ஆட்குறைப்பு எதிர்மறை எண்ணங்கள்

3
ஆட்குறைப்பு

ற்போது ஆட்குறைப்பு என்பது பல நிறுவனங்களில் நடந்து வருகிறது, குறைந்த பட்சம், செலவினக் குறைப்புகள் நடந்து வருகிறது. காரணம், பெரியதாக ஒன்றுமில்லை, பொருளாதாரத் தேக்கம் காரணமாக. Image Credit

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு என்பது அனைத்துத் துறைகளிலும் நடைபெற்று வருகின்ற சம்பவம். குறிப்பிட்ட துறை என்று தனித்துக்கூற முடியாது.

இந்தியாவில் மட்டும் இந்த நிலையா?

முற்றிலும் தவறான எண்ணம், தகவல்.

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் நிலைத்தகவல் காண நேர்ந்தது.

வெளிநாட்டில் சென்று இருந்து கொண்டால் பிரச்சனையில்லை, இந்தியாவில் இருந்தால் பிரச்னை, வாழ்வதே சிரமம் என்கிற அர்த்தத்தில்.

முன்பே ஒருவர் வெளிநாடு செல்ல அறிவுரை வழங்கியதாகவும் ஆனால், அதைப் புறக்கணித்ததை நினைத்து வருத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

அரைவேக்காட்டுத்தனமான பதிவு.

இதை நம்பி எத்தனை பேர் மனம் புழுங்கி, பயந்து கொண்டு இருந்தார்களோ!

பொருளாதாரப் பிரச்சனை இந்தியாவில் மட்டும் உள்ளதாக இந்திய ஊடகங்கள் மக்களை நம்ப வைத்துக்கொண்டு இருக்கின்றன.

அதற்குத் தகுந்தபடி அது தொடர்பான எதிர்மறை செய்திகளை, கூடுதல் மசாலா சேர்த்து மக்களைப் பயமுறுத்தி வருகின்றன.

பொருளாதாரத மந்தம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள பிரச்னை. ஆட்குறைப்பு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கும் பிரச்சனை.

இன்னும் சில இடங்களில் முழுமையாக இந்த நிலை வரவில்லை என்றாலும், அதற்கான அறிகுறிகளை மக்கள் கண்டு இருப்பார்கள்.

அதாவது செலவினக்கட்டுப்பாடு, ஊழியர்கள் பயணங்களுக்குக் கெடுபிடி, இவற்றைக் குறைக்கலாம் என்றும் எண்ணும் செலவுகளுக்குத் தடை போன்றவை.

ஆட்குறைப்பு என்பது தவிர்க்க முடியாத நிலை, குறிப்பாகத் தனியார் நிறுவனங்களில். எந்த நிறுவனமும் நட்டத்துக்கு நிறுவனத்தை நடத்தாது.

பாவம் புண்ணியம் பார்த்து நடவடிக்கைகளை எடுக்காது, இது தான் நிதர்சனம்.

இவ்வாறு பார்க்க ஆரம்பித்தால், அவர்களால் நிறுவனத்தை நடத்த முடியாது. கேட்கக் கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.

நாமே ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இருந்தால், அவர்கள் நிலையிலேயே இருக்க வேண்டியது வரும்.

எதிர்மறை செய்திகள்

வேலையை விட்டுத் தூக்கிவிட்டால் என்ன செய்வது? உங்களுக்குப் பிரச்சனையா? என்று கேட்டு மற்றவர்களைச் சமூகத்தளங்களில் பதட்டத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

இவ்வாறு பேசுவதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? இதனால் யாருக்கும் பயன் உள்ளதா? இவர்கள் பயத்தை இப்படிக்கூறி மற்றவர்களையும் பலவீனமாக்குகிறார்கள்.

மற்றவருக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும், எதிர்மறை செய்திகளைக் கூறி ஏன் பயமுறுத்த வேண்டும்? நடப்பது நடக்கப் போகிறது, நடக்காது என்றால் நடக்கப் போவதில்லை.

விகடன், ஒன் இந்தியா போன்ற தொடர்ந்து எதிர்மறை செய்திகளையே அனைத்திலும் எழுதி வரும் செய்திகளைப் படிக்காதீர்கள்.

பொருளாதார மந்தம், ஆட்குறைப்பு என்பது உலகம் முழுக்க உள்ள பிரச்சனை. வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பரைக் கேட்டு உறுதி செய்யலாம்.

ஒரு பிரச்னை நடக்கப்போகிறது என்றால், அதற்காகத் திட்டமிட்டு வேறு வழிகளை ஆராய்வது நல்லது ஆனால், இப்படி நடந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு இருப்பது எந்த விதத்திலும் உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

ஆட்குறைப்பு என்பது தற்போது எல்லோருக்குமே மனதில் அச்சம் உள்ளது, நான் உட்பட! ஆனால், அதையே நினைத்துக்கொண்டு இருந்தால், நடக்காமல் இருந்து விடுமா? நம் மனது தான் கெட்டுப்போகும், குழப்பமடையும்.

ஒவ்வொரு நாளும் நிம்மதியற்று இருக்கும்.

செய்ய வேண்டியது உங்கள் துறையில் உங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள முயற்சியை எடுப்பது மட்டுமே! இதை மட்டுமே செய்ய முடியும், வேண்டும்.

குறிப்பாக 40+ வயதுக்கு மேற்பட்டவர்கள். ஏனென்றால், இவர்களுக்குத் தான் கூடுதல் நெருக்கடி.

இதுவரை இது போன்ற நிலை மூன்றாவது முறையாக வருகிறது. 2001, 2009 தற்போது 2019.

கொஞ்சம் எதார்த்தமாக யோசித்துப் பாருங்க, கடந்த 2001, 2009 ல் ஆட்குறைப்பு நடந்த போது பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர் ஆனால், அவர்கள் என்ன இப்ப ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டார்களா?!

என் வெளிநாட்டு நண்பருக்குக் கடந்த மாதம் வேலை பறிக்கப்பட்டது ஆனால், இந்த மாதம் வேறு வேலையைப் பெற்று விட்டார்.

இது போல நிலை தான் ஒவ்வொருவருக்கும்.

கால அளவில் மட்டுமே வித்யாசம் அதாவது, சிலருக்கு ஒரு மாதத்திலேயே வேறு வேலை கிடைக்கலாம், சிலருக்கு 4 மாதங்கள் கூட ஆகலாம் ஆனால், கிடைக்கும்.

இடைப்பட்ட காலங்களைச் சமாளித்து விட்டால் போதும்.

ஒருவேளை கிடைக்கும் வேலை, முன்பு இருந்த வேலையைவிடச் சிறப்பானதாக இருக்கலாம், ஊதியம் கூடுதலாக இருக்கலாம்.

தன்னம்பிக்கை

இன்னொன்று, ஒரே நிறுவனத்தில் தொடரும் போது நம்முடைய பலம், பலவீனம் என்னவென்று தெரியாது, நாமும் முயற்சிக்க மாட்டோம் ஆனால், திடீர் என்று இது போல நடக்கும் போது நம்முடைய பலம் பலவீனம் தெரிய வரும்.

அதன் பிறகு நம் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதாவது எதா இருந்தாலும் பார்த்துக்கலாம் என்ற மனநிலை. எனவே, சில நேரங்களில் கெட்டது கூட நல்லதாகும்.

ஆகையால், ஆட்குறைப்பு பற்றிப் பயப்படாதீர்கள். ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்கப்படும்.

திறக்கக் கொஞ்சம் தாமதமாகலாம் ஆனால், கண்டிப்பாகத் திறக்கும்.

இதுவரை எத்தனையோ பேர் பணி நீக்கம் என்ற நிலையை அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன அப்படியேவா உட்கார்ந்து விட்டார்கள்! மீண்டும் வேறு பணியில் வாழ்க்கையைத் தொடரவில்லையா! எனவே, குழம்ப வேண்டாம்.

எதிர்மறை எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தி உண்டு. அதாவது நீங்கள் எதை நினைத்து அதிகம் பயப்படுகிறீர்களோ அதுவே நடப்பதற்கான வாய்ப்புள்ளது.

ஆகையால், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையாகச் சிந்தியுங்கள், தேவையற்ற பயத்தை, கற்பனையைத் தவிர்த்து விடுங்கள்.

என்ன நடந்தாலும், நமக்கு எங்கு இருந்தாவது ஒரு உதவி வரும், இது உறுதி. உங்கள் கடந்த காலங்களை யோசித்துப்பாருங்கள், எவ்வளவோ சிரமங்களைத் தாண்டித்தான் வந்துள்ளீர்கள். அப்போதெல்லாம் எவராவது உதவி இருப்பார்கள்.

இவ்வளவு பிரச்சனைகளைத் தாண்டி வந்த நீங்கள், இதைத் தாண்ட மாட்டீர்களா?!

நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே! சிலது புரிய தாமதமாகலாம் அவ்வளவே! காரணத்தை நாம் தான் கண்டறிய வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள் 

ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

கொசுறு

இக்கட்டுரை வலியுறுத்துவது நேர்மறையாகச் சிந்தியுங்கள் என்பதை மட்டுமே! அதற்காகப் பொறுப்பற்று இருக்கலாம் என்பதல்ல.

சிலர் எதைப் பற்றியுமே எந்த எச்சரிக்கையும் இல்லாமல் மனம் போன போக்கில் இருப்பார்கள், இது தவறு.

கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. அதே சமயம் இதன் இன்னொரு அர்த்தம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது.

அதாவது நமது திறமையை மேம்படுத்தும் வழிகளை எப்போதும் தொடர வேண்டும். போட்டி மிகுந்த உலகம்.

நேர்மறை சிந்தனைகள் மட்டுமே போதாது, அதை நியாயப்படுத்தும் வழிகளையும், முயற்சிகளையும் பின்பற்ற வேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

3 COMMENTS

 1. மிக சரியாக சொன்னீர்கள் கிரி உங்கள் தலைவர் டயலாக் … நடக்கறது நடக்காம இருக்காது நடக்காம இருக்கறது நடக்கவே நடக்காது ! …. அதே போல் ஆனந்த் என்ற ஹிந்தி படத்தில் வரும் ஒரு டயலாக் உயிரோடு இருக்கும் வரை மரணம் இல்லை இறந்த பிறகு நாமே இல்லை பின் பயம் எதற்கு ! ராஜேஷ் கன்னா சொல்லுவார் .. ஊதி பெருக்கும் ஊடகத்தினால் தான் இந்த பிரச்சினை.. விகடன் என்று நீங்கள் சொல்லுவது ஆனந்த விகடனையா ? ஒரு காலத்தில் அது எப்படி இருந்தது ? நீங்கள் சொல்வது போல் திறன் வளர்த்து கொண்டால் சமாளித்து விடலாம். எல்லா நிறுவனங்களில் சொல்லி கொன்டே வருகிறார்கள் .. Re skill up skill செய்தாலே போதும் .

 2. கிரி.. வரிக்கு வரி உங்களின் கருத்துக்களுடன் ஒத்து போகிறேன்.. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!!! இந்தியாவில இருந்தாதான் பிரச்சனை.. வெளிநாடு போய் இருந்தா பிரச்சனை இல்ல என நினைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம்.. உலகின் எல்லா பகுதிகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது.. அதற்கான தாக்கங்கள் இந்தியாவில் அதிகமாக தெரிகிறது..

  உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தனி நபர் அவரின் நிதிநிலைமை பற்றியும், அவர் பணி புரியும் நிறுவனத்தை குறித்து எழுதினால்,, அந்த அறிக்கையை எப்படி மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியும். இது எப்படி மற்ற நாடுகளுக்கு பொருந்தும்??? இது முற்றிலும் தவறான அணுகுமுறை..

  வைரமுத்து சொன்ன வரிகளை என்றும் நினைவில் கொள்வேன்.. வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் சுவை.. நாளை என்ன நடக்கும் முன்பே தெரிந்து விட்டால் சுவையற்ற வாழ்வாக மாறி போகும்.. மரணம் நிகழ போகின்ற தேதி மனிதனுக்கு முன்பே, தெரிந்து விட்டால் அந்த தேதிக்கு ஒரு நாள் முன்பே மறித்து விடுவான்.. இது தான் உண்மை..

  நானும் முன்பு நிறைய யோசிப்பேன்.. இதை பற்றி சிந்திப்பேன்.. மனைவியிடமும் பேசுவேன்.. ஆனால் தற்போது ரொம்ப தெளிவாகிவிட்டேன்.. “நான் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் இயங்கும்!!!” இது தான் எதார்த்தம்.. ஆனால் இந்த உண்மையை புரிந்துகொள்ள சில கால அவகாசம் ஏற்பட்டது!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @சரவணன்

  “உயிரோடு இருக்கும் வரை மரணம் இல்லை இறந்த பிறகு நாமே இல்லை பின் பயம் எதற்கு”

  செம 🙂 டக்குனு போய்ட்டா பிரச்சனையில்லை.. போகப்போறோம்னு தெரிந்து போனால் தான் பிரச்னை.

  ‘விகடன் என்று நீங்கள் சொல்லுவது ஆனந்த விகடனையா ? ஒரு காலத்தில் அது எப்படி இருந்தது ? ‘

  விகடன் எப்போது திமுக கட்டுப்பாட்டில் சென்றதோ அப்பவே அதன் மதிப்பை இழந்து விட்டது. அதோடு கம்யூனிச சிந்தனை கொண்டவர்கள்.

  திமுக வை பாராட்டுவதை கூட எதோ கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால், முழுக்க எதிர்மறை செய்திகள் தான். எல்லாம் போச்சு எல்லாம் போச்சுன்னு தான் கட்டுரைகள் இருக்கும்.

  “Re skill up skill ”

  அவசியமான தேவை.

  @யாசின்

  “உலகின் எல்லா பகுதிகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.. அதற்கான தாக்கங்கள் இந்தியாவில் அதிகமாகத் தெரிகிறது..”

  அதற்கு இங்குள்ள ஊடகங்கள் காரணம் என்று நினைக்கிறேன்.

  கடந்த வாரம் கூட ஜெர்மனியில் ஒரு கார் நிறுவனம் 10000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது.

  “வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் சுவை.. நாளை என்ன நடக்கும் முன்பே தெரிந்து விட்டால் சுவையற்ற வாழ்வாக மாறிப் போகும்.. ”

  உண்மை

  ““நான் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் இயங்கும்!!!” இது தான் எதார்த்தம்.”

  அவ்வளோ தான் மேட்டர்.. இன்னும் கொஞ்சம் எளிமையா சொன்னா. நாம் இல்லைனாலும் நம்ம வேலை பார்த்த நிறுவனம் இயங்கும்.. நாமும் வேறொரு நிறுவனத்தில் இருப்போம்.

  யாரும் யாரை நம்பியும் இல்லை.. கொஞ்சம் காலம் எடுக்கலாம் அவ்வளவே.

  “இந்த உண்மையைப் புரிந்துகொள்ளச் சில கால அவகாசம் ஏற்பட்டது!!!”

  அது தான் அனுபவம் யாசின்.. சிலர் உங்களைப் போலப் புரிந்து கொள்கிறார்கள். சிலர் எவ்வளவு அடிபட்டாலும் புரிந்து கொள்வதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here