பிரபலமான மலைவாசஸ்தலங்கள் என்ற பட்டியல் எடுத்தால், அதில் மூணாறு உறுதியாக இருக்கும்.
மூணாறு
பலரிடம் பேசிய போது கிட்டத்தட்ட அனைவரும் சொன்னதை வைத்து, பார்க்கக்கூடிய இடங்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், அவ்வாறு இல்லை.
மூன்று, நான்கு நாட்கள் மூணாறு திட்டமிட்டு சென்றதாக பலர் கூறியதால், அங்கே பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளது என்று நினைத்து இருந்தேன்.
ஆனால், தேயிலை தொழிற்சாலை, View Point, Echo Station, Botanical Garden ஆகியவையே உள்ளன. மூணாறில் கேரளா சுற்றுலாத் தல அலுவலகம் உள்ளது. அங்கே கேட்டாலே அவர்களே ஒன்றுமில்லை என்கிறார்கள்.
மூணாறிலிருந்து 20 / 30 கிமீ தொலைவிலேயே பல இடங்கள் உள்ளன, மூணாறில் சுற்றிப்பார்க்கும் இடங்கள் மிகக்குறைவு.
பலரும் இங்கே உள்ள சீதோஷ்ண நிலை, பசுமை ஆகியவற்றுக்காகவே வருகிறார்கள்.
Mobile Network
BSNL மட்டுமே சரியாக சிக்னல் கிடைக்கிறது, ஜியோ ஓரளவு கிடைக்கிறது. ஏர்டெல் சிக்னல் மூணாறு நகரில் மட்டுமே கிடைக்கிறது.
பயண நேரத்தில் மலைப்பகுதிகளில் ஒன்றுமே இல்லை.
எனவே, மலைவாசஸ்தலங்கள் சுற்றுலா செல்பவர்கள், முன்பே Google Map ல் செல்லும் பகுதிக்கு Offline ல் டவுன்லோடு செய்து கொள்வது நல்லது.
சிக்னல் இல்லையென்றாலும், Map பயன்படுத்திக்கொள்ளலாம்.
தங்கும் இடங்களில் WiFi இருக்கும்.
தமிழ்
மூணாறு வந்ததிலிருந்து கிளம்பும் வரை இருந்த வியப்பு என்னவென்றால், ஒரு இடம் விடாமல், அனைத்து இடங்களிலும் தமிழ்ப் பாடல்களே ஒலித்துக்கொண்டு இருந்தன.
ஒரே ஒரு இடத்தில் கூட மலையாளப்பாடலைக் கேட்கவில்லை. கிட்டத்தட்ட சென்ற இடங்களில் 90% தமிழ் பேசுகிறார்கள் அல்லது தமிழர்களே இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்கு, நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பொறுப்பில் இருந்தவர்கள் அனைவருமே தமிழர்கள். அதாவது இரண்டாவது, மூன்றாவது தலைமுறை.
மூணாறு கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போலத்தான் உள்ளது. வேறு மாநிலத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை.
Blossom Hydel Park
நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் போதமேடு. இங்கே இருந்து Hydel Park 2 கிமீ தூரத்தில் உள்ளது.
இந்தப் பூங்காவைப் பற்றிக் கூறும் முன், கேரளா சுற்றுலாத்துறையைப் பாராட்டியே ஆக வேண்டும். எப்படிப் பராமரிக்கிறார்கள் தெரியுமா?! அட்டகாசம்.
அரசு பராமரிக்கிறதா? தனியார் பராமரிக்கிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது. யார் பராமரித்தாலும் பெயர் கிடைப்பது என்னவோ அரசுக்குத்தானே!
வசூலிக்கும் நுழைவுக் கட்டணத்துக்குத் தகுந்த தரத்தைப் பூங்காவில் கொடுத்துள்ளார்கள். அவ்வளவு சுத்தமாக, அழகாக உள்ளது.
நிழற்படம் எடுக்க ஏராளமான இடங்கள், வசதிகள், ஐஸ்கிரீம் மற்றும் மற்றவை வாங்க சிறு கடை, மூணாறு சிறப்புப் பொருட்களுள்ள கடை ஆகியவை உள்ளன.
ஏராளமான இடங்கள், பூந்தோட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நிழற்படம் எடுக்க வசதியாக உள்ளது.
நாங்கள் சென்ற நேரத்தில் மழைச்சாரல் இருந்தது, அதோடு 90’s ரகுமான் பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டு இருந்தார்கள், அற்புதமான அனுபவம்.
Zip Line
உயரமான இடத்திலிருந்து பெல்ட் போட்டுக்கொண்டு இரும்புக் கம்பி வழியாகச் சறுக்கிக்கொண்டு செல்லும் விளையாட்டு பிரபலமாக உள்ளது, கட்டணம் ₹300.
ஒரு நிமிடத்துக்கு ஒரு நபர் இதில் செல்கிறார். கூடுதல் நேரம் நிற்க வேண்டியதில்லையென்பதால், வரிசையாகச் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப்பூங்காவில் இதுவொரு அனைவரும் விரும்பும், செல்ல நினைக்கும் விளையாட்டாக உள்ளது.
படகுத்துறை
மழை பெய்து இருந்ததால், பெடல் படகுச் சவாரி மட்டும் அனுமதித்தார்கள்.
30 நிமிடங்கள் சுற்றி வரலாம். படகுத்துறை அருகே தான் கேரளா சுற்றுலாத் துறை அலுவலகமும் உள்ளது, அங்கே தான் நுழைவுச்சீட்டும் கொடுக்கிறார்கள்.
மூணாறில் இங்கே மட்டுமே UPI / Card பயன்படுத்தாமல், பணம் கொடுக்கக் கூறிக் கேட்டார்கள். அங்கே Card Reader இருந்தது ஆனால், ஏனோ பயன்படுத்தவில்லை.
கொடுத்தது என்னவோ மின்னணு நுழைவுச்சீட்டு தான்.
படகில் நால்வர் செல்லலாம், முன் பகுதியில் இருக்கும் இருவர் பெடல் செய்ய வேண்டும். ‘அழுத்துவது ரொம்ப ஈஸியா இருக்கு‘ என்றான் பையன்.
‘அப்படியான்னு!‘ அழுத்துவதை நிறுத்திக்கொண்டேன்.
அதன் பிறகு படகு நகரவில்லை. அப்புறம் இவன் முக்கி முக்கிப் பார்த்துட்டு ‘சரி சரி நீங்களே அழுத்துங்க‘ என்றான் 🙂 .
SN Restaurant
படகுத்துறை அருகேயே பல காலமாக உள்ள SN Restaurant என்ற உணவகம் உள்ளது. இங்கே உணவு cheap & best ஆக இருந்தது.
இதையொட்டி ஒரு Coffee Shop உள்ளது, இதுவும் இவர்களுடையது தான். தற்போதைய காலத்து வடிவமைப்பில் அட்டகாசமாக உள்ளது.
இங்கே மலை சார்ந்த பொருட்களும் கிடைக்கிறது. காஃபி குடிக்கும் ஆர்வத்தில், முயற்சித்துப்பார்ப்போம் என்று வாங்கினேன், சிறப்பான சுவை.
குடும்பத்தினர் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் கவனித்த போது காஃபி போட்டுக்கொடுத்த பெரியவர் எங்கேயோ பார்த்து நின்று கொண்டு இருந்தார்.
அவர் அருகில் சென்று, ‘நீங்கள் காஃபி போட்டீர்களா?‘ என்று கேட்டதும், எதோ பிரச்சனையோ என்ற குழப்பத்தில் ‘ஆமாம் நான் தான்‘ என்றார்.
காஃபி சூப்பராக இருந்தது என்றவுடன் அவர் முகம் மலர்ந்தது 🙂 . அடுத்த நாளும் திரும்ப வந்து காஃபி குடித்து விட்டே ஊருக்குக் கிளம்பினேன்.
மேற்கூறிய இடங்கள் முதன்மை மூணாறு பகுதியில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி உள்ளது ஆனால், அனைத்துமே அருகருகே உள்ளன.
லக்கம் நீர்வீழ்ச்சி
View Point மற்றும் சில இடங்கள் பார்க்க ஆர்வமில்லை, இதுவே நேரம் சரியாக இருந்தது. ஊருக்குத் திரும்பும் போது உடுமலைப்பேட்டை வழியாகச் சென்றோம்.
வழியில் விலங்குகளைப் பார்க்கும் இடமுள்ளது ஆனால், கூட்டமாக இருந்ததோடு நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்ததால், அந்த அளவுக்கு worth இல்லையென்று கடந்து விட்டோம்.
மூணாறு சுற்றி நிறைய நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், எங்குமே தண்ணீர் இல்லை, லக்கம் நீர்வீழ்ச்சி தவிர.
போகும் வழியிலேயே இருந்ததால், முன் கூட்டியே இதற்குத் தகுந்த மாதிரி திட்டமிட்டுக்கொண்டோம்.
கற்கள் அதிகமிருப்பது குறிப்பாக ஜல்லிக்கற்கள் அதிகமாக இருப்பது நீர்வீழ்ச்சியை அடையக் கடினமாக உள்ளது. சில இடங்களில் ஆழமும் இருந்தது.
ஓரளவு நன்றாகவே பராமரித்து இருந்தார்கள்.
விமர்சனம்
இங்கே முடித்துக்கொண்டு தேயிலைத் தோட்டம் வழியாகச் செல்வது, ரம்மியமாக உள்ளது. சாலையின் அகலம் குறைவு ஆனால், தரமானதாக இருந்தது.
வழியில் ஒரு Coffee Shop இருந்தது. அங்கே சென்று குடித்துக்கொண்டு இருந்த போது வந்த நம் மாநிலத்தவர் ஒருவர் புலம்பி விட்டார்.
‘பாருங்க சார்! இவங்க எவ்வளவு நல்லா பராமரிக்கிறாங்க.. நம்ம ஊர்ல எதுவுமே செய்வதில்லை, படு மோசமாக வைத்து இருக்காங்க‘ என்றார்.
நானும் என் ஆற்றாமையை அவருடன் பகிர்ந்து கொண்டேன். இது தொடர்பாக மேலும் கூறலாம் என்றாலும், மூணாறு பற்றி மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன்.
கரட்டு மடம்
உடுமலைப்பேட்டை சாலையில் வரும் போது எரிசனம்பட்டி, கரட்டு மடம் ஆகிய ஊர்களைத் தாண்டி வரவேண்டும்.
கரட்டு மடத்தில் உள்ள காந்தி கலா நிலையத்தில் 7 & 8 வகுப்பு மாணவர் விடுதியில் தங்கிப்படித்தேன். அடி தாங்க முடியாமல் கோபி பள்ளிக்கே சென்று விட்டேன்.
இங்கே அடி வாங்கியதை ஒரு தொடராகவே எழுதியுள்ளேன். நேரம் இருப்பின் படித்துப்பாருங்கள் 🙂 .
Read : தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல் அனுபவம்
வேதாத்ரி மகரிஷி தியான மண்டபம்
நான் கோவைப்பகுதி என்றாலும், ஆழியாறு அணைக்கே சென்று இருந்தாலும், அருகில் உள்ள வேதாத்ரி மகரிஷி தியான மண்டபத்துக்குச் சென்றதில்லை.
இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்படியே இதையும் பார்த்துச் சென்று விடலாம் என்று சென்றோம், தியான மண்டபம் அல்லாத இடங்களிலும் பேரமைதியாக இருந்தது.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்து இருந்தனர், 16 நாட்கள் வகுப்பு என்று கூறினர்.
ஊருக்குக் கிளம்பிய பிறகு சாலையே தெரியாத அளவுக்குக் கடுமையான மழை. பயணம் முடித்து இரவு 9.30 க்கு வீட்டை அடைந்தோம்.
மூணாறு பயணம் பெரியளவில் திட்டமிடவில்லை, சொல்லப்போனால் மூணாறு போவதே சின்னமனூர் சென்ற பிறகே முடிவானது.
ஆனால், சிறப்பான, நிறைவான பயண அனுபவமாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு பயணக்கட்டுரை எழுதக் கிடைத்த வாய்ப்பு.
பயணத்தில் தொடர்ந்தவர்களுக்கு நன்றி.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. கோவையில் பணி புரிந்த போது அதை சுற்றி உள்ள பகுதிகளை சக்தியுடன் சேர்ந்து சுற்றினேன்.. அது எந்த திட்டமும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம்.. எங்கு சாப்பிடுவது, எத்தனை மணிக்கு சாப்பிடுவது என்று எந்த முன்னேற்பாடும் இல்லாமல் இருக்கும்.. அப்போது இருவரும் ஒரு புகைப்படம் கூட எடுத்து கிடையாது. ஆனால் நாங்கள் குடும்பத்துடன் சென்ற இந்த சுற்றுலாவில் சாப்பாடும், புகைப்படம் எடுப்பது மட்டுமே பிரதானமான ஒன்றாக இருந்தது..
ஊட்டியில் நானும் சக்தியும் பஸ் போகாத குறுக்கு பாதையில் பயணித்து பல இடங்களை நடந்து சென்று ரசித்து இருக்கிறோம்.. இங்கு குடும்பமாக சென்ற போது 5 நிமிட நடைபயணம் என்பது எல்லோருக்கும் எரிச்சலாக இருக்கிறது.. பலருக்கும் பல opinion இருந்ததால் சில இடங்களை காணாமலே வந்து விட்டோம்.. ஆனால் எல்லோரும் ஒன்றாக இருந்தது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.. எதிர்காலத்தில் மீண்டும் இது போல ஒரு பயணம் அமையுமா? என்பது தெரியவில்லை..
@யாசின்
“நாங்கள் குடும்பத்துடன் சென்ற இந்த சுற்றுலாவில் சாப்பாடும், புகைப்படம் எடுப்பது மட்டுமே பிரதானமான ஒன்றாக இருந்தது..”
ஒருவகையில் பார்த்தால் நினைவுகளை கொடுக்கும் என்றாலும், வந்த இடத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வேறு எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகிறது.
நீங்கள் கூறுவது சரி தான்.
எனக்கு நிழற்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லை, சில நேரங்களில் மட்டுமே எடுக்க வேண்டும் என்று தோன்றும்.
பல வருடங்கள் கழித்து நண்பர்களைச் சந்தித்தால் கூட மறந்து விடுவேன்.. அட! ஒரு படம் எடுக்காமல் போய்ட்டோமே என்று தோன்றும்.
“ஊட்டியில் நானும் சக்தியும் பஸ் போகாத குறுக்கு பாதையில் பயணித்து பல இடங்களை நடந்து சென்று ரசித்து இருக்கிறோம்.. இங்கு குடும்பமாக சென்ற போது 5 நிமிட நடைபயணம் என்பது எல்லோருக்கும் எரிச்சலாக இருக்கிறது.. பலருக்கும் பல opinion இருந்ததால் சில இடங்களை காணாமலே வந்து விட்டோம்.”
இது தான் நண்பர்களுடன் செல்வதற்கும் குடும்பத்தினருடன் செல்வதற்கும் உள்ள வித்தியாசம்.
நண்பர்கள் அனைத்துக்கும் சரி என்பார்கள், எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலும் பிரச்சனை செய்ய மாட்டார்கள்.
எவ்வளவு தூரம் நடந்தாலும் சலிக்காமல் வருவார்கள். எங்கே காஃபி குடிக்க வேண்டும் என்றாலும், சரி என்பார்கள்.
வழியில் அமர்ந்து கொள்ளலாம் என்றால் சரி என்பார்கள்.
ஆனால், குடும்பத்தினருடன் செல்லும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒப்பீனியன் வைத்து இருப்பார்கள்.
இங்கே அனைவரையும் திருப்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆளாளுக்கு ஒன்றை கூறுவார்கள். இது கடினமான நிலை.
4 பேர் இருந்தாலே கடினம், இதில் உங்களைப் போல பலர் சேர்ந்து வரும் போது அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது மிகப்பெரிய சவால்.
சுருக்கமாக, நண்பர்கள் அனைத்துக்கும் சரி என்பார்கள், குடும்பத்தினர் அவ்வாறு சொல்ல மாட்டார்கள், எதிர்பார்க்கவும் முடியாது.
இவை எல்லாவற்றையும் விட அனைவரையும் பத்திரமாக ஊர் கொண்டு போய் சேர்த்த வேண்டும் என்ற பொறுப்பு மிகப்பெரிய அழுத்தத்தை தரும்.