சிங்கப்பூர் 50 வது தேசிய தின கொண்டாட்டம்

5
சிங்கப்பூர் 50 வது தேசிய தின கொண்டாட்டம்

டந்த ஆகஸ்ட் 9 சிங்கப்பூரின் 50 வது தேசிய தினம் பிரம்மாண்டமாக அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பல இன மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் அனைத்து மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பைக் கொடுத்தது பார்க்க மகிழ்வாக இருந்தது.

சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஆண்டு முதலே 50 வது தேசிய தினத்தைக் கொண்டாட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுச் சரியாக தேசிய தினத்தின் போது பயன்பாட்டிற்கு வந்தன.

சலுகைகள்

50 வது தேசிய தினம் என்பதால் அரசாங்கமும் சரி பொதுமக்களும் சரி உற்சாகமாகவே இருந்தார்கள். இரு பக்கமும் தங்களால் முடிந்த அளவு தங்களது பங்களிப்பை அளித்தார்கள்.

அரசாங்கம் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிறு தேசிய தினம் என்றாலும் நான்கு நாட்கள் பொது விடுமுறை அளித்தது (வெள்ளி – திங்கள்).

9 ம் தேதி அனைத்து பேருந்து / ரயில் பயணங்களும் இலவசப் பயணமாக அறிவிக்கப்பட்டது. விடுமுறை என்பதாலோ / தேசிய தினம் என்பதாலோ கூட்டம் தாறுமாறாக இருந்தது.

பேருந்து / ரயில்கள் கூட்டத்தில் திணறியது. பல லட்சம் மக்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தை நோக்கி பயணித்ததால் நாடே திமிலோகப்பட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம் இருக்கிறது. 9 ம் தேதி அதிகாலையில் அனைத்து MRT ரயில் நிலையங்களிலும் சிகப்பு / பச்சை குறியீடுகள் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

அதோடு பேருந்துகளில் பயண அட்டையைக் காட்டும் இடத்தில் இலவச சவாரி / Free Ride என்று ஒட்டப்பட்டு இருந்தன. 

காலையில் வந்த அனைவருக்கும் இது இலவசப் பயணம் என்று குழப்பமில்லாமல் தெரிந்து கொள்ள முடிந்தது.

City Hall / Raffles Place / Bay Front போன்ற நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களின் அருகில் இருந்த MRT நிலையங்களில் வழிகாட்டிக் குறியீடுகள் வைக்கப்பட்டு இருந்தது பொது மக்களுக்கு மிக வசதியாக இருந்தது.

தொழில் சுத்தம் என்பதை இவர்களிடமே காணலாம்.

பொதுத் துறை நிறுவனமான SingTel (நம்ம ஊர் ஏர்டெல் போல) நான்கு (பொது விடுமுறை) நாட்கள் மொபைல் டேட்டா இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்தது.

அனைத்து கட்டணச் சேனல்களும் நான்கு நாட்கள் இலவசமாகக் கொடுக்கப்பட்டன. இது வழக்கமாக வருடாவருடம் கொடுக்கப்படுவது.

“தீம் பார்க்” போன்ற இடங்களில் 50% கட்டணம் குறைக்கப்பட்டது.

UOB வங்கி தனது பணியாளர்களுக்கு 1000 S$ பரிசாகவும் ஒரு நாள் கூடுதல் விடுமுறையும் அளித்தது.

சிங்கப்பூர் அருகே மலேசியா பகுதியில் உள்ள Larkin (Johor Bahru, Malaysia) என்ற இடம் வரை சிங்கப்பூர் பேருந்தில் இலவசப்பயணம், அதே போல அங்கே இருந்த திரும்ப வரவும் 9 ம் தேதி கட்டணமில்லை.

SG50

சிங்கப்பூர் வந்து எட்டு வருடமாகி விட்டது.

ஊருக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டு இருப்பதால், 50 வது தேசிய தினத்தைக் காணாமலே கிளம்பி விடுவோமோ என்று நினைத்தேன் ஆனால், கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

சிங்கப்பூர் முழுவதும் எங்கு பார்த்தாலும் “SG 50” என்ற எழுத்துக்கள் காணப்பட்டன.

“City Hall” பகுதியில் ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளைக் காண சிங்கப்பூர் குடியுரிமை (Citizen) / நிரந்தரவாசிகளுக்கு (PR) மட்டுமே செல்ல அனுமதி.

உலகம் முழுவதும் இருந்து முக்கியத்தலைவர்கள் வந்து இருந்ததால், வழக்கத்தை விட  பல கட்ட கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் இங்கே (அடையாள அட்டையுடன்) நுழைய அனுமதிக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கு அனுமதி இலவசம். இதற்காக முன்கூட்டியே தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அரசு முறைப்படி இவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தெரிவிக்கும்.

பின்வரும் பொருட்கள் இலவசமாக இவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

நான் Employment Pass ல் உள்ளதால் (PR க்கு விண்ணபிக்கவில்லை)” Marina Bay Sands” சென்று அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணலாம் என்று திட்டமிட்டு நண்பர்களுடன் சென்றேன்.

கூட்டத்தை சமாளிக்க அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எனவே, கூட்டம் காரணமாக City Hall / Marina Bay Sands இடங்களுக்கு வர முடியாதவர்கள் தங்கள் பகுதியில் அரசு ஏற்பாடு செய்த நிகழ்சிகளில் கலந்து கொள்ள முடிந்தது.

மக்கள் வெள்ளத்தால் திணறிய Marina Bay Sands & City Hall 

கூட்டம் கடுமையாக இருக்கும் என்பதால் மாலை 6 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு மதியமே சென்று விட்டோம். நேரம் செல்லச் செல்ல கூட்ட நெரிசல் அதிகரித்து உட்கார கூட இடமில்லாத அளவிற்கு ஆனது.

லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அந்த இடமே திணறி விட்டது.

அனைவருக்குமே 50 வது தேசிய தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமல்லாது கலந்து கொள்வதைப் பெருமையாகக் கருதினார்கள்.

என்ன காரணத்தினாலும் இந்த வாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இவ்வளவு வருடம் இங்கே இருந்து விட்டு இதில் கலந்து கொள்ளாமல் இருந்தால், அப்புறம் என்ன சிங்கப்பூர் வாசி!

இந்த மரியாதையைக் கூடச் செய்யவில்லை என்றால், மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு உறுத்தலாகவே இருக்கும்.

எங்கும் சிகப்பு வண்ணமாக இருந்தது. பெரும்பாலான மக்கள் சிகப்பு வண்ண உடை அணிந்து வந்து இருந்தார்கள், நானும் 🙂 . சிங்கப்பூர் தேசியக் கொடி சிகப்பு வண்ணம் கொண்டது.

தேசிய தினத்திற்கு முந்தைய மூன்று நாட்களும் கடும் மழை குறிப்பாக முந்தைய நாள் செம்ம மழை.

எனவே, கொண்டாட்டத்தின் போது மழை பெய்து சிரமத்தைக் கொடுத்து விடுமோ! என்று கலக்கத்தில் இருக்க, அப்படி எதுவும் நடக்காமல் வருண பகவான் காப்பாற்றி விட்டார்.

ஏமாற்றம் 

எதையும் காண முடியாது என்று தெரிந்து இருந்தாலும், Marina Bay Sands பகுதியில் ஏதாவது நிகழ்ச்சி இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், 7 மணிக்கு மேல் வழக்கமான வாண வேடிக்கை நிகழ்ச்சி மட்டுமே இருந்தது.

பின்னர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர் போன்றவை சாகசம் செய்தன.

சில பகுதிகளில் இருந்தவர்கள் மட்டுமே நேரடி ஒளிபரப்பை பெரிய திரையில் காண ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

நடுவில் அமர்ந்து இருந்தவர்கள் எதுவுமே தெரியாமல் கடைசிவரை எதிர்பார்ப்புடன் அமர்ந்து ஏமாற்றமே அடைந்தார்கள்.

ஒத்திகை பார்த்த போதே இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து இருந்ததால், மேலும் பார்க்க விருப்பமில்லாமல் கூட்ட நெரிசல் காரணமாக விரைவிலேயே கிளம்பி விட்டோம்.

ReadSingapore Stadium & Marina Bay Sands [நிழற் படங்கள்]

ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர் வந்ததால் எங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது. சிலர் உள்ளே அனுமதிக்கக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்கள்.

பெரும்பாலும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு இருந்ததால், ரயில் பயணம் மட்டுமே சாத்தியமாக இருந்தது.

பெருமை

நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமையாக இருந்தது ஆனால், எங்கள் பகுதியில் பல மணி நேரம் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருந்தது ஏமாற்றமாக இருந்தது.

பாடல் நிகழ்ச்சி மட்டுமே இருந்தது ஆனால், அதுவும் காணக்கூடிய தூரத்தில் இல்லை.

எது எப்படியோ 50 வது தேசிய தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மன நிறைவைத் தந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அசத்தல் படம் 

நிழற்படம் எடுக்கும் போது “Timing” என்பது மிக முக்கியம். இந்தப் படம் அதில் மிரட்டி இருக்கிறது. விமானத்தின் மூலமே “50” வடிவமைப்பையும் காணலாம். Image Credit – Mr. Sheng Long Lua https://www.facebook.com/lualongahlong

எனக்கு இன்னமும் இந்தப் படம் எப்படி எடுத்தார்? உண்மையாகவே எடுத்ததா அல்லது ஏதாவது டகால்ட்டி செய்து விட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது 🙂 Hats off Boss கலக்கிட்டீங்க.

இது ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட படம்.  இதில் முன்னாடி இருப்பது தான் நீங்கள் சிங்கப்பூரின் அடையாளமாக பார்க்கும் Merlin என்ற சிங்கம் (பின் பகுதி).

தூரத்தில் மூன்று கட்டிடங்களாகத் தெரிவது தான், சிங்கப்பூரின் புதிய அடையாளம் Marina Bay Sands.

திரு லீ

எனக்கு மட்டுமல்ல சிங்கப்பூர் மக்கள் அனைவருக்குமே இருந்த ஒரே மிகப்பெரிய வருத்தம் நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ அவர்கள் சிங்கப்பூர் 50 வது தேசிய தினத்தைப் பார்க்காமலே காலமாகி விட்டாரே என்பது தான்.

திரு லீ அவர்களும் இருந்து இருந்தால், மிக மிகச் சிறப்பாக இருந்து இருக்கும். இந்தக் கொண்டாட்டத்திற்கு கூடுதல் மதிப்பு கிடைத்து இருக்கும்.

Read: நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ”

திரு லீ அவர்கள் இறந்த போது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ஊர்வலம், இரங்கல் கூட்டம், கண்ணீர் அஞ்சலி நடைபெற்றது.

பேனர்கள் சுவரொட்டிகள் என்று பலரும் தங்கள் நன்றிக்கடனை தெரிவித்து இருந்தார்கள்.

அதே போல 50 வது தேசிய தினத்தையும் இவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

இவர்கள் குறித்துச் சிங்கப்பூரின் பிரபல செய்தி நிறுவனமான “TODAY” தளத்தில் விரிவாக வந்துள்ளது. இந்தச் செய்தி சிங்கப்பூர் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்று இருக்கிறது.

இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் இங்கே வாழும் தமிழர்களுக்கு ஒரு மரியாதையைக் கொடுத்து விட்டார்கள்.

சிங்கப்பூர் என்றால் தமிழர்களைப் பிரிக்க முடியாது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரால் பயன்பெற்றவர்கள் பலர் அமைதியாக இருக்க, நன்றியை மறக்காமல் இவர்கள் செய்யும் செயல் உண்மையிலேயே பாராட்டத் தக்கது.

எத்தனை பேர் இது போல இருக்கிறார்கள்?! திரு லீ காலமான போது இவர்களில் பலர் அழுதது என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

விளக்கம் : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

“மன்னார்குடி” மக்கள் குறித்து விரிவாகப் படங்களுடன் வந்துள்ள செய்தியைப் படிக்க விரும்பினால்..  ‘Singapore craze’ in a Tamil Nadu village

சில சுவாரசியமான நிழற் படங்கள் உங்கள் பார்வைக்கு. Images Credit – http://www.channelnewsasia.com/

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. கிரி.. கட்டுரையும், புகைப்படங்களும் நன்றாக இருக்கிறது.. நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்…

  சிங்கப்பூரை குறித்து முன்பே, நீங்கள் நிறைய எழுதி இருந்தாலும், இந்தியாவுக்கு திரும்பும் முன் சிங்கப்பூரில் வேலை வாய்புகள் (புதியவர்களுக்கு) குறித்து ஒரு பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.. நேரமும், விருப்பமும் இருந்தால் முயற்சி செய்யவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. கிரி,
  பகிர்வுக்கு நன்றி…
  richness everywhere நு சொல்லுற மாதிரி இருக்கு;…
  photos எல்லாமே அட்டகாசம், இதுல நீங்க எடுத்த photos கலந்து இருக்கா?
  UOB வங்கி சரி, உங்க அலுவலகம் எதுவும் ஸ்பெஷல் ல செஞ்சாங்களா ?

  – அருண் கோவிந்தன்

 3. @யாசின் தொடர் விடுமுறையில் வழக்கம் போல படங்களாகப் பார்த்துத் தள்ளினேன் 🙂 ஒரு நாள் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.

  நான்கு நாட்களும் விரைவிலேயே முடிந்து விட்டது 🙁

  உங்கள் முதல் பின்னூட்டம் ஸ்பாம் க்கு சென்று விட்டது.

  @அருண் நான் எந்தப் படமும் எடுக்கவில்லை. என்னுடைய நிழற்படக் கருவி எடுத்துச் சென்று இருந்தேன் ஆனால், DSLR பயன்படுத்திய பிறகு இதில் எடுக்கவே பிடிக்கவில்லை 🙂 . இரண்டே படம் எடுத்தேன் கடுப்பாகி அப்புறம் எடுக்காமல் விட்டுட்டேன்.

  எப்படியும் இணையத் தளங்களில் நல்ல படங்கள் வரும் என்பதால், மேலும் முயற்சிக்கவில்லை.

  எங்கள் அலுவலகத்தில் ஒன்றும் கொடுக்கவில்லை 🙂

 4. தலைவா. சிவப்பு என்பதே சரி. சிகப்பு என்பது தவறானது.
  திரப்படம் ஒன்று ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற பெயரில் தவறான எழுத்துப்பிழையுடன் வெளியானது.

  இதுவும் உங்களுக்காக : https://www.google.com.sg/?gws_rd=ssl#q=red+in+tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here