென்று இருந்தன.
கடைகளுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டே சென்றோம். கடைகளுக்கு MRP யிலிருந்து 10 % குறைத்து கொடுப்பார்களாம்.
வேறு எதுவும் குறிப்பிட்டு கேட்கும்படி இல்லை.
கருப்பராயன் கோவில்
செல்லும் வழியில் கருப்பராயன் கோவிலில் வணங்கி விட்டு, படம் எடுத்துக்கொண்டு சென்றோம். உள்ளே படம் எடுக்கக் கோவில் பூசாரி அனுமதிக்கவில்லை.
வழியிலேயே, எங்களுடன் வந்த இன்னொரு பையன் இறங்கிக்கொண்டான்.
அண்ணா! அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக வாங்க! என்று கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. அவனுடன் எடுத்த படங்களை அனுப்பவதாகக் கூறி இருக்கிறேன்.
அதோடு அடுத்த முறை பார்க்கும் போது இன்னும் ஒரு படி முன்னேறி இருக்க வேண்டும், இதே போதும் என்று காலத்தை ஓட்டக் கூடாது என்று கூறி இருக்கிறேன்.
சரிங்ணா! என்றான்.. சொன்னதை புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை.
வழியெங்கும் சிங்கப்பூர் பற்றிக் கேட்டு ஆச்சர்யப்பட்டுக் கொண்டே வந்தான்.
அவனுக்கு சிங்கப்பூர் மேல் ஆர்வம், எனக்கோ இங்குள்ள பகுதிகளில் ஆர்வம். இக்கரைக்கு அக்கரை பச்சை. எங்கள் ஊரில் எல்லாமே பச்சை தான் 🙂 .
போவோமா ஊர்கோலம்
கோபி செல்லும் வழியில் நாங்கள் இருவர் மட்டுமே!
ஆட்டோவில் நினைத்த இடத்தில் நிறுத்தி, வாய்க்காலில் இறங்கி ஆடி விட்டு, பாலம், வயல் என்று அனைத்து இடங்களிலும் படம் எடுத்துக்கொண்டு ரொம்ப ஜாலியாக இருந்தது.
“போவோமா ஊர்கோலம்” பாடாதது தான் பாக்கி 🙂 .
வழியில் ஒருவர் தன்னந்தனியாக கோவிலுக்கு பெயின்ட் அடித்துக்கொண்டு இருந்தார், விசாரித்த போது இந்தக் கோவிலை இவரே கட்டியதாகவும் இதற்கு விரைவில் பூஜை செய்யப்போவதாகவும் கூறினார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையாகவே இருக்கிறது. எங்கே படம் எடுத்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும் போல 🙂 . நானும் சலிக்காமல் படம் எடுத்துக்கொண்டே இருந்தேன்.
அடுத்த நாள் வேறிடம் செல்வதாகவும், வாருங்கள் என்று அழைத்தார் ஆனால், கோவை செல்ல வேண்டி இருந்ததால் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வருகிறேன் என்று கூறி இருக்கிறேன்.
அடுத்த முறை ஆட்டோ ஓட்டப்போவது நான் தான் 🙂 🙂 .
பாராசூட் எண்ணெய் போய்ச் சேர்ந்த மாதிரி தான் என்கிறீர்களா! ஹி ஹி ஹி.
குறிப்பு 1: இந்தப் படங்கள் எதிலும் நான் இல்லை.
குறிப்பு 2: இந்தப்படங்கள் எதுவும் GIMP / ஃபோட்டோ ஷாப் ல் மாற்றப்பட்டது அல்ல. பச்சை நிறம் ஒரிஜினலே! வெயிலின் வெளிச்சத்தைப் பொறுத்து பச்சை நிறம் மாறி இருக்கலாம்.
கொசுறு
இந்த ஆட்டோ லிட்டருக்கு 33 கிலோமீட்டர் கொடுப்பதாகக் கூறினார் (டீசல்). என்னங்க பத்துக் கிலோ மீட்டர் தள்ளிட்டுப் போகனுமா! என்றால் சிரிக்கிறார்.
இல்லைங்க! நிஜமாகவே 30 ல் இருந்து 33 கிலோ மீட்டர் வருகிறது என்றார்.
சிங்கப்பூரில் மின்னல் வேகத்தில் செல்லும் Ferrari கார், கப்பல் போலச் செல்லும் பென்ஸ் கார், இதில் ஒரு முறை மட்டுமே ஆர்வமாகச் சென்றேன் ஆனால், இந்த ஆட்டோ மட்டும் சலிக்கவே இல்லை.
சென்னை ஆட்டோ பற்றிக் கேட்டுடாதீங்க.. வெறி ஆகிடுவேன். ஆட்டோ மீது வெறுப்பில்லை அதை ஓட்டுபவர்கள் மீது.
சென்னையில் இருந்த போது, எப்போது ஆட்டோவில் சென்றாலும் சண்டையுடன் தான் முடியும். இதனால் ஆட்டோ என்றாலே அலர்ஜி.
நடந்தாவது போய் விடுவேன் அல்லது பேருந்தில் தொங்கிக்கொண்டு போய் விடுவேன் ஆனால், மறந்தும் ஆட்டோவில் செல்ல மாட்டேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
செமையா இருக்கு தல பதிவு படம்.
கோபி ஆட்டோ ல நீங்க உள்ள ஸ்டில் ஒன்னு இருந்தா போடுங்க தல.
உங்க ரசிகனோட ஆசை . உங்க சின்ன வயசு போட்டோ இருந்தா (லாரி டாப் ல இருந்தாலும் ஓகே தான்:) அதையும் முடிஞ்சா ஷேர் பண்ணுங்க)
– அருண்
/அவனுக்கு சிங்கப்பூர் மேல் ஆர்வம், எனக்கோ இங்குள்ள பகுதிகளில் ஆர்வம். இக்கரைக்கு அக்கரை பச்சை. எங்கள் ஊரில் எல்லாமே பச்சை தான்/
🙂
படங்கள் அனைத்தும் அருமை… கோபி கோபிதான்…
அருமையான படங்கள் கிரி. தினமும் பெங்களுரு நெரிசலில் சிக்கி தவிக்கும் எனக்கு இந்த படத்தை பார்க்கும் போதோ அங்கு போக வேண்டும் போல உள்ளது.
படங்கள் ஒவ்வொன்னும் கண்ணுலே ஒத்திக்கறது மாதிரி இருக்கு கிரி!
கிரி,
அனைத்து படங்களும் அருமை.
ஒரு ஆலோசனை. படங்கள் எல்லாவற்றிலும் காப்பிரைட் லேபில் ஒட்டி விடவும். இல்லாட்டி நாளன்னைக்கு உங்களுக்கே ‘கோபி உலா’ என மெயில் பார்வர்டாக வரும்.
கிரி,
சிங்கை வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு கேள்வி.
தற்போது (IT சீனியர்-மிட் லெவல்) வேலைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களை எடுக்கிறார்களா? எங்கு பார்த்தாலும் சிட்டிசன் அல்லது pr ஆட்களையே விண்ணப்பிக்க கோருகிறார்கள். அதனால் கேட்டேன்.
🙂
அனைவரின் வருகைக்கும் நன்றி
@அருண் பின்னர் என்னுடைய சிறுவயது படத்தை வெளியிடுகிறேன் 🙂
@Reader படங்களில் என்னுடைய தள முகவரியை இணைத்து விட்டேன். நன்றி 🙂
சிங்கப்பூர் பற்றி கேட்டு இருந்தீர்கள். தற்போது இங்குள்ள மக்கள் பலர் வெளிநாட்டினர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. விசாவிலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.
all photos super
அத்தனை படங்களும் அழகு என்றால் சரியா? இடங்களும் அழகு என்பது முறையா:)?
ரியல் எஸ்டேட் வளைத்து வளைத்து கான்க்ரீட் காடுகளை உருவாக்கி வரும் இந்தக் காலத்தில் ஆறுதலைத் தருவதாக உள்ளது உங்கள் பகிர்வு.
[நேற்று வேறு டெம்ப்ளேட் மாற்றி இருந்தீர்களா?]
படங்கள் நெஞ்சை அள்ளுது கிரி. Excellent.
ஹூம்… ஊரை பார்த்தா ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்ற வரி நூத்துக்கு நூறு உண்மைன்னு விளங்குது.
ஆட்டோவுல போகும் போது லைட்டா ‘சுருதி’ ஏத்திக்கிட்டு போனா அந்த கிளைமேட்டுக்கும் அதுக்கும் ….அட … அட… அட… ‘சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா….’
@ராமலக்ஷ்மி ரியல் எஸ்டேட் எங்கள் பக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த இடங்களும் அடுத்த பத்து வருடங்களில் இருக்குமா என்று தெரியவில்லை. டெம்ப்ளேட் எதுவும் மாற்றவில்லை. வேற மாதிரி இருந்ததா?
@பாமரன் அட! என்னோட அடுத்த பதிவு தலைப்புக் கூட நீங்க சொன்னது தான் 🙂
நல்லாருக்கு… கோபி ஏரியாவை கஷ்டப்பட்டு காப்பாத்திக்கிட்டிருக்காங்க.. எவ்வளவு நாளைக்கோ!
பகிர்வுக்கு நன்றி கிரி..
மரியாதைக்குரியவரே,இனிய வணக்கம்.தாங்கள் கோபிக்கு அருகில் எந்த கிராமம் என விவரிக்க முடியுமா?எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்,விருப்பம் இருந்தால். நன்றிங்க!
கிரி,
இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லே.
Seven Samurai பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போ தான் அகிராவோட Red Beard பார்த்தேன். 1965 ல வந்த படம். என்னா ஆளுங்க அவுரு. 50 வருஷத்துக்கு முன்ன இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமான்னு வாய பொளக்க வச்சுட்டாரு. இந்த படத்துல ஒரு சண்டை காட்சி வரும். அடேங்கப்பா… என்ன ஒரு காட்சி அமைப்புங்க. இப்போ உள்ள படங்களுக்கு சவால் தான். ஹூம்.. அந்த கால கட்டத்துல நம்ம ஊரு படங்கள்ல நமக்கு காமிச்ச சண்டை காட்சிகள் எல்லாம் என்னா ஒரு பம்மாத்துன்னு இப்போ புரியுது.
படத்துல நெஞ்சை நெகிழ வைக்கிற காட்சிகள் ஏராளம். உண்மையிலேயே இயக்குனர்களின் பிதாமகர் தாங்க அவரு. நம்ம ஆளுங்க யாருமே இவரை போல சிந்திகலயேன்னு ரொம்பவே ஏக்கமா போயிருச்சு. ரே ஒருத்தர் தான் இருந்தாரு. ஆனா அவரை அப்போ யாரும் கண்டுக்கலை.
இந்த படத்தை தவறாம பாருங்க. அப்படியே உங்க பாணியிலே விமர்சனத்தையும் எதிர்பார்கிறேன்.