Polar (2019) எங்கிட்ட மோதாதே!

4
Polar

Polar ஒரு மார்க்கமான கதை & அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றப் படமல்ல.

Polar

முக்கியமான நபர்களைப் பணத்துக்காகக் கொல்லும் ஒரு நிறுவனத்தில்! பணி புரிந்த ஓய்வு பெற்ற நபர் (assassin) கொல்லப்படுவதாகக் கதை துவங்குகிறது.

இது போல ஓய்வு பெறும் இன்னொரு நபர் Duncan.

இந்நிறுவனத்தின் விதிமுறை என்னவென்றால், 50 வயதில் கட்டாய ஓய்வு பெற்று விட வேண்டும். ஓய்வு பெறும் போது கணிசமான ஓய்வுத்தொகை கொடுக்கப்படும்.

இதைத் தடுக்க, ஓய்வு பெறும் நாளுக்குச் சில நாட்கள் முன்பு சம்பந்தப்பட்ட நபரை நிறுவனமே கொன்று விடும், ஓய்வு பணத்தை இவர்களே வைத்துக்கொள்வது திட்டம்.

இது போல Duncan க்கு முயற்சிக்க, குளவிக் கூட்டில் கையை வைத்தது போல ஆகி விடுகிறது. Duncan என்ன ஆனார்? கொல்லப்பட்டாரா? தப்பித்தாரா? என்பதே கதை.

பழிவாங்கல் கதை

படத்துக்கு நல்லவிதமான விமர்சனங்கள் வரவில்லை ஆனால், எனக்குப் படம் தாறுமாறாகப் பிடித்துள்ளது என்பதால் 😀 . YouTube ல் பலர் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

பழிவாங்கல் கதை வகையைச் சார்ந்தது. ரணகளமான ஹாஸ்டல் படத்தின் சாயலும் உள்ள படம். இரண்டாம் பாதியை பல முறை பார்த்து விட்டேன்.

துவக்கத்தில் படம் புரியவில்லை. என்ன படம்? கதாப்பாத்திரங்கள் ஒரு மாதிரியா இருக்கே..!! என்று யோசித்துட்டே வந்தேன், பாதிக்குப் பிறகு ரொம்பப் பிடித்து விட்டது.

நாயகனாக! வருபவர் அலட்டிக்காத நடிப்பு. சில காட்சிகள் நம்ப முடியவில்லை என்றாலும், ரசிக்க முடிந்தது. அதிரடியான, ரணகளமான சண்டைக்காட்சிகள்.

வில்லனாக வருபவர் வித்யாசமான கதாப்பாத்திரம் ஆனால், இறுதியில் டம்மி போல ஆகி விட்டார்.

விவியன்

வில்லியாக வரும் விவியன் என்ற பெண் தான் அசத்தல். தொலைபேசி அழைப்பு வந்தால், எடுத்தவுடன் கூறும் வார்த்தை ‘Speak‘ தான். செம்ம கெத்து.

பதட்டமில்லாத ஆனால், மிரட்டலான கதாப்பாத்திரம். இவர் முகத்துக்கும், உடலமைப்புக்கும், தெனாவெட்டுக்கும் செமையாகப் பொருந்தியுள்ளது. இவரின் திமிர் மீது காதலாகி விட்டேன் 🙂 .

புகைத்து மூக்கில் புகை விடுவார் பாருங்க.. அடேங்கப்பா! ஆண்கள் தோத்தாங்க போங்க.

Graphic Novel யை அடிப்படையாக வைத்துப் படமாக்கப்பட்டதாலோ என்னவோ, கதாப்பாத்திரங்கள் வண்ணமயமாக, வித்யாசமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிரட்டல். அதிலும் ஒளிப்பதிவு ரணகளமாக, புதுவிதமாக, வண்ணமயமாக உள்ளது. துவக்கத்தில் புரியாமல் பிடிக்கவில்லை, பின்னர் ஒன்றி விட்டேன்.

படத்தில் அதீத வன்முறை, உடலுறவு, சித்திரவதை காட்சிகள் உண்டு எனவே, இது அனைவருக்கும் ஏற்றப் படமல்ல. பார்த்து விட்டு என்னைத் திட்ட வேண்டாம் 🙂 .

படம் NETFLIX ல் உள்ளது. தயாரிப்பும் NETFLIX தான்.

பார்க்க முடிவு செய்தவர்கள், முன்னோட்டத்தைப் பார்க்க வேண்டாம். ஏனென்றால், பார்த்தால் சில காட்சிகளின் முடிவு தெரிந்து விடும், சுவாரசியமாக இருக்காது.

முன்னோட்டத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் எதற்கு வைத்தார்களோ!

Directed by Jonas Åkerlund
Produced by Robert Kulzer, Mike Richardson, Keith Goldberg, Jeremy Bolt, Hartley Gorenstein
Screenplay by Jayson Rothwell
Based on Polar by Víctor Santos
Starring Mads Mikkelsen, Vanessa Hudgens, Katheryn Winnick, Matt Lucas
Music by Deadmau5
Cinematography Pär M. Ekberg
Edited by Doobie White
Distributed by Netflix
Release date January 25, 2019
Running time 119 minutes
Country United States, Germany, Canada
Language English

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. உங்களைப்போல தமிழில் Website உருவக்குவது எப்படி?
  HTML தெரிந்திருக்க வேண்டுமா?
  வெப்சைட் உருவாக்குவதைப்பற்றி தமிழில் ஏதாவது காணொளிகள் உள்ளதா?

 2. நான் வேறு ஒரு நபரிடம் கொடுத்துத் தான் இத்தளத்தை உருவாக்கினேன். எனக்குத் தெரியாது.

  அப்படி கொடுத்த பிறகு அதைச் சரியாகப் பராமரித்து வருகிறேன்.

 3. கிரி.. படத்தோட விமர்சனத்தை பார்க்கும் போது, படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.. தற்போது குடும்பம் ஊருக்கு சென்று உள்ளதால், அதிகம் கிரிக்கெட் விளையாடுவது, பாட்மிண்டன் விளையாடுவது, பழைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் காணொளியை காண்பது, பழைய பாடல்கள் கேட்பது & படங்கள் பார்ப்பது என நாட்கள் சென்று கொண்டு இருக்கிறது..

  வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட எல்லா மொழிப்படங்களின் காதலன் நான்!!! நீங்கள் குறிப்பிட்ட படங்களை பார்க்க முயற்சி செய்கிறேன்.. நெட்பிலிஸ் எனக்கு எந்த விவரமும் தெரியாது.. உங்களுக்கு தெரிந்தால் சுருக்கமாக பகிரவும்.. பகிர்வுக்கு நன்றி..

 4. NETFLIX என்பது மிகப்பெரிய சினிமா தளம் அதாவது பல படங்களின் உரிமையை வாங்கி வைத்துள்ள தளம். இங்கே பணம் கட்டி உறுப்பினரால் பல்வேறு திரைப்படங்களைக் காண முடியும். உலகின் மிகப்பெரிய திரைப்படங்களின் தளம் இது.

  வேறு விவரங்கள் தேவையென்றால் கூறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here