மூணாறு பயணம் | 1

2
மூணாறு பயணம்

சுற்றுலாவில் மேகமலையை முடித்துக்கொண்டு மூணாறு சென்றோம்.

குச்சனூர் சனீஸ்வரர்

சின்னமனூரிலிருந்து குமுளி வழியாகச் சென்றால், சாலை சரியில்லை என்று கூறி போடிநாயக்கனூர் வழியாகச் செல்லம் நண்பர் பரிந்துரைத்தார்.

இவ்வாறு செல்லும் வழியில் சின்னமனூர் அருகேயே பிரபலமான குச்சனூர் சனீஸ்வரர் கோவில் இருந்ததால், அங்கே சென்றோம்.

சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.

மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர் (Wiki).

சின்னமனூரிலிருந்து மூணாறு 100 கிமீ, சனீஸ்வரர் கோவிலிருந்து 88 கிமீ.

மலைப்பகுதி

100 கிமீ என்பது குறைந்த தூரம் என்றாலும், மலைப்பகுதி என்பதால் பயணத்துக்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கிறது.

கடந்த முறை மசினகுடி சென்ற போது இன்னோவா காரில் சென்றது அற்புதமான அனுபவத்தைத் தந்ததால், இந்த முறையும் இன்னோவா காரிலேயே சென்றோம்.

கோபியிலிருந்து சின்னமனூர் வந்தது எந்த அலுப்பும் இல்லாதது போலவே மலைப்பகுதி பயணமும் இருந்தது. சாலைகளில் அசால்ட்டாக பயணிக்கிறது, கொஞ்சம் கூட களைப்பு இல்லை.

தமிழக மலைப் பகுதி சாலை மோசம் இல்லாமல் சுமாராக இருந்தது.

கேரளா

கேரளா எல்லைப்பகுதி துவங்கியதுமே காடுகளின் அடர்த்தி, மரங்களில் வித்தியாசம், அற்புதமான சாலை என்று மிகப்பெரிய மாற்றம் உள்ளது.

உண்மையாகவே உடனடி பொறாமை ஏற்பட்டது.

தமிழக எல்லைப்பகுதிக்கும், கேரளா எல்லைப்பகுதிக்கும் சம்பந்தமே இல்லை. அகலமான சாலை, மழைத் தண்ணீர் செல்வதற்கு கான்க்ரீட் பாதை, மிகத்தரமான சாலை என்று அவ்வளவு அற்புதமாக உள்ளது.

தமிழக எல்லைப்பகுதியின் மலைப்பகுதி பெரும்பாலும் கடினமான கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்டும், கேரளப்பகுதி ஒப்பீட்டளவில் சமதளப்பகுதி அதிகமாக இருப்பது சாலை அகலமாக இருப்பதற்குக் காரணமாக உள்ளது.

அதாவது தமிழக எல்லைப்பகுதியில் சாலையோரப் பள்ளங்கள் அதிகமாகவும் கேரளப்பகுதியில் குறைவாகவும் இருந்தது.

வழி நெடுக பல இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளது, சாலை அகலமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி அதைக்காண இடமுமுள்ளது.

மூணாறு

நாங்கள் சென்ற சமயத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும், மதியமே மழையும் பெய்து காலநிலை சட்டென்று மாறி விட்டது.

மூணாறு வணிக ரீதியாக மாறி விட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால், முன்பு சென்றதில்லை என்றாலும் பசுமையில் மாற்றமில்லை என்றே கருதுகிறேன்.

சாலையோரங்களில் வாகனங்களை அனைவரும் நிறுத்துகிறார்கள் ஆனால், யாரும் ஆட்சேபனை செய்வதில்லை, போக்குவரத்து நெரிசலும் ஆகவில்லை.

மூணாறு மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமில்லை. வழக்கமான View Point தான் உள்ளது.

பின்னர் எதனால் மூணாறு அனைவரும் செல்ல விரும்பும் சுற்றுலாத்தலமாக உள்ளது என்று புரியவில்லை. பெரும்பாலானவர்கள் இங்கே உள்ள குளிரை ரசிக்கவும், ஓய்வெடுக்கவுமே வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் ஒரு நபர் குடும்பத்துடன் வந்து ஐந்து நாட்கள் WFH செய்து கொண்டு இருப்பதாக வரவேற்பறையில் இருந்த நபர் கூறினார்!

மூணாறு பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் காண்போம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. உங்களுக்கு ஏற்பட்ட அதே கேள்வி எனக்கும் மூணாறு சென்ற வந்த பின்பு எழுந்தது.. (பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமில்லை. வழக்கமான View Point தான் உள்ளது.). வீட்டில் எல்லோரும் விரும்பியதால் சரி மூணாறு செல்வோம் என்று முடிவு செய்தோம்.. அதுவும் பல வருடங்களாக எங்குமே செல்லவில்லை.. அதனால் நானும் எந்த தடையும் கூறவில்லை.

    நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் சுற்றுலா என்றால் 7 / 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்தனுர் அணை தான்.. அங்கு சென்று எல்லா இடங்களையும் பார்த்து விட்டு அணையில் பிடிக்கும் மீனை வாங்கி சமையல் செய்து சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் இருந்து விட்டு கிளம்புவோம்.. எனக்கு திருமணமான பின்பு கூட ஒரு முறை சென்று வந்தோம்.. பழைய சில படங்களில் பாடல் காட்சிகளை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.. அதை பார்க்கும் போது அந்த நினைவுகள் வந்து போகும்..

  2. @யாசின்

    மூணாறு சீதோஷ்ண நிலையை அனுபவத்திற்காக செல்கிறார்கள். அங்கேயும் மற்ற மலை வாசஸ்தலங்களில் வழக்கமாக இருக்கும் இடங்களே உள்ளன.

    அதாவது, பூங்கா, உயிரியல் பூங்கா, View point போன்றவை. இதைத்தான் அனைத்து மலை வாசஸ்தலங்களிலும் பார்க்கிறோமே.

    எனவே, குளிரை, இயற்கையை அனுபவிக்க செல்லலாம். பொருத்தமான இடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here