பிரபலமாகி வரும் “வேட்டி”

6
பிரபலமாகி வரும்

ங்கள் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேட்டி கட்டுவது பிரபலமாகி வருகிறது.

தமிழ்நாட்டில் வேட்டி கட்டுவதைப் “பிரபலமாகி வரும் “வேட்டி” என்று கூறுவது காலக் கொடுமை என்றாலும், மாற்றத்தை முழு மனதோடு வரவேற்கிறேன். Image Credit 

பிரபலமாகி வரும் “வேட்டி”

கால மாற்றத்தில் வேட்டி கட்டுவது நாகரீகம் அல்ல என்ற நிலையாகி, உடை அணியும் விதம் மக்களிடையே மாறி வருகிறது.

பாரம்பரிய உடைகளுக்கான மதிப்புப் பண்டிகைக் காலங்களில் கூடக் குறைந்து வருகிறது. முன்பு பண்டிகை காலங்களிலாவது பின்பற்றப்பட்டு வந்தது.

தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

ஊருக்குச் சென்றால் வேட்டி தான் கட்டணும் என்று சில வருடங்களுக்கு முன்பு முடிவெடுத்தேன், அதை உருப்படியாகப் பின்பற்றி வருகிறேன்.

அதிகரித்த வேட்டி கட்டுபவர்கள் எண்ணிக்கை

கடந்த சில முறைகள் ஊருக்குச் சென்ற போது கவனித்ததில் வேட்டி கட்டுபவர்கள் அதிகரித்து விட்டதாகத் தோன்றியது.

இருப்பினும் இதை யாரிடமாவது கேட்டு உறுதி செய்யலாம் என்று  உறவினர் ஒருவரிடம் கேட்டேன், ஆமோதித்தார்.

என்ன காரணமாக அதிகரித்து இருக்கிறது? என்று கேட்ட போது,

“அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கட்சிகளில் இணைபவர்கள் அதிகரித்துள்ளார்கள். அவர்கள் வேட்டி கட்டுவதைக் கவுரவமாகக் கருதுகிறார்கள்.

அதோடு இளையவர்கள் திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் வேட்டி அணிவதை விரும்புகிறார்கள்.

தற்போது வேட்டிக்கு நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்வது நல்ல பலனளித்துள்ளது. பிரபல நடிகர்கள் அணிந்து வருவதால், ரசிகர்களும் வேட்டி அணிவதை விருப்பமாக நினைக்கிறார்கள்”

என்று கூறினார்.

உறவினர் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.

பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஜெயராம் போன்றோர் வேட்டி விளம்பரங்களுக்கு வருவது நல்ல பலனளித்துள்ளது.

விளம்பரங்களால் நடிகர்கள் செய்த உருப்படியான வேலை / மாற்றம்.

அண்ணன் (பெரியப்பா மகன்) பிரபலமான கடைகளுக்குச் சட்டை தைத்துக் கொடுக்கிறார். இவரிடம் கேட்ட போது  இதை ஒப்புக்கொண்டார்.

தற்போது வெள்ளை சட்டை அதிகளவில் விற்பனை (₹250 தான்) ஆவதாகவும், எவ்வளவு தைத்தாலும் முதலில் காலியாவது வெள்ளைச் சட்டை என்று கூறினார்.

வேட்டி கட்டுபவர்கள் எண்ணிக்கையாலே வெள்ளை சட்டை அதிகளவில் விற்பனை ஆவதாகக் கூறினார்.

175 க்கு தரமான வேட்டிகள் கிடைக்கிறது.

அரசியல்வாதிகளால் நடந்த பாராட்டும்படியான செயல் என்னவென்றால், வேட்டி இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்க, முக்கியக் காரணியாக உள்ளனர்.

மாற்றம் காணும் வேட்டி வடிவமைப்பு

நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்ப மாறி வேட்டியில் “பாக்கெட்” போன்றவை வைத்தும், குழந்தைகளுக்கான “ரெடிமேட்” வேட்டி சட்டைகளைத் தயாரித்துப் பெரிய வெற்றியைப் பெற்று இருக்கின்றனர்.

தற்போது திருமண விழாக்களில் குழந்தைகளை இதுபோலக் காண முடிகிறது.

பாக்கெட் வைப்பதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், கால மாற்றத்துக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அழிந்து விடுவோம் என்பதை வேட்டி தயாரிப்பு நிறுவனங்கள் உணர்ந்து இருக்கின்றன. இது சரியான முடிவே.

வேட்டி தினம்

சகாயம் அவர்கள் “கோ ஆப்டெக்ஸ்” துறையைக் கவனித்துக் கொண்டு இருந்த போது “வேட்டி தினம்” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வேட்டி தினத்தைக் கொண்டாடி வேட்டி அணிவதை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

வேட்டி அணிவதில் கிடைக்கும் பெருமை

குடும்பத்துடன் கோவிலுக்கோ உறவினர் வீடுகளுக்கோ செல்லும் போது முடிந்த வரை வேட்டியைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

இது உங்களுக்கு மரியாதையைக் கொடுப்பதோடு, நம் பண்பாடு அழியாமல் இருக்கத் துணை புரிகிறோம் என்ற திருப்தியையும் பெருமையையும் அளிக்கும்.

தமிழர்கள் பண்பாடு கால மாற்றத்தில் அழிந்து வருகிறது, அதை இதுபோலச் சிறு முயற்சிகள் மூலம் வாழ வைப்பதில் நம் பங்கை ஆற்ற வேண்டும்.

வேட்டி கட்டுவது துவக்கத்தில் மட்டுமே சிரமமாக இருக்கும். பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நமக்குச் சரியாக அமைந்து விடும்.

ராம்ராஜ்

கோபியில் சமீபத்தில் ராம்ராஜ் வேட்டிக் கடை “கச்சேரி வீதி”யில் திறந்து இருப்பதாகக் கூறினார்கள்.

இதன் மூலம் வேட்டிக்கு இருக்கும் வரவேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கோபிக்கெல்லாம் ஒரு தனி வேட்டிக் கடை என்பது அதிகமே!

இதில் வேட்டி மட்டுமல்லாது மற்ற உடைகளும் இருக்கும். ஒரு முறை கோவையில் ராம்ராஜ் சட்டை வாங்கினேன் ஆனால், விலைக்கும் தரத்துக்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லை.

பணம் வீணானது தான் மிச்சம். வேட்டி மட்டும் இங்கே பரிந்துரைக்கிறேன்.

நீங்கள் கவனித்து இருக்கலாம், சமீபமாக வேட்டிக்கு பல புதிய நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்து வருவது அதிகரித்துள்ளது. மகிழ்ச்சி தரக்கூடிய மாற்றம்.

தற்போது வேட்டிக்கு நிறைய நிறுவனங்கள் வந்து விட்டாலும், வேட்டிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்ததில் ராம்ராஜின் பங்கு மகத்தானது.

பண்டிகைகளில் வேட்டி

தீபாவளிக்கு வேட்டி தான் எடுத்தேன். பொங்கலுக்கும் வேட்டி தான்.

சிங்கப்பூரில் வசித்த போது, மலேசியா சென்று இருந்த போது வேட்டியிலேயே நாள் முழுக்கச் சுற்றினேன், பத்து மலை கோவிலுக்கும் வேட்டியுடனே சென்றேன்.

ரயிலில் சிலர் வித்யாசமாகப் பார்த்தாலும், மிகப் பெருமையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது 🙂 .

இடுப்பில் நிற்காது என்று கிண்டலாகக் கூறி தவிர்க்கக் காரணம் தேடாமல், ஆண்களை ஒரு முறையாவது வேட்டியை முயற்சிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

முன்மாதிரியாகப் பெண்கள்

ஆண்களே! பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் புடவை கட்டி, பெண்கள் அதன் மதிப்புக் குறையாமல் வைத்துள்ளார்கள் ஆனால், நாமோ அணிவது சிரமம் மற்றும் நாகரீகம் அல்ல என்று கூறி புறக்கணித்து வருகிறோம்.

பெண்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை நாகரீக உடைகள் வந்தாலும், புடவையின் அழகுக்கு முன்பு அவை ஈடாகுமா?!

புடவை கட்டுவதை விட வேட்டி கட்டுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. வேட்டி கட்டுவதைப் பெருமையாக நினையுங்கள் பின் சிறப்பைத் தானாகவே உணர்வீர்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. ஹாய் கிரி

    தங்கள் தகவலில் சிறு திருத்தம் ராஜ்கிரண் இது வரை எந்த வேட்டி விளம்பரத்திலும் நடிக்கவில்லை. பெரிய வேட்டி நிறுவனம் அவரை அணுகியதாகவும். ஒரு கோடி தருவதாக கூறியும் மறுத்து விட்டதாக உறுதி படுத்தாத தகவல். ஏன் என்றல் அந்த விளம்பரம் செலவிடும் தொகையும் வேட்டி வாங்குபவர் மீது திணிக்க படும் என்பதால் மறுத்து விட்டதாக உறுதி படுத்தாத தகவல்.

  2. சந்தோஷ் நீங்கள் கூறுவது சரியே! நானும் நினைத்தேன் ஆனால், அவர் நடித்தாரா இல்லையா என்பது சந்தேகமாகவே இருந்தது.

    “விளம்பரம் செலவிடும் தொகையும் வேட்டி வாங்குபவர் மீது திணிக்க படும் என்பதால் மறுத்து விட்டதாக உறுதி படுத்தாத தகவல்.”

    இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலே! நானும் எங்கோ படித்தேன். சுட்டியதற்கு நன்றி.

  3. நான் முதலில் 3 வருடம் படித்த கல்லூரி சோழவந்தான் விவேகானந்த கல்லூரி (உறைவிட குருகுல கல்வி முறை). எங்கும் எப்போதும் வேட்டிதான், 1000 மாவது நாளை கொண்டாட அன்று மட்டும் அனைவரும் pant அணிந்து சென்றோம்.
    இரண்டாவதாக படித்தது பிஷப் ஹீபர் கல்லூரி இங்கு எங்கும் எப்போதும் pant தான், fairwell நாள் அன்று மட்டும் வேட்டி கட்டி சென்றோம்.
    தங்களது பதிவு பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது.

  4. வேட்டி கட்டிக்கிட்டு சென்னைல சில நட்சத்திர விடுதி / கிளப்புக்கு போக முடியாதுன்னு நினைக்கிறேன்

  5. கிரி, பதிவை படிக்கும் போது மகிழ்வாக இருக்கிறது. சிறு வயது முதல், இன்று வரை கைலி உடுத்தி வருகிறேன். ஆனால் வேட்டிக்கு முயற்சி செய்தது இல்லை. நண்பர் சக்தி அடிக்கடி வேட்டியை உடுத்துவார். ஆனால் எனக்கு கொஞ்சம் கூச்சம் இருப்பதால் வேட்டியை இன்று வரை உடுத்தவில்லை.

    ஆனால் இந்த பதிவை படித்த பின், ஊருக்கு செல்லும் போது கண்டிப்பாக ஒரு நாளாவது வேட்டி அணிய முடிவு செய்துள்ளேன். பின்பு அடிக்கடி முயற்சி செய்கிறேன். நீங்கள் கூறியுள்ளது போல் விளம்பரங்களின் மூலம் வேட்டி அணிவது கண்டிப்பாக அதிகரித்து உள்ளது.

    சொன்னால் கொஞ்சம் அவமானமாக இருக்கும், கல்லூரி நாட்களில் கிரிக்கெட்க்கு பின் பேட்மின்டன் போட்டிகளில் அதிக ஆர்வமுண்டு. கொஞ்சம் நன்றாக விளையாடவும் தெரியும். கல்லூரி அணியிலும் இடம் கிடைத்தது. ஆனால் என்ன பிரச்சனை என்றால் ஷூ போட்டுகொண்டு தான் விளையாட வேண்டும் என்பதால் போட்டிக்கு போகவில்லை. ஷூ இல்லை என்பது உண்மைதான் ஆனால் நண்பன் கடன் கொடுத்த பின் கூட கூச்சம் அனுமதிக்கவில்லை அது ஒரு வசந்தகால அனுபவங்கள்!!!

    (படிக்காதவன் ரஜினி சார் சிரிப்பை நினைவில் கொள்ளவும்) அந்த கூச்சம். தற்போது ஷூ அணிவதில் இல்லை. ஆனால் வேட்டியில் தொடர்கிறது. இதுபோல கசப்பான (இனிப்பான) நிகழ்வுகளை அவ்வவ்போது நினைத்து பார்ப்பதுண்டு. பகிர்வுக்கு நன்றி கிரி.

  6. @சோமேஸ்வரன்

    “எங்கும் எப்போதும் வேட்டிதான், 1000 மாவது நாளை கொண்டாட அன்று மட்டும் அனைவரும் pant அணிந்து சென்றோம்”

    மற்ற நாளில் வேட்டி அணிந்து சிறப்பு நாளில் பேன்ட்டா 🙂 வித்யாசமாக இருக்கிறது. பிஷப் ஹீபர் கல்லூரி அனுபவம் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

    நான் உடுமலை பேட்டை அருகே உள்ள கரட்டு மடம் பள்ளியில் விடுதியில் தங்கி படித்தேன். அங்கே வேட்டி மட்டுமே கட்ட வேண்டும். லுங்கிக்கு அனுமதியில்லை.

    @கமலக்கண்ணன்

    நானும் படித்து இருக்கிறேன். சில வருடங்கள் முன்பு இந்த வேட்டி பிரச்சனையாகி இனி வேட்டியுடன் அனுமதிக்கவில்லை என்றால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    க்ளப் க்கு எதற்கு முக்கியமாக வேட்டி கட்டக்கூடாது என்று கூறுகிறார்கள் என்றால், மது அருந்தி இருந்தால், கட்டுப்பாடில்லாமல் சென்று, வேட்டி அவிழ்ந்து மோசமான சூழ்நிலை ஆகிவிடும் என்றே!

    இது சரி தான்.

    @யாசின் நீங்கள் ஒரு முறை கூட வேட்டி அணிந்தது இல்லை என்பது எனக்கு வியப்பளிக்கும் செய்தி.

    இந்த முறை ஊருக்குச் செல்லும் போது அவசியம் வேட்டி முயற்சி செய்து பாருங்கள். செமையாக இருக்கும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here