வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!!

3
Road-Safety வாகன ஓட்டிகளே எச்சரிக்கை

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனச்சட்டம் அமலுக்கு வந்து விட்டது. இதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகளே எச்சரிக்கை. Image Credit

குறிப்பாகத் தலைக்கவசம் அணியாதவர்களைக் குறி வைத்துப் பிடிக்கிறார்கள் 🙂 .

எங்க ஊர் கோபியில் அக்கா பையன் தலைக்கவசம் அணியாமல் என் வண்டியை ஓட்டிச்சென்றபோது பிடித்து ₹100 அபராதம் விதித்து விட்டார்கள்.

கோபியில் எச்சரிக்கை தான் செய்வார்கள், அபராதம் விதிப்பதை தற்போது தான் கேள்விப்படுகிறேன்.

அவனுடைய ஓட்டுநர் உரிமத்தைக் காட்டிய பிறகு அதைக் குறித்துக்கொண்டு வாகன பதிவுக்குப் புகார் எழுதிவிட்டார்கள்.

அதாவது நான் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக, எனக்கு அபராதம் விதிக்கப்பட்டு உடனே குறுந்தகவல் வந்து விட்டது. இது என்ன கணக்கு என்று தெரியவில்லை.

ஓட்டுநர் உரிமத்துக்குத் தானே அபராதம் செல்ல வேண்டும், வண்டிக்கு எப்படி வந்தது?!

தெரிந்தவர்கள் விளக்கவும்.

நான் சென்னையில் முதன்முதலில் 1999 வாகனம் ஓட்டிய முதல் நாளே காவலரிடம் மாட்டிக்கொண்டேன். Lane Jumping என்று ₹50 அபராதம் விதிக்கப்பட்டு விட்டது.

ரொம்ப ராசியான போக்குவரத்து காவலர்போல, அதன் பிறகு இதுவரை நான் வண்டி ஓட்டி அபராதம் கட்டியதில்லை 🙂 . பிடிபட்டு இருந்தாலும், கோப்புகளைக் காட்டி வந்து விடுவேன்.

20 வருடங்களுக்குப் பிறகு எனக்குச் சம்பந்தம் இல்லாமல் அபராதம் வந்து விட்டது.

மேற்கூறியது உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே! நான் கூற வந்தது வேறு.

கடுமையான அபராதம்

தற்போது நீங்கள் செய்திகளில் பார்த்து இருக்கலாம், ₹23,000, ₹59,000 வரையெல்லாம் அபராதம் விதித்துள்ளார்கள். Image Credit – https://www.timesnownews.com

மாட்டியவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாமல் மாட்டி, பின் மற்ற கோப்புகள் இல்லாமல் கூடுதல் அபராதத்தைப் பெற்று இருக்கிறார்கள்.

அதோடு மாட்டியவர்கள் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியிருக்கிறார்கள்.

தற்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ₹10,000 அபராதம். இதை ₹30,000 செய்தால் கூட நல்லது தான்.

இந்தப் பொறம்போக்குக சாவறதும் இல்லாம, சும்மா போறவன் மேல வண்டியை விட்டு அவனையும் சாகடிக்குறானுக.

இவ்வளோ அபராதமா?! என்று சிலர் கேட்கிறார்கள். விதிமீறவில்லையென்றால், என்ன அபராதம் விதித்தால் நமக்கென்ன? தவறு செய்கிறவன் தான் பயப்படணும்.

மின்னணு பரிவர்த்தனை

இதனால் சகலருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், ஒரு முறை இதில் பதிவு செய்துவிட்டால், மாற்ற முடியாது. வந்தது வந்தது தான். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பதிவு செய்தவுடன் உங்களுக்குக் குறுந்தகவல் அபராதத்துடன் வந்து விடும். நீங்கள் தபால் அலுவலகம், அங்கே உள்ள மின்னணு கருவி, Paytm, நீதிமன்றம், பரிவாகன் இணைய தளம் போன்றவற்றில் அபராதத்தைக் கட்டலாம்.

சிலர் வேண்டும் என்றே அலையவிடுவதற்காக அபராதத்தை வசூலிக்காமல் மேற்படி வசதிகளில் அபராதத்தைக் கட்ட சொல்கிறார்கள்.

இதில் இருப்பதிலேயே மிக மிக எளிதான வழி https://echallan.parivahan.gov.in/ மூலம் கட்டுவதே.

இங்கே வாகன / ஓட்டுநர் உரிம விவரங்களைக் கொடுத்தால், நம்முடைய அபராத செலான் தகவல் வரும். அதில் கடனட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு) அல்லது இணைய வங்கி கணக்கு மூலமாக அபராதத்தைச் செலுத்தலாம்.

இந்த முறையில் தான் அபராதத்தைச் செலுத்தினேன்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், உங்களுடைய ஓட்டுநர் உரிமம் ரத்தாவதோடு மேலும் பல அரசு சேவைகளும் ரத்துச் செய்யப்படும்.

திரும்ப இதை நீங்கள் வாங்குவதற்குள் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து விடலாம். எனவே, பார்த்துச் சூதானமா நடத்துக்குங்க.

இனி முன்பு போலப் போக்குவரத்து விதி மீறிச் சென்றால், இன்று இல்லையென்றாலும் என்றாவது மாட்டுவீர்கள், அதற்கான அபராதம் கடுமையாக இருக்கும்.

எனவே, போக்குவரத்து விதிகளை மீறாமல் இருங்கள்.

Violation Strike

இவ்வளோ நாளாகக் கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்திக்கொண்டு இருந்தால் அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால், தற்போதோ பிடிக்க வாய்ப்புள்ளது.

காவலரின் மனநிலையைப் பொறுத்து தான் எதுவும். அதோடு உங்க நேரமும் 🙂 .

இதைச் சில காவலர்கள் தவறாகப் பயன்படுத்த உறுதியான வாய்ப்புள்ளது. இதற்கு என்ன செய்வது என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்புவர்களுக்கும் ஒரு அபராதத்தை விதித்தால் புண்ணியமாகப் போகும், காதில் ரத்தம் வந்து விடும் போல, படுத்தி எடுக்குறாங்க.

முன்பெல்லாம் மாட்டினால், அபாரதமோ லஞ்சமோ கொடுத்துத் தப்பித்து விடுவார்கள். தற்போது மின்னணு முறையால் அபராதம் விதிக்கப்பட்டால், உங்களுடைய கணக்கில் வந்து விடும்.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் போக்குவரத்து விதியை மீறியதாக வந்தால், உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்படும். அனைத்தும் மின்னணு மயமாகி விட்டது.

நீங்களே சென்று Violation History யைப் பார்க்கலாம்.

எனவே, Violation Strike அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக, இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை.

உங்க ஓட்டுநர், வாகன உரிமமும் உங்கள் ஜாதகத்தையே கொடுத்து விடும்.

இனி என்ன செய்ய வேண்டும்?

வாகனக் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், வாகன உரிமத்தை தவறாமல் வைத்து இருங்கள். வைத்துக்கொள்ள முடியாதவர்கள், Digi Locker செயலியில் பதிவு செய்து விட்டால், இதையே காண்பித்துக்கொள்ளலாம்.

இதில் பதிவு செய்ய உங்கள் ஆதார் பெயர், ஓட்டுநர் உரிமம் / வாகன உரிமம் பெயர் ஒன்றாக இருக்க வேண்டும். பதிவு செய்ய முடியவில்லை என்றால், தரவேற்றம் (Upload) செய்யும் முறையில் செய்து கொள்ளுங்கள்.

Digi Locker ல் இருந்தால் அசல் சான்றிதழ்களை வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால், நம்ம ஊர் காவலர்கள் வம்புக்குன்னே கேட்க வாய்ப்புள்ளது. எனவே, எதற்கும் அதையும் முடிந்தால் வாகனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

போக்குவரத்து விதிகளை மீறாதீர்கள்.

அவசியம் தலைக்கவசம் அணியுங்கள். இது அபராதத்தைத் தவிர்க்க அல்ல, நம்முடைய பாதுகாப்புக்கு.

எனவே, இதுவரை அலட்சியமாக இருந்து இருந்தால், உடனடியாக அனைத்து சான்றிதழ்களையும் தேடி, பொறுப்பாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வளவு நாட்களாக நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் பொறுப்பற்று வாகனத்தை ஓட்டி இருக்கலாம் ஆனால், இனி அதுபோலச் செய்யாதீர்கள்.

செய்தால், கடுமையான அபராததுக்குத் தயாராகிக் கொள்ளுங்கள். அபராதம் மட்டுமல்ல, பல குடைச்சல்களையும் எதிர்கொண்டாக வேண்டும்.

இந்த மாற்றம் நிச்சயம் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!

அசத்தலான டிவிஎஸ் ஜுபிடர்

அசல் ஓட்டுநர் உரிமம் இனி தேவையில்லை!

கொசுறு

விதிமுறை மீறுபவர்களுக்கு வசூலிக்கும் தொகை அதிகரித்து இருப்பதால், சுங்கச்சாவடி கட்டணத்தை அரசு குறைத்து, அபராதம் மூலம் பெறப்படும் தொகையில் இதை ஈடுகட்டலாம்.

சமூகத்தளங்களில் சிலர், “சாலை மோசமாகவுள்ளது அதனால், அபராதம் வசூலிக்க என்ன தகுதி இருக்கிறது?” என்கிற ரீதியில் விமர்சனங்கள் வைத்து இருந்தார்கள்.

சாலை சரியில்லை என்றால், அதுகுறித்து விமர்சனம் வைக்கலாம் ஆனால், இதைக் காரணம் காட்டி விதிமீறலை நியாயப்படுத்துவது சரியல்ல.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. //அதாவது நான் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக, எனக்கு அபராதம் விதிக்கப்பட்டு உடனே குறுந்தகவல் வந்து விட்டது. இது என்ன கணக்கு என்று தெரியவில்லை//

    கிரி, தற்போது இருக்கும் தகவல் (Database) முறையில் வாகன உரிமையாளர் தொடர்பு எண் மட்டுமே இருக்கிறது அதனால் தான் வந்திருக்கும்,

    விரைவில் ஓட்டுநர் உரிமம் தகவல் முறை (License Holder Contact Database) வர இருக்கிறது, அதன் பின் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன், அதுவரை வாகனத்தை ஓசி கொடுக்கும் போது கூட யோசித்தது கொடுக்கவும் 🙂 …..

    இந்த சட்டத்தை போலவே நம் ஊர் சாலைகளையும் சரிப்படுத்தி, தேவையான இடத்தில் ஒரு வழி பாதை கொண்டுவந்தால், இன்னும் நிறைய பிரச்சனைகள் தீரும் என்று எனக்கு தோணுகிறது.

  2. கிரி, கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் மகேஷ் பாபு நடித்த “பரத் என்னும் நான்” படத்தை பார்த்தேன்.. இந்த அபராத தொகை சம்பந்தமான காட்சி அப்படியே இருக்கும்.. படம் பார்க்கும் போது நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தோம்.. இது போல இந்தியாவிலும் வரவேண்டும் என்று, ஆனால் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை, இவ்வளவு விரைவில் இந்த சட்டம் வரும் என்று.. நிச்சயம் நான் வரவேற்கிறேன்..

    இது மட்டும் இல்லாமல், படத்தில் கிராம சுயாட்சி என்ற முறையை பற்றியும் சொல்லி இருப்பார்கள்.. அருமையான திட்டம்.. அரசாங்கம் ஒட்டுமொத்தமாக திட்டத்திற்கான நிதியை, ஒதுக்காமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனி தனியாக பகிர்ந்து அளிக்கும் போது, அவர்களின் தேவைக்கு ஏற்ப நிதியை பயன்படுத்தி கொள்ள முடியும்.. இடைத்தரகர்கள் தேவையில்லை..இதை படத்தில் காட்டி இருப்பார்கள்.. படமும் நன்றாக இருக்கும்.. நான் பார்த்த மகேஷ் பாபுவின் முதல் படம்.. நீங்களும் ஓய்வு இருந்தால் பார்க்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @சிங்கக்குட்டி அப்படியா சொல்றீங்க?!

    தற்போது மொபைல் எண்ணை இணைக்க கூறுகிறார்கள். அதாவது சமீபமாக யார் யார் வாகனம் பதிவு செய்தார்களோ, ஓட்டுநர் உரிமம் வாங்கினார்களோ அவர்கள் எல்லாம் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    ஓட்டுநர் உரிமத்துக்கு அபராதம் ஏன் விதிக்கவில்லை என்பது தான் என்னுடைய குழப்பம். என் அக்கா பையன் தற்போது தான் ஓட்டுநர் உரிமம் வாங்கினான்.

    @யாசின் பார்த்து விட்டேன் .. நல்ல படம் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here